பட்டுப்பாவாடை!…. ( சிறுகதை ) …. சிட்னி கனகா . கணேஷ்.

தீபாவளிக்கு தீபாவளி மட்டுமே புதுத் துணி எடுக்கின்ற காலம் ஒன்று இருந்தது. அக்கால கட்டத்தில் ஒரு பட்டு பாவாடை வாங்க நான் பட்ட பாடு இருக்கிறதே,….![]()

சென்னை இராணி மேரி கல்லூரியில் முதலாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருந்தேன். உடன் படிக்கும் சக தோழிகள் எல்லாம் அவ்வருட தீபாவளிக்கு தாங்கள் வாங்க போகும் பட்டு பாவாடை தாவணி பற்றிய கனவுகளில் சிலாகித்துக் கொண்டிருக்க, எனக்கும் அந்த ஆசை வந்ததில் தப்பில்லை தானே. ஆனால் ஆசை மட்டும் இருந்தால் போதுமா, அதற்கான அம்சம் வேண்டாமா?
அன்றே வீட்டுக்கு வந்தவுடன் அம்மாவிடம், எனக்கு இந்த தீபாவளிக்கு பட்டு பாவாடை தாவணி தான் வேண்டும் என்று மெதுவாக ஒரு பிட்டை போட்டு பார்த்தேன். என்னது, பட்டு பாவாடையா, உனக்கு மட்டும் பட்டு எடுத்து விட்டு நாங்க எல்லாம் என்ன இலை, குலையையா கட்டிக் கொள்வது, என்று அம்மா கடுப்பாகி கத்த, எனக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. பட்டு பாவாடை இல்லா விட்டால் எனக்கு வேறு எதுவும் வேண்டாம் என்று நானும் கோபத்தில் சொல்லவே, அப்படியா, காசு மிச்சம் என்ற பதில் தான் வந்தது. என்ன செய்வது, சாப்பிடமாட்டேன் என்று சொல்லி பார்க்கலாமா, சோறு மிச்சம் என்று பேசாமல் இருந்து விட்டால் என்ன செய்வது. இருந்தாலும் சும்மா ஒரு அசட்டு துணிச்சலில், பட்டு பாவாடை தாவணி வாங்கி தராவிட்டால் நான் இனி சாப்பிட போவதில்லை எனக்கு சாப்பாடு வேண்டாம் என்று சொல்லி விட்டு அழுது கொண்டே போய் படுத்து விட்டேன். என்ன அநியாயம் அம்மாவும் பேசாம இருந்துட்டாங்களே….
ஒரு நாள் முழுவதும் பட்டினி தான். மறு நாள் அம்மா ஒரு மாதிரி மனமிரங்கி, வாங்கி தருவதாக சொல்லி என்னை சமாதானப்படுத்தினார்கள். அதுவும் இம்முறை முடியாது. அடுத்த வருட தீபாவளிக்கு தான். அதற்கே அவங்க குடுத்த லெக்ச்சர் இருக்கே…..
ஊரில் ஒவ்வொரு பிள்ளைகள் கஞ்சிக்கே வழியில்லாமல் எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள். உங்களையெல்லாம் கஷ்டம் தெரியாமல் வளர்த்தது எவ்வளவு தப்பாகி விட்டது. நான் எல்லாம் சிறுவயதாக இருக்கும் போது நான்கு வருடத்திற்கு ஒரு முறை தான் தாத்தா புது சட்டை வாங்கி கொடுப்பார். அதை நாங்கள் மறு பேச்சே இல்லாமல் போட்டுக் கொள்வோம். உன் அப்பா குடும்பத்திற்காக இரவு பகலாக எவ்வளவு கஷ்டப்படுகிறார்.
இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் நீ இப்படி பொறுப்பில்லாமல் இருப்பதை நினைத்து எனக்கு ரொம்ப கவலையாக இருக்கிறது. நாளைக்கு போகிற இடத்தில் புருஷனிடம்…………என்ன இப்பவே உங்களுக்கெல்லாம் கண்ணைக் கட்டுகிறதா….என் நிலைமையை நினைத்து பாருங்கள்.
இவ்வளவு மட்டுமல்ல, இன்னும் கூட ஒரு மணி நேரம் அறிவுரை சொல்லி விட்டு அவ்வருட தீபாவளிக்கு வாங்கித் தருவதாக சொல்லி இருந்தால் கூட பரவாயில்லை. அடுத்த வருட தீபாவளிக்கு இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வைத்த அம்மாவின் மேல் கோபம் கோபமாக வந்தது.ஆனால் வேறுவழி, காத்திருந்தேன்.
ஒருவழியாக அடுத்த வருட தீபாவளியும் நெருங்கி விட்டது. பட்டு பாவாடை வாங்க நினைத்திருந்த தினத்தன்று தான் சேலத்திலிருந்து எங்கள் மாமா வந்திருந்தார்.
நீண்ட காலத்திற்கு பிறகு அவர் வந்திருந்ததால் அன்று அவருக்கு தடபுடலாக விருந்து. சாப்பிட்டு விட்டு அவரை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு கடைக்கு கிளம்பும் நேரத்தில், எனக்கு இருந்த பரவசத்தில் எனக்கு பட்டுப்பாவாடை வாங்க தான் நாங்கள் கிளம்பிக் கொண்டிருக்கிறோம் என்று நான் சொல்ல, என்ன பட்டு பாவாடையா எடுக்க போறீங்க, இங்கே சென்னையில் எல்லாம் நல்ல தரமான பட்டு கிடைக்காதே, அதற்கே ஆனை விலை குதிரை விலை சொல்லுவான்களே…என்று ஓவர் எமோஷனில் அவர் படபடத்தார்.(உண்மையைச் சொல்லுங்கள் , அவருக்கு தெரியுமா ஆனை, குதிரை எல்லாம் என்ன விலை என்று) சேலத்தில் வீட்டுக்கு வீடு தறி. சுத்தமான தரமான பட்டு எல்லாம் பக்கத்தில் நம் கண் முன்னாடியே நெய்து தருவார்கள். விலையும் மிக மலிவு என்று அவர் சொல்லிக் கொண்டே போக இந்த ட்விஸ்டை சற்றும் எதிர்பார்க்காத நான் மிரண்டு போனேன். மெதுவான குரலில்
இந்த ஒரு பாவாடைக்காக மட்டும் சேலத்துக்கு எல்லாம் போய் வரமுடியாது மாமா , போக்குவரத்து செலவு வேறு இருக்கே என்று நான்சொல்ல…உடனே அவர், நீங்கள் எதற்கு அலைய வேண்டும், காசை விரயமாக்க வேண்டாம், நான் போய் வாங்கி அனுப்புகிறேன். என்ன நிறத்தில் வேண்டும் என்று மட்டும் சொல்லுங்கள் என்று தெளிவாக கேட்டு குறித்துக் கொண்டார்.
நானும் அவர் அன்றே ஊருக்கு கிளம்பினால் நன்றாக இருக்குமே, என்று நினைத்துக் கொண்டேன். அப்போது தானே உடனே வாங்கி பார்சலில் அனுப்ப முடியும்.
ஆனால் அவர் மூன்று நாட்கள் தங்கி விட்டே போனார். ஊர் போய் இரண்டு நாட்களில் நெசவாலைக்கு போய் ஆர்டர் செய்து மேலும் நான்கு நாட்கள் எடுத்தாலும் வாங்கி, அஞ்சலில் அனுப்ப, அது சென்னைக்கு வந்து சேர என்று கணக்கு பண்ணி பார்த்ததில் குறைந்த பட்சம் 15 நாட்களுக்கு மேல் ஆகும் போலிருக்கிறதே. தீபாவளிக்கு
முன்பு கைக்கு கிடைத்து விடுமா என்றெல்லாம் எனக்குள் ஏகப்பட்ட மன உளைச்சல்கள். ஒரு வாரத்துக்கு பிறகு ஒவ்வொரு நாளும் பார்சலை எதிர்பார்த்து ஏங்க தொடங்கினேன். ஆனால் 15 நாட்களாகியது, மாதமாகியது, வருடமாகி, வருடங்கள் ஆகியது. அப்படி ஒரு பார்சல் கடைசிவரை என் கைக்கு வரவே இல்லை..
பட்டு பாவாடை என்ன, குட்டைப் பாவாடை கூட அவ்வருட தீபாவளிக்கு கிடைக்காமல் போய்விட்டதை எண்ணி
துக்கப்பட்டேன்.
மாமா அனுப்பாமல் விட்டதற்கு நானா பொறுப்பு என்று அம்மா இடக்கு பேசி தப்பித்துக் கொண்டார். சரி கவலைப்படாதே, தீபாவளி என்ன பத்து வருடத்துக்கு ஒரு முறையா வருகிறது. இதோ இரண்டு மாதமாகி விட்டது. அடுத்த பத்து மாதத்தில் அடுத்த தீபாவளி. வேண்டுமானால் ஒன்று செய்யலாம், அடுத்த தீபாவளி வரை காத்துக் கொண்டிருக்காமல் மூன்று மாதங்களுக்கு முன்பே வாங்கி தந்து விடுகிறேன். தீபாவளிக்கு அணிந்து கொள்வதும் அல்லது அதற்கு முன்பே அணிந்து கொள்வதும் உன் விருப்பம் என்று சொன்னார் அம்மா. எனக்கும் அந்த டீலிங் கொஞ்சம் பரவாயில்லை போல் தான் இருந்தது. மனதை தேற்றிக்கொண்டு அடுத்த தீபாவளியை எதிர்நோக்கி காத்திருந்தேன்.
இதோ இன்னும் இரண்டு வாரங்களில் தீபாவளி. வாக்கு கொடுத்த படி மூன்று மாதங்களுக்கு முன்பே எல்லாம் வாங்கிக் கொடுத்து விடவில்லை. அப்படியே தட்டிக் கழித்து நாட்களைக் கடத்தி விட்டிருந்தார் அம்மா. இம்முறை எந்த மாமாவும் வீட்டு பக்கம் வராமல் இருக்க வேண்டுமே என்று நான் வேண்டாத நாள் இல்லை.
கல்லூரியில் முதலாமாண்டு படிக்கையில் ஆசைப்பட்ட என் தாவணிக் கனவு மூன்றாம் ஆண்டு முடிக்கும் தருவாயில தான் நிறைவேறப் போகிறது. மனசெல்லாம் ஒரு வித பரவச நிலையில், ஆனந்தத்தில் நிறைந்திருந்தது. சிவப்பு கலர் பட்டு பாவாடை அதே சிவப்பில் சட்டை , சந்தன நிறத்தில் தாவணி அணிந்த கோலத்தில் என்னை ஒரு முறை கற்பனை செய்து பார்த்துக் கொண்டேன்.
நாங்கள் கடைக்கு கிளம்பிக் கொண்டிருந்தோம். கதவை யாரோ தட்டுகிறார்களே, மனம் தடக் தடக் என அடிக்க மெதுவாக கதவைத் திறந்தேன். எதிர் வீட்டு மாமி தான் வந்திருந்தார்.
என்ன எங்கேயும் கிளம்பிக் கொண்டிருக்கீங்களா,
ஆமாங்க, எங்கள் பாப்பாவுக்கு பட்டு பாவாடை தாவணி வேண்டுமாம் , அத வாங்க தான் தி. நகர் கிளம்பிக் கொண்டிருக்கிறோம்.
என்ன தாவணியா? குதிராட்டம் (அப்படி என்றால் என்ன) வளந்து கெடக்கிறா, இன்னும் நான்கைந்து மாதத்தில் படிப்பு முடிந்து பட்டம்
வாங்கி விடுவாள். அதற்கு பிறகு தாவணி போட்டால் நன்றாகவா இருக்கும், இப்ப தாவணியெல்லாம் வாங்கி காசை வீணாக்காமல் பட்டு புடவையாகவே வாங்கி வாருங்கள். அடுத்த வருடம் கல்யாணம் பண்ணி அனுப்ப வேண்டாமா, நாளைக்கு கல்யாண சமயத்தில் சேர்ந்தாற்போல நாலைந்து பட்டு புடவைகள் இருந்தால் தானே பெருமையாக இருக்கும்.
சிவப்பு கலரில் மட்டும் வாங்கி விடாதீர்கள். நாளை கல்யாண சமயத்தில் கூரை எப்படியும் சிவப்பில் தானே வாங்குவார்கள் என்று எனக்கென்னவோ மாப்பிள்ளைகள் வண்டி கட்டிக் கொண்டு வரிசையில் நின்று நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு இருந்த மாதிரி அந்த மாமி அடுக்கிக் கொண்டே போக…![]()
அப்புறமென்ன, அதன்பிறகு எத்தனை தீபாவளிகள் வந்து எத்தனை பட்டுப்புடவைகள் வாங்கிய பின் எனக்கு கல்யாணம் ஆனது என்பது எல்லாம் பொன் எழுத்துக்களில் பொறித்து கல்வெட்டுகளில் பதிக்க வேண்டிய விஷயம்.
இன்று வரை எத்தனையோ பட்டு புடவைகள் வாங்கி அடுக்கிய போதிலும், கடைசி வரை வாங்கி அணிந்து கொள்ள முடியாமல் போன பட்டு பாவாடை தாவணிக்கான இடம் இன்னும் என் அலமாரியில் வெற்றிடமாகவே இருக்கிறது.
![]()