நடுகைக்காரி!… 48 …. ஏலையா க.முருகதாசன்.

![]()
ஞானத்துக்கு காய்ச்சல் காய்வது நிற்கவில்லை.எப்படியாவது காய்ச்சலைக் குறைக்க
வேண்டும் என்பதற்காக பரியாரியார் குடுத்த குளிசையை உரைஞ்சிக் குடிச்சாலும் காய்சசலின் சூடு தணியவில்லை.
புஸ்பகலாவைப் பார்ப்பதற்காக காய்ச்சலையும் பொருட்படுத்தாது பள்ளிக்கூடத்துக்கு வந்திருந்தான்.தனது வருத்தத்தையும் கவனத்தில் எடுக்காது தன்னைப் பார்ப்பதற்காக ஞானம் வந்திருப்பதைக் கண்ட புஸ்பகலா அவன் மீதான காதலாலும் கவலையாலும் உருகினாள்.
காய்ச்சல் சோர்வுடன் சைக்கிளில் போய் முற்றத்தில் சைக்கிiளை நிறுத்தி, சைக்களிலிருந்து இறங்கிய மகனைக் கண்ட தாய்’ காய்ச்சல் இப்ப சுகமா „ என்று கேட்டதும், அம்மாவுக்கு என்னென்று தெரியும் எனக்கு காய்ச்சல் என்று எண்ணித் திகைத்துவிடுகிறான்.
தனக்குக் காய்ச்சல் இல்லையென்று அவன் இயல்பாக இருப்பது போல நடித்து’ உங்களுக்கு ஆர் சொன்னதம்மா’ என்று கேட்க,பரியாரியார் செல்லத்துரையைச் சந்தையிலை கண்டனான், அவர்தான்; „உங்கடை கடைசி மோன் காலமை காய்ச்சலென்று என்னட்டை வந்தவன், குளிசை குடுத்தனான் உரைசிக் குடிக்கச் சொல்லி,உரைசிக் ; குடிச்சிட்டு வீட்டிலை படுத்திருக்கிறான்தானே’ என்று கேட்டார்.
„எனக்கு என்ன சொல்றதென்று தெரியேலை, ஓம் வீட்டிலை போர்த்திக் கொண்டு படுத்திருக்கிறான் என்று மனமறிஞ்சு பொய் சொன்னன், உனக்குக் காய்ச்சலென்றால் பள்ளிக்கூடம் போகாமல் விட்டிருக்கலாந்தானே,மற்ற நாளையிலை கொஞ்சம் உடம்பு சுட்டாலே பள்ளிக்கூடம் போகமாட்டாய் சுருண்டு படுத்திடுவாய் „ என்று சொல்லிக் கொண்டே தாயார் அவனுடைய கழுத்திலை கையை வைச்சுப் பார்த்திட்டு’ என்ன இப்படி உடம்பு கொதிக்குது, ஏன் இந்தக் காய்ச்சலோடை பள்ளிக்கூடம் போனனி’ என்று தாயார் சொல்ல,’அம்மா அது காய்ச்சலில்லை வெறும் உடம்புச் சூடுதான், எனக்கு காய்ச்சலாய்த் தெரியேல்லை,இன்னும் இரண்டு மாதத்திலை கவ்வன்மெண்ட் சோதினை வருதம்மா, பள்ளிக்கூடம் போய் பாடங்களைக் கவனிச்சால்தான் பாஸ் பண்ண முடியும், சாப்பிட்டிட்டு பின்னேர வகுப்பக்கு போறன்,காய்ச்சல் நிற்காட்டில் நாளைக்கு போகாமல் நிற்கிறனம்மா என்றவன்,புத்தகங்களை எட்டி விறாந்தைக் கதிரையிலை வைச்சிட்டு,கிணத்தடிக்குப் போய் கைகால்களைக் கழுவி முகத்தையும் கழுவியவன் கிணத்தடிக கொடியிலை இருந்த துவாயை எடுத்து முகத்தைத் துடைக்கப் போகும் போது,துவாயிலை காகத்தின் எச்சம் இருப்பதைக் கண்டவன்’ ச்சா „ என்று எரிச்சல்பட்டுக் கொண்டே துவாயை அங்கிருந்த வாளிககுள் போட்டவன்,கால்களையும் கைகளையும் உதறிக் கொண்டே முகத்திலிருந்த
தண்ணீரை கையால் வழித்தவாறு போய் வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த துவாயை எடுத்து முகத்தைதத் துடைத்தவன் நேராக அடுப்படிக்குள் போய் பலகையில் உட்காருகிறான்.
அவனுக்குச் சோறு போடுவதற்கு ஆயத்தமாக பெட்டியொன்றைக் கவிழ்த்து வைத்து அதற்கு மேல் வாழையிலையை வைத்துக் காத்திருந்த தாய், அவன் முகத்தை கவனிக்கிறாள்.
காய்ச்சலின் தன்மை அப்படியே முகத்தில் தெரிகிறது.சின்னச் காய்ச்சல் என்றாலோ குடங்கிப் போர்த்திப் படுத்தக் கொண்டு புத்தகம் எதையாவது எடுத்து வாசிப்பவன் தனக்கு எதுவுமே சொல்லாமல் பள்ளிக்கூடம் போயிருக்கிறானே என்பது அவளுக்கு வியப்பாகவும் கவலையாகவும் இருந்தது.
„ஏலாட்டில் நில்லன்,இரண்டு நாளைக்கு பேசாமல் படுத்திருந்தால் காய்ச்சல் போயிடும் பிறகு போகலாந்தானே’ என்கிறாள்.
„இல்லையம்மா நான் போகணும்,இப்ப காய்ச்சல் குறைஞ்சு கொண்டு வருகுது,காய்ச்சல் நிற்காட்டில் நாளைக்கு நிற்கிறன் „ என்று சாப்பிடத் தொடங்குகிறான்.
அம்பனை வயல் தோட்டத்திலிருந்து வந்து கைகால்களை கழுவிப் போட்டு வந்த கணவனும் சாப்பிடுவதற்காக அடுப்படிக்குள் நுழைந்து மகனுக்குப் பக்கத்தில் பலகையைப் போட்டு உட்காருகிறார்.
ஞானத்திற்கு பெட்டி கவிழ்த்து வாழையிலையைப் போட்டது போல கணவனுக்கும் போட்படியே „மோனின்ரை முகத்தைப் பாருங்கள், காய்ச்சலோடை பள்ளிக்கூடம் போயிருக்கிறான்.பள்ளிக்கூடம் போறதக்கு முந்தி செல்லத்துரைப் பரியாரியிட்டை போய் குளிசை வாங்கி உரசிக் குடிச்சிட்டு பள்ளிக்கூடம் போயிருக்கிறான்…..’
„பின்னேர வகுப்புக்கு போக வேண்டாம் என்று சொல்றன் கேட்கிறான் இல்லை….’என்று தாய் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,இடைமறித்து „ காய்ச்சலோடை ஏன் போறாய்…..படுத்திருக்கலாந்தானே…..என்று மகனைப் பார்த்து தகப்பன் சொல்ல…’அப்பா பின்னேரம் மூன்று பாடந்தானே,டக்கென்று அது முடிஞ்சிடும் „ என்றவனிடம் „அது சரி பரியாரியிட்டை வாங்கின குளிசையை உரசிக் குடிச்சனியோ இல்லாட்டி குளிiசையை தொண்டைக்குள்ளை போட்டு தண்ணி குடிச்சனியோ „ என்று கேட்க, „இல்லையப்பா லிங்கம் கபே கடையிலை ஒரு சிரட்டையை எடுத்து அதை நல்லாய்க் கயர் போகும்வரை துருவிக் கொட்டிட்டு,பிறகு அதைச் சுடுதண்ணியிலை நல்லாய்க் கழுவிப் போட்டு அதிலை குளிசையை உரசிக் குடிச்சனான் „ என்று பதில் சொல்கிறான்.
தகப்பனும் மகனும் கதைச்சுக் கொண்டிருக்கும் போது தாயார் கறுத்தைக் கொழும்பான் மாம்பழம் இரண்டை எடுத்து தோலைச் சீவி மாம்பழத்தைத் துண்டுகளாக வெட்டி அதை ஒரு தட்டையான அலுமினியச் சட்டியில் வைத்துக் கொண்டிருந்தார்.
„உனக்குக் காய்ச்சல் நீ மாம்பழம் சாப்பிடாதை மருந்துக்கு மறுதலிச்சிடும் „ என்று தாய் சொல்ல, ஒரு துண்டு சாப்பிட்டால் ஒன்றும் செய்யாது, தம்பிக்குச் சுடுதண்ணி வைச்சுக்குடு அதைக் குடிக்கட்டும் „ என்று,தகப்பன் சொல்கிறார்.
„அம்மா எனக்கு இரண்டு மூன்று மாம்பழத் துண்டுகளை வாழையிலையிலை வைச்சுக் கட்டித் தாருங்கள்,தனபாலசிங்கம் அடிக்கடி கறுத்தக் கொழும்பான் மாம்பழம் உருசியானது என்று கதைக்கிறவன் அவனுக்குக் கொண்டு போயக் கொடுக்கலாம் „ என்கிறான் ஞானம்.
ஞானம் சாப்பிட்டு முடிந்து பள்ளிக்கூடம் போகும் போது வாழையிலையில் வைச்சு மடிச்ச மாம்பழத் துண்டுகளை பத்திரிகைத் தாளில் வைச்சு மடிச்சுக் குடுக்கிறாள்.
புஸ்பகலா அழுத கண்களுடன் மேசையில் தலை வைச்சுப் படுப்பதும் ,தலையை நிமிர்த்தி ஞானம் வருகிறானா எனப் பார்ப்பதுமாக இருக்கிறாள்.
வழமையாகவே ஞானம் சைக்கிளை வேகமாகவே ஓட்டுவான்.புஸ்பகலாவுடன் காதல் ஏற்பட்டதன் பிறகு அவன் முன்பைவிட இன்னும் சைக்கிளில் அதிவேகமாக ஓடத் தொடங்கியிருந்தான்.
சைக்கிள் ஓட்டப் போட்டிக்கு ஓடுவது போலவே அவனது சைக்கிள் ஓட்டம் இருக்கும்.
தனது கைகளில் கைவிரல்கள் படுவதை உணர்ந்த புஸ்பகலா யாராக இருக்கும் என நினைத்தவாறு கண்களை விழித்து தலையை; நிமிர்த்திப் பார்க்கிறாள்,கையில் ஒரு சிறு பார்சலுடன் தனது கையைத் தொட்டு தன்னை எழுப்புவது போல ஞானம் அருகே நிற்பதைக் காண்கிறாள்.’இந்தா சாப்பிடுங்கள் எனப் பார்சலை அவளிடம் குடுக்கிறான்’
ஞானத்தைக் கண்டதும் அவள் முகம் பிரகாசமாகிறது.ஞானம் குடுத்த பார்சலைத் திறந்து பார்க்கிறாள்,பார்சலுக்குள் நான்கு மாம்பழத் துண்டுகள் இருப்பதைப் காண்கிறாள்.
„ உங்களுக்குத்தான் எடுத்துச் சாப்பிடுங்கோ என்று சொல்லிக் கொண்டே,அவளுக்கு இடது புறத்திலுள்ள தனது வாங்கில் உட்காருகிறான் ஞானம்.
„நீங்கள் சாப்பிடவில்லையா, இப்ப எப்படிக் காய்ச்சல் „என்றவள் எட்டி அவனுடைய கழுத்துப் புகுதியில் புறங்கையை வைச்சுப் பார்க்கிறாள்,கழுத்தடி சுடவே காய்ச்சல் குறையவேயில்லை என்பதைக் கண்ட அவள் „ ஏன் காய்ச்சலோடை வந்தனீங்கள் „ என்று கனிவாகக் கேட்கிறாள்.
„உங்களைப் பார்க்கவும் மாம்பழத் துண்களைத் தரவுந்தான் வந்தனான் „என்கிறான் ஞானம்.’என்னெண்டு சொல்லிக் கொண்டு வீட்டிலை வாங்கி வந்தனீங்கள்’ என்று கேட்க,’தனபாலசிங்கத்துக்கென்று சொல்லி அம்மாவிடம் வாங்கிக் கொண்டு வந்தனான் „ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,தனபாலசிங்கம்
வகுப்புக்குள் நுழைகிறாள், அந்த நேரம் பார்த்து புஸ்பகலாவும் கடைசி மாம்பழத் துண்டை வாய்க்குள் வைச்சு அமுக்குகிறாள்.
புஸ்பகலா வாய்க்குள் மாம்பழத் துண்டை அமுக்குவதை கடைக்கண்ணால் பார்த்த தனபாலசிங்கம்’அவசரப்படாமல் சாப்பிடுங்கள்,நான் கேட்க மாட்டன் „ என்கிறான் பகிடியாக…
தனபாலசிங்கம் யதார்த்தமாகச் சொல்லியிருந்தாலும், ஞானத்துக்கும் புஸ்பகலாவுக்கும் சுருக்கென்று தைத்து விடுகின்றது.
தனபாலசிங்கத்துக்கு குடுக்கவென்று தாயிடம் பொய் சொல்லி மாம்பழத் துண்டுகளை வாங்கிக் கொண்டு வந்ததனால் ஞானத்துக்கு ஒரு மாதிரியாகப் போய்விட்டது.
மத்தியான இடைவேளைக்குச் சாப்பிடப் போனவர்கள் ஒவ்வொருவராக வகுப்புக்குள் நுழைகிறார்கள்.
„கை பிசு பிசுக்குது பைப்பில் கையைக் கழுவப் போறன் வாருங்கோவன் என்று ஞானத்தைப் பார்த்துக் கேட்க, ஞானமும் எழுந்து போகிறான்.
வகுப்பைவிட்டு படியிறங்கி பைப்படியை நோக்கிப் போகும் ஞானத்தையும் புஸ்பகலாவையும் பார்த்த பாலசிங்கம் „அங்கை பார் அவையிரண்டு பேரையும் குடுத்து வைச்சதுகள்,லைசென்ஸோடை திரியுதுகள் என்கிறாள்.இந்த வகுப்புள் இருக்குதுகளே எங்களைப் பார்க்குதுகளா கதைக்குதுகளா ,எல்லாருக்கும் கண்ணகி என்று நினைப்பு, என்ன செய்கிறது எங்கடை தலைவிதி என்று அலுத்துக் கொள்கிறான்.
ஞானத்தின் வகுப்பில் புஸ்பகலா,மங்களேஸ்வரி,அருந்ததி,நீலலோஜினி,சர்வாம்பிகை,நாகேஸ்வரி,சந்திரகுமாரி,குணபூபதி என எட்டு மாணவிகள் படித்தாலும் மாணவர்களுடன் அவ்வளவாக கதைப்பதில்லை.ஒரு வகுப்பு முடிஞ்சு அடுத்த வகுப்புத் துடங்குவதற்கிடையில் சாடைமாடையாக மாணவர்களுடன் கதைப்பார்கள்.
ஆனால் மாணவர்களுக்கிடையிலும் மாணவிகளுக்கிடையிலும் ஒரு ஈர்ப்பு இருக்கவே செய்தது.ஒருவருக்கொருவர் கதைப்பதை ஆசிரியர்கள் பார்த்துவிட்டால் „என்ன இரண்டு பேரும் கதைச்சனீங்கள் என்று சந்தேகத்தடன் ஆசிரியர்கள் கேட்பார்கள் என்ற பயமும் அவர்கள் தயங்கித் தயங்கிக் கதைப்பதற்குக் காரணம்.![]()
ஞானமும் புஸ்பகலாவும் கைகழுவ பைப்படிக்குப் போக,சற்றுப் பொறுத்து நீலலோஜினியும் அருந்ததியும் எழுந்து அவர்கள் பின்னால் ஐம்பது மீற்றர் தூரத்தில் பொய்க் கொண்டிருந்தனர்.
ஸ்ராப் றூமைக் கடந்து போகும் போது கறுவல் செல்லத்துரை மாஸ்ரரோடு மற்றைய ஆசிரியர்கள் வாக்குவாதப்படுகையில் „ நீங்கள் பொடி பொட்டையளைச்
சேர்த்து வைச்சிடுவியள் போல „ என்று வித்துவான் மாஸ்ரர் சொல்வதைக் கேட்டுக் கொண்டே போன புஸ்பகலாவின் காதிலும் ஞானத்தின் காதிலும் விழ „ எங்கள் இரண்டு பேற்றை செய்தியுந்தான் இவர்களுக்கு இன்றைய தலைப்புச் செய்தி போல „ என ஞானம் சிரித்துக் கொண்டு சொன்னாலும் அவனிடம் காய்ச்சலின் அறிகுறி தெரிகிறது.
ஞானத்தையும் புஸ்பகலாவையும் பின் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த நீலலோஜினியின் காதிலும் அருந்ததியின் காதிலும் „ வகுப்புகளில் ஒவ்வொரு பொடியங்களும் ஒவ்வொரு பொட்டையளும் ஒருத்தரை ஒருத்தர் காதலிச்சினம் என்றால் நாங்கள் படிப்பிக்கிற வேலை மிச்சம்,ஒருத்தற்றை பார்வை ஒருத்தர் மேல் பட்டாலே போதும் விளங்காத பாடமும் அவைக்கு விளங்கிவிடும் „ என்று கறுவல் செல்லத்துரை மாஸ்ரர் சொல்லிக் கொண்டிருப்பது விழுகிறது.
அதைக் காதில் வாங்கிய அருந்ததி „நீலு அப்ப நாங்களும் காதலிக்க வேண்டியதுதான்’ என்று சிரித்துக் கொண்டே சொல்ல’நான் ஏற்கனவே ஒருத்தரை விரும்பத் தொடங்கிவிட்டன்’ என்று தலையைக் குனிந்தவாறு நீலலோஜினி சொல்ல’ ஆரது „ என்று அருந்ததி கேட்க’ எட்டாம் வகுப்பிலை என்ரை தலையிலை ரோஜாப்பூவை வைச்சவரைத்தான்’ என்று நீலலோஜினி பதில் சொல்கிறாள்.அடுத்து நீலலோஜினி சொல்லும் பதில் அருந்ததிக்கு வியப்பைத் தருகின்றது..
(தொடரும்)
![]()