Featureஇலக்கியச்சோலை
தனிமையில் அலையும் ஒற்றை இறகு!…. ( நூல் விரிசனம் ) ….. அண்டனூர் சுரா.

தனிமை +தனிமை = தனிமை
எழுத்தாளர்களைக் கொண்டாடுவதற்கென நேர்ந்துவிடப்பட்ட எழுத்தாளர் பொன்.குமார் அவர்கள். அல்லது அதற்காக தன்னை நேர்ந்துகொண்டவர் என்றும் சொல்லலாம். அவரைப் பலரும் நூல் சேகரிப்பாளர் என்றே விளிப்பார்கள். இல்லை, அவர் எழுத்துகளைச் சேகரிக்கும் தேனீ. 
எழுதிக்கொண்டே பிற எழுத்தாளர்களைக் கொண்டாடுவதற்கு இரண்டு இதயம் வேண்டும், அல்லது பெரிய இதயமேனும் வேண்டும், இல்லை இல்லை இதயம் என்கிற ஒன்று இருந்தாலே போதும், என்கிறேன் நான்.
இவரது இருபத்து இரண்டாவது நூலாக வந்திருக்கிறது,
தனிமையில் அலையும் ஒற்றை இற்கு. ஒரு பாடுபொருள் கொண்ட கவிதைத் தொகுப்பு. கவிதைகள் அனைத்தும் தனிமையைப் பாடுகின்றன அல்லது தனிமையில் பாடுகின்றன அல்லது தனிமைக்காக பாடுகின்றன.
இரவில் வந்து உறங்கிச்செல்லும் தனிமை, காலையில் சொல்லாமல் சென்றுவிடுவதாக ஒரு கவிதை.
தனிமை குறித்து எனக்கொரு அனுமானம் உண்டு. தனிமை தனித்திருக்கையில் சுகம். தனிமைப்படுத்துகையில் வலி. இருண்டிற்குமான கவிதைகள் இத்தொகுப்பில் உண்டு.
இத்தொகுப்பின் கடைசியில் , அவரது சேகரிப்பிலுள்ள ஒரு பாடுபொருள் குறித்த கவிதைத் தொகுப்புகளை பட்டியலிட்டுள்ளார். எண்பத்து ஒரு தொகுப்புகள். அந்தப் பட்டியலில் இந்தத் தொகுப்பையும் சேர்ப்பாரா அல்லது தனிமைப் படுத்திவிடுவாரா, என்கிற கேள்விக்கு இங்கு இடமிருக்கிறது.
இத்தொகுப்பில் ஒரு கவிதை. இக்கதை என்ன சொல்கிறது, என்ன சொல்ல வருகிறார், என அசைபோட்டேன். என்னவெல்லாமோ இந்தக் கவிதைச் சொல்லிச் செல்கிறது.
“ஒரு பூந்தோட்டத்தையே
காணாமல் செய்தது
பூந்தோட்டத்தில்
தனிமையில் பறக்கும்
பட்டாம்பூச்சி”
வானத்தையே காணாமலடித்துவிடும் ஒரு பட்டத்தைப் போலதான் இந்தப் பட்டாம்பூச்சியும். இங்கு பூந்தோட்டம் என்பது தோட்டம் மட்டுமே அல்ல. பட்டாம்பூச்சி என்பதும் அப்படிதான். நல்ல குறியீட்டு கவிதை.
தனிமையில் அலையும் ஒற்றை இறகு. வெற்றிமொழி வெளியீட்டகம்.
இத்தொகுப்பைத் தனிமையிலிருந்து வாசிக்கையில் ஒன்றை உணரக்கூடலாம். பொன்.குமாரின் எழுத்தும் தனி – மை
![]()