விமான நிலையம் எனக்கு சொந்தம்: ‘லொள்ளு’ கடிதம் எழுதியது யார்?…

விமான நிலையம் எனக்கு சொந்தம்; என்னை தடுக்கக் கூடாது’ என, காமெடி நடிகர் வடிவேல் பாணியில், ‘லொள்ளு’ செய்த கண்ணன் ரெட்டியார் யார் என்பதை கண்டுபிடிக்கும் வேலையில், போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

சென்னை, மீனம்பாக்கம் விமான நிலைய மேலாளருக்கு, நேற்று தபாலில் தமிழில் எழுதப்பட்ட கடிதம் வந்தது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் ரெட்டியார் எழுதுகிறேன். குமரி முதல் காஷ்மீர் வரை, எனக்கு சொந்தம். இந்த நாட்டில் எங்கும் செல்வதற்கு உரிமை உண்டு.

ஆனால், சென்னை விமான நிலையத்துக்கு நான் வந்தால், உள்ளே அனுமதிக்காமல் வெளியிலேயே, உங்களின் போலீசார் நிறுத்தி வைக்கின்றனர்.

விமான நிலையம் என்னுடையது; விரைவில் நான் மீண்டும் வருவேன். அப்போதும் என்னை தடுத்து நிறுத்தினால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். மீண்டும் வரும்போது தடுத்து நிறுத்தக் கூடாது. இது எச்சரிக்கை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடிதத்தில் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கண்ணன் ரெட்டியார் என்ற பெயருடன், மொபைல் போன் எண் ஒன்றும் எழுதப்பட்டிருந்தது.

அந்த எண்ணை தொடர்பு கொண்டு போலீசார் பேசியபோது, ‘முன் அனுமதி பெறாமல், எதற்காக அழைக்கிறீர்கள்?’ என, போலீசாரை கலாய்த்த அந்த நபர், ‘வேணும்னா நீங்க கள்ளக்குறிச்சி வந்து என்னை பாருங்க’ என்று கூறி, அழைப்பை துண்டித்து விட்டார்.

இதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசாருக்கு அந்த கடிதத்தை அனுப்பி, நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button