புடின் கிட்ட பேசி போரை நிறுத்தச் சொல்லும்மா”.. குவியும் கோரிக்கை.. யார் இந்த அலினா?

சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேற்றப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் அலினா கபயேவா. இதையடுத்து அவரது தோழிகள் பலரும், உடனே அங்கிருந்து வெளியேறி புடினிடம் பேசி உக்ரைன் போரை நிறுத்த ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுக்க ஆரம்பித்துள்ளனர்.

யார் இந்த அலினா கபயேவா?.

38 வயதேயாகும் அலினி, ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினின் காதலி ஆவார். இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். முன்னாள் ரஷ்ய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஆவார். ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் வென்றவர். புடினின் ரகசியக் காதலியாக வாழ்ந்து வருபவர்.

தற்போது தனது 4 குழந்தைகளுடன் சுவிட்சர்லாந்தில் தங்கியிருக்கிறார். உக்ரைன் போரில் தனது ஆதரவு யாருக்கும் கிடையாது என்று சுவிட்சர்லாந்து ஏற்கனவே அறிவித்து ஒதுங்கி விட்டது. ஆனால் அலினாவை தனது நாட்டில் தங்கியிருக்க அனுமதித்ததன் மூலம் தனது நடுநிலையிலிருந்து சுவிட்சர்லாந்து தவறி விட்டதாக குற்றச்சாட்டுக்கள் கிளம்பியுள்ளன.

 

உக்ரைன் நாட்டு ஆதரவாளர்கள் சேஞ்ச் இணையதளம் மூலமாக சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து அலினாவை உடனடியாக வெளியேற்றுமாறு அந்த நாட்டு அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் அலினாவை வெளியேற்ற சுவிட்சர்லாந்து அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

இதற்கிடையே, அலினாவின் தோழிகள் பலரும், அவர் உடனடியாக சுவிட்சர்லாந்தை விட்டு கிளம்பி ரஷ்யாவுக்கு போக வேண்டும் என்று கோரிக்கை விடுக்க ஆரம்பித்துள்ளனர். புடினை சந்தித்து உக்ரைன் போரை நிறுத்துமாறு அலினா வலியுறுத்த வேண்டும் என்றும், அவர் நினைத்தால் நிச்சயம் புடினை சமரசப்படுத்த முடியும் என்றும் கோரிக்கை விடுக்க ஆரம்பித்துள்ளனர்.

2006ம் ஆண்டு முதல் புடினின் காதலியாக வாழ்ந்து வருகிறார் அலினா. புடினை விட 30 வயது குறைந்தவர் ஆவார். ரஷ்ய அரசியலிலும் அலினா ஈடுபட்டுள்ளார். மீடியா மேனேஜராகவும் வலம் வருகிறார். ஒலிம்பிக் போட்டிகளில் 2 பதக்கங்களையும், 14 உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களையும், 21 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பதக்கங்களையும் வென்றவர் அலினா.

2007 முதல் 2014ம் ஆண்டு வரை ரஷ்யாவின் டூமாவில் (நாடாளுமன்றம்) துணைத் தலைவராக இருந்துள்ளார். 2013ம் ஆண்டு தேசிய ஊடகங்கள் குழுவின் இயக்குநராக பதவி வகித்துள்ளார். ஒரு ஜப்பான் படத்திலும் இவர் நடித்துள்ளார். பாடவும் செய்வார். பல வேலைகளிலும் ஈடுபட்டு தன்னை பிரபலமாக வைத்துக் கொண்டவர் அலினா.

அலினாவுடன் காதலில் இருந்தாலும் கூட அவரை மணக்கவில்லை புடின். மாறாக, லூட்மிலாவை திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதி 2014ம் ஆண்டு பிரிந்து விட்டது. அலினாவுக்கு 2009ம் ஆண்டு முதல் குழந்தை பிறந்தது. பின்னர் 2015ம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் வைத்து மகள் பிறந்தார். அதன் பின்னர் 2019ம் ஆண்டு மாஸ்கோவில் வைத்து இரட்டைக் குழந்தை பிறந்தது. 2002ம் ஆண்டு வரை முஸ்லீமாக இருந்தவர் அலினா. 2003ம் ஆண்டு அவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி விட்டார்.

கடந்த நான்கு ஆண்டு காலமாக அலினா குறித்த எந்தத் தகவலும் வெளியாகாமல் இருந்து வந்தது. தற்போது உக்ரைனில் வெடித்துள்ள போரைத் தொடர்ந்து மீண்டும் அலினா குறித்த பேச்சுக்கள் வெளிக் கிளம்பியுள்ளன. அலினாவிடம் காதல் மொழி பேசும் புடின்.. அவரிடமிருந்து போரை நிறுத்துமாறு கோரிக்கை வந்தால் என்ன மொழி பேசுவார் என்பது மில்லியன் டாலர் கேள்வி.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *