புண் மீது புனுகு தடவும் காங்கிரஸ்!
ஒரு மனிதனை, ஒரு குடும்பத்தை, ஒரு இனத்தை அழித்தொழித்து விட்டு, அதன் பின் அந்த மனிதனுக்காக, குடும்பத்திற்காக, இனத்திற்காக கண்ணீர் விட்டு அழுவது போல பாசாங்கு செய்வதை, ‘முதலைக் கண்ணீர்’ என்பர்.
முன்னர் இலங்கை தமிழர்களை, சிங்கள ராணுவம் அழித்தொழித்ததை வேடிக்கை பார்த்த தி.மு.க., தற்போது அவர்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறது.அதுபோல, 1990ல் ஜம்மு – காஷ்மீரில், அங்குள்ள பூர்வ குடிமக்களான, ‘காஷ்மீர் பண்டிட்’கள் ஆயிரக்கணக்கானவர்கள் மீது, மத பழமைவாதிகள் வன்முறை வெறியாட்டம் நடத்தினர்; அதில், ஏராளமான பண்டிட்கள் கொல்லப்பட்டனர்.
இதில், உயிர் பிழைத்தவர்கள், ஜம்மு, சண்டிகர் மற்றும் புதுடில்லியில், அகதிகளாக முகாம்களிலும், கையறு நிலையில் பிளாட்பாரங்களிலும் குடிபெயர்ந்த போது, வேடிக்கை பார்த்தது காங்கிரஸ் கட்சி. அதே கட்சி, தற்போது, ‘இடம் பெயர்ந்த காஷ்மீர் பண்டிட்களுக்கு, அனைத்து மாநிலங்களிலும், ஒரே அளவிலான நிதியுதவி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்’ என்று ராஜ்யசபாவில் கோரிக்கை விடுத்துள்ளது.
அதாவது, காங்., கட்சியைச் சேர்ந்த எம்.பி.,யான தீபேந்தர் சிங் ஹூடா வாயிலாக, இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. காஷ்மீரில், பண்டிட்கள் கொத்து கொத்தாக, குடும்பம் குடும்பமாக கொலை செய்யப்பட்ட போது, பண்டிட் குடும்ப பெண்கள் கற்பழிக்கப்பட்ட போது, மதமாற்றம் செய்யப்பட்ட போது, விரட்டியடிக்கப்பட்ட போது, அந்த நேரத்தில், மாநிலமாக இருந்த ஜம்மு – காஷ்மீரை ஆட்சி செய்தது, காங்., ஆதரவோடு பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சி தான். அத்துடன், மத்தியில் பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்தது.
கலவரத்தை அடக்கச் சொல்லி, பிரதமர் வி.பி.சிங், ராணுவத்திற்கு கட்டளையிட்டிருந்தால், ஒன்று அல்லது இரண்டு நாட்களில், காஷ்மீரில் மத பழமைவாதிகளின் வெறியாட்டம் ஒடுக்கப்பட்டுஇருக்கும். பூர்வகுடி பண்டிட்களும் புலம் பெயர்ந்திருக்க மாட்டார்கள். ஜம்மு- – காஷ்மீர் மாநில அரசும் சரி… வி.பி.சிங்கின் மத்திய அரசும் சரி… கலவரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனவே தவிர, அதை அடக்க ஒரு சிறு துரும்பை கூட கிள்ளி போடவில்லை.
இப்போது கூட, காஷ்மீர் பண்டிட்கள் இழந்த நிலங்களையும், வீடுகளையும், சொத்துக்களையும் மீட்டெடுக்க, ஆவன செய்ய வேண்டும் என்று கோராமல், உதவித் தொகை வழங்க வேண்டும் என்று தான் கோரிக்கை விடுக்கிறது காங்கிரஸ் கட்சி. இது தான் முதலைக் கண்ணீர் வடிப்பது என்பதாகும். உடம்பில் ஒரு இடத்தில் புண்ணோ, வெட்டு காயமோ உண்டானால், அந்த புண்ணுக்கும், காயத்துக்கும் மருந்து தடவி குணப்படுத்துவது தான் நியாயம்.
ஆனால், அந்த புண் மீது யாராவது புனுகு தடவுவரா?மத பழமைவாதிகளின் கொலை வெறியால் பாதிக்கப்பட்டு, நடுத்தெருவில் ஆதரவின்றி தவிக்கும், காஷ்மீர் பண்டிட்களின் மனக்காயங்களின் மீது, காங்., கட்சி புனுகைத் தான் பூசிக் கொண்டிருக்கிறது. lll
![]()