வானலைகள் ஊடாக வண்ணத் தமிழ்பரப்பும்
தேனான வானமுதே தித்திக்க ஒலிக்கின்றாய்
ஈரெட்டைக் கடந்து காலெடுத்துவைக்கும் பதினேழில்
எல்லாமே சிறப்புப்பெற இதயத்தால் வாழ்த்துகிறேன் !
தரமுடைய குரலுடையோர் உனையுயர்த்தி நிற்கின்றார்
தமிழுணர்வால் அவரெழுந்து தருகின்றார் பலநிகழ்ச்சி
கேட்டுவிடத் தவமிருப்பார் பெருகியே வருகின்றார்
நாட்டமுடன் தமிழ்பரப்பும் வானமுதே வாழ்த்துகிறேன் !
உள்நாடு வெளிநாடு அத்தனையும் உள்ளடங்கும்
நல்லவல்ல செய்திகளை நாளுமே வழங்குகிறாய்
முதியவரைக் கவருகிறாய் இளையவரை இணைக்கின்றாய்
அனைவருக்கும் நல்லிசையை வழங்குமுன்னை வாழ்த்துகிறேன் !
ஆங்கிலேய மண்ணிலே அன்னைத் தமிழொலிக்க
அமைக்கின்ற நிகழ்ச்சியினால் ஆளுமையைக் காட்டுகிறாய்
அடியடியாய் வைத்து ஆண்டு பதினாறைத்தாண்டி
பதினேழில் கால்பதிக்கும் பக்குவத்தை வாழ்த்துகிறேன் !
இன்னும்நீ உயரவேண்டும் ஏற்றம்பல காணவேண்டும்
இன்தமிழை ஏந்தியே இவ்வுலகைவரவேண்டும்
எங்களது மண்ணை எங்களது விழுமியத்தை
எடுத்துச்செல்லும்இன்குரலாய் ஒலித்துவிட வாழ்த்துகிறேன்…. !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ….. அவுஸ்திரேலியா