Featureகதைகள்

நடுகைக்காரி!… 38 ….. ஏலையா க.முருகதாசன்.

அறைக்குள் போகவிருந்த ஞானத்தை தமக்கை „நில்லடா உன்னோடை ஒரு கதை கதைக்க வேணும் „ என்று கோபமாகவும் வேகமாகவும் சொல்லிய சொல் ஞானத்தை தடுத்து நிறுத்தியது.

விறாந்தையில் ஞானத்தின் தாயும் தகப்பனும் தமக்கையும் கதிரையில் உட்கார்ந்திருந்தனர்.

தமக்கையின் கோபமான குரலைக் கேட்டு நின்றவன்,ஏதுமறியாத பாவி போல முகத்தை வைச்சுக் கொண்டு தகப்பனையும் தாயையும் பார்த்தான்.

தகப்பனின் முகமும் தாயின் முகமும் ஏதோ ஒரு பிரச்சினையின் காரணமாக மனதில் ஏற்பட்ட தாக்கத்தை வெளிக்காட்டியும் வெளிக்காட்டாமலும் இருக்கின்ற பிரதலிப்புடன் இருப்பதைக் கண்ட ஞானம் இது வழமைக்கு மாறானது என தெளிவாகவே புரிந்து கொண்டான்.

தமக்கை தனது தகப்பனிடமும் தாயிடமும் நிச்சயமாக தனக்கும் பாறுவுக்குமிடையில் இருக்கும் தொடர்புபற்றியே பேசியிருப்பாள் என நினைச்சுக் கொண்டவன் „அக்கா என்ன விசயம்’ என்று தன்னிடமிருந்தும் எந்தவிதமான படபடப்பும் வரக்கூடாது என மனதைக் கட்டுப்படுத்தி அமைதியாக கேட்க, „ என்ன, உன்னிடம் நான் எதைப் பற்றிக் கேட்கப் போறன் என்று தெரியாத மாதிரி,இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பது போல கேட்கிறாய், நான் ஒரு ரீச்சரடா, இதுவரையில் எத்தனை பிள்ளைகளை மேய்ச்சிருப்பன்’என்றவள், „இன்றைக்கு நீ உண்மையச் சொல்ல வேணும், உனக்கும் ……அந்த நடுகைக்காரிக்கும் என்ன தொடர்பு, உனக்கு என்னிடம் அக்கா என்ற உண்மையான பாசமிருந்தா சொல்லு, ஊரிலை உன்னைப் பற்றியும் அந்த நாயைப் பற்றியும் கனகதை நடக்குது,சுப்பையற்றை மானம் மரியாதை மட்டுமல்ல உனக்கு அக்காக்களாயும்,அண்ணன்களாயும் பிறந்ததால் எங்கடை மானம் மரியாதையும் காற்றிலை பறக்குது.போறவன் வாறவன் இனசனமெல்லாம் எங்களைக் கேவலமாகப் பார்க்கினம்,காறித் துப்புகினம் கொத்தான் இப்படிப்பட்ட குடும்பத்திலையா கல்யாணம் செய்தனான் என்று என்னை நார் நாராக கிழிக்கிறார் „ என்று மூச்சு விடாமல் படபடப்பாக பேசிய தமக்கையிடம் „ அக்கா நிற்பாட்டுங்கோ நீங்கள் என்ன கதைக்கிறியள் என்று எனக்கு ஒரு சொட்டுமே விளங்கேலை,இப்ப எதற்காக படபடக்கிறியள் „ என்றவன்,தமக்கையுடன் எப்படிக் கதைக்க வேணும் என்பதையும் தான் பாறுவைக் காதலிப்பதையும் அப்படி ஒன்றுமே இல்லை எனப் பொய் சொல்வதுதான் எனத் தீர்மானித்தவனாக’ அக்கா சத்தியமாய் எனக்கு நீங்கள் எதைப் பற்றி கதைக்கிறியள் என்று தெரியவே இல்லை என்கிறான்.பாறுவை நாய் என்று சொன்னது அவனுக்கு பெருங்கோபத்தை ஏற்படுத்தினாலும் பொறுமையாகக் கேட்டான்.

„டேய் நடிக்காதையடா நான் உனக்கு அக்கா, நான் எதைப்பற்றிக் கேட்கிறன் என்று உனக்கு தெரியாதோ „ என்று கேட்க’உண்மையாக நீங்கள் எதைப்பற்றிக் கேட்கிறியள் என்று விளங்கவே இல்லையக்கா, உங்கடை தலையிலை அடிச்சு சத்தியம் செய்யவா „ என்று ஞானம் கேட்டதும் தமக்கை தடுமாறிப் போகிறாள்.

பாறு யார் தான் யார் என்பதும் அவளைக் கல்யாணம் செய்யப் போவதால் என்னென்ன சண்டமாருதம் எல்லாம் நடக்கப்: போகின்றன என்பதையறிந்தவன் ஞானம்.

கலப்புக் கல்யாணம் நடக்க வேண்டுமென்றால் கண்ணை மூடிக் கொண்டு பால் குடிக்கும் பூனையாக,எதுவுமே அறியாத அப்பாவியாக நடித்துத்தான் ஆகவேண்டும் அதைத்தவிர வேறு வழியில்லை எனத் தீர்மானித்த ஞானம் தமக்கை இன்டைக்கு ஒரு முடிவு கட்டாமல் போகமாட்டாள் ஒரு பிரளயத்தையே ஏற்படுத்திவிட்டுத்தான் போவாள் எனவே எதுவரினும் அதைச் சமாளிப்பம் என நினைச்சுக் கொள்கிறான்.

„ஞானம் நான் வெளிப்படையாகவே கேட்கிறன்’ என்றவள் தகப்பனின் பக்கம் திரும்பி’ அப்பா இப்ப நீங்கள் கொஞ்ச நாளாகவே அம்பனைத் தோட்டப்பக்கம் போறதில்லை என்று எனக்குத் தெரியும்,இவன் பார்த்துக் கொள்ளுவான் என்று நீங்களும் அம்மாவும் பேசாமலிருக்க இவன் ஒரு நடுகைக்கார பெட்டையுடன் தோட்டத்திலை புல்லுப் பிடுங்கிறது,தோட்ட வேலை கனக்க கிடக்குது என்று அவளை வேறை நடுகைக்காரிகளுடன் அவளையும், அதுதான் அந்தப் பாறு என்ற பெட்டையை அம்பனைத் தோட்டத்துக்கு வரச் செய்து அட்டாளைக்குள்ளை இருந்து இரண்டு பேரும் ஒன்றாய்க் கதைக்கிறது,தோட்டக் கிணத்திலை எந்தக் கூச்சமும் இல்லாமல் அவள் குளிப்பதும்,ஏன் இவரே அவளுக்கு குளிக்கவும் வார்த்திருக்கிறார், அவளைச் சைக்கிள் காண்டிலில் இருத்தி அவளின்ரை வீ;ட்டிலை கொண்டு போய் விடுகிறது,ஏன் நேற்றுக்கூட அவளோடை இவன் யாழ்ப்பாணத்தக்கு படம் பார்க்கப் போயிருக்கிறான்,இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா தெரியாதா’ என்று மூச்சுவிடாமல் தமக்கை சொல்லி முடிச்சதும், தமக்கை இப்படி எல்லாவற்றையும் தெரிஞ்சு வைச்சிருக்கிறாளே என்று திகைச்சவன்,தமக்கை சொல்லியதற்கு பயப்படாமல் ஏதாவது பதில் சொல்ல வேண்டும் என்று தீர்மானித்து ;’ அக்கா நீங்கள் சொன்னதெல்லாம் பொய்,பிழையான குற்றச்சாட்டு, எனக்கென்ன விசரா புல்லுப் பிடுங்க வாறவையோட சினேகிதம் வைக்க „யாரோ இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி உங்களை ஏத்தி விட்டிருக்கினம், நான் நேற்றுப் படம் பார்க்கப் போனது உண்மை, நான் தனியத்தான் போனனான், தமிழப்பண்ணை புத்தகக்கடையிலை போய் புத்தகங்களும் வாங்கினான் „ என்று சொன்ன ஞானம் அறைக்குள் வேகமாகப் போய் வாங்கிக் கொண்டு வந்த புத்தகங்களை தமக்கையின் முன் வைக்கிறான்.

தமக்கை சொல்வது அவனுக்குக் கோபத்தையும் திகைப்பையும் ஏற்படுத்தினாலும், எடுத்தோம் கவிழ்த்தோம் என்று தமக்கையுடன் வாக்குவாதப்படாமல் தனக்கும் பாறுவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்பது போல நடிப்பதன் மூலமே அவளுக்கு ரியூசனைக் கொடுத்து அவளைச் எஸ்.எஸ்.சி சோதனையில் பாஸ்பண்ண

வைப்பதுடன்,ரியூசன் கொடுக்கிற சாட்டில் அவளைப் பார்க்க முடியும் என்று நினைச்சான்.

ஞானத்தினுடைய தகப்பன் பொதுவாக தேவையற்றுக் கதைக்க மாட்டார்.எல்லாரும் மனிதர்தானே தேவையில்லாமல் அவன் அது இவன் இது என்று வேற்றுமைகளை வளர்த்து வைச்சிருக்கிறம் என்று நினைப்பவர்கள்தான் ஞானத்தின் தாயும் தகப்பனும்.

ஆனால் முற்போக்குச் சிந்தனைக்குள்ளும் இனம்சனம் என்ற உறவு நிலைக்குள்ளும் தத்தளித்துக் கொண்டிருப்பவர்கள்.

ஞானம் பாறுவுடன் கதைப்பதையும்,அவளைச் சந்திப்பதையும் ஞானத்தின் நடவடிக்கையில் இருந்து கவனிச்சுக் கொண்டாலும் ஞானத்திடம் தகப்பனுமு; தாயும் கடுமையாக நடந்து கொண்டது இல்லை.

தங்கடை மகள் சொன்ன கதையைக் கேட்டுக் கொண்டிருந்த தகப்பன்’ பெரியபிள்ளை ஆரேன் சொல்லுற கதையைக் கேட்டு இஞ்சை வந்து சொல்லாதை,நீ ஒரு ரீச்சரும்கூட எல்லாத்தையும் தராசிலை போட்டு எது உண்மை எது பொய் என்று தீர அறிஞ்சுதான் கதைக்க வேணும், இப்ப காலமும் மாறிக் கொண்டு வருது ….’ ஏன்று தகப்பன் சொல்லி முடிக்க முந்தி’ அப்பா அந்த ஆட்களின்ரை பெட்டைதான் இந்த வீட்டுக்கு மருமோளாய் வரப்போறாள் என்று சொல்ல வாறியளோ’ என்றவளுக்கு’ கொப்பா அப்படியே சொன்னவர் நீ ரீச்சர் உனக்கே இன்றைய இளம் பொடியங்கள் பெட்டையளின்ரை மனநிலை புரியவில்லை,பொடியங்களும் பெட்டையளும் ஒருத்தரோடை ஒருத்தர் கதைக்கிறதைப் பிழையான எண்ணத்தோடை பார்க்கக்கூடாது…..’ தாய் கதைச்சுக் கொண்டிருக்கும் போதே பொறுமை இழந்த ஞானத்தின் தமக்கை’ அம்மா அப்பா உங்கள் இரண்டு பேருக்கும் ஒன்றைச் சொல்றன் ஞானத்துக்கு வேலையில்லாட்டிலும் பரவாயில்லை, எங்கடை ஆட்களுக்குள்ளை வடிவான பெட்டையாய் நல்ல சீதனத்தோடை கட்டி வையுங்கள்,

இவன் எங்கடை ஆட்களின்ரை பெட்டையள் ஆரையாவது லவ்பண்ணி இன்டைக்குக் கூட்டிக் கொண்டு வந்தாலும் நான் ஆலாத்தி எடுத்து வரவேற்பன்…ஆனால்…ஏதாவது நடந்துதோ அன்றைக்குத்தான் இருக்குது இந்தத் தனம் யாரென்று காட்டுவன்.தம்பி இவர் தான் நினைச்சமாதிரி நடந்தாரென்றால், அண்டைக்குத்தான் இந்த வீட்டுப் படலையைத் திறந்து கொண்டு நான் வருகிற கடைசி நாளாய் இருக்கும், என்ரை மனுசன் போயும் போயும் உன்ரை குடும்பத்திலை கல்யாணம் செய்தேனே என்று சாடைமாடையாய் நக்கலடிக்கிறார்.

ஊர்முழுக்க இவன்ரை கதைதான்.இவன்ரை பேரோடை சுப்பையற்றை குடும்பமும் கொடிகட்டிப் பறக்குது’

„தனம் ஆராருக்கு என்ன விதியோ அதுப்படிதான் நடக்கும்,ஆராருக்கு ஆரார் என்று எழுதியாச்சு, நீ சும்மா கற்பனைபண்ணி கதையாதை’ என்று தாய் சொல்ல’ ஓகோ …நீங்களே சொல்லிட்டியளே விதிப்படி என்று அப்ப பாறு என்ற பார்வதி,எனக்கு

மச்சாளா வரப்போறாள் அப்படித்தானே „ என்று தாயில் எரிச்சு விழுந்தாள் ஞானத்தின் தமக்கை.

„இஞ்சைவா தனம் நீ ஒரு சாதாரண குடும்பப் பெண்ணாக இருந்து இப்பிடி நீ கதைச்சிருந்தாள் நான் அதைக் கணக்கில் எடுத்திருக்க மாட்டான், ஆனால் நீயும் உன்ரை மனுசனும் ரீச்சர்களாயிருந்தும் ஆற்றையேன் கதைகளைக் கேட்டு இப்படிக் கதைக்கிறது பெரிய பிழை’ என்று தாய் சொல்ல’ அக்கா உங்களுக்கு ஆர் என்னைப் பற்றிச் சொன்னது’என்று கேட்க, „மணியமும் றேடியோ வரதரும் காசிப்பிள்ளையின்ரை மனுசியுந்தான்’ என்று சொன்ன ஞானத்தின் தமக்கை’ அவையேன் பொய் சொல்லப் போயினம்’ என்று சொல்ல’ சரி…சரி இந்தக் கதையை இதோடை விடுங்கோ,ஞானம் உனக்கு யூனியனிலை நாளைக்கு இன்ரர்வியூ இருக்குதல்லே,அதைப் பற்றி யோசி என்று தகப்பன் மகளின் கதைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.

அப்பொழுது போட்டுவாறன் எண்டுகூடச் சொல்லாமல் தனம் எழுந்து போகிறாள்.போகட்டும் விடு என்பது போல மனுசிக்கு சைகை காட்டுகிறார் சுப்பையா.

(தொடரும்)

Loading