கட்டுரைகள்

உளவு நிறுவனங்கள்!… 36 …. மௌனஅவதானி.

உளவு நிறுவனங்கள் ஒரு நாட்டினுடைய ஊடகங்களை வாங்கிவிடுவது மட்டுமல்ல பெரும் கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்து ஊடகங்களை நடத்தியும் வருகின்றன என்பதை பல நாடுகளில் காண முடிகின்றது.

இன்று சீனாவின் ஆதிக்கம் வறிய நாடுகள் மீதும் அரசியல் குழப்பங்கள் உள்ள நாடுகள் மீதும் வெகுவாக காலூன்றி உள்ளதை அவதானிக்க முடிகின்றது.சீனாவின் உளவு நிறுவனக் கரம் இலங்கையின் ஊடகங்கள் வரை சென்றுள்ளமையை மறுக்க முடியாது.

ஒரு நாட்டினுடையு பொருளாதாரக் கட்டமைப்பின் ஆரோக்கியமான வலுவால் மட்டுந்தான் அரசியல் நிர்வாகத்தை சீரான முறையில் வைத்திருக்க முடியும் என்பது உத்தரவாதமானது அல்ல.

அரசியல் குழப்பங்களுக்கான மூல காரணங்களை தேடி,அதனை நிவர்த்தி செய்யாமல் விட்டால் அது உளவு நிறுவனங்களுக்கு வாய்ப்பாகவே அமைந்துவிடுகின்றன.

இன்று சீனாவின் உளவு நிறுவனங்கள் இலங்கையின் அனைத்துப் பகுதிகளையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான அனைத்து வேலைகளையும் திட்டமிட்டுச் செய்து வருகின்றன.

சீனாவின் உளவு நிறுவனங்கள் இலங்கையை அக்கு வேறு ஆணி வேறாக சல்லடை போட்டு ஆய்ந்ததன் பயனாகவே அம்பாந்தோட்டை துறைமுகம் தொடங்கி மெதுவாக நகர்ந்து போர்ட் நகரம் என தமது நடவடிக்கையை விஸ்தரித்து சீளனாவின் ஆக்கிரமிப்பு நீண்டு கொண்டே போகின்றது.

இலங்கையைச் சுற்றி பலமான வளையம் உருவாக்கப்பட்டிருப்பதை இன்று இலங்கையர்கள் அனைவருமே உணரத் தொடங்கிய போதும் சீளனாவின் கத்தியின்றி இரத்தமின்றி இலங்கை மீது தொடுத்திருக்கும் போரை எவராலுமே தடுத்து நிறத்த முடியாது.

சிங்கள தமிழ் மக்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தி மேற்கொண்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்புக்கு சீனாவின் உளவு நிறுவனங்களின் தெளிவான தகவல் சேகரிப்பு உதவி இருக்கின்றன.

சீனா என்றவுடன் அது பொதுவுடமைத் தத்துவத்தின் மீது கட்டமைக்கப்பட்ட நாடு என்ற பார்வைக்கப்பால் இலங்கை பௌத்த சாசனத்தின் மேல் கட்டியெழுப்பப்பட்ட நாடென்ற வகையிலும் சீன மக்களும் பௌத்த சமயத்தைத் தழுவியவர்களாக இருப்பதும் சீனாவின் ஆக்கிரமிப்புக்கு இலகுப் பாதையை அமைத்திருக்கின்றது.

தமிழர்களுக்கான இனப் பிரச்சினையில் சிங்கள இனத்துவேச அரசியல்வாதிகளும் இலங்கை அரசும் எவ்வாறு அதனைக் கையாளுகின்றது என்பதை உன்னிப்பாக கவனித்து அதனைச் சீனா கையாளும் அணுகுமுறையை நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளது.

உலகிலுள்ள வல்லமை பொருந்திய நாடுகள் மற்றைய நாடுகளுக்குள் ஒற்றர்கள் மூலமாக ஊடுருவி உளவு வேலை பார்த்து தமக்குத் தேவையானவற்றை சாதித்து வருகின்றன.

சீனாவும் ஆசியாவில் பெரும் வல்லரசு நாடாக வேகமாக வளர்ந்து வருவதை எந்த நாட்டினராலுமே தடுக்க முயாதென்பதை தடுக்க முயற்சிக்கும்; நாடுகளே உணரத் தொடங்கியுள்ளன.

ஒவ்வொரு மனிதனுக்கும் அன்றாட வாழ்விற்கான பல தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அவரவர் பொருளாதார நிலைப்பாடு மிக முக்கியமானது.

வணிகமே இன்று உலகை ஆட்சி செய்கின்றது.வணிகம் என்பதும் இன்று ஒரு சர்வாதிகார அணுகுமுறையாக வளர்ந்துவிட்டது.உலகில் உள்ள மனிதர்களில் எண்பத்தைந்து வீதமானவர்கள் நடுத்தர வருவாயுள்ள மனிதர்களே.

அத்தகு வருவாயைக் கொண்டவர்களின் வாழ்விற்குத் தேவையானவற்றை மிக மலிவான விலையில் தனது ஏற்றுமதி மூலம் இறக்குமதி செய்து கொண்ட நாட்டை தனது பார்வைக்குள் சீனா கொண்டு வந்துவிட்டது.

சீனாவின் உற்பத்திகளை பணக்கார நாடுகள் தொடங்கி ஏழை நாடுகள் வரை இறக்குமதி செய்து வருகின்றன.

இலங்கையைச் சீனா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான திட்டமிடல் பல ஆண்டுகளுக்கு முன்னரே நடைபெற்றுவிட்டது என்பதை நிராகரிக்க முடியாது.

சீனா மற்றைய வல்லரசு நாடுகளைப் போல போர்முரசம் கொட்டி ஒரு நாட்டிற்குள் நுழைவதில்லை.பல ஆண்டுகளாகத் தொடரப் போகின்ற அல்லது சுவீகரிக்கப் போகின்ற தனது திட்டத்தை தெளிவாக வைத்துக் கொண்டு சிரித்த முகத்துடன்தான் நுழைந்து ஆட்சியாளர்களுடன் கைகுலுக்கும்.

தனது உளவு நிறுவனங்கள் மூலம் இலங்கையின் நிலவரத்தை மிகத் தெளிவாக அறிந்து கொள்வதில் இலங்கையில் இருக்கும் சீனத் தூதரகம் முழு வேலைத் திட்டத்தைச் செய்து வருவதை மறுக்கவே முடியாது.

உளவு நிறுவனங்கள் ஒரு நாட்டிற்குள் நுழைந்து தனது திட்டத்தில் வெற்றிபெற வேண்டுமெனில் அங்குள்ள மக்களின் இனம்,மொழி, மதம் சம்பந்தப்பட்ட விடயங்களில் மக்களிடம் காணப்படும் நம்பிக்கை சாதாரணமாக இருக்கின்றதா அல்லது அதீதமா இருக்கின்றதா இனங்கள் ஒன்றுக்கொன்று முரண்பாடு கொண்டிருக்கின்றனவா என்பதைக் கண்டறிவதிலேதான் அதிக கவனம் செலுத்தும்.

இலங்கையில் இன,மொழி, மத வேறுபாடுகளால் அது சார்ந்த அரசியல்வாதிகளாலும் ,அவர்களின் உரை வெளிப்பாடுகளாலும் முரண்பாடுகளைத் தோற்றுவித்து வருகின்றனர்.

அதுவும் இலங்கையைச் சீனா தனது கைக்குள் போட்டுக் கொள்வதற்குக் காரணமாகும்.

இன்னொரு நாட்டை தனது ஆக்கிரமிப்புக்குள் கொண்டு வரவேண்டுமெனில் பக்கத்து நாட்டை தனது நட்பு நாடாக மாற்றுதல் என்பதில் இந்தியாவை தனது எதிரியாகக் கருதும் சீனா இலங்கையை தனது தளமாக பாவிக்கத் தொடங்கிவிட்டது.

இலங்கையின் மண் சார்ந்த வளங்கள் மட்டுமல்ல கடல் சார்ந்த வளங்களையும் சீனா தன்வசப்படுத்தத் தொடங்கியுள்ளது.

இன்னொரு நாட்டின் ஆளுமையை தேசியவாதிகள் எப்பொழுதுமே விரும்பமாட்டார்கள்.

அந்த எதிர்ப்பை நீர்த்துப் போகச் செய்வதற்காக இலங்கையில் பல்வேறு அபிவிருத்திகளைச் செய்வதிலும் கடன்களை வழங்குவதோடு நின்றுவிடாது அரசியல்வாதிகள் மூலம் ஊடகங்களில் சீனச் சார்புநிலை அறிக்கைகளை வெளியிடச் செய்தும் வருகின்றது.

பொதுவாக இலங்கை ஊடகங்களின் ஆசிரியர் தலையங்கங்களைப் பார்க்கின்ற போது சீனாவின் ஆளுமை இலங்கையில் ஏற்பட்டிருக்கின்றது என்பதை ஆணித்தரமாக குறிப்பிடவேயில்லை.

ஆங்காங்கே காணப்படும் எதிர்ப்புகளை மக்களின் அபிப்பராயம் என்ற ரீதியிலேயே செய்திகளாக வெளியிட்டு வருகின்றன.சீனாவின் ஆளுமைக் கரங்கள் ஊடகம்வரை சென்றுவிட்டமையை காணமுடிகின்றது.

உளவு நிறுவனங்கள் மூலம் இலங்கையை சீனா மென்மையாக கைப்பற்றியுள்ளது

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *