Featureகட்டுரைகள்

இலங்கை அரசியலிலும் இலக்கியத்திலும் பௌத்த பிக்குகளின் வகிபாகம்!…. 2 … முருகபூபதி.

 

வளர்த்த கடாக்கள் மார்பில் பாய்ந்த கதை !

அங்கம் 02

முருகபூபதி.

பண்டாரநாயக்கா வளர்த்துவிட்ட காளைகள் பற்றி இனிப்பார்ப்போம். வளர்த்த கடாக்கள் மார்பில் பாய்ந்த கதையை கேட்போம். இங்கும் பெளத்த பிக்குகள்தான் முன்னணியில் நின்றார்கள்.

பண்டாரநாயக்கா, அன்று பதவிக்கு வருவதற்காக ஐம்பெரும் சக்திகள் ( பஞ்மா பலவேகய ) என்ற கோஷத்தை எழுப்பி, அதில் இணைத்த சக்திகள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், வைத்தியர்கள். இவர்கள் தேசத்திற்கு தேவைப்பட்டவர்கள். அத்துடன் தேசத்தின் பொருளாதாரத்திற்கும் உதவக்கூடியவர்கள்.

சரி. ஆனால், எதற்காக எந்தவகையிலும் தேசிய பொருளாதாரத்திற்கு ஆக்கமும் ஊக்கமும் வழங்காத, எந்தவொரு உழைப்பிலும் ஈடுபடாமல், மக்களிடம் தானம்பெற்று உயிர் வாழ்ந்த பௌத்த பிக்குகளையும் இணைத்துக்கொண்டு அன்றைய தேர்தலை அவர் எதிர்கொண்டார்..? இதுபற்றி அன்றும் எவரும் கேட்கவில்லை. இன்றும் கேட்பதில்லை. !

பண்டாரநாயக்கா பிறப்பால் கத்தோலிக்கர். இங்கிலாந்தில் சட்டம் படித்து பரீஸ்டரானவர். மேலைத்தேய அரசியலையும் கற்றறிந்தவர். ஐக்கிய தேசியக்கட்சியில் அவர் இருந்தபோது, தனக்கு கிடைக்கவிருந்த பிரதமர் பதவி, டி. எஸ். சேனநாயக்காவின் திடீர் மறைவையடுத்து சேர். ஜோன். கொத்தலாவலைக்கும், அவரது புதல்வன் டட்லி சேனநாயக்காவுக்கும் செல்கிறதே…!? என்ற கோபம்தானே, அவரை ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்ற பெரிய இயக்கத்தை மேற்குறிப்பிட்ட ஐம்பெரும் சக்திகளின் துணையுடன் உருவாக்கியது.

அக்கட்சி இன்று எந்தக்கதியிலிருக்கிறது என்பதை அவரது புதல்வி சந்திரிக்கா குமாரணதுங்கவிற்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நடக்கும் நிழல் யுத்தத்திலிருந்தும், மகிந்த ராஜபக்ஷவுக்கும் சந்திரிக்கா குமாரணதுங்கவுக்கும் இடையில் பல காலமாக தொடரும் வெறுப்பு அரசியலிலிருந்தும் அவதானிக்க முடிகிறது.

மீண்டும் சிங்கள பௌத்த தேசியத்தினை முன்னிறுத்தி அரசியலுக்கு வந்த தேரர்கள் விடயத்திற்கு வருவோம்.

இலங்கைத் தலைநகரத்தை ஊடறுத்துச்செல்லும் களனி கங்கையின் பின்னணியில் அரசியல் மாற்றங்கள், அதிர்வுகள் நிகழ்ந்துள்ளன.

கௌதம புத்தர் இலங்கை வந்த சமயத்தில் அவர் நீராடிய களனிகங்கையின் அருகில்தான் களனி ரஜமகா விஹாரை அமைக்கப்பட்டது. இங்கும் அரசமரம் இருக்கிறது. இவ்விடத்தில்தான் இந்தியாவில் சுட்டுக்கொல்லப்பட்டமகாத்மா காந்தியின் அஸ்தி 18-02-1948 ஆம் திகதி கலசங்களில் எடுத்துவரப்பட்டு களனி கங்கையில் கரைக்கப்பட்டது.

இவ்வாறு புனிதம் பெற்றிருந்த களனி கங்கையில்தான் 1971 ஆம் ஆண்டும் அதன்பின்னர் 1989 ஆம் ஆண்டும் சிங்கள இளைஞர்கள், யுவதிகளின் பிரதேங்களும் மிதந்தன.

அன்பையும் அஹிம்சையையும் போதித்த இரண்டு புனிதர்கள் சம்பந்தப்பட்டுள்ள இந்த களனியிலிருந்துதான் அரசியல் சதிக்கான திட்டங்கள் தீட்டப்பட்டன.

இங்கிருந்துதான், இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வாக உருவாக்கப்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து, ஜே.ஆர். ஜெயவர்தனா கண்டி தலதா மாளிகை நோக்கி பாத யாத்திரையை ஆரம்பித்தார்.

இந்தக்களனி ரஜமகா விஹாரையின் பிரதம குரு மாபிட்டி கம புத்தரகித்த தேரோ ( 1921-1967) தலைமையில் தல்துவே சோமராம தேரோ (1915-1962) திருமதி விமலா விஜயவர்தனா என்ற சுகாதார நலத்துறை அமைச்சர் உள்ளிட்ட எட்டுப்பேர் அன்றைய பிரதமர் பண்டாரநாயக்காவை கொலைசெய்ய சதித்திட்டம் உருவாக்கி செயல்படுத்தினர்.

களனி ரஜமஹாவிகாரையின் நலன்கள் முன்னேற்றங்களில் பெரும் பங்களிப்புச்செய்தவர்கள்தான் விமலா விஜயவர்தனாவின் தாயாரும் சகோதரர்களும். அதனால் விமலாவுக்கும்

விஹாரையின் பிரதம குருவுடன் அந்நியோன்னிய நெருக்கமும் நீடித்தது.

அவர்களின் திட்டத்தின் பிரகாரம் பண்டாரநாயக்கா, 1959 செப்டெம்பர் 25 ஆம் திகதியன்று அவரது ரோஸ்மீட் பிளேஸ் வாசஸ்தலத்தில் சுடப்பட்டு மறுநாள் இறந்தார்.

25 ஆம் திகதி அவர் ஐ.நா. சபைக்கூட்டத்தொடருக்கு பயணமாகவிருந்த தருணத்தில்தான் இந்தத் துன்பியல் சம்பவம் நடந்தது.

உலகநாடுகளில் அமைதியையும் சமாதானத்தையும் உருவாக்குவதற்காகவும் அமைக்கப்பட்டதுதான் ஐக்கியநாடுகள் சபை.

அதற்குப்புறப்படவிருந்த வேளையில்- அமைதியையும் சமாதானத்தையும் அன்பு மார்க்கத்தையும் போதிக்க அவதரித்த புத்தரின் புனித பாதம் பதிந்த, அவர் நீராடிய களனி கங்கைக்கரையிலிருந்து, அண்ணல் காந்தியின் புனித அஸ்தி கரைக்கப்பட்ட இடத்திலிருந்து தொடங்கிய அரசியல் சதி இன்றும் வேறு வேறு ரூபங்களில் தொடருகின்றது.

வரலாற்றில்தான் எத்தனை முரண் நகைகள் நிரம்பியிருக்கின்றன!

விமலா விஜயவர்தனா அன்றைய தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு, யூ. என்.பி. சார்பில் போட்டியிட்ட ஜே.ஆர். ஜெயவர்தனாவை ஆறாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வென்று நாடாளுமன்றம் சென்றதும் இந்த களனி தொகுதியில்தான்.

பண்டாரநாயக்கா கொலைச்சம்பவத்துடன் அரசியல் அரங்கிலிருந்து விமலா விஜயவர்தனா ஒதுங்கியமையால், அதன் பின்னர் நடந்த தேர்தலில் இதே களனி தொகுதியிலிருந்துதான் ஜே.ஆர். வெற்றி பெற்றார்.

இதே களனி தொகுதியில் இருந்துதான் பின்னாட்களில் சிறில்மத்தியூ என்ற சிங்கள கடும்போக்காளரும் வெற்றிபெற்றார்.

இவர் 1977 இலும் அதன் பின்னர் நடந்த தேர்தலிலும் யூ.என். பி. சார்பில் வெற்றிபெற்று ஜே.ஆரின் அமைச்சரவையிலும் அங்கம் வகித்தார். இவரால் ஜே.ஆர். பல அரசியல் தொல்லைகளுக்கு

ஆளாகியிருந்தார். இந்தியாவின் நெருக்குதலினால், சிறில் மத்தியூவின் அமைச்சர் பதவியையும் ஜே.ஆர். பறித்தார்.

1981 யாழ். பொது நூலக எரிப்பு, 1983 இனக்கலவரம் ஆகியவற்றின் சூத்திரதாரிகளில் ஒருவர்தான் இந்த சிறில் மத்தியூ!

களனியும் களனி கங்கையும் இலங்கை அரசியலில் ஏற்படுத்தியிருக்கும் அதிர்வுகளை வரலாற்று ஏடுகள் பதிவுசெய்துள்ளன.

பண்டாரநாயக்கா தேசிய உணர்வுடன் தேசிய பொருளாதாரக் கொள்கைச்சிந்தனையுடன் வாழ்ந்தவர். வெள்ளைத் தேசிய உடை அணிந்தவர். தந்தை செல்வநாயகத்துடன் அவர் செய்துகொண்ட ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்குமானால் இலங்கையில் இத்தனை அழிவுகள் தோன்றியிருக்காது.

பண்டாரநாயக்காவை சுற்றியிருந்தவர்களினால் சூழ்நிலையின் கைதியாகி இறுதியில் உயிரையும் விட்டார்.

அவரது சிந்தனையின் வழியில் வந்த அவரது துணைவியார் ஶ்ரீமாவோ, அவரைப்போன்று அதிகம் படித்து பட்டங்கள் பெற்றவர் அல்ல. ரோஸ்மீட் பிளேஸ் வாசஸ்தலத்தின் சமையலறையிலிருந்து கணவருக்குப்பின்னர் நேரடியாக அரசியலுக்கு வந்து உலகின் முதல் பெண்பிரதமர் என்ற பெருமையும் பெற்றதுடன் சிறிது காலம் அணிசேரா நாடுகளின் தலைவியாகவும் விளங்கினார். இவரது காலத்தில்தான், 1972 இல் இலங்கை பிரித்தானியாவின் ஆளுகையிலிருந்து முற்றாக விடுபட்டு, ஜனநாயக சோசலிஸ குடியரசாக மாறியது.

அவர் முதல் முதலில் நாடாளுமன்றம் செல்லும் வேளையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்தறிச்சேலையையே அணிந்து செல்ல விரும்பினார். அதன் வடிவத்தை வரைந்துகொடுத்தவர் ஒரு யாழ்ப்பாணத் தமிழர்தான் என்று சொன்னால் நம்பமாட்டீர்கள்! அவர்தான் யோகர்சுவாமிகளின் பக்தர் ஓவியர் கே. ரி. செல்வத்துரை.

இந்த ஜனநாயக சோஷலிஸ குடியரசு அரசியல் அமைப்பு சட்ட மேதை கொல்வின் ஆர். டீ. சில்வாவினால் உருவாக்கப்பட்டது. இந்த அரசியல் அமைப்பும், 1977 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஜே. ஆர். ஜெயவர்தனா உருவாக்கிய நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் பதவிக்குரிய சட்டமும், விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையும்தான் ( இத்தனை கட்சிகள் தோன்றுவதற்கும் – பெளத்த பிக்குகள் நியமன எம். பி. க்களாக நாடாளுமன்றம்

பிரவேசிப்பதற்கும் ) இத்தனை குளறுபடிகளுக்கும் அடிப்படைக்காரணம்.

கௌதம புத்தர், ஒரு இந்து மன்னன். எனினும் துறவறம் பூண்டு, தனக்கு நாடும் வேண்டாம் , அரசுரிமையும் , அதிகாரங்களும் வேண்டாம் அன்பு மார்க்கம் ஊடாகவே மக்களை நல்வழிப்படுத்த முடியும் என்று வனம் சென்று நீண்ட தவமிருந்து பரிசுத்த நிர்வாண நிலைக்கெய்தி அந்த மார்க்கத்தை போதித்தார்.

நாடுபிடிக்கும் பேராசைகொண்டிருந்த அசோக சக்கரவர்த்தியும், ஒரு பௌத்த குருவின் போதனையால் மனம்மாறி, அன்றிலிருந்து அன்புமார்க்கத்தை பின்பற்றினான்.

அவனது புதல்வி சங்கமித்தை , இலங்கைக்கு நல்லெண்ணத் தூதுவராக அரசமரச்செடியுடன் வந்து அநுராதபுரத்தில் அதனை நட்டுவிட்டுச்சென்றார். கௌதம புத்தர் அத்தகைய ஒரு அரசமரத்தின் நிழலிலில் அமர்ந்தே பரிநிர்வாணம் எய்தினார் என்பதன் குறியீடே அந்த அரசமரம்.

ஆனால், இலங்கையில் தமிழ்ப்பிரதேசங்களில் பெளத்த சிங்கள பேரினவாதம் நில ஆக்கிரமிப்பிற்கு அரசமரத்தையும் புத்தர் சிலைகளையும்தான் பயன்படுத்திவருகிறது.

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டபோது பேராசிரியர் எம். ஏ. நுஃமான் எழுதிய புத்தரின் படுகொலை – என்ற கவிதைதான் நினைவுக்கு வருகிறது.

நேற்று என் கனவில்

புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.

சிவில் உடை அணிந்த

அரச காவலர் அவரைக் கொன்றனர்.

யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே

அவரது சடலம் குருதியில் கிடந்தது.

இரவில் இருளில்

அமைச்சர்கள் வந்தனர்.

‘எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை

பின் ஏன் கொன்றீர்?’

என்று சினந்தனர்.

‘இல்லை ஐயா,

தவறுகள் எதுவும் நிகழவே இல்லை

இவரைச் சுடாமல்

ஓர் ஈயினைக் கூடச்

சுடமுடியாது போயிற்று எம்மால்

ஆகையினால்…

என்றனர் அவர்கள்.

‘சரி சரி

உடனே மறையுங்கள் பிணத்தை‘

என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்.

சிவில் உடையாளர்

பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர்.

தொண்ணூறாயிரம் புத்தகங்களினால்

புத்தரின் மேனியை மூடி மறைத்தனர்

சிகாலோவாத சூத்திரத்தினைக்

கொழுத்தி எரித்தனர்.ச்

புத்தரின் சடலம் அஸ்தியானது

தம்ம பதமும்தான் சாம்பலானது.

( தொடரும் )

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *