கதைகள்

நடுகைக்காரி!…. 28 …. ( நாவல் ) ….. ஏலையா க.முருகதாசன்.

அப்பா அப்படி என்னதான் கதைக்கப் போகிறார்.மாமா வழுக்கையாற்று வெள்ளவாய்க்காலில் என்னை முழுமையாகப் பார்த்துவிட்டாரோ இல்லாவிட்டால் வேறு என்ன விசயமாகவிருக்கும்….எதையுமே தீர்மானிக்க முடியாமல் நகத்தைக் கடித்தபடி படபடப்புடன் விறாந்தைக் கதிரையில் இருந்தாள் பாறு.

இரவுச் சாப்பாட்டை பாறுவின் அப்பா அம்மா தம்பியுடன்தான் பாறு ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவாள்.

பாறுவின் தகப்பன் பாறுவிடம் ஏதாவது கதைக்க வேண்டுமென்றால் அவளின் தம்பியார் சாப்பிட்டுப் போகும் வரை காத்திருந்துதான் கதைப்பார்.

இரவுச் சாப்பாடு சாப்பிட்ட முடிஞ்சதும் பாறுவின் தம்பியார் எழுந்து போய்விடுகிறான்.பாறு சாப்பிட்டு முடிஞ்சு எழுந்து கைகழுவுவதற்காக வெளியே போக எழுந்த போது’ பாறு கைகழுவிப் போட்டு இங்கை வா உன்னுடன் ஒரு விசயம் கதைக்க வேணுமென்கிறார்’ பாறுவின் தகப்பன்.

பாறு கையைக் கழுவி வாய் கொப்பளித்துவிட்டு மீண்டும் அடுப்படிக்குள் வந்து சாப்பிடும் போது உட்கார்ந்hதிருந்த பலகையில் உட்காருகிறாள்.

தகப்பனும் தாயும் சாப்பிட்டு முடிஞ்சதும் எழுந்து வெளியே போய் கைகழுவி வாய் கொப்பளித்துவிட்டு அடுப்படிக்குள் வந்து உட்காருகிறார்கள்.

பாறுவின் தகப்பனான தவசிக்கு எப்பொழுதுமே இரவுச் சாப்பாடு முடிஞ்சதும் வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் உண்டு.

பாறுவின் தாய் பாக்கு வெற்றிலை வைச்சிருந்த தட்டத்திலிருந்து பாக்கை எடுத்து பாக்கு வெட்டியால் சீவிக் கொண்டிருக்க, பாறு ஒருமுறை தகப்பனை நிமிர்ந்து பார்த்துவிட்டு தலையைக் குனிஞ்சபடி தகப்பன் ஞானத்துடனான காதல் விவகாரத்தை கேட்கப் போகிறாரோ என நினைச்சு நெஞ்சில் படபடப்புடன் காத்திருக்கிறாள்

„பாறு நான் சொல்வதைக் கவனமாகக் கேள், எங்கடை ஆட்களுக்குள்ளை பொம்பிளைப் பிள்ளையளுக்கு மாப்பிளை தேடுவதென்றால் அது பெரிய கஸ்டம், ஊர் ஊராக அலைஞ்சு எங்கடை ஆட்கள் எங்கை இருக்கினம் என்று தேடித் திரிஞ்சு கண்டுபிடிச்சு, அதுவும் பொம்பிளைப் பிள்ளையளுக்கு ஏற்றதாய் ஒரு மாப்பிளை கிடைக்குமென்பது முயற்கொம்பு மாதிரித்தான்’……..

சொல்வதை நிறுத்தி பாறுவின் முகத்தைக் கூர்ந்து பார்த்த தகப்பன் மனைவி கொடுத்த பாக்குச் சீவலை வாய்க்குள்ளை போட்டு அதோடு வெத்திலையையும் மடிச்சு வாய்க்குள்ளை போட்டு மெதுவாகச் சப்பியவாறு „நேற்று உன்ரை மாமா உனக்கொரு மாப்பிளையை பார்த்திருப்பதாகச் சொன்னார், இண்டைக்கு உன்னை வழுக்கையாற்று வெள்ளவாய்க்காலடியில் பார்த்ததாகவும் சொன்னார், அது பெரிய விசயமில்லை, அதைவிடு, மாமா பார்த்த மாப்பிளை யாழ்ப்பாணம் கச்சேரியில்

கிளறிக்கல் சேவன்ராக வேலை செய்கிறவர்.அவருக்கு ஒரு தங்கச்சி இருப்பதாகவும் தாய் தகப்பன் என எல்லாரும் நல்ல குடும்பம் என்றும் „ சொன்னார்….மீண்டும் கதைப்பதை நிறுத்த ,பாறுவின் தாய், குனிஞ்சு நிலத்தையே பார்த்துக் கொண்டிருக்கும் மகளை நிதானமாக பார்க்கிறாள்.பாறுவின் முகம் வாடிவருவதை அவள் கண்டு கொள்கிறாள்.

„பாறு அந்த மாப்பிளைப் பொடியன் ஞாயிற்றுக்கிழமை உன்னைப் பார்ப்பதற்காக தங்கச்சியாரோட எங்கடை வீட்டுக்கு வருகிறானாம்,அவனுக்கு உன்னைப் பிடிச்சுக் கொண்டால் தாய் தகப்பன் பிறகு சம்பந்தம் கலக்க வருவினம்’ என்று உன்ரை மாமா சொன்னவர் „ என்று தவசி சொல்லி முடிக்க,

„அப்பா’ என்கிறாள் பாறு தயக்கத்துடன்.மகளின் குரலில் இருந்த தயக்கத்தையும் பயத்தையும் புரிஞ்சு கொண்ட தவசி „என்ன’என்பது போல பார்க்கிறார்.

„எனக்கு இப்ப பத்தொன்பது வயசுதானே ஆகுது அப்பா…அதுவுமில்லாமல் நான் எஸ்.எஸ்.சி சோதனை பிரைவேட்டாக எடுக்கப் போகிறன்,ஞானம் படிக்க உதவி செய்யிறன் என்று சொல்லியிருக்கிறார்………அதுதான் இப்ப எனக்கு கல்யாணம் வேண்டாம் அப்பா’ என்று சொன்னவள் „ஞானம் „ என்று அவள் அழுத்திச் சொன்ன போது கண்ணை உயர்த்தித் தாயைப பார்த்ததை தாய் கவனித்துவிடுகிறாள்.

ஞானத்துக்கும் தனது மகளுக்குமிடையில் ஏதோ இருக்கிறது என்பதை தாய் அனுமானித்திருந்தாள்,அதனால் மகளை கூறுகுறிப்பாக கவனிச்சவள் கணவன் பாறுவுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் எனக் காத்திருந்தாள்.

„பத்தொன்பது வயசு கல்யாணம் முடிக்கிற வயசுதான் பாறு, எங்கடை ஆட்களிலை இந்த வயசிலை கனபேருக்கு கல்யாணம் நடந்திருக்கு.நீ பிரைவேட்டாக சோதனை எடுக்கிறதை நாங்களும் சரியென்றுதானே சொல்லியிருந்ததம், கல்யாணம் செய்ததற்கப் பிறகும் சோதனை எடுக்கலாந்தானே,காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்று சொல்லுவினம் அது போல கிடைக்கிற சம்பந்தத்தை விடக்கூடாது, எதுக்கும் அந்தத் தம்பியைப் பார் அதுக்குப் பிறகு முடிவைச் சொல்’ என்று தகப்பன் சொல்ல எதுவுமே சொல்லாது பாறு எழுந்து போய்விடுகிறாள்.

படபடப்புடன் எழுந்து போனவள், விறாந்தையில் கொஞ்ச நேரம் தலையைக் குனிஞ்சபடி நிகத்தைக் கடிச்சபடி இருந்தவள் தனது காதல் நிறைவேறுமா இல்லாட்டி கானல் நீராகிப் போகுமா எனத் தடுமாறினாள்.

கண்களிலிருந்து வந்த கண்ணீரை, அடுப்படியிலிருந்து தாயும் தகப்பனும் வருகிறார்களா எனப் பார்த்தபடி துடைச்சவள் எழுந்து அறைக்குள் போய் படுக்கிறாள்.

அந்தப் பக்கம் இந்தப் பக்கம் எனப் புரண்டு புரண்டு படுத்தும் அவளுக்கு நித்திரையே வரவில்லை.

தனக்கும் ஞானத்துக்குமிடையிலிருக்கும் காதலை எப்படிச் சொல்வது என்று தெரியாமல் குழப்பினாள்.ஒரே ஆட்களுக்குள் இருக்கும் காதலென்றால் யாரையக் கொண்டாவது தாய் தகப்பனுக்குத் தெரிய வைக்கலாம்.ஆனால் தன்னுடைய காதல் அப்படிப்பட்டதல்ல.தன்னுடைய காதல் வெற்றிபெற வேண்டுமென்றால் பெருந்தடைகளைத் தாண்ட வேண்டிவரும், அதற்கிடையில் தாயும் தகப்பனும் தனக்குக் கல்யாணமே செய்து வச்சிடுவினம்.

காதலைச் சொல்ல முடியாத இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டு தன்னை அறியாமலே கல்யாணத்துக்கு சம்மதிச்சுவிடுவேனோ என வேதனைப்படத் தொடங்கினாள்.

„ எனக்கு இந்தக் கல்யாணம் நடக்கக்கூடாது, புளியடி வைரவரே இந்தக் கல்யாண ஏற்பாட்டை நிப்பாட்டிவை.ஞானத்தை புருசனாக நினைச்சு வாழுறன்,அவரோடை என்னைச் சேர்த்துவை, அப்படிச் சேர்த்து வைச்சால் அவரோடை வந்து பொங்கல் பொங்கி வடைமாலை சாத்துவன் என்று புளியடி வைரவரை வேண்டினவள்,எதற்காக இந்தச் சாதிகளை மனுசங்கள் உருவாக்கினாங்களோ தெரியாது, நாளைக்கு படத்துக்குப் போகேக்கிலை ஞானத்தைச் சந்திப்பன் அவரிட்டை எல்லாத்தையும் சொல்ல வேணும்……என்று யோசிச்சு யோசிச்சு கனநேரமாக நித்திரை கொள்ளாமல் இருந்தாள் பாறு.

அடுப்படியிலிருந்து தாயும் தகப்பனும் வருகின்ற அசிகையை உணர்ந்த பாறு, நித்திரை கொள்வது போல கண்களை மூடியிருந்தாள்.

சில நாட்களில் தாய் தன்னோடு வந்து நித்திரை கொள்வது வழக்கம் என்பதால் இன்றும் தன்னோடு நித்திரை கொள்வாளோ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே தாய் பாயில் உட்காருவதை உணர்ந்து கொண்டாள்.

மூன்றறை கொண்ட அந்த வீட்டில் விறாந்தையோடிருந்த பக்கத்து அறையில் பாறுவின் தம்பியாருக்கும்,மற்றைய அறைகளில் ஒன்று தாய்க்கும் தகப்பனுக்கும் எனவும் இன்னொன்று பாறுவுக்கு மட்டுமே என ஒழுங்குபடுத்தி வைச்சிருந்தனர்.

பாறுவின் வீடு இருந்த அந்தச் சூழலைச் சுற்றிப் பல வீடுகள் மண் வீடுகளாகவும் ஒரு அறையுடனிருக்க, பாறுவின் வீடும் இன்னும் இரண்டு வீடுகளுமே கல்வீடுகளாக இருந்தன.

பாறுவின் தகப்பன் மேசன் வேலை செய்தும் ,தனது வளவுக்குள் இருக்கும் பனைகளில் மட்டுமே கள்ளிறக்கி விற்பனை செய்தும் இருதொழில் வருவாயில் கொஞ்சம் கொஞ்சமாகக் காசைச் சேர்த்து இந்த வீட்டைக் கட்டியிருந்தார்.

பாறுவுக்கு தனியறை இருக்க வேண்டும், அவள் உடுப்பு மாற்றும் போதுகூட அவள் சங்கடப்படாமலிருக்க வேண்டும் என்பதால் அவளுக்கு மட்டுமென ஒரு தனியறையை குடுத்திருந்தார்.

அது பாறுவுக்கும் தெரியும்.தனது தகப்பன் தனக்காக எல்லா வசதிகளையும் செய்து தருகிறார் என்பதை அவள் நன்கு உணர்ந்தவள்தான்.

தோட்ட வேலைக்குப் போகச் சொல்லி பாறுவை தாயோ தகப்பனோ சொல்லவில்லை.வீட்டிலை சும்மா இருந்தால் போரடிக்குது என்பதால் போகச் சொன்னவரும் தகப்பன்தான்.

மகள் கண்ணை மூடிக் கொண்டு முழிச்சுக் கொண்டிருக்கிறாள் என்பதை தாய் அறிவாள்.

அதனால் பாயில் படுக்காமல் கால்களை நீட்டி உட்கார்ந்தபடி„ பாறு, அப்பா சொன்னதைப் பற்றி நீ என்ன முடிவெடுத்திருக்கிறாய்’ என்று தாய் கேட்க,பதில் எதுவும் சொல்லாதிருந்த மகளிடம், „நீ நித்திரை கொள்ளாமல்தான் இருக்கிறாய்,அது எனக்குத் தெரியும்……’ சில விநாடிகள் தாமதிச்சு,’எட்டாத விசயத்துக்காக மனசைப் போட்டுக் குழப்பாதை,உன்ரை நன்மைக்காக சொல்றன் அந்தத் தம்பியிட்டை கேட்டுப் படிக்கிறதை மட்டுமே செய்…மனசை அலைபாய விடாதே……’அதற்கு மேல் எதுவுமே சொல்லாமல் பாறுவின் தாய் எழுந்து போய்விடுகிறாள்.

அடுத்த நாள் ஞானம் காலை எட்டரை மணிக்கு தெல்லிப்பழை பல நோக்கக் கூட்டுறவுச் சங்கத்தின் உள் பகுதியில் சைக்கிள்கள் விடும் கொட்டகைக்குள் தனது சைக்கிளை விட்டு பூட்டியவன் அந்தக் கட்டிடத்தை விட்டு வெளியே வந்த போது,சங்க துணிக்கடைக்குப் பக்கத்திலிருந்த மருந்துக் கடையடியில் பாறுவும் தனமும் பூரணியும் நிற்பதைக் காண்கிறான்.

ஞானத்தைக் கண்டதும் பாறு மெதுவாக அவனருகில் வந்தவள் மெதுவாக புன்னகைக்கிறாள்.அவளின் முகம் வாடியிருப்பதைக் கண்ட ஞானம் „ ஏன் முகம் ஒரு மாதிரியிருக்கு’ என்று கேட்க,’ வீட்டிலை ஒரு பெரிய பிரச்சினை,பஸ்சுக்கள்ளை சொல்றன்……..’ என்றவள் தானும் ஞானமும் ஒன்றாக நிற்பதை யாராவது கவனிக்கிறார்களா எனச் சுற்றுமுற்றும் பார்க்கிறாள்.

பஸ் வந்து நிற்கிறது.பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் பஸ்சில் ஏற பூரணி தனத்துடன் ஞானமும் பாறுவும் பஸ்ஸில் ஏறுகின்றனர்.

பாறு ஞானத்துக்கு அருகில் உட்கார்ந்திருந்தாள்.பஸ் ஓடிக் கொண்டிருந்தது.பஸ் கொண்டக்ரரான சவாரி என்ற பட்டப் பெயர் கொண்ட பன்னாலையைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் ஒவ்வொருத்தருக்கும் அவர்கள் போகுமிடத்தைக் கேட்டு ரிக்கற்றை எழுதிக் கிழத்துக் குடுத்தவர்,ஞானம் இருந்த இருக்கையடிக்கு வந்தவர்’ என்ன ஞானம் படத்துக்கா „ என்று கேட்டபடி யாழ்ப்பாணம் என்று ரிக்கற் புத்தகத்தில் எழுதப் போக, „நாலு ரிக்கற்’ என்கிறான் ஞானம்.

„நாலா…..மற்றவை யார்’ என்று சுற்று முற்றும் பார்க்க, தனக்கு இடது புறத்திலிருந்த பூரணியையும் தனத்தையும் காட்டி,’அவை இரண்டு பேருக்கும் எங்கள் இரண்டு பேருக்கும் „ என்கிறான்.

கொண்டக்ரர் சவாரியின் கண்கள் வியப்புடனும், கேள்விக்குறியுடனும் விரிய நெற்றியைச் சுருக்கியபடி நாலு ரிக்கற்றுகளை எழுதி கிழிச்சுக் குடுத்த ஞானத்திடம்

காசை வாங்கித் தனது மண்ணிற சீருடைப் பைக்குள் போடுகிறார்.மிச்சைக் காசைக் குடுத்தபடி பூரணியையும் தனத்தையும் பாறுவையும், பார்த்துக் கொண்டே, இவர்கள் யாராக இருக்கும் என யோசித்தபடி பஸ்சுக்குள் முன்னாக்கி நடந்து போய்க் கொண்டிருந்தான்.

„இந்த கொண்டக்கரர் யார் தெரியுமோ, எங்கடை சொந்தக்காரன், எங்கடை இடந்தான் „ என்று ஞானம் அது சரி வீட்டிலைன்ன நடந்தது „ என்கிறான்.

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *