கட்டுரைகள்

யார் எழுத்தாளன்?… கிறுக்கல்….10 ….. சங்கர சுப்பிரமணியன்.

எத்தனையோ எழுத்தாளர்கள் எப்போதும் எதாவது எழுதிக் கொண்டே இருப்பார்கள். இதெல்லாம் அவர்கள் அந்த மொழிமீது கொண்ட ஆர்வத்தால்தான். சிலர் எவ்வளவு எழுதியிருக்கிறோம் என்பதைக்கூட அறிந்திருக்க மாட்டார்கள். எத்தனைகவிதைகள் எழுதியிருக்கிறோம் என்று அறியாத கவிஞர்களும் எத்தனை கட்டுரைகள் எழுதியிருக்கிறோம் என்று அறியாத கட்டுரையாளர்களும் மற்றும் எத்தனை கதைகள் எழுதியிருக்கிறோம் என்று அறியாத கதாசிரியர்களும் இருக்கிறார்கள்.என்னவெல்லாம் எழுதியிருக்கிறோம் எவ்வளவு எழுதியிருக்கிறோம் என்று எண்ணிக்கூட பார்க்காத எழுத்தாளர்களும் இவ்வுலகில் இருக்கவே செய்கிறார்கள். மொழிக்கும் சமூகத்திற்கும் ஆற்றும் பணியை கணக்கு வைத்தெல்லாம் பார்க்காதவர்களும் இருக்கிறார்கள். படைத்த படைப்பையெல்லாம் நூலாக்க வேண்டும் என்று எண்ணாதவர்களும் இங்குஇருக்கிறார்கள்.உலகில் எண்ணற்ற எழுத்தாளர்கள் நூல் எதுவும் வெளியடுவதில்லை. எழுதுகின்ற எழுத்தாளர்கள் எல்லாம் நூல்களை வெளியிட்டால் எண்ணற்ற நூல்கள் வாசிக்கப் படாமலே போய்விடும். வந்தது தெரியும் போவது எங்கே வாழ்க்கை நமக்கே தெரியாது. வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது.

இந்த பாடலைப்போல் எழுதுபவர்கள் எல்லாம் நூல் வெளியிட்டால் எத்தனை நூல்கள் விற்கப்படும். எத்தனை நூல்கள் மீண்டும் மீண்டும் மறுபதிப்பாகும். என்னைப் பொருத்தவரை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையை விற்பனையில் தொடாத நூல்கள் வந்து என்ன பயன்? கொஞ்ச நூல்களை வற்புறுத்தலின் பேரில் விற்பதைவிட அப்படிப்பட்ட நூல்களை அச்சேற்றாமலே இருக்கலாம்.கவிதை எழுதுபவரைக் கவிஞர் என்கிறோம். கட்டுரை படைப்பவர்களை கட்டுரை எழுதுபவர்களை கட்டுரையாளர் என்கிறோம். கதை எழுதுபவர்களை கதாசிரியர் என்கிறோம். அப்படியானால் எழுத்தாளர் என்றால் நூல்கள் வெளியிட்டிருக்க வேண்டுமா என்று என்னிடம் ஒருவர் கேட்டார். கேட்டவர் யாருமில்லை. அவரைத் தேடிப்பிடிக்கும் முன்பே நான் சொல்லி விடுகிறேன். அவர் ஒரு கற்பனைப் பாத்திரம்தான். நான் அவருக்கு சொன்னேன்.ஒரு கார் மெக்கானிக் இருக்கிறார். அவரிடம் வாகனத்தை சர்வீஸ் செய்ய நேரம் கிடைப்பது மிகவும் கடினம். ஆனால் அவரிடம் கார் மெக்கானிக் படித்ததற்கான சான்றிதழ் எதுவும் இல்லை. அவர் சான்றிதழ் வைத்திருக்கும் கார் மெக்கானிக்கைவிட திறமையானவர் என்று எல்லோரும் சொல்கிறார்கள். இப்போது சொல்லுங்கள் அவரை கார் மெக்கானிக் என்பீர்களா அல்லது கார் கிளீனர் என்பீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர் அவரவர் நெஞ்சில் ஆயிரமாயிரம் மாற்றங்கள் என்று பாடியபடியே பதிலளிக்காமலேயே சென்றுவிட்டார். என்னைப் பொருத்தவரை என்னுடைய பேரக்குழந்தைகளுடன் செலவிடவே நேரம் போதவில்லை.அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள்சிறு கை அளாவிய கூழ்என்று வள்ளுவர் சொன்னதுபோல்நூலினும் ஆற்ற இனிதே பேரக்குழந்தைகள்உடன் சேர்ந்திருக்கும் இன்பம்என்ற அனுபவத்தைப் பெறுகிறேன். ஒவ்வொருவருக்கு ஒரு சூழ்நிலை. நூல்களை படிப்பதற்கு ஒவ்வொருவருக்கு ஒரு காலகட்டம் அமையும். சிலருக்கு மட்டும் எப்போதும் நூல்களைப் படித்துக்கொண்டே இருக்கும் சூழல் அமையும் அல்லது அமைத்துக் கொள்வார்கள்.இங்குள்ள சில நண்பர்களிடம் என்ன நூலைப் படித்தீர்கள் என்று கேட்டேன். ஒன்றுமில்லை என்றார்கள். நூல்களைப் படித்தால்தான் இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்கள் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது அப்படியல்ல. சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன் என்ற திரைப்படப் பாடலைப்போல சிலர் படைப்பார்கள் சிலர் படிப்பார்கள் சிலர் படைத்துக்கொண்டே படிப்பார்கள். நான் கதை கவிதை கட்டுரைகளை மட்டும் படைத்துக் கொண்டே படிக்கவும் செய்கிறேன்.அறிஞர் அண்ணா, நான் பிள்ளையாரை உடைப்பதுமில்லை பிள்ளையாருக்கு தேங்காய் உடைப்பதுமில்லை என்று சொன்னாராம். அதுபோல் நான் நூல் வெளியிடுவதும் இல்லை, நூலை அதிகம் படிப்பதும் இல்லை. நூலைப்படைத்தால்தான் அல்லது நூலைப் படித்தால்தான் இலக்கியவாதி என்ற ஓர் இலக்கணமும் இல்லை. இலக்கியத்தில் எந்தவகையில் நாட்டம் கொண்டாலும் அவன் இலக்கியவாதிதான்.ஒருவர் அசைவம் சாப்பிடுபவர். அவர் மீன் கோழி மற்றும் ஆட்டிறைச்சி மட்டும் சாப்பிடுபவர். அவரிடம் போய் நீங்கள் மீன் கோழி மற்றும் ஆட்டிறைச்சிமட்டும்சாப்பிடுகிறீர்கள் மாட்டிறைச்சி பன்றியிறைச்சி எல்லாம் சாப்பிடுவதில்லை எப்படி அசைவம் சாப்பிடுவதாக சொல்கிறீர்கள் என்று கேட்க முடியாதல்லவா? அது மாதிரியே இதை இதைப்பின் பற்றினால்தான் இலக்கியவாதி என்ற ஒரு வரைமுறை இருப்பதாக நான் அறியவில்லை. அப்படி ஏதேனும் வரைமுறை இருந்தால் தெரிந்த அன்பர்கள் தெரியப்படுத்தினால் ஏற்றுக் கொள்கிறேன்.எத்தனையோ இலக்கியவாதிகளுக்கு கவிதைகள் மீதோ கட்டுரை மீதோ ஈர்ப்பு இருக்காது. அதேபோல் சில இலக்கியவாதிகள் சிறுகதைகளிலும் சிலர் நூல்களிலும் ஈர்ப்புடையவர்களாக இருப்பார்கள். நானும் நூல்களைப் படிப்பேன். எனக்கு தெரிந்த இலக்கியவாதிகள் வெளியிடும் நூல்களைப் படிப்பேன். அதற்காக நூல்களைப் படித்துக்கொண்டே இருப்பேன் என்று பொய் சொல்லமாட்டேன்.சமுதாயத்தில் மேம்பட்டவர்கள் என்பதை நிறுவும் பொருட்டு அரிமா சங்கம் போன்றவற்றில் இருப்பார்கள். சங்கீத சபாக்களில் அங்கத்தவர்களாக இருப்பார்கள். கோல்ப் கிளப்பில் உறுப்பினர்களாக இருப்பார்கள். அதேபோல் இலக்கியவாதிகளில் சிலரும் தமக்கென்று ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதில் நூல்களைப் பற்றி விவாதிப்பார்கள். இந்த கற்றறிந்த ஆன்றோர் சபையில் கஞ்சிக்கு அலைபவர்கள் கலந்து கொள்ளமுடியாது.-சங்கர சுப்பிரமணியன்.(கிறுக்கப்படும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *