படித்தோம் சொல்கின்றோம்: மாவை நித்தியானந்தனின் இரண்டு நாடகங்கள்! …. முருகபூபதி.

மனிதர்களின் கலை, இலக்கிய ஆர்வம் இயல்பிலேயே ஊற்றெடுப்பது. அந்த ஊற்றை நேர்த்தியாக சமூகத்திற்கு பயன்படும் விதத்தில் நதியாக்குவதில்தான் அவர்களின் ஆளுமைப்பண்பு வெளிப்படுகிறது. அத்தகைய வற்றாத ஓடும் நதிதான் எங்கள் மாவை நித்தியானந்தன்.
![]()
இவ்வாறு சில வருடங்களுக்கு முன்னர், மெல்பனில் நண்பர் மாவை நித்தியானந்தனின் பவள விழா நடைபெற்ற வேளையில் எழுதிய ஆக்கத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
மாவை நித்தியானந்தன், மட்டக்களப்பில் இயங்கிவரும் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருதும், கம்பன் கழகத்தின் மாருதி விருதும் பெற்றிருப்பவர்.
அண்மையில் மாவை நித்தியானந்தன் வெளியிட்டிருக்கும் இரண்டு நாடக நூல்களப்பற்றி எழுதும் போது இந்த வரிகள் நினைவுக்கு வருகின்றது.
இனிச்சரிவராது, ஐயா லெக்சன் கேட்கிறார் ஆகிய இரண்டு நூல்களும் மாவை நித்தியின் புதிய வரவுகள். ஏற்கனவே மேடையேற்றப்பட்ட நாடகங்கள்தான் இவை இரண்டும்.
நடிப்பதற்காக எழுதப்படும் நாடகங்கள், படிப்பதற்காக எழுதப்படும் நாடகங்கள் என இரண்டு வகை இருப்பதாக அறிஞர் மு. வரதராசன் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மாவை நித்தியின் நாடகங்களும் அத்தகையன.
ஐயா லெக்சன் கேட்கிறார் நாடகம் 1973 ஆம் ஆண்டு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில், கட்டுப்பெத்தை பல்கலைக்கழகத்தின் தமிழ் மன்றத்தின் விழா நடந்தவேளையில் அங்கு மேடையேறியது. அன்று அங்கே பார்த்த இந்த நாடகத்தை பலவருடங்களுக்குப்பின்னர் மெல்பனிலும் பார்த்திருக்கின்றேன்.
ஒரே நாடகப்பிரதியில் இரண்டு நாடுகளிலும் வேறு வேறு கலைஞர்கள் பங்கேற்ற நாடகம் இது.
மாவை நித்தி, படைப்பிலக்கியவாதி. சிறுகதை, கவிதை, கட்டுரை, விமர்சனம் ஆகிய துறைகளிலும் அவ்வப்போது ஈடுபட்டு வந்திருப்பவர்.
அத்துடன் மெல்பனில் 1990 களில் தொடங்கப்பட்ட பாரதி பள்ளியின் ஸ்தாபகர். அத்துடன் அதன் அதிபர். பாப்பா பாரதி என்ற சிறுவர்களுக்கான ஒளி – ஒலி நாடாவையும் வெளியிட்டிருப்பவர். சிறுவர் நாடக நூல்களையும் வெளியிட்டிருக்கிறார்.
அவர் உருவாக்கிய மற்றும் ஒரு அமைப்பு மெல்பன் கலை வட்டம். இந்த அமைப்பும் பல நாடகங்களையும், கலை நிகழ்ச்சிகளையும் அரங்காற்றியிருக்கிறது.
அண்மையில் அவர் வெளியிட்டுள்ள இரண்டு நாடக நூல்களைப்பற்றி பார்ப்போம்.
தேர்தலை நோக்காகக்கொண்டு இலங்கையில் நடக்கும் அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் அவற்றில் இரண்டறக்கலந்துள்ள பொய், ஏமாற்று, போலித்தனம், ஆணவம் முதலான அம்சங்களையும் அங்கதச்சுவையுடன் சித்திரிக்கும் நாடகமே ஐயா லெக்ஷன் கேட்கிறார்.
இந்த நாடகப் பிரதி யாழ். பல்கலைக்கழகம் வெளியிட்ட ஒரு நாடக நூலிலும் இடம்பெற்றுள்ளது.
இதன் உறைபொருளும் மறைபொருளும் சமகால அரசியலையும் சித்திரிக்கின்றமையால், காலத்தையும் வென்று வாழும் நாடகப் பிரதியாகவும் பேசப்படுகிறது.
இந்த நாடகம், இலங்கை, அவுஸ்திரேலியா உட்பட ஐரோப்பிய நாடுகளிலும் மேடையேற்றப்பட்டிருக்கிறது.
உங்களுடன் சில வார்த்தைகள் – என்ற குறிப்பில், மாவை நித்தி இவ்வாறு பதிவுசெய்கிறார்:
இந்த நாடகத்தின் உரையாடல்களில் பேச்சு வழக்குக் கலந்திருக்கின்றது. பார்வையாளர்களுடன் நெருங்கிப்பேசுவதற்கு இது பேருதவியாக உள்ளது. பேச்சு மொழியானது, இடத்துக்கிடம் வேறுபடுவதால் மேடையேறும் வட்டாரத்துக்கேற்ப வார்த்தைகளைப்பொருத்தமாக மாற்றியமைக்கும் தேவை ஏற்படும்.
மாவை நித்தி, வளர்ந்தோருக்கான – சிறுவர்களுக்கான – நாடகங்கள் மட்டுமன்றி, தெருவெளி நாடகங்களும், பாரம்பரிய இசை நாடகங்களும் எழுதி, அரங்காற்றியிருப்பவர்.
அவற்றில் கொழும்பு மெயில், திருவிழா என்பன குறிப்பிடத்தக்கவை.
ஐயா லெக்ஷன் கேட்கிறார் நாடகம், பூமியையும், சூரியனையும் விஞ்ஞானத்தையும் கருப்பொருளாக வைத்து, பின்னப்பட்ட நாடகம்.
சூரியனைத்தான் பூமி சுற்றுகிறது என்பது விஞ்ஞானம் கண்டறிந்த உண்மை. ஆனால், இந்நாடகத்தில் வரும் அரசியல் தலைவரான ஐயா, அதற்கு மாறாக, பூமியைத்தான் சூரியன் சுற்றுகிறது என்ற வாதத்தை முன்வைத்து, தனது புதிய சிந்தனைக்கு ஆதரவு திரட்டுகிறார்.
மேடையிலிருக்கும் ஒரு மாலையே ஐயாவுக்கு அடுத்தடுத்து அணிவிக்கப்படுகிறது. தலைவர், காரியதரசி, தனாதிகாரி – இவர்கள் அனைவரும் அந்த ஒரு மாலையையே அடுத்தடுத்து ஐயாவுக்கு அணிவிக்கின்றனர்.
இந்த ஐயா, மெய்ஞான மன்றத்தின் தலைவர்.
பூமி தட்டையானது என்பதுதான் ஐயாவின் பெரும் கண்டுபிடிப்பு. அதனை மக்கள் நம்பவேண்டும் என்பதுதான், அவரது அடியாட்களின் வாதம்.
பூமி உருண்டையானது என்ற விஞ்ஞானி கலிலியோ சொன்ன உண்மையை ஆட்சேபிக்க ஐயா, சொல்லும் காரணங்கள் இவை:
ஒவ்வொரு நாளும், சூரியன் கிழக்கிலே உதிக்கிறான். பூமியைச்சுற்றிக்கொண்டு வந்து மேற்கிலே அஸ்தமிக்கிறான். அதனால், சூரியன்தான் சுற்றுகிறான். பூமி சுற்றவில்லை.
ஐயாவின் கட்சியின் கொடி மஞ்சள், சின்னம் விளக்குமாறு.
இதிலிருந்தே இந்நாடகத்தின் அங்கதத்தை நாம் புரிந்துகொள்ள முடியும்.
ஐயா, தேர்தலின்போது நாட்டுமக்களின் நாடித்துடிப்பை அறிந்துகொள்வதற்கு ஒரு நிருபரின் உதவியை நாடுகிறார்.
இந்தத் தேர்தல் அமளியில் அடிதடி, கத்திக்குத்து களேபரங்களும் நடக்கின்றன. அத்துடன் எதிரணியைச் சேர்ந்தவரின் தேர்தல் பிரசார சுவரொட்டிகளுக்கு சாணி அடிக்கப்படுகிறது.
இறுதியில், ஐயா உலகத்தை சுற்றிவந்து பார்க்கத்தயாராகின்றார்.
தான் செல்லவிருக்கும் நாடுகளின் பட்டியலையும் சொலகிறார்.
தேர்தல் பிரசாரத்தின்போது பூமி தட்டையானது என்று பிரசாரம் செய்தவர், இறுதியில் தனது கைத்தடியால் ஒரு சுற்றுச் சுற்றிக்காண்பிக்கிறார்.
அவரது அடியாட்களும் தத்தமது கைகளால், பூகோளம் போன்று அபிநயித்துக் காண்பிக்கிறார்கள்.
பசப்பு வார்த்தைகளினால் பாமர மக்களை ஏமாற்ற முடியும் என்பதை இந்த அங்கத நாடகம் மூலம் மாவை நித்தியானந்தன் நிரூபிக்கின்றார்.
நாற்பது பக்கங்களே கொண்ட இச்சிறிய நூலைப்படிக்கும்போதே, எமக்கு சிரிப்பும் வருகிறது. அத்துடன் சிந்திக்கவும் தூண்டுகிறது.
இனிச்சரிவராது என்ற மற்றைய நாடகமும், அங்கதச்சுவைகொண்டது.
1960 களில் வட இலங்கையில் நடந்த ஆலயப்பிரவேச போராட்டம்தான் மாவை நித்தியை இந்நாடகத்தை எழுதத்தூண்டியிருக்கிறது.
ஊரில் சிலர் ஒரு காணியில் கல்லொன்றை கண்டு எடுக்கிறார்கள். அதனை பிள்ளையார் என உருவகித்து வழிபடுவதற்கு ஒரு ஆலயம் நிர்மாணிக்கிறார்கள். இவர்கள் சமூகத்தில் மேட்டுக்குடியினர். இவர்கள் சமூகத்தின் அடிநிலை மக்களை, ஆலயத்தினுள் அனுமதிக்க மறுக்கிறார்கள்.
இந்நாடகப்பிரதி ஒரு கட்டத்தில் தணிக்கை கெடுபிடிக்குள் சிக்கியிருக்கிறது. இது பற்றி மாவை நித்தியானந்தன் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
ஒரு கட்டத்தில் தணிக்கை கெடுபிடிக்குள் இந்நாடகம் அகப்பட்டதும் உண்டு. நுனிப்புல் மேயும் அரச இயந்திரத்தின் பிரதிநிதிகள் பரிந்துரைத்த மாற்றங்களை ஏற்க மறுத்து, அரச நாடக விழாவொன்றிலிருந்து விலகிக்கொண்டோம். இது நடந்தது 1970 களின் பிற்பகுதியில் என நினைக்கிறேன். சமூக நீதியையும் பகுத்தறிவையும் தாக்கமாக வலியுறுத்தும் ஒரு எழுத்துருவின் அடிப்படையை விளங்கிக்கொள்ள முடியாத நிலையொன்றை அன்று நாம் கண்டோம்.
மேலும் அவர், நாடகத்தை ஒரு பிரசாரச் சாதனமாக நான் கொள்ளவில்லை. பார்வையாளர்களுக்கு ஒரு செய்தியை எடுத்துச்சொல்லும், ரசனைக்குரிய கலைவடிவமாகவே நான் நாடத்தைப்பார்க்கின்றேன். எனச்சொல்கிறார்.
ஒரு காணியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கல்லை பிள்ளையாராக்கி, அதற்கென ஒரு கோயிலையும் நிர்மாணித்து திருவிழாவும் நடக்கத்தொடங்கும்போது, அடிநிலை மக்களும் சுவாமி தரிசனத்திற்கு வரும்போது, மேட்டுக்குடியினர் அவர்களை தடுத்து மறிக்கின்றனர்.
இறுதியில், கோயிலின் பிரதான தர்மர்த்தா, இழுத்துப்பூட்டடா கோயில் கதவை என்று சத்தமிடுகிறார்.
இறைவன் அனைவருக்கும் பொதுவானவர். ஆனால், இறைவனை வழிபடும் விடயத்தில் குறிப்பிட்ட மேட்டுக்குடி மக்கள் சாதியத்தை முன்னிறுத்துவதை இந் நாடகம் அங்கதமாக சித்திரித்துள்ளது.
மாவை நித்தியின் இவ்விரு நாடகங்களும் சமூகத்தை அதன்போக்கிலேயே சித்திரிக்கின்றன.
சமூகம் இப்படித்தான் இருக்கும், ஆனால் இந்தச்சமூகம் எப்படி இருக்கவேண்டும் என்பதை சமூகத்திற்கே சொல்வதில்தான் ஒரு கலைஞனின் ஆற்றல் தங்கியிருக்கிறது.
அந்த ஆற்றலை மாவை நித்தி தமது இரண்டு நாடகங்களிலும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
மாவை நித்தியானந்தனுக்கு எமது வாழ்த்துக்கள்.
![]()