கதைகள்

நடுகைக்காரி!… 45 ….. ஏலையா க.முருகதாசன்.

கைகளால் ஏந்தித் தண்ணீரைக் குடித்துக் கொண்டிருந்தனர் ஞானமும் புஸ்பகலாவும்.அவர்களுக்கு எதிர்ப்புறமாக அரைமீற்றர் இடைவெளியிலும் அவர்களுக்கருகில் அரைமீற்றர் இடைவெளியிலும் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த ஆண் பெண் என சக நண்பர்கள் தாங்கள் கதைப்பதைப் பார்ப்பார்களே என்பதைப் பற்றி அவர்களிருவரும் கொஞ்சமும் அக்கறைப்படவுமில்லை கவலைப்படவுமில்லை.

அவர்களிருவரும் பயப்படும் நிலையைக் கடந்து வந்துவிட்டார்கள் போலத் தோன்றியது.சுந்தரராஜன் ஆசிரியை கண்டித்து நக்கலடித்துக் கதைத்த பின்பும் ,பிரின்சிபால் கூப்பிட்டுக் கதைத்த பின்பும்கூட அவர்கள் வழமை போலவே இருந்தார்கள்.

புஸ்பகலா தனது காதலை பலமுறை ஞானத்திற்கு உணர்த்தியிருந்தாள்.ஆனால் ஞானம் தான் அவளைக் காதலிக்கவில்லை ஏதோ சும்மா கதைச்சுப் பழகுகிறன் என்பது போல அவன் நினைச்சுக் கொண்டாலும் அவனையறியாமலே புஸ்பகலாவைக் காதலிக்கத் தொடங்கினான்.

வழமையாக மத்தியானச் சாப்பாட்டு இடைவேளையின் போது ஞானம் சைக்கிளில் இரண்டு கிலோ மீற்றர் தூரத்திலிருக்கும் வீட்டுக்கு சைக்கிள் றேஸ் ஓடுவது போல வேகமாகப் போய் சாப்பிட்டிட்டு வருகிறவன் புஸ்பகலாவின் நெருக்கம் கிடைத்தவுடன்,சைக்கிளில் காற்றாய்ப பறந்து அவுக்கவுக்கென்று சாப்பாட்டை அள்ளிப் போட்டுக் கொண்டு தண்ணீர் குடிச்சது பாதி குடிக்காதது பாதியாக பள்ளிக்கூடத்துக்கு வந்து வகுப்புத் தொடங்கும் வரையும் புஸ்பகலாவுடன் கதைச்சுக் கொண்டிருப்பதை அவனையறியாமலே விரும்பினான்.

ஞானத்தின் தாயார் சாப்பாட்டுக்குப் பிறகு ஞானத்திற்கு மாம்பழத்தை வெட்டியோ இல்லாட்டில் பிலாப்பழச் சுளைகளையோ பிடுங்கி வைத்திருப்பாள்.புஸ்பகலாவுடன் நெருக்கம் ஆரம்பிக்கும் முன் ஞானம் பொறுமையாக அவற்றை எடுத்து சுவைத்துச் சாப்பிடுவது வழக்கம்,ஆனால் இப்பொழுதெல்லாம் போகிற போக்கில் வாயில் அவற்றை அதக்கிக் கொண்டு போவதைத் தாயார் வியப்புடன் பார்க்கவில்லை அர்த்தத்துடன் பார்த்தாள்.

சிறுவர் சிறுமிகள் பருவ வயதை அடையும் போது அவர்களின் உடலும் மன எழுச்சியும் எவ்வாறு இருக்கும் என்பதை அந்த வயதைக் கடந்து வந்தவர்கள் அறிவார்கள்.

தங்களுக்கு அந்த வயதில் தங்களின் உடலும் மனமும் எந்த உணர்வுடன் இருந்தது என்பதை அவர்கள் அறிவார்கள்.ஞானத்தின் தாயாரும் அந்த வயதைக் கடந்து வந்தவர்தான்.அவரும் தனது கணவரைக் காதலித்துத்தான் கல்யாணம் செய்தவர்.

தனது மகனின் இந்த அவசரப் போக்கை „ஒருவேளை இவன் யாரோ ஒரு பொம்பிளைப் பிள்ளையை விரும்புகிறானோ,அவள் யாராக இருக்கும் படிக்கிற

வயதிலை குழம்பினான் என்றால் படிப்பிலை அக்கறை இல்லாமல் போய்விடுமே „ எனக் கவலைப்பட்டவள், „அந்தந்த வயதில் அது இருக்கத்தானே செய்யும், நான் கவலைப்பட்டு என்ன செய்யிறது’என்று மன ஆறுதலடைந்தவள் நடக்கிறது நடக்கட்டும் என்று இருந்துவிட்டாள்.

நாட்கள் செல்லச் செல்ல புஸ்பகலாவும் ஞானமும் நெருக்கமாகத் தொடங்கினர்.வருத்தம் வந்து ஞானம் பள்ளிக்கூடம் வராமல் விட்டாலோ இல்லாட்டி புஸ்பகலா வராமல் விட்டாலோ ஒருவருக்கொருவர் ஏங்கத் தொடங்கினர்.கவலையடைந்து சோர்வடைந்து பாடங்களில் கவனம் செலுத்தாமல் இருக்கத் தொடங்கினர்.உற்சாகத்தை இழக்கத் தொடங்கினர்.

வருத்தம் வந்து வீட்டில் இரண்டொரு நாள்கூட நிற்கின்ற நிலையை நினைத்து இருவரும் தவித்தார்கள்.அப்படி அவர்கள் சில தருணங்களையே சகித்தார்கள்.

ஞானத்திற்கு காய்ச்சல் வந்து படுக்கையைவிட்டு எழும்ப முடியாத நிலை வந்த போதுகூட புஸ்பகலாவைப் பார்க்க முடியாத நிலை வந்துவிடுமே என்பதால் தனக்கு காய்ச்சல் வந்திருப்பதை தாய் அறிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக,தான் வழமை போலத்தான் இருக்கிறேன் எனப் பாவனை காட்டிய ஞானம்,புத்தகங்களை எடுத்துக் கொண்டு தாய்க்குத் தெரியாமல் பரியாரி செல்லத்துரையிடம் போய் காய்ச்சல் என்று சொல்ல,அவர் கைபிடித்தும் தொட்டும் பார்த்துவிட்டு „நல்ல காய்ச்சல் காயுது „இந்தா இந்த மருந்தைக் கொண்டு போய் சிரட்டைக்குள்ளை போட்டு சுடுதண்ணியை விட்டு உரசிக் குடிச்சிட்டு நல்லாய்ப் போத்திக் கொண்டு படு „ என்று அவர் சொல்ல,இனி வீட்டுக்குப் போனால் கன பிரச்சினையாகிவிடுமே என்று நினைச்சவன் சிரட்டைக்குப் எங்கை போறது என்று பரியாரி வீட்டடிலிருந்து சைக்கிளில் வெளிக்கிட்டவனுக்கு,பரியாரின் வேலியோரத்தில் ஒரு சிரட்டை இருப்பதைக் காண்கிறான்.

பரியாரியின் மனைவி தேங்காய் திருவிப் போட்டு எறிந்த சிரட்டையை காகம் ஒன்று கொத்திக் கொண்டு வந்து வேலுpயோர பூவரச மரக் கிளையிலிருந்து கொத்திப் பார்த்துவிட்டுப் போட்டதுதான் அந்தச் சிரட்டை.

சிரட்டையைக் கண்ட ஞானம் புழுகத்துடன் தன்னை முத்துமாரி அம்மாளாச்சி கைவிடமாட்டார் என்ற பெரும் நம்பிக்கையுடன் வேகமாக பள்ளிக்கூடத்தை நோக்கிப் போனவன்,பள்ளிக்கூடத்திற்கு எதிர்ப் பக்கத்தில் இருந்த லிங்கம் கபேயடிப் பாலத்தில் சைக்கிளை நிற்பாட்டிப் போட்டு கடைக்குள் போனவன் „லிங்கண்ணை கத்தியொன்று தாருங்கள் „ என்று சொன்னவன்,ஏன் எதற்கு கத்தி என்று லிங்கம் கேட்கும் முன்னரே,கடையின் அடுப்படிக்குள் நுழைந்து கத்தியை எடுத்தவன்,அங்கு புதிய சிரட்டைகள் கனக்க கிடப்பதைக் கண்டு தான் கொண்டு வந்து சிரட்டையைப் அங்கேயே போட்டுவிட்டு,கத்தியையும் வைச்சுவிட்டு கடைத் திருவளையை எடுத்து கீழே இருந்து சிரட்டையிலிருந்த உட்கயரை திருவிக் கொட்டினான்.

எதற்காக ஞானம் இதையெல்லாம் செய்கிறான் என்பதைப் புரியாமல் ஒரு மெல்லிய சிரிப்புடன் லிங்கம் பார்த்துக் கொண்டிருந்தார்.

கயரைப் போக்கிய சிரட்டையை எடுத்தவன் „லிங்கண்ணை ஒரு வெறும் போத்தல் தாருங்கோ „ என்றவன் ,லிங்கம் எடுத்துக் குடுக்கு முன்பே தானாக போத்தலை எடுத்து,சுடுதண்ணிப் பொயிலரிலிருந்து சுடுதண்ணியை, லிங்கம் தேத்தண்ணி போடுவதற்காக பாவிக்கும் பேணிக்குள் விட்டு, வாளியிலிருந்து பச்சைத் தண்ணியை எடுத்து அதனுடன் கலந்து „ அண்ணை இரண்டு வடை சுற்றுங்கோ’ என்று சொன்னவன்,சுடுதண்ணி பச்சைத்தண்ணி இரண்டையும் கலந்த தண்ணியை போத்தலின் ஊற்றியவன்,லிங்கம் சுற்றிக் குடுத்த வடையையும் வாங்கிக் கொண்டு சிரட்டை,சுடுதண்ணி பச்சைத்தண்ணி கலந்தூற்றிய போத்தல்,வடை ,புத்தகங்கள் என எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு பாலத்தடியில் நின்ற சைக்களில் ஏறி உட்கார்ந்தவன் பெடலில் இரண்டு விழக்குடன் பள்ளிக்கூட கேற்றைத் தாண்டி ,புத்தகசாலை மாமரத்தடிக்கு கீழ் சைக்கிளை நிற்பாட்டிப் போட்டு புஸ்பகலா வருகிறாளா என அங்குமிங்குமாகப் பார்த்தபடியும், ஒரு வேளை நேரத்தோடு வந்து வகுப்பில் உட்கார்ந்திருப்பாளோ என்று நினைச்சுக் கொண்டே ஓடாத குறையாக வகுப்பை நோக்கி நடந்தவன் „ எப்படியும் வகுப்புத் தொடங்க முந்தி பரியாரி தந்த குளிசையை உரைஞ்சிக் குடிச்சு காய்ச்சலை இல்லாமல் செய்ய வேணும்.அப்பதான் பள்ளிக்கூடத்திலை புஸ்பகலாவை; பார்க்க முடியும் என்று நினைச்சுக் கொண்டு வகுப்புப் படியில் கால் வைத்தவன்,வகுப்புக்குள் புஸ்பகலா இருப்பதைக் கண்டு விடுகிறான்.

புஸ்பகலாவின் தோழி மங்களேஸ்வரி புஸ்பகலா உட்கார்ந்திருந்த அதே வாங்கில் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்திருந்தாள்.

ஞானம் வகுப்புப் படியேறி வகுப்புக்குள்ளே வேகமாக வந்ததை புஸ்பகலா பார்த்ததும் உற்சாகமடைந்து முகமலர’மகாராணிக்கு இப்பதான் உயிர் வந்ததோ’ எனக் கேலி செய்கிறாள் மங்களேஸ்வரி.

வேகமாக உள்ளே வந்த ஞானம் பேப்பரில் சுற்றிய வடையை எடுத்து புஸ்பகலாவிடம்’இந்தாங்கோ பிடியுங்கோ’ என்று அவளின் கையில் திணித்தவன்,மெதுவாக இரும ,என்ன முகம் ஒரு மாதிரி இருக்குது,சுகமில்லையா „ என்று பரிவோடு கேட்கிறாள் புஸ்பகலா.

„ஒன்றுமில்லை’ என்றவன்,புததகங்களை மேசையில் வைசு;சுவிட்டு,வாங்கில் உட்கார்ந்து சிரட்டையை எடுத்து, தான் கொண்டு வந்த மருந்துக் குளிசையை அதற்குள் போட்டு போத்தலிலிருந்த இளம்சூட்டு சுடுதண்ணியை அதற்குள் விட்டு வேகமாக உரச,அதைப் பார்த்துக் கொண்டிருந்த புஸ்பகலா’ என்ன செய்யிறியள்,குளிசையை உரஞ்சுறியள்,உங்களுக்கு என்ன வருத்தமா’ எனக் கவலையுடன் புஸ்பகலா கேட்க, „ம் காய்ச்சல் „ என்கிறான் ஞானம்.

குளிசையை உரசிக் கரைச்சுக் குடிச்ச ஞானத்தைக் கண்ட புஸ்பகலா „இப்பிடி அந்தரப்பட்டு அந்தரப்பட்டு மருந்து கரைச்சுக் குடிக்க வேண்டுமா,காய்ச்சலோடை ஏன் வந்தனீங்கள்,வீட்டிலை நின்றிருக்கலாந்தானே „என்று காதலுடனும் உரிமையுடனும் புஸ்பகலா சொல்ல,’நான் வீட்டிலை நின்றால் உங்களை என்னண்டு

பார்க்க முடியும் „ என்று ஞானம் சொல்ல,சில விநாடிகள் எதுவுமே பேசாமல் ஞானத்தைப் பார்த்து „சாப்பிட்டியளா’ என்கிறாள்.

„இடியப்பம் சாப்பிட்டிட்டுத்தான் வந்தனான் „ என்று ஞானம் சொல்ல,’ இப்ப மருந்து குடிச்சிருக்கியள் வயிறு எரியும்’ என்றவள்,யாராவது வருகிறார்களா எனப் பார்த்துக் கொண்டே தான் கொண்டு வந்த சாப்பாட்டுப் பாரசலைப் பிரித்து தோசைகள் இரண்டை எடுத்து சம்பலை அதற்கு வைச்சு,அரைவாசியாக பிய்த்து „ இந்தாங்கோ இதைக் கெதியிலை மற்றவை வரமுந்தி சாப்பிடுங்கோ „ என்றவள் வாங்கு நுனிக்கு அரக்கி வந்து அரை மீற்றர் வித்தியாசத்தில் அவனுக்கருகில் இருந்து பிய்த்த தோசைகளைக் குடுக்க வேகம் வேகமாகச் சாபபிட்டு மிண்டிவிழுங்கி கொண்டு வந்த தண்ணியைக் குடிக்கிறான்.

அந்த வகுப்பில் எட்டு மேசைகளும் எட்டு வாங்குகளும் இருக்கின்றன.வகுப்பின் மேற்குச் சுவர்ப் பக்கமாக நான்கு மேசைகளும் அதற்கான வாங்குகளும் இருப்பதைப் போல,கிழக்குச் சுவர்ப் பக்கமாக நான்கு மேசைகளும் நான்கு வாங்குகளும் இருந்தன.நான்கு நான்காக இருந்த எட்டு மேசைகளுக்கும் நடுவில் வடக்குத் தெற்காக ஆசிரியர்கள் நடந்து சென்று மாணவர்களைக் கண்காணிக்க நடைபாதை போல இடைவெளி இருந்தது.

மேற்குப்புறச் சுவருக்கும் மேசைகளுக்கும் இடையில் இடைவெளி இருந்தது போல கிழக்குப்புற மேசைக்கும் கிழக்குப்புறச் சுவருக்கும் இடையில் இடைவெளி இருந்தது.அந்த வகுப்பில் பன்னிரண்டு மாணவிகளும் இருபது மாணவர்களும் இருந்தார்கள்.

கிழக்குப்புற மாணவிகள் இருந்த மூன்றாவது பின் வாங்கில் நான்கு மாணவர்களும்,மேற்குப்புற நான்கு வாங்குகளிலும் மாணவர்களும் இருந்தார்கள்.

மாணவிகள் இருந்த இரண்டாவது வாங்கில் கிழக்கு மேற்கான வாங்கின் மேற்கு நுனியிலிருந்து இரண்டாவது மாணவியாகத்தான் ஆரம்பத்தில் புஸ்பகலா உட்கார்ந்திருந்தாள்.

ஞானம் இரண்டாவது வாங்கில் கிழக்கு நுனிப்பகுதியிலேயே எப்பொழுதும் உட்காhர்ந்திருந்தான்.

ஆனால் எப்பொழுதும் வாங்கின் மேற்கு நுனியில் மங்களேஸ்வரியே உட்கார்ந்திருப்பாள்.அதற்கடுத்து மங்களேஸ்வரியின் வலது புறத்தில் புஸ்பகலா உட்கார்ந்திருப்பாள்.

எப்படித்தான் ஞானத்துக்கும் புஸ்பகலாவுக்குமிடையில் மனநெருக்கம் வந்ததோ தெரியவில்லை.ஒருவர் மீது ஒருவருக்கு அக்கறை வரத் தொடங்கியது.

ஒருவரையொருவர் அவர்களை அறியமலே அடிக்கடி பார்க்கத் தொடங்கினர். அதைக் கவனித்த மங்களேஸ்வரி „இப்பிடி எட்டி எட்டிப் பார்த்து கழுத்திலை நோவை வரப் பண்ணாதை நீ நுனியிலை இரு என்று தான் இருந்த இடத்தை புஸ்பகலாவுக்கு விட்டுக் குடுத்தாள்.

அவர்களின் நெருக்கம் நாளடைவில் அது காதலாகிய போதும் „நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று ஞானத்திடம் சொல்லுமளவிற்கும், படிப்பு முடிஞ்சதும் ஞானத்கை; கல்யாணம் செய்து கொண்டு பன்னாலைக்கு மருமகளாகப் போவன் என்று சுந்தரராஜன் ரீச்சரிடம் சொல்லக்கூடிய துணிச்சல் புஸ்பகலாவிற்கு இருந்தது போல ஞானத்தால் புஸ்பகலா மீதான காதலை வெளிப்படுத்தும் துணிச்சல் இருக்கவில்லை.

சும்மா கதைக்கிறோம், சும்மா பழகுகிறோம் பிரண்ட்ஸ்ஸாக இருக்கிறோம் என்பது போல புஸ்பகலாவுடன் அவன் பழகிக்: கொண்டாலும் அவனையறியாமலே புஸ்பகலாவை அவன் காதலிக்கத் தொடங்கினான்.

காய்ச்சலுடன் பள்ளிக்கூடம் வந்த ஞானம் „காய்ச்சலால் வீட்டிலை நின்றால் உங்களை எப்படிப் பார்க்கிறது „ என்று ஞானம் சொன்னதைக் கேட்டு நெகிழ்ந்து போனாள் புஸ்பகலா.மனம் நிறையக் காதலை வைத்துக் கொண்டு இவ்வளவு காலமும் ஞானம் தன்னைத்தானே ஏமாற்றியிருக்கிறான் என நினைச்;சு கனிந்து போன புஸ்பலா மனைவியின் பரிவோடு தோசையைப் பிய்த்துப் பிய்த்துக் கொடுக்க மிண்டி விழுங்கிச் சாப்பிட்டுக் கொண்டும் போத்தலில் இருந்த தண்ணீரைக் குடிப்பதுமாக இருந்தான்.

ஓவ்வொருவராக மாணவர்களும் வகுப்பறைக்குள் வந்து கொண்டிருந்தனர் எல்லாருடைய கண்களும் ஞானத்தின் மீதும் புஸ்பகலாவின் மீதுமே விழுந்தன.

ஏதோ காரணத்துக்காக இரண்டு பேரும் நேரத்தோடு வகுப்புக்கு வந்திருக்கின்றனர் என நினைச்சுக் கொண்டனர்.

அந்த வகுப்பிலுள்ள அனைவருக்குமே புஸ்பகலா ஞானம் ஆகிய இருவரின் காதல் விவகாரம் தெரிந்திருந்ததால்,கொஞ்ச நேரத்திற்கு முன்பு ஏதோ நடந்திருக்குது என்பதை அவர்கள் உணர்ந்தாலும் அதைக் கணக்கில் எடுக்கவில்லை.

„அந்தச் சிரட்டையை மாஸ்ரேரஸ்; ரீச்சேர்ஸ் பாத்திடுவினம் என்னட்டை தாருங்கள் என்று வேகமாக வாங்கியவள் அதனைத் தோசைப் பார்சலுக்குள் வைச்சு பேப்பரால் மடிசு;சு மூடுகிறாள்.

ஞானத்திடமிருந்து ஏதோ ஒரு பொருள் புஸ்பகலாவின் கைக்கு மாறுகிறது என்பதை சிலர் கவனித்துக் கொண்டாலும் அது என்னவாக இருக்கும் என்பதை புஸ்பகலாவின் கைக்கு சிரட்டை போன வேகத்தாலும் அதை அவள் தனது தோசைப் பார்சலுக்குள் வேகமாக வைச்சு மூடியதாலும் அதனை மற்றவர்களால் துல்லியமாக கவனிக்க முடியவில்லை.

அவர்களில் ஒரு மாணவன் „அது சிரட்டையடா’ என்று பக்கத்திலிருந்த மாணவனுக்கு காதிலை இரகசியமாகச் சொல்ல, அந்த மாணவன் „ என்ன சிரட்டையா’ என வியப்புடன் கேட்கிறான்.

அப்பொழுது வகுப்பு மணி அடிக்கிறது….

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *