பலதும் பத்தும்

30 வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்த காதல் ஜோடி: ஆன்மாக்களுக்கு திருமணம் செய்து வைத்த வினோதம்!

தட்சிண கன்னடா மாவட்டத்தில் ஒரு வினோத திருமணம் நடந்துள்ளது. கடந்த 30 வருடத்திற்கு முன்பு ஒரு இளம்பெண்ணும், ஒரு வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். அவர்களின் காதலுக்கு இருவரது குடும்பத்தாரும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அதன்பிறகு இருவரது ஆன்மாக்களும் அமைதி பெறாமல் தங்களை வாழ விடாமல் துன்புறுத்திய தங்களுடைய குடும்பத்தினருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் ஒரு சாமியாரை நாடினர். அவர் இரு ஆன்மாக்களுக்கும் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து திருமணம் செய்து வைத்தால் அவைகள் அமைதி பெறும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

அதன்படி இருவரது குடும்பத்தினரும் அந்த இரு ஆன்மாக்களுக்கும் திருமணம் பேசி முடித்தனர். பின்னர் வீட்டிலேயே திருமண ஏற்பாடுகளை செய்து மணப்பெண்ணுக்கு கொடுக்க வேண்டிய பட்டுப்புடவை, நகைகள் உள்ளிட்டவற்றையும், மணமகனுக்கு கொடுக்க வேண்டிய பட்டு வேட்டி, சட்டை, துண்டு மற்றும் நகைகள் ஆகியவற்றையும் தாம்பூல தட்டுகளில் எடுத்து வந்தனர். பின்னர் மணமகன், மணமகளை அமர வைப்பதற்காக நாற்காலிகளை அங்கு வைத்தனர். அவற்றின் மீது வெள்ளை துணிகளை விரித்து மணமகள், மணமகன் இருவரும் அமர்ந்து விட்டதாக பாவித்து பூஜைகளை செய்தனர்.

பின்னர் வேத மந்திரங்கள் ஓதி திருமணமும் செய்து வைத்தனர். இந்த வினோத திருமணத்தில் இருவரது குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த திருமணத்தில் கலந்துகொண்ட ஒரு வாலிபர் அங்கு நடந்த நிகழ்வுகளை தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். அந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.