Featureகட்டுரைகள்

எழுத்தும் வாழ்க்கையும்!…. அங்கம் 63 …. முருகபூபதி.

காகிதக்கப்பலும், கடல் மார்க்க கப்பலும் !

சபாஷ், சரியான போட்டி !!

முருகபூபதி.

 

நவராத்திரி காலத்தில் இலங்கையில் அனைத்து தமிழ்ப்பாடசாலைகள், கல்லூரிகளிலும் அரச அலுவலகங்கள் மற்றும் தனியார் துறைகளிலும் கலைமகள் விழாக்களுக்கும் ஆயுத பூசைகளுக்கும் குறைவிருக்காது.

விஜயதசமியன்று குழந்தைகளுக்கு ஏடு துவக்கி வித்தியாரம்பம் செய்வதும் இசை, நடன பயிற்சி வகுப்புகளுக்கு மாணவர்களை புதிதாக இணைத்துக்கொள்வதும் இந்நாளில்தான் என்பது அனைவரும் அறிந்ததே.

எங்கள் வீரகேசரியில் ஒரு தடவை நடந்த கலைமகள் விழா பற்றி ஏற்கனவே இந்தத் தொடரில் ஒரு அங்கத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

நவராத்திரி நிறைவுற்று பத்தாம் நாளில் ஆயுதபூசையன்று வீரகேசரி அச்சுக்கோப்பாளர் பிரிவில் ஒரு சிறிய நிகழ்ச்சி நடக்கும்.

அதனை அந்தப்பிரிவுக்கு பொறுப்பான திரு. செல்வரத்தினம் முன்னின்று நடத்துவார். அங்கிருக்கும் அனைத்து இலாகாவிலிருந்தும் ஊழியர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வு.

நவராத்திரி காலத்தில் வீரகேசரியில் தினமும் சமயம் சார்ந்த கட்டுரைகள் வெளியாகும். அதற்காகவே வெளியிலிருந்து சிலர் எழுதுவார்கள். இந்த நடைமுறை இக்காலத்திலும் நீடிக்கிறது.

மீண்டும் மீண்டும் சொன்னதையே அந்த ஆக்கங்களில் நிரப்பியிருப்பார்கள். பாடசாலைகளில் கல்வியா – செல்வமா – வீரமா..? தலைப்புகளில் பட்டிமன்றங்களும் நடக்கும்.

எங்கள் நீர்கொழும்பூரில் இயங்கிவரும் இந்து இளைஞர் மன்றத்திலும் நவராத்திரி காலத்தில் தினமும் பூசையும் பிரார்த்தனையும் நடைபெறும். மன்றத்திற்கு முன்பாகவிருக்கும் ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் பிரதம குரு அல்லது அவரது புதல்வன் வந்து பூசைகளை நடத்துவார். மன்றம் அதற்கான தட்சணையை வழங்கும்.

நான் வீரகேசரியில் பணியாற்றியபோது ஒரு தடவை எங்கள் மன்றத்தில் கலைமகள் விழா வந்தது. அச்சமயம் நான் அங்கு

செயலாளராகவிருந்தமையால், விழா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் பணி என்னைச்சார்ந்திருந்தது.

ஏற்கனவே எமது மன்றத்திற்கு கொழும்பிலிருந்து பல பேச்சாளர்களை அழைத்து வந்திருக்கின்றேன். அவர்களில் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் இருப்பர்.

கொழும்பு சட்டக்கல்லூரி தமிழ் மன்றத்திலும் சிறந்த பேச்சாளர்கள் இருந்தனர்.

1972 ஆம் ஆண்டு முதல் சட்டக்கல்லூரி தமிழ் மன்றத்தின் ஒரு சில நிகழ்ச்சிகளுக்கும் பார்வையாளனாகச்சென்று செய்திகள் எழுதியிருக்கின்றேன்.

பின்னாளில் அரசியலில் பிரகாசித்த குமாரசாமி விநோதன், அஷ்ரப், ஶ்ரீகாந்தா, மற்றும் கனக. மனோகரன் ஆகியோரின் உரைகளையும் எழுதியிருக்கின்றேன்.

சட்டம் படித்துவிட்டு வீரகேசரி ஆசிரிய பீடத்திற்கு வந்து இணைந்த நண்பர்கள் தம்பையா, ஶ்ரீகாந்தலிங்கம், பாலச்சந்திரன் ஆகியோரின் தொடர்புகளினால், ஒரு தடவை சட்டக் கல்லூரிக்குச்சென்று ஒரு இளைஞரை நீர்கொழும்பு வந்து பேசுமாறு அழைத்தேன்.

அந்தத்தடவை நாம் அங்கே நடத்திய கலைமகள் விழாவில் பாரதி தமிழ் உணர்வுக்கவிஞனா..? தேசிய உணர்வுக்கவிஞனா..? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்துவதற்காகத்தான் பேச்சாளர்களை தெரிவுசெய்வதற்கு சட்டக் கல்லூரிக்குச்சென்றேன்.

அங்கு நான் சந்தித்த இளைஞர், தான் பாரதி தமிழுணர்வு கவிஞர் என வாதிடும் தரப்புக்கு தலைமை ஏற்பதாக முன்வந்தார். அந்த இளைஞர்தான், தற்போது மிகவும் பிரபல்யமாக விளங்கும் நாடு கடந்த தமிழ் ஈழத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன்.

பாரதி தேசிய உணர்வுக்கவிஞன் என்ற தலைப்பில் பேசுவதற்கு வீரகேசரியில் பணியாற்றிய தவநேசன், சிவதாசன் ஆகியோரும், தமிழ் உணர்வுக்கவிஞன் என்ற தரப்புக்கு வாதிடுவதற்கு வி. உருத்திரகுமாரனும் ஶ்ரீகாந்தலிங்கமும் முன்வந்தனர்.

அந்த பட்டிமன்றத்திற்கு இந்து கலாசார திணைக்களத்தில் பணியாற்றிய அலுவலர் தலைமை தாங்கினார். தற்போது அவரது பெயர் உடனடியாக எனது நினைவுக்கு வரவில்லை.

மண்டபம் நிறைந்திருந்தது. பாரதி தேசிய உணர்வுக்கவிஞன் என்ற தரப்புத்தான் வெற்றி பெறும் என்று நம்பியிருந்தோம். ஆனால், உருத்திரகுமாரனின் கனல் தெறிக்கும் பேச்சை மக்கள் மெய்மறந்து கேட்டு கரகோஷம் எழுப்பினர்.

அவரை எதிர்த்து வாதிட்ட தேசிய உணர்வுத் தரப்பினரால் போதியளவு வாதங்களை முன்வைக்க இயலவில்லை. நடுவர் இறுதியில் உருத்திரகுமாரன் தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கினார்.

நடுவர் அந்த மேடையில், “ எதிர்காலத்தில் மிகச்சிறந்த பேச்சாளராக உருத்திரகுமாரன் வருவார் “ என்று ஆரூடம் கூறினார். ஆனால், எவருமே எதிர்பாராதவாறு உருத்திரகுமாரன் அரசியலில் வேறு ஒரு திசையில் பயணித்து தமிழ் உலகம் அறியப்பட்டுவிட்டார்.

தவநேசன் தற்போது கனடாவிலும் ஶ்ரீகாந்தலிங்கம் லண்டனிலும் வசிக்கின்றனர். அண்மையில் ஒரு நாள் அதிகாலை தவநேசன் கனடாவிலிருந்து தொடர்புகொண்டு பேசுகையில், தமது அணியில் அன்று பேசிய சிவதாசன் கனடா மொன்றீயலில் பல வருடங்களுக்கு முன்னர் தீ விபத்தில் இறந்துவிட்டதாகச் சொன்னார்.

இந்தத் தொடரில் நான் பதிவுசெய்த எனது தேர்முட்டி சிறுகதையை 1985 இல் படித்திருக்கும் வீரகேசரியின் யாழ். அலுவலக முகாமையாளர், தொலைபேசி ஊடாகவே என்னை வாழ்த்திப் பாராட்டினார். அவரும் ஒருநாள் வீட்டின் பின்புறத்தில் கொடியில் துவைத்த உடைகளை உலரப்போட்டுக்கொண்டிருந்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

மற்றும் ஒரு தொலைபேசி அழைப்பில் சென்னையில் நண்பர் – எழுத்தாளர் காவலூர் ஜெகநாதன் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டார் என்ற செய்தி வந்தது.

குமாரசாமி விநோதன் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார். அஷ்ரப் கெலிகொப்டர் விபத்தில் இறந்தார்

இவ்வாறு எனது எழுத்துலக வாழ்வில் நான் சந்தித்து நட்புறவாடியவர்களின் வாழ்வில் திருப்பங்களும் துன்பியலும் இடம்பெற்றுள்ளன.

கொழும்பு சட்டக்கல்லூரி பல தமிழ் அரசியல் தலைவர்களையும் சட்ட மேதைகளையும் உருவாக்கியிருக்கிறது. தமிழ்த்தேசிய அரசியலிலும் அரசியல் கட்சிகளிலும் சட்டத்தரணிகள் பெருகியிருக்கின்றனர். வாதத்திறமையுள்ள இவர்கள் மத்தியில், அந்த வாதங்களே விதண்டா வாதமாகி பிளவுகளையும் ஏற்படுத்தியிருக்கின்றன.

எவருமே தமிழர் பிரச்சினையில் ஓரணியில் இணைந்து கருத்துச்சொல்பவர்களாக இல்லை என்பதும் எமது தமிழின வரலாற்றின் தீராத சோகம்தான்.

உருத்திரகுமாரனை அதன்பின்னர் சந்திப்பதற்கு வாய்ப்பு கிட்டாது போனாலும், அவரது பெற்றோர்களை அவுஸ்திரேலியாவில் சில தடவைகள் சந்தித்து பேசியிருக்கின்றேன்.

1983 கலவரத்துடன் சட்டத்தரணிகள் அமிர்தலிங்கம், மு. சிவசிதம்பரம், யோகேஸ்வரன் ஆகியோர் சென்னையில் தஞ்சமடைந்தபின்னர், வடக்கிலும் கிழக்கிலும் நடந்த மனிதப்படுகொலைகள் பற்றிய செய்திகளை எமக்கு வழங்குவதில் அர்ப்பணிப்புடன் இயங்கியவை பிரஜைகள் குழுக்கள்தான்.

வல்வெட்டித்துறை பிரஜைகள் குழு, வடமாகாண பிரஜைகள் குழு ஆகியனவற்றில் அங்கம் வகித்தவரும் போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவில் இணைந்திருந்தவருமான பேராசிரியர் கா. சிவத்தம்பி, தனது உடல் உபாதைகளுடன் அந்த மண்ணிலே நின்று நெருப்பாற்றைக்கடந்தவாறு செய்திகளை தந்துகொண்டிருந்தார்.

யாழ்ப்பாணம் நிருபர்கள் காசி. நவரத்தினமும், அரசரத்தினமும் தந்த பல திகிலூட்டும் செய்திகளை எழுதிக்கொண்டிருந்தபோதுதான், 1985 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி குமுதினி படகில் நடந்த படுகொலைகள் பற்றிய செய்தி வந்து அதிர்ச்சியளித்தது. தினம் தினம் வடக்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் இரத்தத்தை உறையவைக்கும் செய்திகள்தான் எமக்கு கிடைத்தன.

இதுவரையில் அந்த சம்பவங்களில் ஈடுபட்ட ஆயுதப்படையினருக்கு எதிராக எந்தவொரு நீதி விசாரணையும் நடைபெறவில்லை. அவ்வாறு நடந்திருந்தாலும், அனைத்தும் கண்துடைப்புத்தான்.

குமுதினி படகு படுகொலை செய்தியை எழுதியபோது எனக்கிருந்த மனநிலையை எழுதுவதற்கு வார்த்தைகள் இல்லை. அதனால் எமது ஊடகத்துறை நண்பர் பூபாலரத்தனம் சீவகன் தயாரித்து வெளியிட்ட காணொளியை இந்தப்பதிவில் இணைக்கின்றேன்.

1956 ஆம் ஆண்டுமுதல் இலங்கையில் இனவாத தீய சக்திகளினாலும் ஆயுதப்படையினராலும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக பல ஆவணங்கள் வெளியாகிவிட்டன. அவற்றுக்கெல்லாம் வீரகேசரியில் வெளியான செய்திகளும் ஆதாரமாக விளங்கின.

குறிப்பிட்ட செய்திகளை எழுதியபோது தமிழ்த்தேசியம் பேசிய எமது தலைவர்கள் சிலர் தமிழ்நாட்டிலிருந்துகொண்டு எம்மை தொலைபேசியில் தொடர்புகொண்டு தகவல்களைப்பெற்று சென்னையில் வெளியாகும் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

சென்னையில் தமிழர் தகவல் நிலையம் என்ற அமைப்பிலிருந்து ரேவதி என்பவர் தினமும் தொடர்புகொண்டு செய்திகளை கேட்டறிவார். நானும் நண்பர்கள் மயில் தவராஜா, கனக . அரசரட்ணம் ஆகியோரும் அவருக்கு செய்திகளைச் சொல்வோம்.

முடிந்தவரையில் சங்கேத வார்த்தைகளையே பயன்படுத்துவோம். புலனாய்வாளர்கள் ஒற்றுக்கேட்பார்கள் என்று நாம் கருதியதனால் அவ்வாறும் நாம் இயங்க நேர்ந்தது.

வீரகேசரியில்தான் புலிகள் இயக்கம், தான் செய்த சில கொலைகளுக்கு உரிமைகோரி வெளியிட்ட துண்டுப்பிரசுரம் வெளியானது. அதனையடுத்தே பயங்கரவாத – புலிப்படை தடைச்சட்டம் எல்லாம் நடைமுறைக்கு வந்தன.

ஆனால், ஆயுதப்படையினர் தாம் செய்த கொலைகளுக்கு என்றைக்காவது உரிமை கோரியிருக்கின்றனவா…?

தலைநகரில் சில நிறுவனங்களில் தலைமைப்பதவியில் இருந்த தமிழர்கள், தினமும் மதியத்திற்கு மேல் தொடர்புகொண்டு நாட்டு நிலைமையை அறிவார்கள். அவர்களுடைய கனவில் அடிக்கடி 1983 வன்செயல்கள்தான் வந்துகொண்டிருக்கவேண்டும்.

பின்னாளில் ஐக்கிய நாடுகள் சபையில் சிறுவர் நலப்பிரிவில் மனித உரிமை அதிகாரியாக பணியாற்றிய ராதிகா குமாரசாமியின் தாய் மாமனார் ஜெயம் விஜயரத்தினம் நீர்கொழும்பைச்சேர்ந்த அரசியல் பிரமுகர். கொழும்பு -07 இல்தான் அவரது வீடு. அவரது தொழிற்சாலையும் தென்னந்தோட்டங்களும் நீர்கொழும்புக்கு அண்மையில் குருநாகல் பாதையில் மாவத்தகம – தங்கொட்டுவ – கொச்சிக்கடை பிரதேசங்களில் இருந்தன.

அவர் கொழும்பை விட்டு வெளியே புறப்படுவதற்கு முன்னர் என்னைத் தொடர்புகொண்டு நாட்டு நிலைமை பற்றிக்கேட்பார். வெளியே அமைதிநிலவினால்தான் அவரது கார் வீட்டை விட்டு வெளியேறும்.

மற்றும் ஒரு வர்த்தகப் பிரமுகர் சிதம்பரம் என்பவர் பஞ்சிக்காவத்தையில் இரும்புக் கடையும் மருதானையில் சைவ ஹோட்டலும் நடத்திக்கொண்டிருந்தார்.

அவரும் எங்கள் ஊரைச்சேர்ந்தவர். வெளியூர் செல்வதற்கு முன்னர், தொலைபேசியில் தொடர்புகொண்டு நாட்டின் நிலைமையை கேட்டு அறிவார்.

அதற்கெல்லாம் காரணம்: வடக்கில் – கிழக்கில் புலிகள் ஏதும் தாக்குதல் நடத்தி இராணுவம் கொல்லப்பட்டால், அதன் எதிரொலியாக

தெற்கில் ஏதும் அசம்பாவிதம் நடந்துவிடலாம் என்ற அச்சமும் பதட்டமும்தான்.

தொலைபேசி வசதியுள்ள தனவந்தர்கள், தங்களை, தங்கள் சொத்துக்களை பாதுகாக்க இவ்வாறு செய்தி அறியத்துடிக்கும்போது, சாதாரண ஏழை மக்களின் நிலை என்ன..? என்று யோசிப்பேன்.

ஒரு தடவை, குறிப்பிட்ட சிதம்பரம் அவர்களின் சைவ ஹோட்டலுக்கு சாப்பிட வந்த ரவுடிக்கும்பல் , சாப்பிட்டதற்கு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றது.

கஷியர் அந்த பொறுக்கிகளுடன் வாக்குவாதப்பட்டுள்ளார். அதனையடுத்து, மருதானை பொலிஸில் அந்தக் கும்பல் பொய்ப்புகார் அளித்துள்ளது.

அது தமிழரின் சைவ ஹோட்டல் என்பதால், அங்கே தமிழ்ப்புலிகள் வேலை செய்கிறார்கள் என்பதுதான் அந்தப்புகார்.

பொலிஸ் அங்கு பாய்ந்தது. அங்கே பணியாற்றியவர்கள் அனைவரும் மலையகத் தமிழர்கள். அவர்களில் சிலர் 1981 கலவரத்தின் போது தமது தேசிய அடையாள அட்டைகளை தொலைத்தவர்கள். இது ஒன்று போதும்தானே அவர்களை பொலிஸ் கைது செய்வதற்கு. சிலரை இழுத்துச்சென்றுவிட்டது பொலிஸ்.

சிதம்பரம் முதலாளி தொடர்புகொண்டார். எமது அலுவலக நிருபர் கனக . அரசரத்தினம் பொலிஸ் – இராணுவத்தரப்பு செய்திகளை எழுதிவருவதனால் அவருக்கு சில அதிகாரிகளையும் தெரியும். அவரிடம் பிரச்சினையை சொன்னேன். உடனே அவர் பொலிஸ் அதிகாரிகளிடம், உண்மையில் என்ன நடந்தது என்று விளக்கியதையடுத்து, சிதம்பரம் முதலாளியை பொலிஸ் தரப்பு எச்சரித்து, அனைத்து ஊழியர்களதும் தேசிய அடையாள அட்டையை உறுதிப்படுத்தச்சொன்னது.

அந்த முதலாளி குறிப்பிட்ட ஊழியர்களுக்கு தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொடுக்கவும் செலவிட்டார். அத்துடன் அவர் நிற்கவில்லை.

ஒருநாள் அவர் என்னை எங்கள் ஊரிலிருந்து கொழும்புக்கு வேலைக்கு தனது காரிலேயே அழைத்துச்செல்லும்போது அந்த மீதிக்கதையை சொன்னார். ஒரு பெரிய பொலிஸ் அதிகாரியின் மனைவியின் தந்தையாரின் தோட்டத்திற்கு தான் ஒரு நீர் இறைக்கும் இயந்திரம் வாங்கிச்சென்று பொருத்திவிட்டாராம்.

இதுதான் இலங்கை இனவிடுதலைப்போராட்டத்தின் உறைபொருளும் மறைபொருளும். அந்தப்போராட்டத்தை வைத்து யார் யாரோ

பிழைத்தார்கள். புலிப்பூச்சாண்டியை வைத்தே இன்றும் அரசியல் நடக்கிறது.

அந்நிய நாடுகளிலிருந்து ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்படுகின்றன. அனைத்தும் பாதுகாப்பு செலவீனத்துள் சேர்ந்தாலும், அதற்கான தரகுப்பணம் எங்காவது வெளிநாட்டு வங்கிகளில் வைப்புச்செய்யப்பட்டுவிடும்.

ஈழப்போரில் இரண்டு தரப்பும் ஆயுதங்களை வெளியிலிருந்து கொள்வனவு செய்தன என்பதுதான் உண்மை. இரண்டு தரப்பிலும் ஆயுதத் தரகர்கள் இருந்தனர்.

இனி மீண்டும் கொழும்பு சட்டக்கல்லூரிக்கு வருகின்றேன்.

அந்தக் கலாசாலை உருவாக்கிய சட்ட அறிஞர்கள், புகழ்பெற்ற சட்ட மேதைகள் எத்தனைபேர் என்ற நீண்ட பட்டியலை அறிந்தவரையில் சொல்லமுடியும். அதில் இடம்பெற்றுள்ள தமிழர்கள் பலர் இலங்கை தமிழர் தரப்பு அரசியலுக்கு தலைமை ஏற்றனர்.

அவர்களின் செய்திகளுக்கும் அறிக்கைகளுக்கும் வீரகேசரி நீண்ட நெடுங்காலமாகவே முன்னுரிமை கொடுத்து வருகின்றது. எமது பிரதம ஆசிரியர் க. சிவப்பிரகாசமும் ஆசிரியப்பணிக்கு வந்த பின்னர் சட்டக்கல்லூரிக்குச்சென்று சட்டம் படித்தார். அதுபோன்று தினகரன் ஆசிரியரும் சட்டம் படித்து, பகுதிநேர விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.

1972 அரசியல் அமைப்பிற்கு எதிராக அறப்போராட்டம் நடத்தி கைதான அமிர்தலிங்கம், ஆனந்த சங்கரி உட்பட பலரை விடுவிப்பதற்காக தந்தை செல்வநாயகம் அழைத்ததன்பேரில், பழைய கோபதாபங்களை மறந்துவிட்டு ஜீ. ஜீ. பொன்னம்பலம் அந்த வழக்கில் தோன்றுவதற்கு முன்வந்தார். திருச்செல்வமும் இணைந்தார். ட்ரயல் அட் பார் என்ற சொற்பதம் பேசுபொருளானது.

இவர்களுடன் தோன்றிய பல சட்டத்தரணிகளின் பெயர்ப்பட்டியலும் வீரகேசரியில் பிரசுரமானது.

தமிழ்த்தேசிய அரசியல் சட்டத்தரணிகளின் கூடாரமாகியது அப்போதுதான். அந்தக்கூடாரம் காலப்போக்கில், வித்துவக் காய்ச்சலினால் சீர்குலைந்தது காலத்தின் சோகம்.

அன்று சட்ட மேதைகளாக விளங்கியவர்கள் 1972 அரசியலமைப்புக்கு எதிராக வாதாடியபோது இலங்கை அரசு மட்டுமன்றி முழு உலகமுமே வியந்தது. குறிப்பிட்ட ட்ரயல் அட் பார் விசாரணை இன்றுவரையில் பேசப்படுகிறது. அன்று நீதிமன்றிலிருந்து தலைவர்கள் செல்வநாயகம், ஜீ. ஜீ பொன்னம்பலம், திருச்செல்வம்

மூவரும் சிரித்த முகத்துடன் வெளியே வரும்போது வீரகேசரி அலுவலக ஒளிப்படக்கலைஞர் ரொட்றிகோ எடுத்த படம் பிரசித்திபெற்றது.

அதனையே மெய்கண்டான் நிறுவனர் கேட்டுப்பெற்று கலண்டர் அச்சிட்டு காசாக்கினார்.

அவ்வாறு தோன்றிய ஒற்றுமை இறுதியில்… இன்று வரையில் என்னவானது…?

1983 கலவரத்துடன் சட்டத்தரணிகள் அமிர், மு. சிவசிதம்பரம், யோகேஸ்வரன் ஆகியோர் சென்னையில் தஞ்சமடைந்தபின்னர், வடக்கிலும் கிழக்கிலும் நடந்த மனிதப்படுகொலை பற்றிய செய்திகளை எமக்கு வழங்குவதில் அர்ப்பணிப்புடன் இயங்கியவை பிரஜைகள் குழுக்கள்தான்.

வல்வெட்டித்துறை பிரஜைகள் குழு, வடமாகாண பிரஜைகள் குழு ஆகியனவற்றில் அங்கம் வகித்தவரும் போர் நிறுத்தக்கண்காணிப்புக்குழுவில் இணைந்திருந்தவருமான பேராசிரியர் கா. சிவத்தம்பி, தனது உடல் உபாதைகளுடன் மண்ணிலே நின்று நெருப்பாற்றைக்கடந்து செய்திகளை தந்துகொண்டிருந்தார்.

சமகாலத்தில் பிரஜைகள் குழுக்கள் தொடர்ந்து செய்திருக்கவேண்டிய பணிகளை, நாடாளுமன்ற தேர்தலை மாத்திரம் கவனத்தில் கொண்ட சட்ட அறிஞர்கள் கையில் எடுத்துள்ளனர்.

ஜி.ஜி. பொன்னம்பலம் ( 1901 ) குமார் பொன்னம்பலம் ( 1940 ) கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ( 1974 )

இந்தப்பதிவில் இந்த மூன்று பொன்னம்பலங்களும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியவர்கள். இவர்களின் மரபணுக்கள் ஒரே விதமாகத்தான் இருக்கும். 1972 இல் புதிய அரசியலமைப்புக்கு எதிராக பாட்டனாருடன், நீதிமன்றில் தோன்றிய தந்தையின் புதல்வனுக்கு இரண்டு வயதுதான்.

இவரது இன்றைய அரசியலும், ஏனைய சட்டம்படித்த தமிழ்த்தேசிய அரசியல் தலைவர்களுடன் ( சம்பந்தன் – சுமந்திரன் – சி.வி. விக்னேஸ்வரன் – தவராஜா ) இணையாது. அமெரிக்காவிலிருந்து ஜெனீவாவுக்கு அடிக்கடி காகிதக்கப்பல் விடும் உருத்திரகுமாரனின் அரசியலும் இணையாது.

பொத்துவிலிருந்து பொலிகண்டி வரை ( P to P ) பாதயாத்திரை நடத்துவதில் முன்னின்ற சுமந்திரன் இப்போது முல்லைத்தீவிலிருந்து

பருத்தித்துறை ( M to P ) வரையில் படகோட்டி மற்றும் ஒரு சாதனையை நிலைநாட்டவிருக்கிறார்.

2009 இறுதிப்போருக்கு முன்னர், அதற்குச் சமீபமாக பிறந்த குழந்தைகள் பலர் இன்னமும் தங்கள் உடலில் எறிகணை வீச்சின் துகள்களை உடலில் சுமந்தவாறு வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

தலைவர்கள் காகிதக் கப்பலும், கடல் மார்க்க படகும் விட்டுக்கொண்டிருக்கின்றனர்.

மாகாண சபைகளின் தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கப்போகிறதாம். வடக்கில் மாவை சேனாதிராஜாவும், நீதியரசர் விக்னேஸ்வரனும் களம் இறங்கப்போகிறார்கள் !

“ சபாஷ் சரியான போட்டி “ என்று வஞ்சிக்கோட்டை வாலிபன் வீரப்பா புகழ் வசனத்தை நாமும் பேசுவோம்.

ஊடகவியலாளர்கள் இந்த வரலாறுகளை பதிவுசெய்து வருகின்றனர்.

( தொடரும் )

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *