Featureகட்டுரைகள்

குவாட் எனும் சதுரங்கம்!… கிறிஸ்டி நல்லரெத்தினம்.

நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கும் போது ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி ஜப்பானில் நடைபெற இருக்கும் ஒரு முக்கியமான மகாநாட்டில்  கலந்துகொள்ள பெட்டியை அடுக்கி ஆயத்தங்கள் செய்து கொண்டிருப்பார். குவாட் அமைப்பின் அங்கத்தவர்களான அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலிய நாட்டின் தலைவர்கள் கலந்து கொள்ளும் முக்கியமான இந்த அமர்வு இம்மாதம் செவ்வாய்க்கிழமை 24ம் திகதி டோக்கியோவில் நடைபெற உள்ளது. இவ்வாரம் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய பொதுத்தேர்தலில் திரு. அல்பானீஸியின் தொழில் கட்சி ஆட்சியை கைப்பற்றிய கையோடு உலகின் மூன்று செல்வாக்குள்ள தலைவர்களை சந்திக்கும் அரிய வாய்ப்பும் இவருக்கு கிட்டியது ஒரு அதிர்ஷ்டமே!

அவருக்கு  டோக்கியோவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்,  பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பானிய பிரதமர் யோஷிஹிடே சுகா  ஆகியோருடன் குவாட் கூட்டமைப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உலக அரசியல் பேச கிடைத்தது ஒரு  அரிய சந்தர்ப்பமே! ‘பழம் நழுவி பாலில் விழுவது’ என்பது இதைத்தானோ?

கடந்த வருடம் அமெரிக்காவில் நடைபெற்ற குவாட் அமர்வு இத்தனை சுமுகமான சூழ்நிலையில் நடைபெறவில்லை.

ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்காட் மாரிசன் இந்த அமர்விற்கு போகும் முன் அமெரிக்காவுடனும் இங்கிலாந்துடனும் இணைந்து ஒரு அறிவித்தலை விடுத்தார் :  ஆஸ்திரேலியா அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை கட்டுவதற்கான முன்னெடுப்பில் AUKUS எனும் ஒப்பந்தத்தின் கீழ்   இணைய இருப்பதாகவும் பிரஞ்சு நாட்டுடன் ஆஸ்திரேலியா செய்து கொண்ட சாதாரண எரிபொருளில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது என்பதுமே அந்த அறிவித்தல். இச்செய்தி இடியென இறங்கியது  பிரஞ்சு அரசுக்கு. இருக்காதா பின்னே? 2016ல் கைச்சாத்திடப்பட்ட $90 பில்லியன் பெறுமதியுள்ள  12  நீர்மூழ்கிக் கப்பல்களை கட்டும்  ஒப்பந்தத்தை கிழித்தெறிந்து விட்டு  ‘பை, பை’ என்று சொல்லி விலகிப்போனால்  எப்படி இருக்கும்? ஆத்திரம் எல்லை மீற  அமெரிக்கவிற்கும்  ஆஸ்திரேலியாவிற்குமான பிரஞ்சு தூதுவர்களை  ‘வீட்டிற்கு வரவும்’ என பிரஞ்சு நாடு மீள அழைத்துக்கொண்டது.

ஸ்காட் மாரிசனுக்கு இக்கட்டான நிலமை.  காதும் காதுமாய்  வைத்து போல் சமைத்த அணுசக்தி நீர்மூழ்கி  ‘டீல்’ மிதக்கும் முன்னரே  இத்தனை இக்கட்டில் தன்னை கொண்டுவந்து  விட்டுவிட்டதே? பிரெஞ்சு பிரதமரும் சினம் கொண்ட காதலி போல்  தொலைபேசியை எடுக்க வேறு மறுத்தார்.. ஆனால் நல்ல வேளையாக இந்த அறிவிப்பை விடுக்கும் முன்னரே பாரதப் பிரதமர் மோடியுடனும் நியூசிலாந்து பிரதமருடனும் இந்தோனேசியப் பிரதமருடனும் இந்த டீல் பற்றி சொல்லியிருந்ததால்  இப்போது ‘காதலியை ‘ மட்டும் சமாளித்தால் போதும் என்ற நிலை. சரி, இவர்களிடம் சொல்ல வேண்டிய அவசியம்தான் என்ன?

‘அணுசக்தி மயமாக்கப் போகிறேன்’ என்பது ‘நான் ஒரு புலியை வாங்கி வளர்க்கப் போகிறேன்’ என்று நீங்கள் உங்கள் அடுத்த வீட்டு மாமிக்கு சொல்வதைப் போல். அதே கிலிதான் அண்மித்த நாடுகளுக்கும்!

மேலும் 1951ல் அமெரிக்கா-ஆஸ்திரேலியா – நியூசிலாந்து கூட்டாக கையெமுத்திட்ட  ANZUS பாதுகாப்பு உடன்படிக்கையும் இன்னும் உயிருடன்தான் இருக்கிறது.

 உலகில் ஆறு நாடுகளே ( அமெரிக்கா, இந்தியா, சீனா, இங்கிலாந்து,  பிரான்ஸ்,  ரஷ்யா) அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை தம் வசம் வைத்திருக்கின்றன. சீனாவிடம் 6 அணுசக்தி நீர்மூழ்கிகளும் 50 எரிபொருள் நீர்மூழ்கிகளும் இருப்பதாய் ஒரு கணிப்பு சொல்கிறது.  அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு டீசல் கப்பல்களைப்போல் அல்லாது நீர் மட்டத்திற்கு அடிக்கடி  வந்து எரிபொருள் நிரப்பும்  தேவைகள் இல்லை. மேலும் இவைகளால் எதிரிகளின்   ‘ரேடரில்’  தென்படாமலேயே பயணிக்க முடியும்.

பொத்தி வைத்ததை பொதுவில் போட்டதால் வந்த அரசியல் சிக்கல்களை எப்படி சிக்கெடுப்பது என்ற கவலையுடன் பெட்டியை அடுக்கிக் கொண்டு  2020ல் விமானத்தில் ஏறினார் திரு.மாரிசன்.

ஆனால் இவ்வருட குவாட் அமர்வில் கலந்து கொள்ள இருக்கும் புதிய பிரதமர் அந்தோனி அல்பானீஸியின் மனநிலை இதற்கு எதிர்மறையானது.

 சரி,  பழைய கதைகளை விடுத்து குவாட் அமைப்பு பற்றி பார்ப்போமா?

குவாட் என்ற மூன்று எழுத்துக்களில் அடங்கியுள்ள இந்த நான்கு நாடுகளின் கூட்டமைப்பு 2004 சுனாமியுடன் கரை ஒதுங்கிய ஒன்று. Quadrilateral Security Dialogue (QSD, Quad) என ஆங்கிலத்தில் இது விரியும். உலகப் படத்தில் இந்த நான்கு நாடுகளை இணைக்கும் புள்ளிகள் ஒரு சதுர வடிவில் இருப்பதாலோ என்னவோ Quadrilateral என்பது பொருத்தமானதே!

குவாட்டின் தலையாய நோக்கம் ஒரு சுதந்திரமான, திறந்த மனதுள்ள வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை கட்டியெழுப்புவதே. முதலில் சுனாமியில் பாதிக்கப்பட்ட இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கு மனிதாபிமான மற்றும் பொருளாதார ரீதியில் உதவுவதே இந்த அமைப்பின் ஒரே நோக்கமாய் இருந்தது. இதுதான் இந்த இயக்கத்தின் பிதாமகனான அப்போதய ஜப்பானிய பிரதமர்  ஷின்சோ அபேவின் கனவு. இந்நான்கு நாடுகளின் கடல்படைகள் ஒன்றிணைந்து  இந்த சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட நாடுகளை மீண்டும் கட்டியெழுப்ப  ஒரு புரிந்துணர்தலுடன் செயல்பட்டன. சுனாமி பாதிப்பிற்கு ஐக்கிய நாடுகள் சபையும் சீனாவும்  செய்த உதவிகள் போதாததால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பவே குவாட் அமைப்பு உருவானது என்ற ஒரு கருத்தும் உண்டு.

இந்த நான்கு நாடுகளின் கடல்படைகளும் தமக்குள் துளிர்த்த புரிந்துணர்தலை  ஒரு படி மேலே கொண்டு செல்லும் நோக்குடன் 2007ல் ‘மலபார் கடற்படை பயிற்சி’ (Malabar Exercise)  எனும் கூட்டுக் கடல் பயிற்சியை  வங்காள விரிகுடாவில் நடத்தின.  மீண்டும் ஒரு இயற்கை அனர்த்தம் ஏற்பட்டால் எப்படி மனிதகுலத்திற்கு உதவ முடியும் என்பதே இப்பயிற்சியின் முக்கிய நோக்கமே தவிர  அண்டை நாடுகளுக்கு ‘நாங்கதான் இந்த ஏரியா தாதா’  என்று காண்பிப்பதற்காய்  அல்ல!

இந்நான்கு நாடுகளுக்குள் பாதுகாப்பு, தொழில்நுட்ப  பரிமாற்றங்களும் சிறப்பே நடைபெற்றன.

2008ல் இக் கூட்டுறவில் ஒரு விரிசல் ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் கெவின் ரட் உருவில் வந்தது. மலபார் கடல் பயிற்சிகள் சீனாவுடனான உறவில் நெருடலை ஏற்படுத்தும் என்பதால் ஆஸ்திரேலியா இப்பயிற்சிகளில் இருந்து விலகிக்கொண்டது. ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வர்த்தக ஏற்றுமதி  கஸ்டமர் சீனா என்பதாலேயே இந்த விலகல். அந்நாட்களில் சீனா தும்மினால் ஆஸ்திரெலியாவிற்கு தடிமன் பிடித்து விடும் என்று கேலியாகச் செல்வதுண்டு.

இதனால் ‘மலபார் பயிற்சி’ மிகுதி மூன்று நாடுகளுக்கிடையிலும் சில முறை அமெரிக்க – இந்திய படைகள் மட்டும் பங்கு பெற்றும் நிகழ்வாகவும் உருவெடுத்தது.

இப்பயிற்சிகள் வங்காள விரிகுடாவிற்குள் மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் ஜப்பானிய மற்றும் பிலிப்பைன்ஸ் கடற்பரப்பிலும் நடாத்தப்பட்டது. 2017ல் ஆஸ்த்திரேலியா மீண்டும் குவாட்டில் இணைய விருப்பம் தெரிவித்திருந்தாலும் இந்தியா முகத்தை திருப்பிக் கொண்டிருந்தமையால் (சீனாவுடனான டோக்லாம் எல்லை முறுகல் காலங்கள் அவை)  2018இலேயே  அதனால் மீண்டும் இணைய முடிந்தது.

குவாட்டின் முன்னெடுப்புகளை  புரிந்து கொள்ள சீனாவின் தென் சீனக்கடல் (South China sea)  ஆக்கிரமிப்புகளையும் புரிந்து கொள்ள வேண்டும். 2013ல் சீனா இங்கு பல செயற்கை தீவுகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கி அதில் வெற்றியும் கண்டது. மேலும் தனக்குச் சொந்தமான இயற்கைத் தீவுகளையும் மண் நிரப்பி பெரிதாக்கும் திட்டங்களிலும் இறங்கியது மட்டுமல்லாமல் இங்கு இராணுவ தளபாடங்களையும் குவிக்கத் தொடங்கியது. வியட்நாமும் பிலிப்பைன்ஸும் தம் கடல் எல்லைக்குள் முன்னர் சிறிய தீவுகளை உருவாக்கியிருந்தன. ஆனால் சீனாவின் முன்னெடுப்பு இவற்றை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிடும் பரிமாணத்தில் இருந்ததால் முழு உலகின் கண்டனத்திற்கும் உள்ளானது.

இது மட்டுமல்லாமல் தென் சீனக்கடலின் 90% பரப்பளவும் தனக்கே சொந்தம் எனவும் பிரகடனப்படுத்தியது.

இங்குதான் வந்தது வினை!

ஆசியாவின் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி செல்லும் கப்பல்கள் 930 km நீளமுள்ள மலாக்கா நீரிணையூடாக பயணித்து தென் சீனக்கடலூடாகத்தான் தாய்வான், வியட்நாம், பிலிப்பைன்ஸ், ஹாங்கோங், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு  செல்ல வேண்டும். ஆசியாவின் சூயேஸ் கால்வாய் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

இதனால் தென் சீனக்கடலின் ராணுவ மயமாக்குதல் அப்பிரதேசத்தின் அமைதிக்கு பங்கம் இழைக்கும் எனும் நியாயமான  பீதி இந்நாடுகளுக்கு  எழுந்தது.

பிலிப்பைன்ஸ் ஒரு படி மேலே சென்று 2016ல் ஹேக், நெதர்லாந்தில் உள்ள Permanent Court of Arbitrationல் சீனாவின் இந்த நடவடிக்கைகள் பற்றி முறையிட்டது. தீர்ப்பு சீனாவுக்கு எதிராக வழங்கப்பட்டாலும்  சீனா அதை கண்மூடி முற்றாக புறக்கணித்தது.

குவாட் கூட்டணிக்கு சீனாவின் மேலும் சில நடவடிக்கைகளும் அரிப்பைத் தந்தன.

சீனா சிறிய திக்கற்ற நாடுகளின் தலையில் முண்டாசு சைஸ் கடன் சுமையை  ஏற்றி அவர்களின் தேசிய சொத்துக்களை  தனதாக்கிக்கொள்ளும் சதியில் வல்லது. பாகிஸ்தானின் குவாதர் துறைமுக அபிவிருத்தியும் அங்கு சீனாவின் ஆக்கிரமிப்பும் அதை ராணுவ மயமாக்கும் அபாயமும், ஆசியான் (ASEAN)  கூட்டமைப்பில் பிளவை ஏற்படுத்தும் இழுபறி என இப்பட்டியல் நீளும்.

இந்த முன்னெடுப்புகள் இந்தியாவினதும் ஜப்பானினதும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக வளர்ந்தது மட்டுமல்லாமல் ஆசியாவில் அமெரிக்காவின் செல்வாக்கையும்  மழுங்கச்செய்தது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறியதால் ஏற்பட்ட வெற்றிடத்தை சீனா நிரப்புமோ என்ற பயம் வேறு பற்றிக்கொண்டது.

சர்வதேச அரசியலில் எத்தனை நண்பர்களை சம்பாதித்து வைத்துள்ளீர்கள் என்பதும் ஒரு நாட்டின் செல்வாக்கின் அளவுகோல். சில நாடுகள் கொரோனா தடுப்பூசி வினியோகத்தை  ஒரு நட்பை சம்பாதிக்கும் ஆயுதமாகவே   பாவித்தன.  இதை முறியடிக்கும் வண்ணம் குவாட் அமைப்பு ஆசியா முழுவதும் 2022 ஆம்  ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவின் கோவிட் – 19 தடுப்பூசி உற்பத்தித் திறனை 1 பில்லியன் டோஸாக உயர்த்துவதற்கு  உறுதியளித்தது மட்டுமல்லாமல் அதை செயலிலும் காட்டியது.

இக் கூட்டத்தொடரில் சீனாவின் ‘பட்டு சாலை திட்டத்திற்கு’ (Belt and Road Initiative)  மாற்றாக  ஜப்பானின் ‘தரமான கட்டமைப்பிற்கான கூட்டு’ (Partnership for Quality Infrastructure)  மற்றும் அமெரிக்காவின்  ‘உயர்ந்த உலகை கட்டெழுப்புவோம்’  (Build Back Better World) எனும் முன்னெடுப்புகள் பற்றி பேசப்பட்டன.

அண்மைக்காலங்களில் குவாட் கூட்டமைப்பு வெளியிடும் அறிக்கைகளில்  ‘ஆசியா – பசிபிக்’ என்ற சொற்தொடரை உதிர்த்துவிட்டு ‘இந்தோ-பசிபிக்”  என்று மாற்றியதன் மூலம் தாம் ஒரு பரந்த பிரதேசத்தின் பாதுகாவலர்கள் என அது உலகிற்கு உணர்த்தியுள்ளது. ஆம், பசிபிக், இந்திய சமுத்திரங்களின் புதிய காவலர்கள்! இதில் இந்தியாவின் பங்களிப்பும் எதிர்பார்ப்பும் கூட்டமைப்பின் கூர்ப்பினால் அதிகரித்துள்ளது என்பது உண்மையே.

2004ல் காலத்தின் கட்டாயத்தில் உருவான இக்கூட்டணி இன்று புதிய பரிமாணங்களுடன் ஆசிய பிரதேசத்தின் மேன்மைக்காய் தன்னை புதுப்பித்துக்கொண்டு  சேவையாற்ற புறப்பட்டுள்ளது.

தன் ஆயுதங்களாக: விதி அடிப்படையிலான ஒழுங்கு முறை (சர்வதேச சட்டங்களுக்கு கட்டுப்பட்ட  நடத்தை), இடையூறில்லாத கடல் போக்குவரத்து, கடன்பளு அற்ற நிதிஉதவி கட்டமைப்பு (Non-Predatory Financing),  பிராந்திய சமாதானம், ஸ்திரத்தன்மை ஆகியவற்றை ஏந்தி நிற்கிறது.

புதிய நிதி உதவி கட்டமைப்பின் உதாரணமாக இலங்கைக்கான $250 மில்லியன் இந்திய -ஜப்பான் உதவியுடனான LNG முனைய திட்டத்தைச் சொல்லலாம்.

ஆசிய கடல் பரப்பில் குவாட் நாடுகள் படிப்படியாக  தம் மேலாதிக்கத்தை  நிலைநாட்டவேண்டும் என்பதும் ஒரு இலக்கு.

இதன் பிரதிபலிப்பாக அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை பாவனையில் விடுவதை ஊக்குவிக்கும் தேவை வந்துள்ளது எனலாம்.

ஆஸ்திரேலிய  முன்னய பிரதமர் குவாட் கூட்டமைப்பின் அமர்விற்கு செல்வதற்கு சில நாட்கள் முன்னால் பிரான்சுடனான $90 பில்லியன் பெறுமதியுள்ள டீசலில் இயங்கும்  நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் ஒப்பந்தத்தை முறித்து அணுசக்தியில் இயங்கும் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மீது மோகம் கொண்டதின் ரகசியம் உங்களுக்கு இப்போது ஏன் என்று புரிந்திருக்குமே?

குவாட் கூட்டமைப்பின் நோக்கமே சீன எதிர்ப்பு என் நீங்கள் எண்ணினால் அது தவறு என்றே சொல்வேன்.

இந்தியா தன் அயல்நாடுகளுடன் ஒரு சுமுகமான உறவையே  நிலைநாட்ட முனைகிறது என்பது உண்மை.  இதற்கு உதாரணமாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO – The Shanghai Cooperation Organisation)  எனும் ஒரு யுரேசிய அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு கூட்டணியைச் சொல்லலாம். சீனாவின் முன்னெடுப்பில் 1996ல் ஆரம்பிக்கப்பட்ட இவ்வமைப்பில் இந்தியா 2017ல் இணைந்து கொண்டது. அனேக சோவியத் நாடுகளும் ரஷ்யாவும், பாகிஸ்தானும் இதில் அங்கத்தினர்.  இதன் வருடாந்த அமர்வுகளில் நமது பிரதமர் பல தடவை கலந்து கொண்டிருக்கிறார்.

இதற்கு முன்னர்  அமெரிக்காவில் நடைபெற்ற 2021 குவாட் தலைவர்கள் மகாநாட்டை விட இந்த மகாநாடு வித்தியாசமாய் அமையலாம்.

யுக்ரைன் – ரஷ்ய போரின் பின்னணியில் நாடுகள் பிரிந்து கிடக்கும் நாட்கள் இவை. இந்தியா இச் சமரை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாம் என உலக மேடைகளில் கூறிவருவது தெரிந்ததே.  இந்திய – ரஷ்ய  பல சகாப்த உறவின் வெளிப்பாடு இது. ஆனால் குவாட் அமைப்பின்  மற்ற மூன்று நாடுகளும் இதற்கு எதிரான நிலைப்பாட்டில் நின்று கொண்டு யுக்ரைனுக்கு ஆயுத உதவிகளை தாராளமாக செய்து கொண்டு இருக்கின்றன அல்லது அச்செயலை ஆதரிக்கின்றன. எனவே இம்முறை மிக இக்கட்டான கோணங்களில்  பேச்சுவார்த்தைகள் அமையும் என எதிர் பார்க்கலாம்.

மேலும் அண்மையில் ஆஸ்திரேலியாவின் கொல்லைப்புற நாடான சாலமன் தீவுடன் சீனா செய்து கொண்ட பாதுகாப்பு உடன்படிக்கையும் அதன் எதிர்கால விழைவுகளும் பற்றி நிச்சயம் குவாட் அமர்வில் பேசப்படும் என நம்பலாம்.

குவாட் அமைப்பின் நான்கு நாடுகளும் ஒரு சகோதரத்துவ புரிந்துணர்தலுடன் செயல்படுவது வரவேற்கத்தக்கதே.

இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலியாவிற்கும்  இந்தியாவிற்கும் இடையே  கைச்சாத்திடப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் தீர்வையற்ற ஒரு சுமுகமான வர்த்தக பரிமாற்றத்தின் முதல் படி எனலாம்.

ஒரு நல்லிணக்க  செயலாக அமெரிக்கா 2021 குவாட் அமர்வின் முடிவில் தன் வசம் இருந்த 157 இந்திய தொல்பொருள்களை இந்தியாவிடம் ஒப்படைத்தது. 11ம் 14ம் நூற்றாண்டு வரையிலான இக்கலைப் பொக்கிஷங்கள் இன்று இந்தியாவின் அரும்பொருள்கட்சியகங்களை அலங்கரிக்கின்றன.

சர்வதேச அரசியலில் சதுரங்கக் காய்களாய் நகர்த்தப்படும் முன்னெடுப்புகள் மனித மேம்பாட்டிற்கு உதவுமேயானால் அதை வரவேற்பது எம் கடமையே!

(முற்றும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *