கட்டுரைகள்

வாக்குமூலம்!….. 07 ….. தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்.

தமிழ் ஊடகங்களால் தமிழ்த் தேசியக் கட்சிகள் எனக் குறிசுடப்பட்டுள்ள சில கட்சிகள் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு முகவரியிடப்பட்ட கடிதத்தை – ஆவணத்தை அவரிடம் சேர்ப்பிக்கவென இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயிடம் 18.01.2022 அன்று கையளித்த விடயத்தை, அவ்வாறு குறிசுடப்பட்டுள்ள இன்னொரு தமிழ்த் தேசியக் கட்சி(?) யான-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்) எதிர்த்து அந்த முயற்சி இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை ஒற்றையாட்சிக்குள் முடக்கும் சதித்திட்டம் என வர்ணித்துக் குரலெழுப்பியுள்ளது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் தந்தையான குமார் பொன்னம்பலம் அவர்களின் தந்தையான ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்களால் 1944இல் ஆரம்பிக்கப்பட்ட கட்சிதான் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ். அதிலிருந்து பிரிந்துவந்து எஸ் ஜே வி செல்வநாயகம் இலங்கைத் தமிழரசுக் கட்சியை 1949இல் உருவாக்கி இனப்பிரச்சினைக்கான தீர்வாக ‘சமஷ்டி’க் கோரிக்கையை முன்வைத்த போது அதனை எதிர்த்த கட்சிதான் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ். அத்தகையதொரு கட்சிக்கு ‘தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி’ என்று மறு பெயர் சூட்டிக் கொண்டுதான் இப்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ‘இரண்டு தேசம்; ஒரு நாடு’ என முழங்கித் திரிகிறார்.

தமிழீழத் தனி நாட்டையோ அல்லது வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப்பகிர்வு அலகையோ விரும்பாத எந்தத் தமிழனும் இருக்கமாட்டான். ஆனால் இன்றைய களநிலையில் உடனடியாக இவை சாத்தியமா?

இலக்கை அடைவதற்கான மூலோபாயங்களை வகுத்து கட்டங்கட்டமாக முன்னேறிச் சாத்தியமாக்க வேண்டியதொரு விடயத்தை வெறுமனே கோஷங்களை எழுப்பியும் கொடிகளைப் பிடித்தும் ஊர்வலங்கள் போயும்- பேரணி நடாத்தியும்- துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தும் அடைய முடியுமா?

‘பண்டா- செல்வா’ ஒப்பந்தமும்(1957),’டட்லி- செல்வா’ ஒப்பந்தமும் (1965) தமிழரசுக் கட்சி ‘சமஸ்டி’ கேட்ட காலத்தில் ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் தீர்வைத் தேடிய அந்தக் காலகட்டத்து முயற்சிகள்தான் அவை. முளையிலேயே அவை கிள்ளியெறியப்பட்டவை என்பது வரலாறு.

அதுபோலவே 1987 இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் விளைவாக பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தம் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் தீர்வைத் தேடிய அக்காலகட்டத்தின் முயற்சிதான். ஆனால் ஒரு வித்தியாசம் பண்டா – செல்வா ஒப்பந்தம் மற்றும் டட்லி – செல்வா ஒப்பந்தம் போலல்லாது பாராளுமன்றத்தில் அரசியலமைப்பின் ஒரு அங்கமாகச் சட்டமாக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வரும் ஒரு விடயம்தான் பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தம். அது கடந்த முப்பத்தினான்கு வருடங்களாக முறையாகவும் முழுமையாகவும் அமுல் செய்யப்படவில்லையென்பது வேறுவிடயம். ஆனால் அது இலங்கை அரசியலமைப்பின் ஓர் அங்கமாக இப்போதும் நடைமுறையிலுள்ளது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கூற்றுப்படி அதனை நிராகரிப்பதன் மூலம்- தூக்கியெறிவதன் மூலம் இனப்பிரச்சனைக்கான தீர்வு விடயத்தில் இந்தியாவை ஓரம் கட்டிவிட்டுத் தனித்து நின்று எதனைச் சாதிக்கப் போகிறோம்.

‘இரண்டு தேசம்; ஒரு நாடு’ கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. அதனை அவர் எவ்வாறு அடையப் போகிறார்-சாத்தியமாக்கப் போகிறார்? பாராளுமன்ற அரசியலால்- தேர்தல் அரசியலால் – கடைந்தெடுத்த கட்சி அரசியலால் அதனைச் சாதிக்க முடியுமென அவர் எண்ணுகிறாரா? துண்டுப் பிரசுரம் அடித்து விநியோகிப்பதன் மூலம் அவர் சாதிக்க நினைப்பது என்ன?

‘இர%E

Loading