Featureகட்டுரைகள்

போர்களின் விளைவுகள் என்ன?…. ஏலையா க.முருகதாசன்.

ஐரோப்பிய நாடுகளின் முற்றத்தில் ஒரு போர் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக நடைபெற்று வருகின்றது.

போரில் வீசப்படும் குண்டுகளிலிருந்து பரவிக் கொண்டிருக்கும் கந்தக அமிலத்தின் பரவல் காற்றுடன் கலந்து நாற்றிசையும் பரவிக் கொண்டிருக்கின்றது.

ஐரோப்பிய நாடுகளின் மக்களை நோக்கி அக்காற்றில் கலந்த விசத்தன்மை மெதுவாகப் பயணிக்கும் போது அதன் செறிவுத் தன்மை ஐதாகி இருப்பதால் உடனடிப் பாதிப்பை மக்களின் உடல் உணராமல் இருந்த போதும் தொடர்ச்சியாக போர் நடந்து கொண்டிருப்பதனால் ஒன்றன்பின் ஒன்றாக அலையலையாக வரும் நச்சுத்தன்மை உடலைப் பாதிக்கவே செய்யும்.

ஒரு இடத்தில் போர் நடக்குதென்றால் அந்தப் போரை நடத்துபவர்களால் போடப்படும் குண்டுகளால் மக்கள் இறப்பைத் தழுவுவதும்,அங்கவீனர்களாக ஆவது மட்டுமல்ல பாதிப்பு, அக்குண்டுகளால் உமிழப்படும் விசஅமில வாயுக்களாலும் பாதிப்பு ஏற்படுகின்றது.

போர்க்குண்டுகளுக்கு பயன்படுத்தப்படும் மூலகங்கள் அக்குண்டுகள் போடப்பட்டு அவை கட்டிடங்களையோ நிலத்தையோ வேகமாகத் தொடுகையில் ஏற்படும் தாக்கம் அக்குண்டுகளுக்குள் இருக்கும் மூலகங்கள் ஒன்றக்கொன்று முரண்பட்டு எதிர்வினையாற்றும் போதே அவை வெடித்துச் சிதறுகின்றன.

வெடித்துச் சிதறுகையில் அதன் ஒலியின் பெரும்தாக்கமும் குண்டுக்குள் இருக்கும் மூலகங்களின் வினையாற்றல் காரணமாக நிலம் தொட்டு கட்டிடங்கள் மனிதர்கள் என ஒலியதிர்வினாலும் எதிர்வினையாற்றி தம்மியல்பினை இழந்து வேறொரு மூலகமாக திருபுநிலை பெறுகையில் அக்கலவை வேகமாக சிதறுவதாலும் மனிதர்களின் உடலைப் பாதித்து அவர்ளை மரணத்திற்கு கொண்டு செல்வதுடன் அக்கலவையின் நச்சுப் புகை காற்றோடு கலந்து விடுகிறது.

காற்றோடு கலந்த நச்சுப் புகை பவனமண்டலத்தில் காற்றுடன் கலக்கையில் எங்கு போர் நடந்ததோ அந்நாட்டுக்கு அண்மையில் உள்ள நாடுகளைச் சென்றடைவதும்,அக்காற்றையே அந்தந்த நாட்டு மக்கள் சுவாசிப்பதும் இயல்பாக நடந்து கொண்டிருக்கும்.

ஒருவருக்கு அத்தகு காற்று உடனடி மரணத்தை ஏற்படுத்தாதெனினும் அதனால் உடல் மெதுமெதுவாக நோயுறுத் தொடங்கும்.உடலில் இருக்கும் எதிர்ப்புச் சக்தியின் வலுவைப் பொறுத்து பாதிப்பின் கால எல்லை வேறுபடும்.புற்று நோய் வருவதற்கான காரணங்களில் போரும் பெருங் காரணமாகும்.

பூமியில் தோன்றிய மனிதர்கள், விலங்குகள்,பறவைகள் தொட்டு உயிரினங்கள் என உயிரியல் கோட்பாட்டுக்கு அமைவான அனைத்துமே இயற்கையின் படைப்பாயிருப்பதும், இப்படைப்புக்கள் மீதான எந்தவொரு செயற்கையான வேதியல் தாக்கம் ஏற்படுமாயின் அனைத்து உயிர்களையும் அது பாதிக்கும்.அதாவது உடலின் உருவாக்கத்திற்கு இயற்கை அளவோடறிந்து வேதியில் மூலக சேர்க்கையை ஏற்படுத்தியிருக்கின்றது.இவ்வுடல் மீது அவ்வுடலுக்கு ஒவ்வாத அல்லது தேவைக்கு அதிகமான வேதியல் மூலகம் சேருமாயின் அல்லது திணிக்கப்படுமாயின் உடல் நோய்வாய்ப்படும் அல்லது மரணத்தை தழுவும்.

இன்றைய விஞ்ஞானம் மனிதர்களை அழிக்கும் ஆயுத உற்பத்தி வணிகத்தை நடத்துவதற்காக நச்சாயுதங்களை உற்பத்தி செய்வதிலும் அதனை விற்பனையாக்குவதற்குமாக போர்களை ஏற்படுத்தி நடத்துகின்றன.

போரினை நாளாந்தம் சந்தித்துக் கொண்டிருக்கும் போருக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் விநாடிக்கு விநாடி தாம் உயிர்வாழ்வதற்கான உத்தரவாதமின்றியே வாழ்கிறானர்.அந்த வாழ்க்கையானது பசியும் உணவுத் தேடலும் ஒருபுறம் ஏக்கத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்த எந்த நேரத்தில் தனதுயிர் போர்க் கருவிகளின் தாக்கத்தினால் போய்விடுமோ என்ற அச்சம் ஒருபுறமுமாக அவன் போரை எதிர்நோக்குகிறான்.

போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாட்டின் அண்மித்த நாடொன்றில் வாழும் ஒருவன் போரொன்றினால் மனத்தளவிலும் பொருளாதார ரீதியாகவும் எவ்வாறு பாதிக்கப்படுகிறான் என்பதை உற்று நோக்க வேண்டியுள்ளது.

ஒருவன் வாழும் நாட்டினதும் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாட்டினதும் தூரத்தைப் பொறுத்தே அவனின் கவனமும் கவலையும் கோபமும் அக்கறையும் செல்லும்.

மேலே கூறப்பட்ட போரினால் ஏற்படும் நச்சுக்காற்று சுவாசப்பைகள் ஊடாக இரத்தத்தில் கலந்து நாளடைவில் உடல்கலங்கள் சிதைவுற்று

மரபணுக்கலங்கள் சிதைவுறும் போது அங்கவீனமான பரம்பரை உருவாவதற்கு வழிவகுக்கின்றது.

உலகம் அன்றிலிருந்து இன்றவரை போரில்லாமல் அமைதியாக இருந்ததில்லை.எப்பொழுதும் எங்கேயோ ஒரு நாட்டில் ஆயுதப் போர் நடந்து கொண்டேதானிருக்கின்றது.அணுவாயுதப் போர் இன்னும் ஆரம்பிக்கவில்லையே தவிர,வேதியல் போர் நடந்து கொண்டேதான் இருக்கின்றன.வேதியல் குண்டுகளும் மிகவும் ஆபத்தானவை,மனித குலத்தை படிப்படியாக அழிக்கக்கூடியது.

உடலில் ஏற்படும் நோய்களுக்கு மூல காரணமாக அமைவது உடல் உறுப்புகளுக்கு தேவையான வேதியல் பொருட்களின் குறைபாடுகளினால் காணப்படும் ஒழுங்கற்ற நிலைமையே காரணமாகும்.மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் உயிரியல் கோட்பாட்டின் அடிப்படையாக அமைந்த வேதியல் மூலாதாரத்தைக் கூறியுள்ளாரகள்;.

அங்குமிங்குமாக நடக்கும் ஆயுதப் போர்களின் விளைவு காற்றில் நச்சுத்தன்மை கலந்திருப்பதை உறுதிப்படுத்தி வருகின்றது.

தான் வாழும் இடத்திலிருந்து எங்கேயோ அதிக தூரத்தில்தானே போர் நடக்கின்றது என்பதனால் அந்தப் போரினால் வெளிப்படுத்தப்படும் நச்சுக் காற்று உலகில் உள்ள ஒவ்வொருவரையம் பாதித்துக் கொண்டேதானிருக்கின்றது.

போரினால் நேரடிப் பாதிப்பாக மக்களை வலிந்து மரணத்திற்கு இட்டுச் செல்வது மட்டுமல்ல,உறுப்புக்களை இழந்தவர்களையும்,பிறப்பால் அங்கவீனர்களாக பிறப்பதற்கும் காரணமாகி விடுகின்றது.

போரின் பாதிப்பை உணர்ந்த நாடுகளில், அதன் தாக்கத்தினால் இன்றும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் முதல் நாடாக ஜப்பானைச் சொல்லலாம்.

இன்று உக்ரைனுக்கும் ரஸ்யாவுக்கும் இடையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரானது கட்டிடங்களைச் சிதப்பதோ, தொழிற்சாலைகளைச் சிதைப்பதோ,வயல்நிலங்களைச் சிதைப்பதோ, மண்வளத்தில் பயிர்களை விளைவிக்க முடியாத வேதியல் மூலகங்களை கலப்பதோ அல்ல என்பதுடன் நின்றுவிடாது உக்ரைனிய மக்கள் அனைவரினதும் உடல் கலங்களைச் சிதைப்பதற்கான போருமாகும் என்பதை மறுக்க இயலாது.

ஒரு தீக்குச்சியை உரசும் போது அதிலிருந்து எழும் புகையானது எம்மால் சுவாசிக்கப்படுவதும் அது இரத்தத்துடன் கலக்கின்ற சாத்தியக்கூறு இருக்கின்றது என்பதை நாம் நிராகரிக்கவே முடியாது.

சின்னஞ்சிறு தீக்குச்சிப் புகையில் கலந்திருக்கும் வேதியல் பொருளே எமக்கு பாதிப்பின் பிரதிபலிப்பைத் தராதது போலத் தோன்றி பாதிப்பைத் தருமாயின் ஒரு போரினால் ஏற்படும் நச்சு வேதியல் மூலகங்கள் கலந்த புகை மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியே தீரும் என்பதில் எவ்வித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.

ரஸ்யாவிற்கு எதிரான அனைத்து நாடுகளினதும் பொருளாதாரத் தடை ரஸ்யாவை பாதிப்பதைவிட,ரஸ்யாவால் போடப்படும் குண்டுகளிலிருந்து வெளிவரும் புகையில் கலந்திருக்கும் விசவேதியல் பொருட்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தப் போகின்றது என்பது உண்மையே.

எங்கேயோ நடக்கும் போர்தானே எமக்கென்போரும் அந்த விசக் காற்றையே சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Loading