கதைகள்

“ஊர் முழ வேட்டி”….. ( சிறுகதை ) …. அண்டனூர் சுரா.

குகன் கொலைக்குத் தானுமொரு காரணமென நினைத்தாள் சுமந்தி. அவளது உள்ளக்கிடக்கை அப்படியாகச் சொல்லி உரல் உலக்கையாக இடித்துக்கொண்டது. அவளது மனஅசை உள்ளுக்குள் வெந்து வெளியில் அழுகையாக முட்டியது.

குகன் கொலையை விடவும் கொலைக்கான காரணம் அவளை நிறையவே வதைத்தது. அவளது நெஞ்சாங்கூட்டுக்குள் அனல் மூட்டி, நாசித்துளைகள் வழியே வெங்கனல் சுழன்றது. அக்கொலை குறித்து உள்ளுக்குள் புழுங்கி, ஊமையாக அழுதவள், மனத்தால் அழுகிக்கொண்டிருந்தாள். மன அழுகலின் முடை நாற்றம் கபாலத்திற்குள் வேகு கட்டியது.

குகன் மரணம் குறித்து யாரிடமேனும் சொல்லி அழவேண்டும் போலிருந்தது. யாரிடம் சொல்வதென அவள் வாசலில் நின்றபடி , அவள் வீட்டையொட்டி ஒடுங்கியோடும் ஒழுங்கையில் போகிறவர், வருகிறவர்களைப் பார்த்தாள். கொலைக்குக் காரணம் தானெனத் தெரிய வருகையில் தன் அப்பன் என்னாவார், என்பதை அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. அதை நினைக்கையில் நாக்கில் எச்சிலோடு எச்சிலாகச் சுரந்த சொற்கள் நாக்கு அடியில் கரைந்து, பனித்து தொண்டைக்குள் இறங்கின.

குகனை அவள் ஒரு தலை காதலாக விரும்பியது, அவளுக்கும் அவளது நிழலுக்கு மட்டும் தெரிந்த ரகசியமாக இருந்தது. இதயம் என்ன விரும்புகிறது, என்று பல நேரம் மூளைக்குத் தெரியாததைப் போலக் குகன் மீது அவள் கொண்ட காதல் இருந்தது. அவன் மீதான மன ஈர்ப்பு காதலா, அன்பா, பாசமா அல்லது இதற்குள் அடங்காத வேறொன்றா, என்கிற முடிவுக்கு அவளால் வரமுடியவில்லை. இன்னதென்று பிரித்தறிய முடியாத அந்த ஈர்ப்பை அவள் காதல் என்றே நம்பினாள். அவளது மனத்தரையில் குகனின் முகம் விழுந்ததும் அவளையும் அறியாமல் காதல், செடியாக முளைத்து வளர்ந்து விழித்திரையின் வழியே எட்டிப் பார்த்தது.

கண்கள் வெளிப்படுத்தும் காதல் உணர்வை அவளால் உதடுகளின் வழியே வெளிப்படுத்த முடியவில்லை. அப்பன் வெளுத்தத் துணிகளுக்குக் கூலி வாங்கச் செல்கையில், அவன் முன் வெட்கமுற்றவளாக நிற்பதும், கால் கட்டை விரலால் வட்டங்கட்டி காதல் சமிக்ஞை செய்தாள். இந்த சமிக்ஞை அவளைத் தவிர வேறொருவர் கண்களில் விழுந்திருக்கவில்லை.

குகன் இப்போது உயிரோடு இல்லை, என்பதை அவளால் நினைக்கவோ, மனதிற்குள் உருட்டவோ முடியவில்லை. அவன் மீதான அவளது காதலை, வாயுடைத்துச் சொல்வதற்குள்ளாக சூனியமாகிப் போனதை நினைக்கையில் நெஞ்சு மேட்டில் பாறாங்கல் ஏறி இறங்கியது.

குகன் குறித்து யாரிடமேனும் சொல்லி அழுதிட நினைத்தாள். அவளாக இதை யாரிடம் போய் சொல்வது? யாரும் இது குறித்துக் கேட்காமல் தான்தோன்றியாக இதைச் சொல்லிட முடியுமா, என மனதிற்குள் அசைபோட்டவள், குகனது முகத்தையும் அவனுடனான கடைசி தருணத்தையும் நினைவுக்குக் கொண்டுவந்தாள். அவனது பரந்து

விரிந்த கருத்த முகம் குதிரைக்கால் குளம்படியில் பட்டு, கருப்புக் குடைக் காளான் உடைவதைப் போல உடையச் செய்தது.

குகனின் கொலை அவளுக்குப் பெருஞ்சுமையாக கனத்தது. சுமை தலையில் ஏறிக்கொண்டு தலையோடு சேர்த்து உடம்பைத் தரைக்கு அழுத்துவதற்குப் பதிலாக, புவியீர்ப்பு விசைக்கு எதிராக முளைத்து வளரும் செடியைப்போல தலைக்கும் மேலே முட்டியது. அவன் குறித்த நினைவுகளால் அவளது தலை வெடித்துவிடுவதைப் போலிருந்தது. சுமந்தி வீட்டிற்குள்ளாக முடங்கிக் கிடந்தாள். அவள் வீட்டுச் சேவலின் கூவல், நச்சுப்பாம்பைத் தின்றுவிட்டு அகவும் மயிலின் அரவமாகக் கேட்டது.

ஊர்ப்பல் குகன் கொலையுண்ட கதையை மூச்சுக்கட்டி பேசியது. யாரும் அக்கொலையுடன் சுமந்தியைத் தொடர்புப்படுத்தி பேசுவதாக இல்லை. ஆனாலும் அக்கொலையுடன் அவளுக்கு அவளே தொடர்புப்படுத்திக் கொண்டாள். முடுக்குத்தெருவில், முச்சந்தியில் பலரும் அவளது பெயரைச் சுட்டி உரக்கப் பேசுவதாக கற்பனை செய்தாள். அதனால் அவளது தூக்கத்தின் மென்னிழை அறுந்து, இமை குருத்துகளில் முட்கள் முளைத்தன.

குகன், மேலத் தெரு குடிவளைவில் இரத்தமும் சகதியுமாக இறந்துகிடந்ததை கீழத்தெரு ஜனங்கள் கண்களில் வயிற்றைக் கட்டி பார்த்து வந்தார்கள். தன் குஞ்சில் ஒன்றை இழந்துவிட்ட காக்கைகளின் கரை ஓலமாய் அத்தெரு சஞ்சலத்தது. ஒரு தலைமுறை தூக்கம் துக்கம் கட்டிக்கொண்டு, இமைகளுக்குள் வருத்தி, உருட்டியது.

வாங்கரிவாளால் அவன் முதுகில் வெட்டுப்பட்டு கிடந்தான். அரிவாளின் மூக்கு முதுகில் ஆழமாக இறங்கியிருந்தது. கொத்திய அரிவாளைக் கொத்தியவனால் கூட உருவி எடுக்க முடியவில்லை. அரிவாள் அவனது முதுகில் முளைத்த வாலாக இருந்தது. இரத்தம் பீறிட்டுக் கிடந்தது. குப்புற விழுந்ததில் தாவங்கொட்டை கல்லில் அடிபட்டு, இரண்டு பற்கள் உதிர்ந்து தாவு அமுக்கடி வாங்கியிருந்தது. கண்கள், நெற்றி, தலையில் இரத்தக்களறி. அவனது நாக்கு கடாப் பற்களுக்கிடையில் வெளியே தள்ளியிருந்தது.

தன்னை பின்புறமாக மறைந்து நின்று கொத்தியவன் யாரென்று குகன் பார்த்திருப்பானோ, இல்லையோ! ஆனால் இந்தக் கோழைத்தனமான வேலையை யார் செய்திருப்பாரென்று அவன் ஊகித்திருப்பான்.

அவன் இறந்து பல மணி நேரம் கழித்தே, நாய்கள் தெருவுக்குள் ஊளையிடுவதாக இருந்தன. காக்கைகள் வட்டங்கட்டி கரைந்தன.

சுமந்தி அப்போது குழம்புச் சட்டி அடியில் படிந்து போயிருந்த கடுப்பானில் ஒரு ஆப்பைச் சோற்றைப் போட்டு, பிசைந்து, உருட்டி வாய்க்குக் கொண்டுச் சென்றாள்.

” அய்யோ, நம்ம குகன் நம்மள விட்டு போய்ட்டான்டியோ ” என ஒருவர் ஓலமிடுகையில் வானம் இரத்தக் களறியாக மேற்கில் சுருண்டுக் கொண்டிருந்தது.

” என்னடியே சொல்றே?” ஊரும் வாயும் நெஞ்சு பதறி கேட்டன.

அவனது தாய் கடம்பி மார்பிலும், வயிற்றிலும் குத்திக்கொண்டு ஈரக்குலை நடுங்க, பைத்தியம் கொண்டவளாட்டம் அலறி அடித்துக்கொண்டு, அவன் இறந்து கிடந்த திசையை நோக்கிக் குறிப்பறிந்து ஓடினாள். அவள் பின்னே மொத்த கீழத்தெரு ஜனங்களும் அரிக்காடாய் ஓட்டமெடுத்தார்கள்.

கையில் கடுப்பான் உருண்டை வைத்திருந்த சுமந்தி, கடுப்பானை வாசலில் எறிந்துவிட்டு, வெளியே ஓடி வந்தாள். தெருவே ஈரக்குடலைக் கையில் பிடித்துக்கொண்டு மேலத்தெருவை நோக்கி ஓடியது. ” குகனுக்கு என்னாச்சு, எப்படியாச்சு,?” குற்றுயிரும் கொலை உயிருமாகக் கேட்டாள் சுமந்தி.

” செத்துப் பொயிட்டான்டி” என்றதும் சுமந்தியின் தலையில் கோடை இடி இறங்கியது. அவளால் ஓடவோ, பாயவோ முடியவில்லை. “ அவன் மீது நான் வச்ச ஆசையில கொள்ளி விழுந்துருச்சே” என்றவளாய் தலையில் அடித்துக்கொண்டு, அதே இடத்தில் சரிந்தாள்.

குகனுக்கும் ராயனின் அக்கா மகள் குண்டலிக்கும் தொடுப்பு என்பதாக ஊருக்குள் அரசல்புரசலாக பேச்சு இருந்தது. மேய்ச்சல் தரிசுக் காட்டில் சப்பாத்திக் கள்ளிகளில் குகன் – குண்டலி இருவரின் பெயரும் எழுதப்பட்டிருந்ததைச் சுமந்தி ஒரு நாள் பார்த்திருந்தாள். குண்டலி என்கிற பெயரைச் சப்பாத்தி முள்ளால் கிறுக்கி அழித்துவிட்டு, அவன் பெயரையொட்டி அவளது பெயரை எழுதிக் கொண்டாள்.

குகன் – குண்டலி பெயர்களைக் கள்ளிக்குக் கள்ளி எழுதிச் சென்றது குகனோ, குண்டலியோ அல்ல. அவர்களுடன் ஆடு, மாடுகள் மேய்க்கும் அவன் சோட்டுப் பையன்கள்தான். சாரையோடு, நாகத்தை இணைத்தும் புனைத்தும் பேசிப் பழகிய இவர்களுக்கு, குண்டலியோடு குகனை முடிச்சிட்டுப் பேசி ஊருக்குள் கிடுக்கிட்டி அடித்தார்கள்.

குகன் – குண்டலி என எழுதியிருந்த கள்ளிகளைப் பார்க்க வந்த ராயன், வாங்கரிவாளால் ஒரே வெட்டாக வெட்டி, கள்ளிகளைச் சாய்க்கச் செய்தான். அவனது கோபம், கள்ளியின் மீதோ இதை எழுதியவர்கள் மீதோ இருந்திருக்கவில்லை. மாறாக, குண்டலி பெயருக்கும் அருகிலிருந்த குகன் மீதே இருந்தது.

மேய்ச்சல் காட்டுக் கள்ளியோடு அப்பெயர் நின்றுவிடவில்லை. ஊர்க் குளத்தங்கரை, கோவில், பாலக்கட்டைகளிலும் அப்பெயர் எழுதிக் கிடந்தன. அப்பெயர்கள் ராயனின் கோபத்தை மேலும் முடுக்கி விடுவதாக இருந்தன.

குகன் எருமைகள் மேய்ப்பவன். குண்டலி பசுவும் காளைகளையும் மேய்த்தாள். எருமை மேயும் தரிசுக்காட்டையே அவள் தேடி வந்தாள். பசுவும் காளையும் மேம்புல் மேயவும், எருமைகள் புற்களைக் கரண்டுவதுமாக இருந்தன. இரு வகை மாடுகளும் புல்லைத் தின்று, வீடு திரும்பி ஒன்றுபோல அசைபோடுவதாக இருந்தாலும் பசுவும் எருமையும் ஒன்றல்ல, என்று எருமைக்குத் தெரிந்ததைப்போல குகனுக்குத் தெரியவே செய்தது. குகன், தான் கீழத்தெரான் என்பதை நினைத்து, அவளிடமிருந்து அவன் விலகவே செய்தான். அவன் விலகும் தூரத்திற்கு அவள் அத்தனை வேகமாக நெருங்கச் செய்தாள்.

மேய்ச்சல் காட்டில் காளை பசுவின் மீது ஏறித் தாவிக் கனைப்பதை அழைத்துக் காட்டிச் சிரிப்பாள். அதை அவன் கடைக்கண்ணால் பார்த்து முன் பற்களால் சிரிக்கச் செய்வான். அவனது சிரிப்பில் இவள் வெட்கி வழிவாள். அவள் மேய்க்கும் காளையை எருமைகள் மேயும் பக்கமாகத் திருப்பி, எருமையின் மீது தாவ ஏவுவாள். எருமை அமைதியின் சொரூபமாய், இரண்டடிகள் ஓடி, அதன் போக்கில் மேய்வதாக இருக்கும்.

எருமையைப் போலவே அதை மேய்க்கும் குகன் குணாம்சம் கொண்டவனாக இருந்தான். அவனுக்கு அவனே ஓர் எல்லை வகுத்துக்கொண்டு, அதைத் தாண்டாது எருமைகளை மேய்த்து வீடு திரும்பினான்.

குகனுக்குக் குண்டலியின் மீது ஈர்ப்பு இருக்கவே செய்தது. ஆனால் அதை வெளியில் காட்டக்கூடாதவனாக இருந்தான். அவள் என்ன சொன்னாலும், அதை ஒரு காதில் வாங்கி, வீட்டில் அசைபோடுகிறவனாக இருந்தான். இரவில் அவனுக்கு அவனையும் மீறி இச்சைகள் பிரவாகமெடுக்கும். நாக்கு சொட்டாரமிடும். அவளை வாஞ்சோடு அணைக்கவும், எல்லை மீறவும் உடம்பால் தூண்டப்படுவான். அவள் குறித்த நினைவுகள் அவன் மீது பனியைப்போலப் படர்ந்து அவனைத் திக்குமுக்காடச் செய்யும். இரவு வதைகளை மறுநாள் மேய்ச்சல் தரிசில் நேரில் காட்டிவிட எத்தனிப்பான். ஆனால், பொழுது விடிந்ததும் எருமையின் குணாம்சத்தைக் கொண்டவனாக மாறிவிடுவான். அவள் மீதான ஏக்கத்துடுப்புகள் பெட்டிப்பாம்பாய் அடங்க, எருமைகளின் தலைக்குனிவு அவனுக்கு வந்துவிடும்.

ஊர்த்துணியை வெளுக்க, கீழத்தெரு குடிகளால் குடி வைக்கப்பட்டிருந்த வண்ணார் சடையன், ஊர்த் துணியை எடுத்து, செங்குளத்தில் வெளுத்துக் கொடுப்பவராக இருந்தார். செங்குளம் என்பது செம்மண் குளம். குளத்திற்குள் யாரேனும் இறங்கினால் குளம் செம்புலமெடுக்கும். வெள்ளை சட்டை, வேட்டிகளை அதில் நனைத்து எடுத்தால் நீலம் ஒட்டுவதைப்போல செம்மண் புலம் ஒட்டிக்கொண்டு வெள்ளை வேட்டி காவி வேட்டியாகிவிடும்.

மேலை, நடுத்தெருவிற்கென்று தனி வண்ணார் இருந்தார். இவர் ஊர்த்துணிகளை மாரியம்மன் குளத்தில் வெளுப்பதாக இருந்தார். மாரியம்மன் குளம் அல்லி, தாமரை, தண்டை, நாணல்,…எனப் பூத்துக் குலுங்கும் குளம். பாலைப் போன்ற தெளிந்த நீர்க்குளம் என்பதால் அக்குளம் ஊரார்களால் வெங்குளம் என அழைக்கப்பட்டு வந்தது. ஊர்க் குடியானவர்கள் வேட்டியை அத்தண்ணீரில் நனைத்து, பிழிந்தால் வேட்டியிலிருந்து பால் ஒழுகுவதைப்போல தண்ணீர் ஒழுகும். மேலை, நடுத்தெரு மக்கள் மட்டுமே இந்தக் குளத்தில் புழங்குவதாக இருந்தார்கள்.

சடையன், வாரம் ஒரு நாள் கீழத்தெரு துணிகளை எடுத்து, உவர்மண்ணால் ஊற வைத்து செங்குளத்தில் துவைப்பார். அவரைப் பொறுத்த வரைக்கும் தூய்மை என்பது செம்மை கலந்த ஓரளவு வெண்மை, என்றளவிலேயே இருந்தது. துணிகளைத் துவைத்து, உலர்த்தி, உரியவரிடம் ஒப்படைப்பது மட்டும்தான் அவரது வேலை. வெளுத்தத் துணிகளுக்குக் கூலியைக் கேட்டுப்பெறுவது, அவரது மகள் சுமந்திதான்.

தமிழ் மாதம் பிறக்கும் ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அன்று, கோணிச்சாக்கை எடுத்துக்கொண்டு கூலி வாங்க வீடு வீடாகச் செல்வாள் சுமந்தி. “ ஐயா, அம்மா, அண்ணே…” என்றபடி வாசலில் நிற்பாள். இரட்டைச் சடை. நேர் வகிடு. மேலுதட்டில் சின்னதாக ஒரு மச்சம்,.. யாவும் அவளுக்கு முன் செல்லும்.

வீட்டிற்குள்ளாகவே அடைந்து கிடக்கும் அவளுக்கு அந்த ஒரு நாள் அவளது முகத்தில் பன்னீர்த் தெளிக்கும். அவள் கூலிக்கேட்டுச் செல்லும் வீடுகளில் கஞ்சியோ, நீராகாரமோ தருவார்கள். கஞ்சி ஊற்றும் பெண்களிடம் அவளையும் அறியாமல் அன்பு

வழியும். ஒட்டுத்திண்ணையின் விளிம்பில் உட்கார்ந்துகொண்டு, அவளது அம்மா வயதொத்த பெண்களிடம் பேச்சுக்கொடுப்பாள். அந்த வீட்டில் குழந்தைகள் இருந்தால் தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சுவாள். அப்பன் வெளுத்தத் துணிக்குக் கூலி வாங்குவது இரண்டாவது பட்சம். ஊர்த்தெருவைச் சுற்றி வருவதும், குழந்தைகளை வாரியள்ளி கொஞ்சுவதுமே அவளது முதல் வேலையாக இருக்கும். கொடுக்கும் கூலியை வாங்கிக்கொள்வாள். சிலர் கிள்ளிக்கொடுப்பர். சிலர் அள்ளிக்கொடுப்பர். அவளது கைக்கு வரும் பணம், சில்லறைக் காசுகள் அவளுக்குப் பெரிதாகத் தெரியும். சிரித்து, குறுநகை பூத்து நன்றி தெரிவிப்பாள். கொடுக்கும் கூலியை நோட்டில் எழுதிக்கொள்வாள்.

ஒவ்வொரு வீடாகக் கூலி வாங்கிக்கொண்டு, குகன் வீட்டுக்குச் செல்கையில், அவளையும் அறியாமல் வெட்கம் சூழ்ந்து கொள்ளும். குகன் அவளைக் கண்டுவிட்டால், மேய்ச்சலுக்குச் செல்லும் எருமைகளின் அலாதி தொற்றிக்கொள்ளும். அவளுடன் அத்தனை வாஞ்சையோடு உரையாடுவான். சில நேரம் இரட்டை அர்த்தத்தில் கதையாடுவான். அவளுக்கான கூலியை அவன் அத்தனை சடுதியில் கொடுத்துவிட மாட்டான். “மச்சான் கூலி கொடுங்க” எனக் கேட்கச் சொல்லி அவளிடம் பிடிவாதம் செய்வான். அவள், வெட்கத்தில் சிவந்தவளாய், “கூலியக் கொடுங்கண்ணே, நான் அடுத்த வீட்டுக்குப் போவணும்” என்பாள். ஆனாலும் அவளது ஆழ்மனம், இன்னும் சத்தவடம் இதைப்போலப் பேசச்சொல்லி கெஞ்சுவதாக இருக்கும்.

” சரி வீட்டுக்குள்ளே வா. நீ எதிர்பார்க்காத கூலியத் தர்றேன் ” என்பான்.

” உங்க அம்மா இருக்கிறப்ப, கூப்பிடுங்க வர்றேன் ” என்பாள்.

இதுபோன்ற உரையாடல் அவளுக்குப் பிடிக்கவே செய்யும். ஆனாலும் ஊர்க்கண் பார்த்துவிட்டால், பார்க்கும் கண்களில் பரு முளைத்துவிடுமே, எனப் பயந்தவளாய் அவனிடம் பேசச் செய்வாள். அவளுக்குள் எழும் அச்சத்தில் ஒரு காலை மற்றொரு காலை மிதித்துக் கொள்ளும். கைகள் ஒன்றையொன்று பிசைந்துகொள்ளும். அவளது கால்கள் அடுத்த வீட்டுக்குச் செல்ல எத்தனித்தாலும், மனம் அவனையே சுற்றி வட்டமிடும்.

கடைசியாக சுமந்தி குகன் வீட்டு வாசலில் நின்று, ” அண்ணே சுமந்தி வந்திருக்கே ” என்கையில், “மச்சானுக்கிட்ட கூலி வாங்க வந்திருக்கே” என பின்னொட்டைச் சொல்லிச் சிரித்தான் குகன்.

சுமந்தி, நத்தை ஓடுகளாய் சிரித்தவள், ” அண்ணனுக்கிட்ட ” என்றாள். குகன் வீட்டுக்குள் சென்று, அவனது நாலு முழம் வேட்டியை எடுத்து வந்து அவளிடம் விரித்துக் காட்டினான்.

” உன் அப்பன் அதான் என் மாமன் வெளுத்த வெளுப்புல வெள்ள வேட்டிக் காவி வேட்டியாயிருச்சு” என்றவன் விரித்திருந்த வேட்டியைச் சுருட்டி, அவளது கைக்குள் திணித்தவனாய் அவளது பின் கையைத் தடவிப் பார்த்தான். அவள் கையை முறுக்கிக் கொடுத்தாள். அவனது தொடுதலில் அவளது உடம்பு வியர்த்துக் கொட்டியது. பதிலுக்கு அவனது கையைத் தடவிக் கொடுக்கணும் போலிருந்தது. சுமந்தி, அவனது வேட்டியை எடுத்து விரித்துப் பார்த்தாள். வேட்டியில் வெளீர்த்தனம் மறைந்து, காவிப்போன்ற நிறத்தால் சாயந்திரப் பொழுது தெரிந்தது.

குகன் அவளை வெறிக்கப் பார்த்தபடி இருந்தான். அவனை வெட்கம் கலந்த தொனிப்பில் பார்த்தவன், ” ஏ அப்பன் என்ன செய்யும். ஊர்த்துணிய வெளுக்குற குளம்

அப்படி ” என்றவளாய் வேட்டியை அத்தனை அழகாக மடித்து, கன்னத்தில் அணைத்தாள். அவளது செய்கையால் குகன் முகம் மலர்ந்து குறுநகை புரிந்தான்.

” அது எனக்குத் தெரியாது. என் வேட்டி எனக்கு வெள்ளையா வேணும். நீ இதை வெளுத்துக்கொடு” என எகடாசி பேசியவன், அவளது கண்களை ஊடுருவிப் பார்த்தான். அவளது கொடும்புகள் வெட்கத்தால் சிவந்தன.

” இந்த வேட்டிய வெங்கொளத்துல வெளுத்தாத்தே உண்டு ”

” எந்த கொளத்துல நீ வெளுப்பியோ, என் வேட்டி எனக்கு வெள்ளையா வேணும்”

சுமந்தி வேட்டியை நூலாம்படையைப் போல கையில் சுருட்டினாள். ” நீங்க மேய்க்கிற எரும மேய்ச்சலுக்கு இந்த வெளுப்பு பத்தாதாக்கும்?” என்றவள் ‘க்கும் ‘ என்பதை அழுந்த உச்சரித்தாள்.

” இந்த வேட்டியக் கட்டிக்கிட்டு எருமெதே மேய்ப்பாங்கலா?”

 

” பின்னே, மேலத்தெரு ஆம்பளைங்களாட்டம் வேட்டிய முழங்காலுக்கும் மேலே தூக்கிக் கட்டிக்கிட்டு போவீங்களாக்கும்” என்பதை அவள் சிரிக்காமல் சொல்லியிருந்தாள்.

சுமந்தியிடமிருந்து இப்படியான ஒரு பதிலைக் குகன் சற்றும் எதிர்பார்க்காதவனாய், தலைச்சுற்றி நின்றான்.

” வேட்டிய வெளுப்பா வெளுக்கச் சொன்னா, இப்படி ஜால்சாப்பு பேசுற நீ”

” நீங்க சொல்றதாட்டம் இந்த வேட்டிய நான் வெளுத்துத் தாரேன். அப்படி வெளுத்துத் தந்தா நீங்க மேலத்தெரு ஆம்பளயாட்டம் வேட்டிய மடிச்சித் கட்டிக்கிட்டு நடப்பீங்களா?”

குகன் கீழ் உதட்டைக் கடித்துக்கொண்டான். அவன் கடி அவனுக்கு வலித்தது. அந்த வலியினூடே சொன்னான். “நீ வெளுத்துக்கொடு. நான் தினமொரு வேட்டியில நடந்துகாட்றேன்” என்றவன் விரல்களைச் சொடுக்கிக்கொண்டு அவளை அனுப்பி வைத்தான்.

குகன் நடுத்தெருவில் வெட்டுண்டு இறந்த செய்தி மூன்றாம் நாளும் , அவனை வெட்டிக் கொன்ற ராயனின் வாக்குமூலம் அடுத்த நாளும் பத்திரிக்கை செய்தியாக வந்தன.

ராயனின் வாக்குமூலத்தைச் சுமந்தி உள்ளூர அசைபோட்டுப் பார்த்தாள். வாக்குமூலம், அவளது தொண்டைக்குள் சிக்கின. ” எங்கத் தெரு ஆம்பளையாட்டம் அவன் விதம் விதமாக வேட்டிய வெளுத்துக் கட்டினான். கட்டிய வேட்டிய மரியாதயில்லாம முழங்காலுக்கும் மேலே தூக்கிக்கட்டினான். அவன் செய்தது, என்னைக் கோவப்படுத்தியது. அதனாலே அவனை நான் வெட்டினேன்”, என ராயன் சொல்லியிருந்த வாக்குமூலத்தை கீழத்தெரு ஜனங்கள் மெல்லாமல் விழுங்கி, அதை மறுக்கச் செய்தார்கள். குண்டலையும் குகனும் மேய்ச்சல் தரிசில் பேசிக்கொண்டதை, தொடுப்புப் பழக்கமென நினைத்து, வெட்டிக்கொன்றதாக காவல்துறையிடம் வாக்குமூலம் கொடுத்தார்கள்.

மேலத்தெரு ஜனங்கள் ராயன் சொன்னதையே சொன்னார்கள். மயில்கண் வேட்டி, சரிகை வேட்டி, சார வேட்டி, குச்சு வேட்டி, முண்டு வேட்டி,..என எங்களுக்குப் போட்டியாக கட்டினான். அதையும் முழங்காலுக்கும் மேலாகத் தூக்கிக்கட்டினான், அதனாலேயே அவன் கொலையுண்டான், என்பதாகச் சொல்லி, குண்டலியின் கற்புக்குக் களங்கம் வராமல் பார்த்துக்கொண்டார்கள்.

சுமந்தியின் மனத்தராசில் குகனும் அவனது கொலைக்கான காரணமும் ஏறி இறங்கின. அவனது மரணத்திற்குக் காரணம் தான் வெளுத்த வேட்டியா, குண்டலியா எனத் தெரியாமல் இருதலமணியமாகத் தவித்தவள், ஓரிரு நாளில் தானே காரணம், என்கிற முடிவுக்கு வந்தாள். அப்படியாகவே அவளது மனப்பல்லி கவுளி சொல்லியது. குகனை அவள் மனதிற்குள் பதியமிட்டு அவன் குறித்த நினைவுகளை மீட்டெடுத்தாள். ஆழ்மன ஈரத்தில் குகன் முளைத்து, நாசி, கண்களின் வழியே எட்டிப் பார்த்தான்.

ஒரு நாள் சுமந்தியின் அப்பன் சடையன், அவளது நடத்தை மாற்றத்தைக் குறிப்பறிந்து கேட்கையில், குகன் சாவுக்குத் தானே காரணமென்கிற செய்தியைச் சொன்னாள். அதைக்கேட்டு அவர் அதிர்ந்து போனார். மகளது வாயை இறுகப் பொத்தி, அவளைக் குலுக்கி எடுத்தவர், சொன்ன வாயில் நான்கைந்து அடிகள் கொடுத்தார். மகள் பகிர்ந்து கொண்ட செய்தி அவரைக் கலவரத்தில் ஆழ்த்துவதாக இருந்தது. தனக்குத் தெரியாமல் குகனின் வேட்டியைக் குடியான ஜனங்கள் புழங்கும் குளத்தில் துவைத்த செய்தியை உள்வாங்குகையில், மென்மெல்லிய பயம் அவரைக் கவ்வியது. ஊர்க் குடியானவர் தெருவின் கோபத்திற்கு மகள் ஆளாகிவிட்டதாக நினைத்தவர், இச்செய்தி, மேலத்தெருவுக்குத் தெரியக் கூடாதெனக் கெஞ்சி, மன்றாடி கேட்டுக்கொண்டார்.

சடையன், ஊர்த்துணி எடுப்பதை முற்றிலும் நிறுத்தியிருந்தார். தன் மகள் வெளுத்த வேட்டியால் ஒருவன் கொலையானதை நினைக்கையில் அவரது ஆழ்மனம் குற்ற உணர்வு கொண்டது. அவர் நெஞ்சுக்குள் வெந்து, கண்களில் கனன்றார். தன் மகளை அழைத்துக்கொண்டு, சொந்த ஊருக்குப் போய்விட நினைத்தார்.

கீழத்தெரு ஜனங்கள் அவரிடம் எப்படியெல்லாமோ கேட்டுக்கொண்டும் அவரது செவி மடல்கள் தாழ்வதாக இல்லை. ஊரார்கள் அவரவர் துணிகளைக் செங்குளத்தில் துவைத்துக் கட்டுவதாக இருந்தார்கள். அவர்களது வேட்டிகளைப் பார்த்தாள் சுமந்தி. வேட்டிகள் அவர்கள் யாரென்றும் எந்தத் தெருவாசிகள் என்றும் சொல்லாமல் சொல்வதாக இருந்தன.

சுமந்தி, அப்பன் சடையனிடம் ஊர்த்துணி எடுக்கச் சொல்லி பிடிவாதம் செய்தாள். அவளது வேண்டலைச் சடையன் துவைத்தத் துணியைக் காற்றில் உதறுவதைப்போல உதறச் செய்தார்.

கீழத்தெரு ஆண்கள் காவி வேட்டியைப் போல வெள்ளை வேட்டியை உடுத்திச் செல்வது, சுமந்தி கண்களை உறுத்தச் செய்தது. தன் அப்பன் வெளுக்காத ஊர்த்துணியை இனி நான் வெளுக்கிறேன், என்கிற முடிவுக்கு வந்தாள். கொலையுண்டு மாய்ந்துபோன குகன் நினைவாக இதை நான் செய்கிறேன், என்றாள். இதைத் தொண்டூழியமாகச் செய்யாமல், ஒரு தொழிலாகச் செய்ய சபதமேற்றாள். வெளுக்கும் கூலிக்குத் தினை, தவசம் பெறாமல் பணத்தை மட்டுமே பெற முடிவெடுத்தாள். துணிகளை வீட்டுக்கு வீடு போய் எடுக்காமல், அவர்களே வீடு தேடி வந்து தந்தால் வெளுத்துத் தருவதாகச் சொன்னாள்.

அவளைத் தேடி கீழத்தெரு துணிகள் வந்து சேர்ந்தன. துணிகளைப் பொதியாகக் கட்டிக்கொண்டு குளத்தங்கரைக்குச் சென்றாள். அவளது அப்பன் வழக்கமாகத் துவைக்கும் செங்குளத்திற்கு செல்லாமல், மேலத் தெருவையொட்டியிருக்கும் வெங்குளத்தடிக்குள் இறங்கினாள்.

துணிகளை உவர்மண்ணில் ஊற வைத்து, தெப்பளங்கட்டி அடித்துத் துவைத்து வெளுத்தாள். அவள் துணிகளை அடித்துத் துவைக்கையில், குகனும் அவனுடனான உரையாடலும் நினைவுக்கு வந்தன. அவனுடன் பேசுவதைப்போல, அவளுக்கு அவளே பேசிக்கொண்டு துணிகளை வெளுத்தவள், வெளுத்த வேட்டிகளுக்கு நீலச் சாயமேற்றி கொடிக் கயிற்றில் காயப்போட்டாள். வேட்டிகள் காற்றில் அளாவிக் காய்ந்தது, கொக்குகள் நீல வானத்தில் சரம் சரமாகப் பறப்பதைப் போலிருந்தன.

 

– அண்டனூர் சுரா

1540 C, மகாத்மா நகர்

கந்தர்வகோட்டை

புதுக்கோட்டை மாவட்டம்

– 613301

அலைபேசி – 9585657108

Loading

3 Comments

  1. சிறப்பு சார்….. இன்னமும் அவர்களின் வேட்டிகள் மட்டுமே வெள்ளையாக உள்ளது…… மனமும் வெள்ளையானால் கூடுதல் சிறப்பாய் அமையும்…..

  2. ராஜேஸ் குமாரின் த்ரில்லர் நாவலைப் போல் இருந்தது இந்தக் கதை. இறுதியில் சமூக சிந்தனையை விதைத்து அருமையாக் கதையை நிறைவு செய்திருக்கின்றார்.
    வாழ்த்துக்கள்.

    ரூபன் சிவா
    பிரான்ஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *