யார் எழுத்தாளன்!…. கிறுக்கல்…12 ….. சங்கர சுப்பிரமணியன்.

அண்ணாச்சி இன்னும் இருக்கு, சொல்லி முடிப்பதற்குள் திசையையே திருப்புரீங்களே
என்றதும் சொல்லுப்பா தம்பி கேட்போம் என்றார். அண்ணாச்சி விவேகானந்தரைப் பற்றி தெரியுமா? என்றேன். ஏய் என்ன இப்புடி கேட்டுப்புட்ட. நம்ம மாடக்குளம் விவேகானந்தன தெரியாம இருக்குமா? சின்னப் பிள்ளயில இருந்தே அவன் எனக்கு சினேகம்டே என்றார். நாசமாப் போச்சு அவன் இல்ல இவர். இவர் வேறு என்றேன். அப்படி சொல்லுதியோடே அப்படிப் பட்ட அவரு யாரு எனக்கு தெரியாம என்று என்னிடமே பதிலை எதிர் பார்த்தார்.அண்ணாச்சி இவரு வங்காளத்துக்காரரு. இவர் ஒரு துறவி. அந்த காலத்துல நம்ம ராமநாத புரம் ராசாவாக இருந்த பாஸ்கர சேதுபதி தன் சொந்த செலவிலேயே விவேகானந்தர அமெரிக்காவுக்கு உலக சமய மாநாட்டில் பங்கேற்க அனுப்பி வைத்தார் என்றேன். அதுக்கு இப்ப என்னஎன்றார் அண்ணாச்சி. சொல்றன் அந்த விவேகானந்தர் திருவனந்தபுரத்தில் ஓரு அரங்கத்தில் பேசம்போது நாம் எல்லாம் இந்துக்கள் என்றாராம். உடனே அவரை இடைமறித்த மனோன்மணியம் சுந்தரனார் ஆனால் நாங்கள் சைவர்கள் என்று சொன்னதாக ஒரு செய்தி வலம் வந்தது.அப்படியா என்ற அண்ணாச்சியிடம் இன்னொன்றையும் சொன்னேன். அந்த விவேகானந்தர் இன்னொன்றையும் சொன்னாராம். புத்தரின் அன்பும் கருணை உள்ளமும் ஆதிசங்கரருக்கு இருந்திருந்தால் இந்த நாட்டின் வரலாறு வேறுமாதிரியாக இருந்திருக்கும். எட்டாயிரம் சமணர்கள் கழுவேற்றப் பட்டிருக்கிறார்கள். ஆயிரம் ஆசிவகச் சித்தர்களை உண்ணா நோம்பேற்று கழுவேற்றுயிருக்கிறார்கள். தமிழ் மொழியைப்போன்றே ஆசீவகம் தமிழர் வாழ்வின் மெய்யியல் முறை. தமிழை அழிக்க முயன்றும் முடியாது போயிடினும் தமிழர் வாழ்வின் மெய்யியல் முறையை திட்டமிட்டு அழித்து விட்டார்கள் என படித்தேன். இருப்பினும் இன்றும் நீறுபூத்த நெருப்பாக ஐயனார் வழிபாடு சாத்தா வழிபாடு என்று இருந்து வருகிறது. இப்படியாக மதங்கள் ஒன்றையொன்று அழித்துத்தான் முன்னேறி வந்துள்ளன.கர்னாடகாவில் உயர்ந்து நிற்கும் கோமடேஸ்வரர் சிலையைப் பார்த்தால் ஜைனமதம் இந்தியாவில் எவ்விதம் உயர்ந்து நின்று கோலோச்சியிருக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம். இன்று அவரின் நிலையென்ன? வள்ளுவன் சொன்ன நிலயாமை இங்கு நிலைபெற்று நிற்பதை கண்கூடாக காணமுடிகிறதல்லவா? எதுவும்இங்கு நிலைப்பதில்லை. என்ன ஒரு அற்புதமான மதம்? அகிம்சையை போதித்தால் மட்டும் போதாது?வாழ்நாளில் தன்னால் ஈ, எறும்புகளுக்குகூட துன்பம் ஏற்படக்கூடாது என்ற கொள்கையை மேற்கொண்டு நடக்கும்போது முன்புறமாக பெருக்கியபடியே செல்வார்களாம். நடக்கையில் மிதிபட்டு அந்த சிற்றுயிர்கள் மடிந்து விடக்கூடாதாம். அப்படிப்பட்ட சமணத்துறவிகளை ஆயிரக்கணக்கில் தமிழ்நாட்டில் கழுவேற்றிக் கொன்றிருக்கிறார்கள். அகிம்சையைப் போதித்தவர்களுக்கே அகிம்சையின் உச்சக் கட்டத்தை அனுபவிக்கும் கழுவேற்றம் நடந்துள்ளது.சமணத்துறவிகளே வாதிட அழைத்திருந்த போதிலும் அவர்களை வெல்ல இறைவனிடம் கழுவேற்ற அருள்புரிவாய் திருவுளமே என்று வேண்டுமளவுக்கு வன்மம் இருந்துள்ளதை படித்தறியும்போது மனம் பதைபதைக்கிறது. இப்படி இறைவனிடம் வேண்டியவர்கள் சாதாரண மனிதர்களா என்றால் அதுதான் இல்லை. அவர்களும் துறவிகளே. இப்படி நல்வழி காட்டவேண்டிய துறவிகளே தமது மதங்களை நிலைநிறுத்தும் பொருட்டு இத்தகைய கொடுஞ்செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.இதனையறிந்த மக்களுக்கு மதங்களின்பால் ஈர்ப்பு எங்ஙனம் வரும்? வந்து நிலைத்தும் உள்ளதே, எப்படி? எதையும் அறியாதவர்களுக்கு மதம் உருவானவிதத்தை இருட்டடிப்பு செய்துவிடுகிறார்கள். எதையும் அறியவிடாது இளம்பிராயத்திலே அவர்களாகவே உணர்ந்து கொள்ளாதபடி இறைமேன்மை போன்றவற்றை கற்பித்து விடுகிறார்கள். கல்வியையும் நல்லொழுக்கத்தையும் இளவயதினருக்கு கற்றுத்தர வேண்டும். காதலிப்பதை அவன் அந்த வயதில் தானாகவே அறிந்து கொள்வதைப்போல இறைவனையும் இயற்கையாய் அறிய விடவேண்டும்.குழந்தை பிறந்தவுடன் திரவ உணவைத்தான் ஒரு குறிப்பிட்ட காலம்வரை குழந்தைக்கு கொடுக்கிறோம். அதன் பின் கூழ்மோன்ற திடமும் திரவமுமான உணவைக் கொடுக்கிறோம். அதன்பின்னரே இட்லி போன்ற மிருதுவான திட உணவையும் சோறு போன்ற உணவை மசித்தும் கொடுத்து பழக்கப்படுத்துகிறோம். குழந்தைக்கு எடுத்த எடுப்பில்லேயே சிக்கன் பிரியாணியையும் கொத்து ரொட்டியையுமா கொடுக்கிறோமா?இல்லையல்லவா?இதைப்போலத்தான் பாலுணர்வையும் இனையுணர்வையும் புகுத்தக்கூடாது. அந்நந்த வயதில் அது அது தெரியும். நாம் பாலுணர்வு அரும்பும் வயதில் பாலுணர்வைப் போதிப்பதில்லை. ஆனால் இறையுணர்வெனும் உணர்ந்து பெறக்கூடியவற்றை இளவயதில் புகுத்துகிறோம். இளவயதில் கல்வியைப்புகுத்தும் நோக்கம் சிறந்த கல்விமானாக அறிஞனாக வரவேண்டும் என்ற நல்லெண்ணமே அதற்குக் காரணம்.அதுபோன்றல்ல இறையுணர்வு. ஒருவேளை சிறந்த மடாதிபதியாகவோ சந்நியாசியாகவோ வந்து பெருமை சேர்க்க வேண்டும் என்ற எண்ணமிருப்பின் இளம் வயதில் இறையுணர்வில் ஆழ்த்தலாம். இதை எல்லாம் நான் சொல்வதன் காரணம் இப்படி ஊட்டப்படும் இறையுணர்வு மத உணர்வாகி மதவெறியாக மாறிவிடுகிறது. இதனால்தான் மத சம்பந்தமாக அறிவுசார் விடயங்களை ஒருவர் மதம்சாரா நிலைநின்று சொன்னபோதும் மதவிரோதியாக பார்க்கும் நிலை உருவாகியுள்ளது.இந்த விரோதம் குரோதமாக மாறி ஒருவரை ஒருவர் வெறுக்கும் நிலைக்கு வித்திடுகிறது. இப்படியுண்டான வெறுக்கும் நிலைமாறி நொறுக்கும் நிலயாக உருவெடுத்து ஒருவர் வழிபடும் இடங்களை இன்னொருவர் அடித்தும் நொறுக்கும் இழிநிலை உண்டாகிறது. இது சமூகத்தில் ஆறாவடுக்களாய் நிலைக்கிறது. இதனால் மகளுக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தாத மதங்கள் மதம் பிடிக்க வைக்கிறதே என்ற எண்ணம் ஏற்படுகிறது.இறைவன் உண்மையாகவே இருக்கிறான் என்பவர்கள் ஆத்திகவாதிகள். இறைவன்இல்லவே இல்லை என்பவர்கள் நாத்திகவாதிகள். இன்னொரு வகையினரும் இருக்கிறார்கள். அவர்கள் இறைவன் இயற்கையாக நின்று இந்த அண்டத்தை இயக்கும் இயற்கை எனும் பகுத்து உணரும் தன்மையுடைய பகுத்தறிவுவாதிகள். ஆனால் இந்த நிலையற்ற உலகில் தோன்றிய நிலயற்ற வாழ்வில் ஏதாவதொரு சித்தாந்தத்தில் நிலையாக நிலைபெற்று விட்டவர்களிடம் நிலையாமை தத்துவம் எடுபடாது.-சங்கர சுப்பிரமணியன்.(கிறுக்கப்படும்)
![]()