முத்தான முத்தல்லவோ!… சங்கர சுப்பிரமணியன்.

![]()
பணம் புகழ் என்று ஓடும் மக்களுக்கு மத்தியில் பணம் என்னடா பணம் பணம், குணம் தானடா நிரந்தரம் என்றும் சில மக்கள் இருக்கவே செய்கிறார்கள். பணம் வாழ்க்கைக்கு அவசியம்தான். ஆனால் எப்படி பெறவேண்டும் என்பதுதான் தலையாயது. இல்லாவிடில் “அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்குஇவ்வுலகம் இல்லாகியாங்கு” என்று குறள் சொல்லியிருப்பாரா வள்ளுவர்.இதுபோல் புகழுக்காகவும் மதிமயங்கித் திரியும் மக்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். தன்னைப் பற்றி மக்கள் எதையாவது பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்ற நோக்கில் எதையாவது செய்து கொண்டிருப்பார்கள். உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது என்பதைப்போல் யாருக்கும் உதவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களை நாம் அன்றாட வாழ்வில் சந்தித்துக் கொண்டிருக்கிறோம் அல்லவா?புகழ் என்பது ஒரு தொற்றுநோய் போன்றது. அதற்கு தக்க மருத்துவம் எடுத்துக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் மதுவுக்கு அடிமையானவர்கள் போல் புகழுக்கும் அடிமையாகி எதையாவது ஒன்றைச் செய்து கொண்டேயிருப்பார்கள். இவர்களுக்கு திருமணவீட்டில் மாப்பிள்ளையாக இருந்தாலும் சரி இறந்தவீட்டில் பிணமாக இருந்தாலும் சரி. நான்குபேருக்கு நம்மைத் தெரிந்துகொண்டேயிருக்கவேண்டும் என்ற குறிக்கோளுடையவர்கள்.ஒருமுறை நம்மைப்பற்றி தெரிந்து கொண்ட மக்கள் மறந்துவிட மாட்டார்கள். அப்படி மறக்கிறார்கள் என்றால் நாம் சிறப்பாக செய்துவிடவில்லை என்பதே பொருள். ஒன்றைச் செய்தாலும் நன்றைச் செய்தால் சாலச் சிறப்புண்டாகும். இந்த உண்மை தெரியாது ஓடிக்கொண்டிருக்கும் மக்களில் சற்று வித்தியாசமான ஒரு மனிதரைப் பற்றி அறிந்ததும் வியப்புற்றேன். அதிகம் படித்தவரோ பெரிய செல்வந்தரோ இல்லை. ஒரு சாதாரண மனிதர்தான்.மனைவி குழந்தைகள் என குடும்பமாக வாழும் இவர் டிக்டாக் மற்றும் யூடியூப் மூலம் விடாமுயற்சியால் மக்களால் அறியப்பட்டிருக்கிறார். தமிழ் நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் தற்போது விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வரங்கும் பிக்பாஸ் சீசன் 6ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர். இரண்டே வாரத்தில் தானாகவே விரும்பி வீட்டைத் தேடுகிறது குழந்தைகளைப் பார்க்கவேண்டும் என்று கூறி கமல்ஹாசன் எடுத்துச் சொன்னபிறகும்விடாப்பிடியாக சென்றுவிட்டார்.
பிக்பாஸ் நிகழச்சி அறிவுப் பூர்வமான ஒன்றோ அல்லது மக்களுக்கு தேவையான ஒன்றோ இல்லை. ஊடகங்களில் மக்களுக்கு தேவையற்ற நிகழ்வுகளில் அரங்கேறுவதுபோல் இதுவும் ஒரு பொழுது போக்கு. பொழுது போக்கென்றும் காலத்திற்கு ஒத்துவராத நிகழ்வுகளை அன்றாடம் செய்து வருவதுபோல் இது ஒரு நிகழ்வு. இதற்கென்றொரு கூட்டம். அதற்காக நான் யோக்கியன் என்று சொல்லவில்லை. நானும் பிக்பாஸ் பார்க்கிறேன்.கடவுள் இல்லையென்று சொல்லிக்கொண்டே குடும்பத்துக்காக கோயிலுக்கு செல்வதில்லையா? அதுபோன்றுதான். எத்தனையோ கூத்துக்களில் இதுவும் ஒரு கூத்து. எத்தனையோ மெத்தப்படித்தவர்கள நான் தொலைக்காட்சியில் தொடர்களை எல்லாம் பார்க்கமாட்டேன் அவற்றையெல்லாம் பாமரமக்களே பார்ப்பார்கள் என்பார்கள். அப்படிச் சொல்பவர்கள் திருட்டுத்தனமாக பார்ப்பார்கள். உண்டென்றால் உண்டென்பதில் என்ன தவறு.சரி, இனி பிக்பாஸூக்கு வருவோம். இதில் கலந்து கொண்டு இரண்டு வாரத்தில் தானாக வெளியேறியவர் G.P. முத்து என்ற G. பேச்சிமுத்து. இரண்டு வாரங்களில் மட்டும் இவர் சம்பளமாக பெற்ற தொகை இரண்டு லட்சங்களுக்கும் மேல் என்று சொல்லப் படுகிறது. பணத்துக்கும் புகழுக்கும் ஆசைப்படாதவர் என்பதே இவர் பிக்பாஸூக்கு எந்த அடிப்படையில் கலந்து கொண்டார் என்பதால் நன்றாகத் தெரிகிறது.பொதுவாக பிக்பாஸில் கலந்து கொள்பவர்கள் பணத்துக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு அங்கு எத்தனை நாள் இருக்கமுடியுமோ அத்தனை நாள் இருக்க போராடுவார்கள். உள்ளே இருக்கும் அத்தனை நாட்களுக்கும் பணம். அதனாலேயே போட்டி போட்டுக்கொண்டு ஒருவரை ஒருவர் முந்திக் கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அதற்காக எல்லாவற்றிற்கும் சம்மதித்துப் போயிருப்போர் மத்தியில் எத்தனை நாள் இருக்கமுடியுமோ அத்தனை நாள் மட்டுமே இருப்பேன் என்றும் விரும்பம்போது அனுப்பிவிட வேண்டும் என்ற அடிப்படையில் கலந்து கொண்டிருக்கிறார் முத்து.அப்படியானால் இவர் எப்படிப்பட்டவர் என்பதை புரிந்து கொள்ளலாம். பணத்துக்கும் புகழுக்கும் மயங்காதவர். இவருக்காக பிக்காஸ் விதிமுறையிலேயே மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இவரும் கூட மனம்தடுமாறி ஒருகட்டத்தில் மனம்மாறி காமிரா முன் நின்று பேசினார். பிள்ளைகளைத் தேடுவதால் வெளியே போகின்றேன் என்று சொன்னேன். அதனால் அப்படி எடுத்துக்கொள்ளவேண்டாம். இருக்கிறேன். மாற்றி மாற்றி பேசுவதாக எண்ணவேண்டாம் என்றார். ஆனால் கன்பெஷன் ரூமில் கமல்ஹாசனிடம் பேசும்போது பிள்ளைகளை தேடுகிறது போகிறேன் என்றார்.
அதன்பின் கமல்ஹாசன் போகலாம் என்றதும் சிறிது வருத்தம் முகத்தில் தென்பட்டாலும் சிறிதும் ஏமாற்றமோ தயக்கமோயின்றி வெளியேறினார். சில காரணங்களுக்காக வெளியே சென்ற இவரை திரும்பவும் உள்ளே கொண்டுவர முயற்சிகள் நடப்பதாக பேசிக் கொள்கிறார்கள். அவர் திரும்ப வந்தாலும் ஆச்சிரியப்பட வேண்டியதில்லை. பிக்பாஸ் அவரிடம் அதிகம் எதிர்பார்த்துத்தான் அவருக்காக விதிமுறைகளத் தளர்த்தி அவரை உள்ளே கொண்டுவந்தது. எனவே பிக்பாஸில் திரும்பவும் அவர் உள்ளே வரலாம்.பிக்பாஸ் வேறு எவருக்காகவும் இனிமேல் இதுபோல் விதிமுறைகளை தளர்த்துமா என்பது சந்தேகமே. அங்கு கலந்து கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு எதிர்பார்ப்புடன்தான் கலந்து கொண்டிருப்பார்கள். அவர்களுடன் ஒப்பிடுகையில் இப்படியொரு மனிதரைக் காண்பது அற்புதம்தான். பணத்துக்கும் புகழுக்கும் என்னென்னவோ செய்துவரும் விந்தை மனிதர்களுக்கிடையே சிந்தையில் எதையும் பெரிதாக எண்ணாத இவர் முத்தான முத்தல்லவோதான்.-சங்கர சுப்பிரமணியன்.
![]()