கட்டுரைகள்

ஜேர்மனிக்கு எதிரான சதியைச் செய்தவர்கள் யார்?… ஏலையா க.முருகதாசன்.

ஜேர்மனியின் ஆட்சிக் கவிழ்ப்புக்காக சதி செய்தவர்கள் (03.12.22) கைது செய்யப்பட்டு சதி முறியடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான செய்தியும் பார்வையும்.

அண்மை நாட்களில் பரபரப்பான செய்தியாக எல்லோராலும் பேசப்பட்ட செய்தி ஜேர்மனிக்கு எதிராக ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான சதி பற்றியதே.

இச்சதிக்கான காரணம் இருவழிப்பாதை என அவதானிகள் கருதுகிறார்கள். பொதுவாகவே வல்லமை பொருந்திய நாடுகள் என்னதான் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வு வழியில் வணிக ஒப்பந்தங்கள், கண்ட நாடுகள் பிராந்திய நாடுகள்,தொழில்நுட்ப ஒப்பந்தங்கள் நட்புநாடுகள் என்ற ரீதியில் வெளி உலகிற்கு காட்டிக் கொண்டாலும்,ஒவ்வொரு நாடும் வைத்திருக்கும் உள்ளக அரசாங்கம் என்பதற்கூடாக தமது உளவு வேலைகளைச் செய்து கொண்டேதானிருக்கின்றன.

ஓவ்வொரு நாட்டினதும் உளவு நிறுவனங்கள்.வெளியில் தமது அரசாங்கத்துடன் தொடர்பு இல்லாதது போலத் தோன்றினாலும்,அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டதாககவே இருக்கின்றன, அது தவிர்க்க முடியாததுமாகும்.

ஐரோப்பாவில் முன்பு தனித்தனி நாடாக இருந்த பல நாடுகள் ஒன்றாக அணிதிரட்டப்பட்டு ஐரோப்பிய ஒன்றியம் என்ற குடையில் இயங்கி வருகின்றன.

இந்த ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தலைமை தாங்கும் நாடாக ஜேர்மனி இருந்து வருகின்றது.அதனால் ஐரோப்பிய நாடுகள் யாவும் ஜேர்மனியாகவே பார்க்கப்படுகின்றது.

ஜேர்மனி உலக நாடுகளிலேயே தனித்துமிக்க நாடாக இருந்து வருகின்றது.அதனுடைய இராணுவ, காவல்துறை கட்டமைப்பு பல நுணுக்கங்களைக் கொண்டது.பல அடுக்கு ஸ்திரத்தன்மை கொண்டது.

அதனால் வேகமாகச் சதிகள் முறியடிக்கப்படுகின்றன.உளவு அமைப்புகளின் ஒற்றர்களை கழுகுப் பார்வை பார்த்துக் கொண்டே ஜேர்மனியின் அது சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் இருக்கின்றன.

உக்னரன் மீதான போருக்கு வழிவகுத்தது ரஸ்யா என்றாலும்,ரஸ்யா தூண்டப்பட்டதற்கான காரணம் உக்ரைன் நேட்டோவில் அங்கம் வகிக்கப்பதைத் தடுப்பதற்கே இந்தப் போர் என்று ரஸ்ய தரப்புச் சொல்லிக் கொண்டிருக்கின்றது.

நேட்டோவில் உக்ரைன் அங்கம் வகிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மேலும் தூண்டியதில் அமெரிக்காவின் பங்கு இருக்காது என்று ஒரேயடியாகச் சொல்ல முடியாது.

உக்ரைனின் இந்தத் திட்டத்தை ரஸ்யா எதிர்க்கும்,தடுக்கும் பின்னர் போர் தொடுக்கும் என்பதை அமெரிக்கா நன்றாகவே அறிந்து வைத்திருந்தது.

போர் ஒன்று ஏற்பட்டால் உடனடிப் பாதிப்பு உக்ரைனுக்கு மட்டுமல்ல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மட்டுமல்ல அதில் முக்கியமான பாதிப்புக்குள்ளாகப் போவது ஜேர்மனிதான் என்பதும் அமெரிக்காவுக்கும் தெரியும்.

என்னதான் வலுவான பொருளாதார,நிதி,தொழில்துறை கட்டமைப்பு ஜேர்மனியிடம் இருந்தாலும் அங்கும் சில தேவைகளுக்காக அண்டை நாடுகளைச் சார்ந்திருக்க வேண்டிய சூழல் ஜேர்மனிக்கு உண்டு.

ஜேர்மனியில் இல்லாத ஒரு பொருளுக்காக ஜேர்மனி எந்த நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்திருக்கிறது என்பதை அமெரிக்கா நன்றாக அறிந்து வைத்திருக்கும்.

ரஸ்யாவும் தனக்கெதிராக திரும்பும் நாடுகளைத் தனது வலையில் வீழ்த்துவதற்காக வணிக ஒப்பந்த பொருட்களையோ, தொழில்நுட்பத்தையோ தகுந்த நேரம் பார்த்து ஜேர்மனிக்கு எதிராக பயன்படுத்த பின்வாங்காது.ரஸ்யாவும் தூர நோக்குடனேயே உதவிகளைச் செய்யும்.

தற்போதைய நிலையில்,குளிர்காலத்தில் முக்கியமாகத் தேவைப்படும் வெப்பமாக்கிக்கு தேவையான காஸ்ஸை மலிவு விலையில் விற்பதற்கு வணிக ஒப்பந்தம் மூலமாக காஸை வழங்கிக் கொண்டிருந்தது ரஸ்யா.

குளிர்காலத்தில் வெப்பமாக்கிக்குத் தேவையான காஸ் போதியளவு மக்களுக்குக் கிடைக்காது போனால் குளிரினால் மக்கள் அவதியுறுவதும்,குளிரின் தாக்கத்தினால் மக்கள் நோய்வாய்ப்படும் நிலையும் தோன்றும்.

மலிவு விலையில் ஜேர்மனிக்குக் காஸைக் கொடுப்பதன் மூலம் ஜேர்மனிக்கு தேவையான காஸில் 80 வீதமான காஸை ரஸ்யாவிடமிருந்தே வாங்கும் நிலையை ரஸ்யா உருவாக்கிய போதும் உக்ரைன் ரஸ்யப் போரின் விளைவினால் ரஸ்யாவிடமிருந்து வாங்கிய காஸை ஜேர்மனி நிறுத்தியுள்ளது.

இதன் மூலம் ஜெர்மனிய மக்களின் அதிருப்தியை ஜேர்மனி சம்பாதிக்கும்,அதனால் பலவீனமான அரசாக ஜேர்மனி இருக்குமென்று ரஸ்யா ஒரு திட்டத்தை வகுத்து,ஜேர்மனி உக்ரைனுக்கு வழங்கும் ஆதரவைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் என ரஸ்யா எதிர்பார்க்கின்றது.

இதைவிட ஜேர்மனியில் உலக நாடுகளில் உள்ள அனைத்து மக்களிலிருந்தும் புலம்பெயர்ந்தவர்கள் அகதிகளாக வருகை தந்து பின்னர் ஜேர்மனியக் குடியுரிமை பெற்றவர்களாகவும்,இரண்டு மூன்று தலைமுறை சென்றவர்களாக பல திணைக்களங்களில் வேலை செய்து கொண்டிருப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

ஜேர்மனியக் குடியுரிமை பெற்றவர்களாக இருந்த போதிலும் தங்கள் தங்கள் நாடுகள் சாராத நாடுகளுக்கு விலை போகாதவர்களாக இருப்பது போல தங்கள் வேர் நாட்டுக்கு எதிராக இருப்பார்கள் என்பது அரிதானது.

அதைவிட ஜேர்மனிக்கு அண்மைக் காலத்தில் வகைதொகையாக வந்து சேர்ந்த சிரிய மக்களினாலும்,உக்ரைன் மக்களினாலும் ஏற்கனவே ஜேர்மனியிலிருக்கின்ற வெளிநாட்டினராலும் ஜேர்மனியின் பொருளளாதாரம் எத்திட்டத்தினாலும் சரிபடுத்த முடியாத அளவுக்கு வீழ்ச்சியடைந்து வருகின்றது என்பதை சகிக்க முடியாத மக்கள் வலதுசாரி எண்ணம் கொணடவர்களாக மாறி வருவதுடன் வலதுசாரிக் கட்சிகள் பெருமளவு ஆதரவைப் பெற்று வருகின்றன.

இப்பொழுது நடைபெற்ற சதிக்கு ரஸ்யாவின் பின்புலம் இருக்கின்றது என்ற பார்வை இருக்கின்ற போதும் விலைவாசி ஏற்றங்களினால் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஏற்படும் வருவாய்ப் பற்றாக்குறையை சமாளிக்க முடியாத நிலைக்கு வெளிநாட்டவர்களுக்கு சமூக உதவியென்ற பெயரில் கொடுக்கப்படும் கோடிக்கணக்கான பணமே காரணம் என்றும்,அவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளும் காரணம் எனச் சிந்திக்கும் ஜேர்மனியர்கள் அதிகரித்து வருகிறார்கள்.

உதாரணமாக ஒரு நகரத்தில் 60,000 பேர்கள் இருக்கிறார்கள் என வைத்துக் கொண்டால் அவர்களில் 5,000 பேர் வெளிநாட்டவரெனில் இப்போதைய சூழ்நிலையில் வெப்பமாக்கிக்கு தேவயான காஸ் 5,000 வெளிநாட்டவர் இல்லையெனில் மிகுதி 55,000 பேருக்கும் தாராளமாகக் கிடைக்காதுவிட்டாலும் ஓரளவு சமாளிக்கக்கூடியதாகவே இருக்கும் என்பது ஜேர்மனியர்களின் கருத்தாகவும் இருக்கலாம்.

அதாவது தேவைக்கு அதிகமாக ஜேர்மனியிலிருக்கும் வெளிநாட்டவர்களுக்குச் செலவழிக்கப்படும் அனைத்தையும் மிச்சம் பிடிக்கலாம் என்பதே வலதுசாரி அரசியல்வாதிகளின் உறுதியான கருத்தாகும்.

அவர்களுள் உள்ள புத்திஜீவகளினால்தான் இச்சதி மேற்கொள்ளப்பட்டது என்று ஒரு கருத்து உண்டெனினும், ரஸ்ய ஆதரவாளர்களினால்தான் இச்சதி மேற்கொண்டதெனில் அது இராஜத்துரோகமாக கணிக்கப்பட்டு அதற்கான தண்டனையும் அதிகரிக்கும் என்பதால்,ஜேர்மனியில் வெளிநாட்டவர்கள் பெருகியதால் அதிருப்தியில் இச்சதி மேற்கொள்ளப்பட்டது எனச் சொல்வது தமக்கு சட்ட ரீதியாகப் பாதுகாப்பாக இருக்கும் என்பதற்காக அதனை முன் நிறுத்தியிருப்பார்கள்.

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு திணைக்களம் ஒன்றில் பணி செய்த ரஸ்ய வம்சாவழி அதிகாரி ரஸ்யாவுக்குச் சார்பாக பணியில் சில முட்டுக்கட்டைகளைப் போட்டார் என கைது செய்யப்பட்டிருந்தார்.

பல வெளிநாட்டவர்களை உள்வாங்கி வைத்திருக்கும் ஜேர்மனி மிகக் கவனமாகவே இருந்து வருகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *