பூர்வீக தாயக மண்ணிலிருந்து அந்நிய ஆக்கிரமிப்பாளரால் ‘களவாடப்பட்ட தலைமுறை’!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா.

அவுஸ்திரேலியா தினம் (Australia Day) இன்று (26 ஜனவரி) கொண்டாடப்படுகின்றது. ஆண்டு தோறும் அவுஸ்திரேலியா தினம், பரவலாக மக்கள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறி விட்டாலும், குறிப்பாக அபரோஜின பூர்வீக குடிமக்களுக்கு அது வேதனையளிக்கிறது. அதனைக் கொண்டாடுவது அவர்களிடத்தில் துக்கத்தை ஏற்படுத்துகிறது.
பூர்வீக குடிமக்களுக்கு, இந்த நாள் மிகவும் வித்தியாசமான உணர்வுகளை உண்டாக்குகிறது. பிரித்தானிய காலனித்துவ படையெடுப்பின் தொடக்கத்தைக் குறிக்கும் இந்த நாள் பலருக்கும் துக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தப் படையெடுப்புகளின் விளைவாக போர், இனப்படுகொலை, இனவெறி மற்றும் பூர்வீக குடிமக்களுக்கு எதிரான பிற அட்டூழியங்கள் பல தலைமுறைகளாக நடந்ததை, நடப்பதை நினைவுபடுத்தும் நாளாக அமைந்துள்ளது.
ஐரோப்பியரோ சீனரோ கால்பதிக்க முன்னிருந்தே சுமார் 45000-_ 60000 ஆண்டுகளுக்கும் மேலாக பழங்குடியின அபரோஜின மக்கள் (aboriginal Australians) அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்தப் பழங்குடியினர் எல்லாருமே ஒரேமொழியைப் பேசுபவர்களல்லர். ஐரோப்பியக் குடியேற்றத்துக்கு (1788) முன்பு இவர்கள் மத்தியில் 700 மொழிகளை பேசும் மக்கள் இருந்தார்கள்.
இவர்கள் இந்தியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளூடாக வந்தார்கள் என்றும் கூறப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் வசிக்கும் சில ஆதிவாசிகளின் மரபணுக்களில் தென்னிந்திய ஆதிவாசிகளின் அடையாளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
60000 ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்குள் இந்த மரபணுக்கள் புகுந்திருக்க (தென்னிந்தியர்கள் குடியேறியிருக்க) வேண்டும் என்று தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்த மரபணுக்கள் திராவிட மொழிகளைப் பேசுவோருடையதாக இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
அவுஸ்திரேலிய பழங்குடியினர் (aboriginal Australians) மத்தியில் நடத்தப்பட்ட மரபணு ஆராய்ச்சிகளில் இந்த இனத்தினரின் மரபணுக்களில் 11 சதவீதம் இந்தியாவின் ஆதிவாசி இனத்தினரின் அடையாளங்கள் உள்ளன என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
‘களவாடப்பட்ட தலைமுறை’ – stolen generation:
ஐரோப்பியரால் ஆக்கிரமிக்கப்பட்ட அபரோஜின பழங்குடியினரின் பூர்வீக அவுஸ்திரேலிய நிலப்பரப்பில் பரவிய அம்மை, சின்னம்மை, காசநோய், இருமல், மற்றும் சுவாச நோய்த் தாக்குதலுக்கு அதிகளவில் இப்பூர்வீக மக்கள் பாதிக்கப்பட்டு அதிகளவில் இறந்தார்கள். அதேவேளை கொள்ளையர்களாலும் இம்மக்கள் அழிக்கப்பட்டார்கள். குறிப்பாக ‘வேட்டையாடி’யதில் ரஸ்மேனியாவிலிருந்த (Tasmania) ஒரு பழங்குடி இனமே முழுமையாக அழிக்கப்பட்டது.
1950ஆம் ஆண்டு வரை பெற்றோரில் ஒருவர் வெள்ளையராயும் மற்றவர் பழங்குடியினராயும் இருந்து பிறக்கும் கலப்புப் பிள்ளைகளை பலவந்தமாக இதற்கென்றே ஏற்படுத்தப்பட்ட நிலையங்களில் அரசே சேர்த்து விடும் வழக்கம் இருந்தது. பழங்குடியினரில் இப்படிக் கொண்டு செல்லப்பட்ட குழந்தைகள் ‘களவாடப்பட்ட தலைமுறை’ (stolen generation) என அறியப்படுகின்றனர். இதனைப் பற்றிய அதி்ர வைக்கும் உண்மைக்கதை சொல்லும் படம் ‘Rabbit Proof Fence’ துயர வரலாற்றின் முக்கியமான சான்றாகும்.
காலனித்துவ அந்நியர்களின் ஆக்கிரமிப்பு இல்லாமல், அமைதிப் பூங்காவாவாக இருந்த அவுஸ்திரேலியா கண்டத்திற்கு 1770- இல் கப்டன் குக் (Captain Cook) என்பவர் நுழைந்தார். அவர் அவுஸ்திரேலியா கண்டத்தைக் கண்டுபிடித்து உலகிற்கு அறிமுகம் செய்தார் என ஆங்கிலேயர் வரலாற்று ஏடுகளில் பறைசாற்றுகின்றனர். அதன் பின்னரே அவுஸ்திரேலியா கண்டத்தை பிரித்தானியர்கள் சொந்தம் கொண்டாடி முழுமையாக ஆக்கிரமித்தனர். இதனை உறுதி செய்யும் விதமாக ஆஸ்திரேலிய நிலப்பரப்பை ‘யாருமற்ற இடம்’ (Terra Nullium) என பிரகடனப்படுத்தினார்கள்.
1770- இல் அவுஸ்திரேலியா கண்டறியப்பட்டாலும், 1829- இல் இருந்துதான் அவுஸ்திரேலியாவில் அந்நியர்களின் குடியேற்றம் நிகழ்ந்தது. 1829- இற்குப் பின்னர் அந்நியர்களின் குடியேற்றம் நிகழ்ந்தபிறகே, வன்முறையையே அறியாத அவுஸ்திரேலிய பழங்குடியினரான அபரோஜினியரை ஆக்கிரமிப்பாளர்கள் அழிக்கத் தொடங்கினர். 1834 இல் பிஞ்சாரா என்ற இடத்தில் இனப்படுகொலையின் ஆரம்பமாக 80 இற்கும் மேற்பட்ட அபரோஜினியரை சுட்டுக் கொன்றனர். தாஸ்மானியா மாநிலத்தில் குடியேறிய ஆங்கிலேயர்கள் 10,000 இற்கும் மேற்பட்ட அபரோஜினியரை கொன்று குவித்தனர்.
கொடூரமாக நீர்நிலைகளில் நஞ்சை கலந்து வைத்தனர். மாவில் விஷம் வைத்து அபரோஜினியருக்கு விநியோகித்து அவர்களை அழித்தனர். இதனை சரித்திர ஆசிரியர்கள் ‘கறுப்பு யுத்தம்'(Black War) என பதிவு செய்துள்ளனர்.
பூர்வீகமான தங்களது தலைமுறை வாழ்ந்த நிலத்தை அரசு சுவீகரித்துக் கொண்டதாகவும் இதற்கு நட்டஈடு தரப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி அவுஸ்திரேலிய பூர்வீக குடிமக்களால் அவுஸ்திரேலியாவிலேயே அதிகூடிய நட்ட ஈட்டினை கோரும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு பூர்வீக குடிமக்களுக்கு வெற்றியாக அமையுமானால் உலகின் அதிகூடிய நட்ட ஈடு செலுத்தப்பட்ட வழக்குகளில் ஒன்றாக வரலாற்றில் பதிவுசெய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு அவுஸ்திரேலியாவின் நூங்கர் பூர்வ குடிமக்கள் தங்களது பூர்வீக நிலத்தின் பெரும்பகுதியான நூங்கர் பிரதேசத்தை மேற்கு அவுஸ்திரேலிய மாநில அரசு சுவீகரித்து வைத்துக்கொண்டு தங்களது உரிமைகளை பறித்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் தங்களுக்கு தமது பூர்வீக நிலத்திலுள்ள பண்பாட்டு – கலாசார உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார். இந்த இழப்புக்கு அரசாங்கம் தங்களுக்கு நட்டஈடு வழங்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கின் மூலம் கோரப்பட்டுள்ள நட்ட ஈட்டுத்தொகை 29 ஆயிரம் கோடி டொலர்க ஆகும்.
களவாடப்பட்ட தலைமுறையினர் குறித்தும், அபரோஜின பழங்குடியின மக்கள் மீதான படுகொலைக்காக அன்றைய அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரெட்டு (Kevin Rudd), 13.02.2008 அன்று கான்பெரா தலைநகர் பாராளுமன்றில் தனது உரை மூலமாக பொதுமக்களிடம், பொதுமன்னிப்புக் கேட்டு இருபது நிமிடங்கள் உரையாற்றினார். இதுவே முதன்முறையாக பழங்குடி பொதுமக்களிடம் கேட்கப்பட்ட பொதுமன்னிப்பாகும்.
ஐங்கரன் விக்கினேஸ்வரா…
நன்றி : தினகரன்.
![]()