ஆண்டவன் தீர்ப்பு!…. ( சிறுகதை ) …. சங்கர சுப்பிரமணியன்.

![]()
அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்றிருக்க நாம் யார் எதையும் தீர்மானம் செய்ய என்று நாட்டை ஆளும் அதிகார வர்க்கம் எண்ணியது. அவன் இருப்பது உண்மை என்கிற பட்சத்தில் நாம் எவருக்கும் தண்டனை கொடுக்கக்கூடாது என்று முடிவெடுத்தனர். அந்நாட்டின் நாடாளுமன்றம் கூடி அதைச்சட்டமும் ஆக்கினார்கள்.
அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டம் வகுத்தார்கள். ஐந்தாண்டுக்குள் படிபடியாக அச்சட்டத்தை நடைமுறைப் படுத்துவதென்றும் அப்படி முடியாதபோது இன்னும் ஐந்தாண்டுகள் நீடிக்கலாம் என்றும் முடிவெடுத்தார்கள். மொத்தத்தில் பத்து ஆண்டுகளுக்குள் சட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே திட்டம்.நாட்டில் இச்சட்டத்தைப் பற்றி மக்கள் பலர் பலவாறு பேசத் தொடங்கினர். அப்போது ஆறுமுகம் நல்லசிவத்திடம்,“என்னப்பா நல்லசிவம் இதெல்லாம் சரிப்பட்டு வருமா? முன்பு ஒரு அரசன் தலைநகரை மாற்றிய கதையாக அல்லவாஇருக்கிறது.”என்றான்.“அதெல்லாம் சரிவரும். அதெல்லாம் தெரியாமலா அரசாங்கம் சட்டம் போடுவார்கள்?”“இருந்தாலும் அதற்காக சட்டக் கல்லாரிகளையும் நீதிமன்றங்களையும் மூடுவது நன்றாகவா இருக்கிறது?” என்றான் நல்லசிவம்.“அதற்காக வழக்கறிஞர்களை உருவாக்கிக் கொண்டும் நீதிமன்றங்களை மூடாமலும் இருந்தால் சட்டம் எப்படி நிறைவேறும்?” பதிலுக்கு நல்லசிவத்தைக் கேட்டான் ஆறுமுகம். இருவரது வாக்குவாதத்திலும் நியாயம் இருக்கிறது. தப்பு செய்தவனுக்கு இறைவன் தண்டனை கொடுப்பான் என்று சொல்லிக்கொண்டே அவன்மீது நம்பிக்கை இல்லாமல் நாமே நீதிமன்றங்களின் மூலம் தண்டனை வழங்கினால் எப்படி சரியாகும் என்று சிலர் கேட்டனர். இன்னும் சிலர் ஒரு குற்றத்துக்கு எத்தனை தண்டனை? இறைவன் கொடுக்கிற தண்டனை பற்றாது என்று நீதிமன்றம் கொடுக்கும் தண்டனை வேறா? என்றும் நியாயமான கேள்விகளைக் கேட்டனர்.அவர்கள் கேட்பதிலும் உண்மை இருக்கிறதல்லவா? போன பிறவியில் என்ன பாவம் செய்தேனோ இப்பிறவியில் இப்படி துன்பங்களை அனுபவிக்கிறேன் என்கிறார்கள் அல்லவா? அவர்கள் சொல்வதுபோல் நாம் செய்யும் தவறுகளை கணக்கு எடுக்கவும் தண்டனைகளை நிறைவேற்றவும் இறைவனின் ஆட்கள் இருப்பதோடு தண்டனை நிறைவேற்றப்படும் இடம் முதற்கொண்டு விரிவாக நூல்களில்சொல்லப்பட்டுள்ளதல்லவா? அப்படி இருக்க நாம் நீதி மன்றங்களின் தீர்ப்பின்மூலம் இன்னொரு தண்டனை வழங்கினால் ஒரே தவறுக்கு இரண்டு தண்டனையாகாதா?சட்டக் கல்லூரிகளெல்லாம் மூடப்பட்டு நீதிமன்றங்கள் எல்லாம் மூடப்பட்டன. இதனால் கொஞ்சகாலம் நன்றாக இருந்த சட்டம் ஒழுங்கெல்லாம் படிபடிப்படியாக கெட்டது. இறைவன் இருக்கிறான் அவன் தண்டனை கொடுக்கும்போது நாம் வேறு எதற்காக தண்டனை கொடுக்கவேண்டும் என்பதால்தான் நீதிமன்றங்கள் எல்லாம் மூடப்பட்டன. ஆனால் குற்றங்கள் அதிகரித்தன. அப்போது குற்றங்கள் அதிகரித்து விட்டனவே என்பதால் நாட்டுமக்களின் மனதில் எப்போதோ கேட்ட“இறைவன் இருக்கின்றானா?மனிதன் கேட்கிறான், அவன் இருந்தால் இந்த உலகத்திலே எங்கே வாழ்கிறான்?அப்பாடல்தான் நினைவுக்கு வந்தது.
அதன்பின் இறைவன் தண்டனை கொடுப்பான் என்பதெல்லாம் ஒரு நம்மிக்கைதான். அந்த நம்பிக்கையை வைத்துக்கொண்டு சட்ட ஒழுங்கை பாதுகாப்பதை கைவிட்டுவிடக் கூடாது என்று உணர்ந்தனர். முடிவில் நான் முதலில் சொன்ன சரித்திரத்தில் இடம்பெற்ற அந்த அரசன் தலைநகரை மாற்றியதுபோல் சட்டங்களும் மாற்றப்பட்டு பழைய சட்டங்கள் வந்தன. சட்டக்கல்லூரிகள் திறக்கப்பட்டு நீதிமன்றங்கள் இயங்க ஆரம்பித்தன. போனபிறவியில் செய்த பாவம்தான் இந்த பிறவியில் அனுபவிக்கிறேன் என்று சொல்பவர்களும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.-சங்கர சுப்பிரமணியன்.
![]()