எங்கிருந்தோ வந்தாள்!… ( சிறுகதை ) …. சங்கர சுப்பிரமணியன்.

![]()
மெல்பனின் புறநகர்ப் பகுதியான லின்புரூக் தொடர்வண்டி நிலையத்தையொட்டி தண்டவாளத்திற்கு அடியில் தொடர்வண்டி மேலே செல்லும்படியாக ஒரு பாலம் உள்ளது. நான் பேட்டர்சன் சாலை வாகனங்கள் நிறுத்துமிடத்தில் எனது வாகனத்தை நிறுத்திவிட்டு அந்த பாலத்தை நோக்கி சென்றேன். பாலத்தைக்கடந்து மறபுறம் சென்று சிட்டிக்கு செல்லும் தொடர்வண்டியில் ஏறவேண்டும்.அப்போது என்னை நோக்கி வாகனம் ஒன்று வந்தது. அந்த வாகனம் வினோதமாக இருந்தது. அந்த வாகனத்தைச் சுற்றி மழை வெயில் காற்று என்ற எவ்வித பாதிப்பும் ஏற்படாதபடி அறைபோன்று ஃபோம் லெதரால் வடிவமைக்கப்பட்டிருந்தது. நான் இதுவரை அப்படியொரு வாகனத்தைப் பார்த்திராததால் அதைப்பார்த்தபடியே சென்றேன். அப்போது அந்த வாகனம் என்னருகே வந்து நின்றது.அறைபோன்றிருந்த அதன் ஷிப்பை நீக்கி ஒரு வெள்ளைக்கார மூதாட்டி அதனுள்ளிருந்தபடி என்னைப்பார்த்தாள். அவள் ஓட்டி வந்தது ஒரு ஸ்கூட்டர். என்னைப்பார்த்த மூதாட்டி,“டிரெயினில் போகிறாயா?” என்றாள்.“ஆம்” என்றேன்.“டிக்கெட் இருக்கிறதா?”“இருக்கிறது”“டிக்கெட் இருந்தால் சரி. இருந்தால் மிஷினில் டச் பண்ணிட்டு போ”“சரி”“ட்ரெயனில் பரிசோதகர்கள் வருகிறார்கள். கவனம்” என்று சொல்லிவிட்டு சென்றாள்.அவள் சென்றதும் நான் பலவாறு எண்ணிணேன். என்னைப் பாரத்தால் ட்ரெயினில் டிக்கட் இல்லாமல் பயணிப்பவன் போலவா தெரிகிறது. ட்ரெயினில் பயணம் செய்யும் நான் டச் பண்ணாமலா போவேன்? என்னைப் பார்த்து சில நண்பர்கள் கம்பீரமாக இருக்கிறாய் என்று சொல்வதுண்டு. நானும் உண்மையென்று நம்பி பல்லிளித்திருக்கிறேன். இதுவரை அவர்கள் என்னை ஓட்டியிருக்கிறார்கள் என்ற உண்மை எனக்கு அப்போதுதான் தெரிந்தது.ஏனென்றால் நமக்கு நெருக்கமானவர்கள் நம்மைப் பற்றி சரியாக சொல்வார்களா என்பது சந்தேகமே. அந்த மூதாட்டியின் பார்வையில் நான் பஞ்சத்தில் அடிபட்டவன் போல் தெரிந்திருக்கலாம் . அம்மூதாட்டிஎன்னிடம் அப்படிச் சொன்னது அவள்மேல் எனக்கு வெறுப்பை உண்டாக்கியது.சிலநேரங்களில் அசரீரி வானில் ஒலிப்பதுபோல் வேறுவிதமாக இக்காலத்தில் நடப்பதுண்டு. அதனால் ஒருவேளை அப்பெண் சொல்வதுபோல் நம்மிடம் மைகீ கார்டு உள்ளதா என்பதை உறுதிப்படுத்த கைபேசியை எடுத்து அதிலுள்ள நான் மைகீயை வைக்கும் இடத்தில் உள்ளதா என்று பார்த்தேன். என்ன அதிசயம் எனது மைகீ கார்டு அங்கில்லை.திரும்பவும் வீட்டுக்கு சென்று கார்டை எடுத்து வரவேண்டுமானால் தொடர்வண்டியை விட்டுவிடுவேன். அன்று குடிவரவு திணைக்களத்தில் மிகவும் முக்கியமான பணி. வீட்டுக்கு தொலைபேசியில் மனைவியை அழைத்து நடந்த விபரத்தைச் சொன்னேன். அன்று என் மகன் வீட்டிலுருந்து பணிபுரிந்ததால் மாற்றாக வைத்திருந்த இன்ளொரு மைகீ கார்டை கொடுத்தனுப்பினாள்.ஒருவழியாக பிரச்சனை தீர்ந்தது. ஒரு மூதாட்டி ஏதோ ஒரு வகையில் வந்து உதவிசெயதிருக்கிறாள். பொதுவாக எவரும் எவரிடமும் மைகீ இருக்கிறதா இருந்தால் அதை டச் பண்ணுங்கள் என்று சொல்வதில்லை. இது அனைவரும் அறிந்த ஒன்று என்பதோடு தொடர்வண்டி நிலையத்திலும் தொடர்வண்டியிலும் அறிவித்துக் கொண்டே இருப்பார்கள்.நமக்கு ஒருவர் உதவிசெய்தால் அந்த உதவியை எண்ணிப் பார்க்க வேண்டும். மாறாக தானம் கொடுத்த மாட்டின் பல்லைப் பிடித்து பார்க்கக்கூடாது. ஆனால் நானோ தானம் கொடுத்த மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்க்கும் விதமாக டிக்கெட் பரிசோதகர் வருகின்றாரா என்று பார்த்தேன். பரிசோதகர் வரவேயில்லை. ஆதலால் இந்த அசரீரியும் சரியாகப்புரிய வாய்ப்பில்லை.ஒருவேளை வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் பரிசோதகர் வந்தால் கார்டு இருக்கிறது என்ற நம்பிக்கையில் வந்துவிட்டேன் என்றுகூறி நான் நேரத்துக்கு குறிப்பிட்ட பணிக்கு போகவேண்டும் என்று ஆதாரத்துடன் விளக்கியிருக்கலாம். அப்படியும் அதை நம்பாமல் பரிசோதர் அபராதம் விதித்திருந்தால் நம்பியிருப்பேனோ? எப்படியும் அம்மூதாட்டிக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.என்னிடம் கார்டு இல்லை என்பதை என்னை உணரவைத்து கார்டுடன் பயணிக்க உதவினாள். ஆனால் இது எப்படி சாத்தியம்? கடவுள் இருக்கான் குமாரு. என்று எடுத்துக் கொள்வதா? அல்லது இது ஒரு சிறு செயல் இதற்கெல்லாம் கடவுளை சம்பந்தப்படுத்துவதா? புரியாத புதிராக உள்ளது. அந்த புதிர்தான் கடவுள் என்றும் மக்கள் சொல்வார்கள்.மொத்தத்தில், எங்கிருந்தோ வந்தாள், கார்டு இருக்கிறதா என்றாள். இங்கிவளை நான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன். நண்பா நண்பா என்று என் நண்பனிடம் சொன்னேன். அவனோ என்னைப் பார்த்து இந்த லொள்ளுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை என்றான்.-சங்கர சுப்பிரமணியன்.
![]()