அயோத்தி கோவிலில் அமையும் ராமர், சீதை சிலைகள் தயாரிக்க நேபாளம் 2 பெரிய பாறைகளை அனுப்புகிறது!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகளுக்கு கடந்த 2020-ம் ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

அதனை தொடர்ந்து கோவில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தினமும் 2 ஷிப்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். கட்டுமான பணிகளை மேற்பார்வையிட ராம ஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது.

கோவிலின் முதல் தள பணிகள் இந்த ஆண்டு முடிவடைய உள்ளது. கோவிலின் கீழ் தளத்தில் 160 தூண்களும், முதல் தளத்தில் 132 தூண்களும், 2-வது தளத்தில் 74 தூண்களும் அமைக்கப்படுகிறது. மேலும் 5 மண்டபங்களும் அமைக்கப்படுகிறது. கோவிலின் அருகே குபேர் திலா மற்றும் சீதா கூப் போன்ற பாரம்பரிய கட்டிடங்களை உருவாக்கவும் திட்ட மிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவிலில் அமையும் ராமர், சீதா சிலை தயாரிப்பதற்காக நேபாளத்தில் கண்டகி நதிக்கரையில் இருந்து 2 பெரிய பாறைகளை நேபாளம் அனுப்ப உள்ளதாக நேபாளத்தின் முன்னாள் துணை பிரதமர் பிமலேந்திர நிதி கூறினார்.

இதுகுறித்து அவர் கூறிய தாவது:-நேபாளத்தை சேர்ந்த ஜனக் மன்னனின் மகள் சீதை என்று புராணங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ராமர் பிறந்தநாளையும், ராமர் – சீதையின் திருமண நாளையும் ஜனக்பூர் மக்கள் கொண்டாடுகின்றனர்.

அயோத்தியுடன் எங்களுக்கு பல நூற்றாண்டுகள் பழமையான பந்தம் உள்ளது. எனவேதான் ராமர், சீதை சிலைகளுக்காக 2 பெரிய பாறைகளை அனுப்ப முடிவு செய்தோம். அதன்படி ராம ஜென்ம பூமி அறக்கட்டளை தலைவர் மற்றும் நிர்வாகிகளை கடந்த ஆண்டு சந்தித்தோம். பின்னர் கடந்த டிசம்பரில் நேபாள அரசிடம் இருந்து பாறைகளை அனுப்புவதற்காக அனுமதி கிடைத்தது.

இதைத்தொடர்ந்து ராமர், சீதை சிலைகள் தயாரிக்க 18 டன் மற்றும் 12 டன் எடை கொண்ட 2 பெரிய பாறைகளை தேர்வு செய்தோம். பின்னர் அந்த பாறைகளை கடந்த 15-ந் தேதி முதல் பூஜை செய்யப்பட்டு வருகிறது. இந்த பாறைகள் வருகிற 1-ந் தேதி அயோத்திக்கு கொண்டு செல்லப்படும்.

இதன்மூலம் நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான மத உறவுகள் வலுப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button