கட்டுரைகள்

“சூழ்ச்சி” …. ஏலையா க.முருகதாசன்.

(„அரசும் அரசாங்கமும் நாடாளுமன்றத்திலிருந்து ஆரம்பிப்பது அல்ல.கிராமங்களில் உருவாகும் சமூக மன்றங்களில் இருந்தே ஆரம்பிக்கின்றது.அவற்றின் பரிணாம படிமுறை வளர்ச்சியே அரசு’)

மனிதகுலம் தோன்றிய போது குழுமைத்தன்மையோ, சமூக ஒருங்கிணப்போ இல்லாத மனித வரலாற்றின் ஆரம்ப காலத்தில் மனிதர்கள் தமக்குள் ஒருவரையொருவர் வெறுக்கும் உணர்வுக்கூடாக அந்த வெறுப்பை வெளிப்படுத்த எத்தகு அணுகுமுறையைக் கையாண்டார்கள் என்பதை அறிய முடியவில்லை.

ஆனால்,காட்டிடை மனிதர்களிடம் ஒருவரை ஒருவர் வெறுப்பதற்கு உடனடி வெளிப்பாடாக இருந்தது அவர்களின் உடல் வலுவேயாகும்.உடல் பலத்தினால் தனக்கு எதிரியென்று நினைப்பவனை அடித்து வீழ்த்தவும் ,மரணத்தை ஏற்படுத்தவும் விளைந்த மனிதன் கூட்டிசைவான வாழ்க்கையை மேற்கொண்ட போது ஒரு குழவிற்கும் இன்னொரு குழவிற்கும் ஏற்பட்ட பகைப்புலத்தினால் அப்பொழுதும் பகைமையைத் தீர்த்துக் கொள்வதற்கு உடல் பலத்தையே நம்பினான்,அதனால் மட்டுமே வெற்றிவாகை சூட முடியுமென்று நம்பினான்.

எதிரியை வெற்றி கொள்வதற்கு உடல் பலம் இருந்தால் போதுமென்று நினைத்தது பல நூறு ஆண்டுகள் வரை அதையே நடைமுறைப்படுத்தினான் மனிதன்.

மனித இனம் தொடர்ச்சியான தேடற்சிந்தனைக்கூடாக தன்னை யார் என்ற நாகரீகத்தை நோக்கி நகர்ந்த போது ஒருவருக்கொருவர் அல்லது சமூக இன ஒப்பீடுகளில் சமநிலையற்ற போக்கினால் தமது பகை உணர்வுகளை வெளிப்படையாக வெளிப்படுத்தாத தருணங்களில் வெறுப்பை சூழ்ச்சி ஊடாக வெளிப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களின் நிலைகண்டு; கண்டு மகிழ்ந்தான். சூழ்ச்சிகளின் மூலம் அடைந்த வெற்றி அவனுக்கு பெரும் மகிழ்வைத்தர அது தனிமனித குணங்களில் ஒன்றாக அவர்களுடனேயே சூழ்ச்சி உணர்வும் சேர்ந்தே பின்னிப் பிணைந்தே வளரத் தொடங்கியது.

உலகப் பரப்பினில் வாழும் மனிதர்கள் அனைவருமே சூழ்ச்சிக் குணம் கொண்டவர்களா என்ற கேள்வி இக்கட்டுரையை வாசிக்கும் வாசகன் ஒவ்வொருவருக்கும் எழும், எழலாம்.

இல்லை என்று முற்றுமுழுதாகச் சொல்லிவிட முடியாது என்ற ஒரு பதிலைச் சொல்லிவிட்டு, சூழ்ச்சிக்கான காரணங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.

இராஜதந்திரம் என்ற செயல்பாட்டுக்குள் சூழ்ச்சியும் உண்டு.தனிமனிதர்களிடத்தில் ஏற்படும் காழ்ப்புணர்ச்சி, தனிமனிதர்களிடத்தில் உள்ள தாழ்வு மனப்பான்மை, தனிமனிதர்கள் தமi;மைப்பற்றி மிகையாக நினைத்துக் கொள்கின்ற உயர்மனப்பான்மை, தனிமனிதர்கள் தம்மிடம் கொண்டுள்ள இயலாமை,மற்றவர்களை அடக்கியாள வேண்டும் என்ற அதிகார வெறி போன்றவை தனிமனித சூழ்ச்சியாகவும், நாடுகள் சார்ந்து பார்க்கையில் நாடுகளை

அடக்கியாள வேண்டும் என்ற நிலையில் இடம்பெறும் இராஜதந்திர நகர்வுகளுக்குள் சூழ்ச்சிகளும் அடங்கியிருக்கின்றது.

தனிமனித சூழ்ச்சிககளில் தனக்கு எதிரியாகவிருப்பவன் அல்லது விரும்பப்படாதவன் மீது,அவனுக்கு அவமானம் ஏற்படும் விதத்தில் பொய்களை புனைந்து அவன்பற்றி சமூகம் தவறான கணிப்புகள் கொண்டிருக்கத்தக்கதாக கதைகளைப் பரப்புதல்.அதை உண்மையென நம்பி அவனை வெறுக்கத் தொடங்குபவர்களும் உண்டு.

பொதுவாக பார்க்கும் போது இது சமூக மனிதர்களின் குணாம்சங்களின் ஒன்றுதானே என்ற கருத்து இருந்த போதிலும் இதுவே சூழ்ச்சியின் முளைவிடும் நிலையாகும்.

ஒருவர் தன்னைப் பற்றி அவதூறாக மற்றவர்களுக்குச் சொல்லிவிட்டார் என்று அறியும் போது அவருடன் நேரிடையாக ப் பேசி உண்மை எது பொய் எது என்பதைக் கண்டறிவதே சிறந்த பண்பாகும்.

அதைத் தவிர்த்துவிட்டு சம்பந்தப்பட:டவர்;பற்றி முறைகேடான கதைகளைப் பரப்பி ‘அவருக்கு படிப்பிக்கிறன் பாடம்’ என்ற சூழ்ச்சி உணர்வுடன் செயல்படுவது தீங்கான எண்ணமே ஆகும்.

குடும்பங்கள் மீதான காழ்ப்புணர்ச்சி அக்குடும்பங்களில் உள்ள பிள்ளைகள் மீதும் பெண்கள் மீதும் அவதூறு பரப்புவதில் சென்று முடியும்.இதுவும் சூழ்ச்சிதான்.

குறிப்பாக பெண்பிள்ளைகளை இலக்கு வைத்து அவர்கள் தவறான நடத்தை உடையவர்கள் என்று சூழ்ச்சி உணர்வுடன் கதையைப் பரப்புவர்களின் நோக்கம் அவர்களுக்கு எதிர்காலத்தில் நல்ல வாழ்க்கை அமைந்துவிடக்கூடாது என்பதற்கேயாகும்.அதனால் அந்தக் குடும்பம் வேதனைப்படுவதை இரசிக்கும் மனிதர்களும் உண்டு.

ஒரு குடும்பத்துக்கு அவமானப் பெயர் ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக குடும்பத்தலைவி பற்றி எவ்வித மனச்சாட்சியுமின்றி தவறான கதைகளைப் பரப்புவது இது மிக மேசமான சூழ்ச்சியாகும்.

நண்பர்களைப் பிரித்து வைப்பதிலும் சூழ்ச்சி உணர்வு மேலோங்கி நிற்கின்றது.மனித வரலாற்றின் ஆரம்பத்தை உள்வாங்கிக் கொண்ட காலமாக மன்னர் காலத்திலிருந்து அவதானிக்கையில், அக்காலத்திலும் தனிமனித சூழ்ச்சி தொடங்கி மன்னர்களின் சூழ்ச்சியும் அப்பொழுமே ஆரம்பித்துவிட்டது.

ஒரு மன்னனின் பெருமை பற்றியும் அவனின் வீரு தீரச் செயல்கள் பற்றியும் பேசும் வரலாறுகளை எழுதும் வரலாற்றாசிரியர்கள் அவன் தனது எதிரான மன்னர்களுக்கு செய்த சூழ்ச்சி பற்றி சார்புநிலை காரணமாக எழுதாது தவிர்த்து அவன் சூழ்ச்சியையும் வென்று தன் அரசைக் காப்பாற்றினான் தனஇ அரச மண்டலத்தை விஸ்தரித்தான் என்று எழுதுவார்.

ஒரு நாட்டைப் பற்றியோ ,அரசுகளைப் பற்றியோ ஒரே விதமான வரலாறு;று நூல்கள் வருவதில்லை.ஒவ்வொரு வரலாற்று ஆசிரியர்களும் அவரவர் தேடி

எடுத்த தரவுகளின்படியும்,ஆதாரங்களின் படியும் வௌ;வேறு வரலாறுகளை எழுதுவார்கள்.

உவத்தல் காய்தல் இன்றி நடுநிலையாக எழுதும் வரலாற்றாசிரியர்கள் தமது வீரச் செயல்களால் பெரும் புகழடைந்த மன்னர்கள் தாம் ஒரு நாட்டை வீழ்த்துவதற்காக என்னென்ன சூழ்ச்சிகளைச் செய்தார்கள் என்பதை விலாவாரியாக எழுதுவார்கள்.

சமூக மேம்பாட்டுக்காக சமூக மாந்தர்களால் உருவாக்கப்பட்டு வரும் அமைப்புக்கள் காலப்போக்கில் பிரிந்து போவதற்கும் சிதிலமடைந்து போவதற்கும் சூழ்ச்சியும் காரணமாகவிருக்கின்றது.

குறிப்பாக சமூக அமைப்புகளில் பிளவுகள் ஏற்படுவதற்கு காரணமாகவிருப்பது நிதியும், அக்குழுவில் அங்கம் வகிப்பவர்களின் சமநிலையற்ற சிந்தனையுமேயாகும்.

நிதிக்கு பொறுப்பாகவிருப்பவர் நூறு வீதம் நேர்மையாக இருந்த போதும் அவரை நீக்க வேண்டுமென்று சூழ்ச்சி மனப்பான்மையுடன் செயல்படுபவர்கள் அணுவிலும் சிறிதான ஒரு விடயத்தை எடுத்து மிகப் பெரிய தவறாகச் சித்தரித்து பரப்புரை செய்து விடுவார்கள்.

சமூக அமைப்புகளில் அங்கம் வகிப்பவர்களில் சிலர் புதிய தேடலுக்கான சிந்தனையும் நுட்பமான அறிவும் கொண்டவர்களாக இருப்பார்கள்.இத்தகையவர்கள் எப்பொழுதும் தனித்துக் காணப்படுவார்கள்.

சமூக அமைப்புகளில் அங்கம் வகிப்பவர்களில் எவ்விதமான நுட்ப அறிவோ சிந்தனையோ இல்லாதவர்கள், அறிவுசீவிகளாகச் செயல்படுவோரை வெறுப்பார்கள்.வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாவிட்டாலும் உள்ளுக்குள்ளே தாழ்வு மனப்பான்மையால் புழுங்கிக் கொண்டிருப்பார்கள்.இந்த தாழ்வு மனப்பான்மை சூழ்ச்சியை நோக்கிச் செல்ல வைக்கும்.

பொது அமைப்புகளில் காணப்படும் சூழ்ச்சிக் காய்நகர்த்தலுக்கும் கரம்போர்ட் விளையாட்டுக்கும் ஒப்பீட்டளவில் தொடர்பு உண்டு.

சூழ்ச்சி என்ற சொல் சமூகத்தினால் பரவலாகப் பேசப்படும் சொல்தான்.சிலவற்றைப் பற்றிப் பேசலாம் சிலதைப் பேசக்கூடாது என்று ஒன்றுமேயில்லை.

ஒரு சமூகத்தில் எதுவெதுவெல்லாம் இருக்குதோ அவையெல்லாம் பேசுபொருள்தான்.

சூழ்ச்சி செய்தல் என்பது ஏதோ இன்று பரவலாக உலகெங்கும் பேசப்படுவதால் அந்தச் செயல்பாடு பல ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது என்ற தவறானது.

மனிதர்களிடம் இருக்கும் இழிநிலைக் குணங்களில் அதுவும் ஒன்று.இக்குணமானது உடல் வலுவால் எதிரியை வீழ்த்திய காலகட்டத்தைத் தாண்டிய போது சூழ்ச்சிப் போரை மனித குலம் ஆரம்பித்தது.இன்றைய நவீன நாகரீகத்தைக் கண்டுணராத

காலத்திலேயே சூழ்ச்சி செய்தல் அரசப் பொறிமுறையாக நிர்ணயிக்கப்பட்டது.

சூழ்ச்சியை ,மிருகங்களை த் தாக்கிப் பிடிக்காமல் பொறிக்கிடங்கு வெட்டி வெட்டிய குழி, குழியென்று தெரியாமல் அதற்கு மேல் இலைகுழைகளை சருகுகளைப் போட்டு , வெட்டிய குழி யின் மேல் இருக்கும் இலைகுழைகளையும் சருகுகளையும் பார்த்துப் பழகிய ஐந்தறிவு படைத்த மிருகங்கள் அந்தக் குறிக்குள் வீழ்ந்துவிடுகின்றன.

இந்தக் கட்டுரையில் தமிழர்களிடமும் இருந்தது என்று விளித்தெழுதியமையால் சூழ்ச்சிக் குணம் தமிழர்களுக்கு மட்டுமே உள்ள இழிநிலைக் குணம் என்று யாருமே நினைத்துவிடாதீர்கள்.உலக மக்கள் அனைவரிடமும் இது இருக்கத்தான் செய்கின்றது.

குறிப்பாக தமிழனாக, ஒரு ஈழத்தமிழனாக பார்க்கும் போது இலங்கை மக்களாகிய தமிழர்களை காலணித்துவ ஆட்சிக்கு உட்படுத்தி ஆண்ட போர்த்துக்கீசராகட்டும், ஒல்லாந்தராகட்டும், பிரித்தானியாராகட்டும் அவர்களின் ஆட்சி முறைமைகள் இலங்கை மக்களுக்கு நன்மை செய்வது போலத் தோன்றினாலும் அங்கும் இராஜதந்திரமும் அதை செயல்படுத்த சூழ்ச்சியும் கையாளப்பட்டது என்பதை மறுப்பதற்கில்லை.இன்னும் சொல்லப் போனால் பிரித்தானியர் செய்த சூழ்ச்சிதான் இலங்கை இன்றும் தொடர்ந்து அல்லாடிக் கொண்டிருப்பதற்குக் காரணம்.

எந்த எந்த இடங்களில் சூழ்ச்சிச் செயல்பாடுகள் இருக்கின்றன என்பதை தொடரப் போகும் இக்கட்டுரை இனங்காட்டும்.

கரம் போர்ட் விளையாட்டுக்கும் சூழ்ச்சி உத்திகளுக்கும் சம்பந்தம் உண்டென்பதற்கமைய சமூக அமைப்புகளில் காணப்படும் சூழ்ச்சிகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்று பார்ப்போம்.

சமூக அமைப்புகளை பொதுநோக்குச் சிந்தனையுடனேயே தொடங்குவார்கள்.பல நல்ல செயல்திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவார்கள்.காலப்; போக்கில் ஒவ்வொருக்குள்ளும் ஏற்படும் அவரவர் பற்றிய தாழ்வு மனப்பான்மை அல்லது உயர்மனப்பான்மை அந்தச் சமூக அமைப்பினரின் ஒற்றுமையைச் சீர்குலைக்க வழிவகுத்துவிடுகின்றது.

ஒரு சமூக அமைப்பில் அங்கம் வகிப்பவர்கள் அனைவருமே ஒரே விதமான வினைத்திறன் கொண்டவர்களாக இருப்பதில்லை.ஒவ்வொருவரும் தான் வகிக்கும் அமைப்பு எதை நோக்கிச் செல்ல வேண்டுமென்பதில் ஒவ்வொரு கருத்தினைக் கொண்டிருப்பார்கள்.

இந்தக் கருத்து வேறுபாடு திட்டமிடலில் ஒவ்வொருவரும் தான்தான் சொன்னதையே நடைமுறைப்படுத்த வேண்டும் என வாக்குவாதப்படுவார்கள் முரண்படுவார்கள்.

சனநாயாகமுறை என்பது ஒவ்வொருவரின் கருத்தையும் உள்வாங்கி அவற்றில் நடைமுறைச் சாத்தியத்தையும்,சிறந்ததாக இருக்கின்ற அணுகுமுறைப் படிமுறையைக் கவனத்தில் எடுத்து அதனை நடைமுறைப்படுத்துதல் ஆகும்.

இன்னொன்று அங்கத்தவர் எல்லோருடைய கருத்துக்களில் இருக்கின்ற மூலத்தன்மைகளின் இழைகளை உள்வாங்கி அவற்றை ஒரு கூட்டு வடிவமாக்கி அதனை நடைமுறைப்படுத்துவது.

இதற்கு எளிய உதாரணமாக ஒரு கயிற்றைச் சொல்லலாம். கயிறு என்பது ஒவ்வொரு இழைகளினால் ஆனாது.இந்த இழைகளே மிக நுண்ணிய தும்புகளால் ஆனது.இந்து தும்புகள் மிக நுண்ணிய தும்புகளின் திரள்வினால் ஆனது. அவையாவும் கலங்களினால் உருவாக்கப்பட்டவையாகும்.பலபடிமுறைகளைத் தாண்டிய இந்த இழைகளை ஒன்றாகப் பின்னும் போது அது திடகாத்திரமான கயிறாகின்றது.

அது போலவே ஒரு சமூக அமைப்பு ஒரு செயல்பாட்டுக்கு ஆயத்தமாகி அதனைச் செயல்படுத்த அங்கத்தவர்களை அழைத்து கூடிப்பேசும் போது ஒவவொருவரின் ஆலோசனைகளிலிருந்து ஒவ்வொரு யோசனையாக எடுத்து அதற்கு அனைவரினதும் என்ற தோற்றத்தை வெளிப்படுத்த அவரவரின் பெயர்களைச் சொல்லி அந்தத் தி;ட்டமிடலைச் நிறைவேற்றும் போது மனச்சங்கடங்கள் இல்லாது ஐக்கியமும் மகிழ்ச்சியும் ஏற்பட இந்நடைமுறை வழிவகுக்கும்.

ஆனால் அதே வேளை ஒரு சமூக அமைப்பில் அங்கம் வகிப்பர்களில் பலர் திட்டமிடலிலோ நடைமுறைப்படுத்தலிலோ எவ்விதமான கருத்துக்களையோ யோசனைகளையோ கொண்டிருக்கமாட்டார்கள் . இத்தகையவர்களுக்கும் அமைப்பின் கட்டமைப்புக்குமிடையில் ஒரு இடைவெளி இருக்கும்.நிர்வாகக்குழுக்கூட்டங்களுக்குகூட ஒப்புதலுகு;கு வந்தவிட்டுப் போகிறவர்களே இத்தகையவர்கள்.

இத்தகையவர்களில் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் எப்பொழுதும் குழப்பவாதிகளாக இருப்பார்கள்.திட்டமிடலிலும் செயல்பாட்டிலும் வேண்டுமென்றே குறைகளைக் கண்டு பிடிப்பார்கள்.

ஒரு செயல்பாட்டை நடைமுறைப்படுத்தும் போது, அதனைச் சரியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்று நினைப்பார்கள்.ஆனால் திட்டமிடலுக்கும் செயல்படுத்தலுக்குமிடையில் தவறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் சூழ்நிலை காரணமாக அமைந்துவிடுகின்றன.

இத்தவறுகள் அதிருப்தியாளர்களால் பூதாகரமாக வளர்க்கப்படும் போது நிர்வாகத்துக்குள் பல சார்புநிலைக் குழுக்கள் தோன்றத் தொடங்கிவிடும்.

இந்தச் சார்புக் குழுக்கள் அகப்புற மோதல்களில் ஈடுபடும் போது சூழ்ச்சி மனநிலை தோன்றத் தொடங்கிவிடும் எவர் எவரைப் பகடைக்காய்களாக்கி அமைப்பை இல்லாதொழிக்கலாம் என்பதில் அதிருப்தியாளர்கள் செயல்படத் தொடங்குவார்கள்.

கரம்போர்ட் விளையாட்டில் குழிக்குள் விழுத்த வேண்டிய காயக்கும் அடிக்கும் காய்க்கும் இடையில் நேர்க்கோடு இல்லாத பட்சத்தில் கைதேரந்த ஒரு விளையாட்டு வீரன் அடிக்கும் காயை எங்கெல்லாம் தட்டித் தட்டிக் குழிக்குள் விழ வேண்டிய காயை அடிக்கம் காய் விழுத்தும் என்பதை கூர்மையாக அறிந்து அதனைச் சுண்டி விடுவான்.இதில் இருக்கும் புத்திக்கூர்மை என்பது கணிதம் சார்ந்த இயற்பியல் தத்துவம் ஆகும். ஒரு சூழ்ச்சியாளன் தனது குழிபறிக்கும் சதியை ஆரம்பிக்கும் முன் ஒவ்வொருவரின் குணத்தையும் எடை போடுவான். சிலர் ஒருவர் மிது வைத்திருக்கும் வெறுப்பை நேரடியாக உமிழ மாட்டார்கள். தனக்கு நம்பிக்கை உள்ளவர்களிடமே அதனை வெளிப்படுத்துவார்கள். சிறிதாக இருக்கும் தீப்பொறியை பெருந்தீயாக மாற்றுவதற்கு எவ்வாறு காற்று உதவி செய்கின்றதோ அது போலவே தனது மனதில் இருப்பதை வெளிப்படுத்த முடியாது பலவினமாக இருப்பவனை அணுகி நான் உன்னுடனேயே இருப்பேன் இந்த இந்த வழியைப் பின்பற்று என அலோசனை சொல்வான். தனது எண்ணத்தை வெளிப்படுத்த முடியாதவாறு தவித்தவனுக்கு அது ஒரு ஊன்று கோலாக இருக்கும்.

ஊரில் சமூக அமைப்புகளாக கருதப்படும் வாசிக சாலைகள்,சனசமூக நிலையங்கள் என அவை தோற்றுவாய் பெறும்பொது ஊர்மக்கள் ஒன்றுகூடி தேர் இழுப்பது போல ஒருமித்த குரலாக ஐக்கியப்பட்ட மக்களின் உணர்வுத் திரட்சியின் வெளிப்பாடு என வியக்க வைக்கும் விதத்தில் பெரும் மகிழ்ச்சிக்கு மத்தியில் புளகாங்கித உணர்வுடன் சமூக வளர்ச்சிக்காக அவ்வமைப்புகளை அமைப்பார்கள்.

ஏதாவது விழாச் செய்துவிட வேண்டுமென்ற என்ற எண்ணத்துடன் வேகம் வேகமாக விழாக்கான முன்னெடுப்புக்கள் வழியாக திட்டமிடுதல் மேற்கொள்ளப்பட்டு விழாவும் ஆரவாரமாக நிறைவு பெற்றுவிடும்.

எதுவுமில்லாத ஊருக்குள் கலங்கரைவிளக்கொன்று அமைக்கப்பட்டுவிட்டதென்று ஊரார் அனைவரும் மகிழ்வர் சிலநாட்களுக்கு அனைவரின் அன்றாட உரையாடல்களில் அதுவே பேசுபொருளாக இருக்கும்.

அனைவரினாலும் பேசப்பட்ட விழாபற்றியதும் சமூக அமைப்பு பற்றியதுமான உரையாடல் மெதுமெதுவாக கருத்தாடல்களாகவும் விவாதமாகவும் மாறும்.

பொது அமைப்பொன்று தேவையென்று யாரோ ஒரு இளைஞனின் மனதில் தோன்றிய எண்ணம் இன்னும் சிலரையும் ஐக்கியப்படுத்திய நிலையில் குழுத்தன்மை பெற்று குழுத்தன்மை பரிணாமம் வடிவம் கொண்டு செயல்ஊக்கத்தைக் கொண்டு நிலைக்கு வந்து நிற்கும்.

ஒன்றுகூடி குழுத்தன்மையுடன் செயல்பட்டவர்கள் அல்லது பொது அமைப்புக்கான நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்தியவர்கள் மத்தியில் அவரவர் எண்ணங்கள் எப்பொழுதுமே சம அளவாக இருப்பதில்லை.

புதிய எண்ணங்களும் அதனூடாகத் தோன்றும் சிந்தனையும் அந்தச் சமூக அமைப்பு தனது ஊருக்கு வளர்ச்சி நோக்கி என்ன செய்யப் போகிறது என்ற விவாதம் எழுகிற போது, ஒன்றுகூடி தேர் இழுத்தவர்கள் ஆளுக்கொரு பக்கமாக வடத்தைப் பிடித்து இழுக்கத் தொடங்கி விடுவார்கள்.

இதற்கிடையில் சமூக அமைப்பை உருவாக்குவதிலும்,பின்னர் விழாவின் ஏற்பாடுகளுக்காக முன்னின்று உழைத்தவர்கள் பற்றி ஊருக்குள் அவர்களைப் பற்றிய புகழ்ந்துரைகளாலும் சிலரால் வேண்டுமென்றே மிகையான புகழ்ச்சியுரை லும் ஊருக்குள் „அவர் என்ன பெரிய ஆளோ’ என்ற காழ்ப்புணர்வுத் துளிர் வளர ஆரம்பித்துவிடும்.

ஒரு நிர்வாகக் கட்டமைப்பை உடைப்பதில் கவனம் செலுத்தும் நிர்வாகத்தில் உள்ளவர்களும் இத்தகு சமூகச் செயல்பாடுகளை விரும்பாதவர்களும் ஒன்றிணையத் தொடங்கிவிடுவார்கள்.

பணச் செலவில் ஆரம்பிக்கும் விவாதங்களும் கருத்துப் பகிர்வும் ‘இந்த விழாவுக்கு இவ்வளவு செலவா, இதற்குச் செலவழித்த காசில் பத்து விழாக்களை நடத்திவிட்டுப் போகலாம் என செய்தியை பரப்பிவிடுவார்கள்.

செய்தியைப் பரப்புவர்களிடம் பணத்தை மிச்சம் பிடிப்பதற்கான நல்ல நோக்கம் இருப்பதில்லை.அவர்கள் போகிற போக்கில் வைக்கல்பட்டடையில் தீக்குச்சியை உரசிப் போட்டது போல போட்டுவிட்டுப் போவார்கள்.அந்த அவதூறுத் தீ ‚சூழ்ச்சித் தீயாக மாறி எப்படி ஒரு சிறு தீப்பொறி சருகுகளை எரித்து பின்னர் பச்சை மரங்களையும் வெப்பமாக்கி எரித்து அணைக்க முடிக்காத காட்டுத் தீயாகி, நடுநிலையான மனிதர்களையும் மூளைச்சலவை வழிமூலம் பக்க சார்புடையவர்களாக்கி சூழ்சிக்குத் துணை போனவர்களாக்கி விடும்.

உண்மையாக நல்ல நோக்கத்தோடு உழைத்தவர்கள் மீது கெட்ட பெயரையும் அவமானத்தையும் இந்தச் செய்தி கொண்டு வந்து சேர்க்கும்.

நிர்வாகக் கட்டமைப்புக்குள் சகுனிசமும் சாணக்கியமும் ஒன்று சேர்ந்து உறுப்பினர்கள் தனித்தனி தீவாக பிரிவாக பிரிந்து ஒத்ததன்மையுள்ள மூலகங்கள் ஒன்று சேருவது போல சேர்ந்துவிடுவார்கள்.

இந்த நிலைக்குக் காரணமே ஒரு சிலரிடம் தோன்றும் சூழ்ச்சிமிகுந்த காழ்ப்புணர்ச்சியேயாகும்.சும்மாவே வாயை மெல்லும் ஊருக்கு அவல் கிடைத்தது போல, சமூக அமைப்பு உருவாக்கியமையை மகிழ்ந்து கலந்துரையாடி கதைத்தவர்களும், ஊருக்குள் ஒரு விழா நடந்ததை பெருமையோடு கதைத்து மகிழந்;தவர்களும் இப்பொழுது சமூக அமைப்புக்குள் தோன்றிய குழப்ப நிலையைப் பற்றியே கதைக்கத் தொடங்கிவிடுவார்கள்.

உண்மையாகவே அந்தச் சமூக அமைப்புக்குள் ஊழல் நடந்ததா, விழாவில் பணம் விரையமாகச் செலவழிக்கப்பட்டதா,அல்லது பணம் கையாடப்பட்டதா என்பதை திறந்த மனதுடன் தீர விசாரிக்காமல் ‘இருந்திருக்கலாம்’ ‘இருக்கும்’ என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் ஊகத்தின் அடிப்படையிலும் சிலர் கேள்விச் செவியன் ஊரைக் கெடுத்தான் என்பதற்கொப்ப தீய எண்ணத்துடன் தவறான செய்திகளைப் பரப்பிவிடுவார்கள்.

இச்செய்திகளால் நாளுக்கு நாள் அதிருப்தி முடிச்சுக்கள் இறுகுமே தவிர அவை ஒரு போதும் நெகிழ்ச்சி தன்மையடையவே அடையாது.

காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களாலும் சூழ்ச்சி மனநிலை கொண்டவர்களாலும் விசத்தன்மையுடன் பொய்புனை செய்திகளாக வருபவை அந்தச் சமூக அமைப்புக்கு எதிராக இன்னொரு அமைப்பை உருவாக்குவதற்கான அடித்தளத்தை இடுவார்கள்.

‘அவரால்தான் முடியுமா? உன்னால் முடியாதா? அவரென்ன பெரிய ஆளா? நாங்கள் இருக்கிறம் இன்னொரு சமூக அமைப்பைத் தொடங்குவோம்என ஒரு சிலரைத் தூண்டி இன்னொரு சமூக அமைப்பைத் தொடங்கிவிடுவார்கள்.

இன்னுமொரு சூழ்ச்சியும் இடம்பெறுவதுண்டு.பொதுக்குழு கூட்டத்திலிருந்து தெரிவு செய்யப்படும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்களாக தம்மைக் காட்டிக் கொண்டு தெரிவின் மூலம் நிர்வாகக்குழுவில் இடம்பெற்றுவிடுவார்கள்.

குழுவாக நன்கு திட்டமிடலுடன் வரும் இவர்கள், ஆரம்பத்தில் தமது சுயரூபத்தை வெளிப்படுத்தவே மாட்டார்கள்.

கணிசமான தொகை நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சமூகமளித்தால் மட்டுமே நிர்வாகக் குழுவைக்கூட்ட முடியும் தீர்மானங்களை எடுக்க முடியும் என்ற சமூக அமைப்பின் விதிகளுக்கமைய, போதிய நிர்வாகக்குழு சமூகமளிக்காத போது நிர்வாக்குழுக் கூட்டத்தையோ தீரமானங்கள் மூலம் செயல்பாடுகளை முன்னெடுக்க முடியாத சூழ்நிலை தோன்றும்.

சமூக அக்கறையோ தொண்டுநிலை கொண்ட அறம் சார்ந்த மனப்பக்குவமோ, மனிதமாண்போ இல்லாதவர்களினால் ஒரு சமூகம் சமூகப் பொது அமைப்புகளின் ஊடாக எழுச்சியைப் பெறமுடியாமல் போகின்றது.

சமூக அமைப்பின் செயல்பாடுகளே அரசின் உருவாக்கத்திற்கே காரணமாகின்றன. ஊருக்குள் தோன்றும் எண்ணப் பொறி தொண்டாற்றும் ஒரு அரசியல்வாதியை இனம் காண வைக்கின்றது.சூழ்ச்சி என்பது ஒரு சதிப் பொறி.

சமூக அக்கறையே பொது வாழ்வுக்கு வித்திடுகின்றது.ஊருக்குள் பொது அமைப்பொன்றை உருவாக்கி, அதன் மூலம் மக்களுக்குத் தொண்டு செய்யும் ஒருவன் எதிர்காலத்தில் தான் வாழும் நாட்டிற்கே தலைவனாக வரக்கூடிய வாளய்ப்பு அமைந்தவிடுவதும் உண்டு.

பொதுவாக சமூக அமைப்புகளில் காணப்படும் குறைபாடு என்னவெனில் அதில் அங்கம் வாகிப்பவர்களின் ஆளுமைகள் ஒரே விதமாக இருப்பதில்லை.இந்த ஆளுமை வேறுபாட்டினால் பொது அமைப்புகளில் அங்கம் வகிப்பவர்களில் ஓரிருவர் மட்டுமே சிந்தனை வீரியமுள்ளவர்களாகவும,நுண்ணறிவு உள்ளவர்களாகவும்;; மற்றவர்களைவிட வித்தியாசமாக மனம் கொள்ளத்தக்க விதத்தில் பலரைக் கவரும் ஆளுமைத் தன்மை உடையவர்களாகவும் இருப்பார்கள்.

இத்தகையவர்கள் மற்றவர்களின் பார்வைக்கு உட்படுவார்கள்.அவர்களைப் பெருமிதமாக நினைப்பார்கள்.ஒரு இளைஞன் தனது ஊரின் முன்னேற்றத்திற்காக

சிந்திப்பவனாக இருக்கும் பட்சத்தில் தமது ஊரில் உள்ள வெள்ளவாய்க்கால்கள் பற்றியோ ஒழுங்கைகள் பற்றியோ பலரும் சிந்திக்காத பல விடயங்களை இவன் சிந்திக்கத் தொடங்குவான்.

மழைகாலங்களில் வெள்ளவாய்க்காலில் கரைபுரண்டோடும் வெள்ளம் வாய்க்காலையும் மேவி குடிமனைக்குள் புகுந்து அங்கு வாழ்பவர்களை அவதிக்குள்ளாக்கும் செயலுக்கு என்ன பரிகாரம் காணலாம் என சமூகத்தை நல்லதைச் செய்ய நினைக்கும் ஒருவனைச் சிந்திக்க வைக்கின்றது.

குறுகிய ஒழுங்கைகளை தனது ஊரில் பார்க்கும் ஒருவன், இந்த ஒழுங்கைகள் அகலமாக இருந்தால்,ஒழுங்கையின் இருமருங்கிலும் இருக்கும் புல்பூண்டுகளை சிறுசெடிகளை அகற்றினால் இந்த ஒழுங்கைகளைப் பாவிக்கும் மக்களுக்கு வசதியாக இருக்குமே எனச் சிந்திப்பதுடன்,அந்த ஒழுங்கைக்கூடாக மின்சாரத்தையும், தார் ஊற்றிய பாதையாகவும். அந்த ஒழுங்கையை மாற்ற முயற்சிப்பதும் தனதூரை நேசிக்கும் ஒருவனால் மேற் கொள்ளப்படும் செயல்பாடாகும்.

வெள்ளத்தில் அவதிப்படும் மக்களின் நலன் கருதி, மழை பெய்து மழை நீர் வெள்ளமாக மாறுமுன் அந்நீர் வடிந்து வெள்ளவாய்க்காலில் போய்ச்சேருவதற்கான வழிவகைகளை அரச உதவியுடனோ அல்லது ஊராட்சியினரின் உதவியுடனோ செய்ய முற்படுவான்.

பொதுநலச் சேவை கொண்டு தன்னொத்த வயதினருடனோ, தன்னிலும் மூத்த வயதினருடனோ அவன் இணைந்து செயலாற்ற முனையும் போது,எவ்வித பொதுநல எண்ணமும் இல்லாதவர்கள் மனதில் இவற்றையெல்லாம் இவனால் – இவர்களால் எப்படிச் செய்ய முடிகிறது என்ற தாழ்வு மனப்பான்மை காரணமாக அவர்கள் மனதில் அழுக்காறு எனும் அழுக்கு படிந்து கொள்ளத் தொடங்கும்.

இந்த அழுக்கு, சூழ்ச்சிக் குணத்தைத் தோற்றுவிக்கும்.இந்த சூழ்ச்சிக் குணம் பொதுநலச் செயல்பாடுகளை முடக்கி சீர்குலைத்து பொது அமைப்பை இல்லாது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை மேலோங்கச் செய்யும்.

இவ்வாறு அழுக்கான மனப்பான்மையுடன் அணிசேர்பவர்கள், நல்ல சிந்தனை உள்ளவர்களின் செயல்பாடுகளை வரவேற்பது போல பொய்முகம் காட்டிப் பொது அமைப்பொன்றில் அதிகளவான நிர்வாகக்குழு உறுப்பினர்களாக இணைந்து கொள்வார்கள்.இத்தகையவர்கள் தாம் வகுத்த சூழ்ச்சித் திட்டத்தின்படி தமது பதவிகளை இராஜிகாமாச் செய்யத் தொடங்குவார்கள்.அல்லது ஒவ்வொரு காரணங்களைச் சொல்லிக் கூட்டங்களுக்குச் சமூகமளிப்பதைத் தவிர்ப்பார்கள்.

இணைந்து கொண்டவர்கள் நிர்வாகக்குழுவை கூட்ட முடியாத பெருபான்மையற்ற உறுப்பினர்களால் எதுவுமே செய்ய முடியாத நிலையை தோற்றுவிப்பதன் மூலம் தங்கள் ஊரின் முன்னேற்றத்தை தடுத்து விடுவார்கள்.அவர்களைப் பொறுத்தவரையில் நல்லதைச் சிந்திப்பவர்களைத் தடுப்பதே அவர்களின் மனநிலையாகும்.மூக்குப் போனாலும் சகுனம் பிழைக்கக்கூடாது என்பது அவர்களின் எண்ணமாகும்.

„அரசும் அரசாங்கமும் நாடாளுமன்றத்திலிருந்து ஆரம்பிப்பது அல்ல.கிராமங்களில் உருவாகும் சமூக மன்றஙகளில் இருந்தே ஆரம்பிக்கின்றது.அவற்றின் பரிணாம படிமுறை வளர்ச்சியே அரசு’

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *