உலகம் தெரியவில்லை! ஒன்றும் புரியவில்ல!!… ( சிறுகதை ) …. சங்கர சுப்பிரமணியன்.

![]()
பழைய திரைப்பட பாடல்களில் பல தரமான கருத்துக்கள் உள்ளன. அதனால் சில சிறுவயதினர்கூட பழைய பாடல்களை விரும்பிக் கேட்கின்றனர். ஆனால் சில மெத்தப் படித்தவரகள் இப்படிப் பட்டவர்களை கேலியும் கிண்டலும் செய்வதோடு பாகவதர் காலத்திலிருந்து எப்போதுதான் மீண்டுவரப் போகிறீர்கள் என்றும் கேட்டு அவர்களை வெறுப்படைய வைக்கிறார்கள். இப்படி நினைத்துக்
கொண்டு அலசூர் பழனிமுதலியார் தெருவில் வந்துகொண்டிருந்த போது ஒரு வீட்டிலிருத்து வெளிவந்து கொண்டிருந்த ஒரு பாடல் எனது நினைவலைகளை எழுப்பி மீள்பதிவு செய்து கொண்டிருந்தது.
நான்கு வீடுகள் தள்ளி எனது நண்பன் இராமச்சந்திரன் வீட்டிற்கு வந்தேன். அது என்னவோ என் நண்பன் வீட்டுக்கு போகும்போதெல்லாம் “ஆனந்ததேன் காற்று தாலாட்டுதே, அலை பாயுதே, மனம் ஏங்குதே, ஆசை காதலிலே” என்ற பாடலின் இனிமை என் உடம்புக்குள் ஒரு இன்ப கிளுகிளுப்பை ஏற்படுத்துகிறது.
ஐயா சாமி, நீ அவனா? என்று அதற்குள் நீங்களாகவே ஒரு முடிவுக்குள் வந்து விடாதீர்கள். என நண்பனின் வீடு ஒரு காம்பவுண்டுக்குள் இருந்தது. அதில் நான்கு வீடுகள் இருந்தன. என் நண்பனின் வீடு முதலில் இருந்தது. அவன் திருச்சியில் இருந்து வந்து ஏ. ஜி. எஸ் அலுவலகத்தில் பணிபுரியும் அவன் அண்ணன் வீட்டில் தங்கி என்னுடன் பொறியியற் படிப்பபை படித்து வருகிறான். படிப்பு சம்பந்தமாக போவதுபோல் பசுத்தோல் போர்த்திய
புலியாக நான் அடிக்கடி அவன் வீட்டிற்கு செல்வதுண்டு.
அதற்கு காரணம் அவன் வீட்டிற்கு எதிரில் ஒரு தெலுங்கு பேசும் குடும்பம் வசித்து வந்தது. அந்த வீட்டிலும் ஒரு பசுத்தோல் போர்த்திய பெண் புலி இருந்தது. அதன் பெயர் சுமதி. எனது சத்தம் கேட்டதும் அப்பெண்புலி ஜன்னல் பக்கம் எட்டிப் பார்க்கும்.
இப்படியே எட்டிப் பார்த்துவந்த புலி ஒன்றிரண்டு மாதங்களில் ஏதாவது ஒரு வேலைக்காக வெளியே வருவதுபோல் வெளி வந்து ஓரக்கண்ணால் என்னைப் பார்த்தது. சில மாதங்களில் ஓரக்கண்ணால் பார்த்த புலி நேருக்கு நேர் பார்த்தது.
அதன் பின் சிலமாதங்களில் என்னைப்பார்த்து சிரிக்கவே நானும் சிரித்தேன். அவள் சிரிக்க ஆரம்பித்தவுடன் அவளைக் காணாத போதெல்லாம் என் நினைவில் வந்து சிரிக்க ஆரம்பித்தாள். சிரிக்க ஆரம்பித்து கொஞ்சநாட்களிலே பேச ஆரம்பித்தாள். அவள் பேச ஆரம்பித்தவுடனேயே எல்லோருக்கும்
பாதிப்பை ஏற்படுத்துவதுபோல் பாரதி
என்னுள்ளும் பாதிப்பை ஏற்படுத்தினார்.
அவள் பேசும் தமிழில் நான் எனது மனதை பறிகொடுத்தேன். தமிழை அவ்வளவு இனிமையாகப் பேசமுடியுமா என்ற ஐயப்பாடு ஏற்பட்டது. பின் ஏன் சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம் என்றார் பாரதி. அதன் பின் அவர் சொன்னதில் தவறில்லை என்று உணர்ந்தேன். நண்பன் வீட்டிற்கு வரும்போது ஜன்னலில் அவள் தோன்றவில்லை என்றால் அவள் வீட்டினுள் இருக்கிறாளா என்பதை அறிய என் காதுகளைத் தீட்டுவேன். ஆம், பாரதி சொன்னது உண்மைதான் என்பதுபோல் அவள் குரல் சுந்தரத் தெலுங்கில் வீட்டில் குடும்பத்தினருடன் பேசுவது என்னை கிறங்க வைக்கும்.
பேச ஆரம்பித்த பெண்புலி சிலநாட்களில்
நான் நண்பன் வீட்டுக்கு செல்லாவிட்டால்
என் நண்பனிடமே என்ன உங்க நண்பரை காணவில்லை என்று கேட்க ஆரம்பித்தது.
அதற்குப்பின் தான் என் நண்பனுக்கே தெரிந்தது “அவ்வளவு பாசக்காரனாடா நீ”
என்று சுமதி என்னைப்பற்றி விசாரித்ததை சொல்வான். அவன்மீது நான் வைத்திருக்கும் நட்பின் ஆழத்தை உணர்வான். உண்மையில் நான் அவன் உற்ற நண்பன் என்பது அவனுக்கும் தெரியும். ஒருவருக்கு நட்புபோல வேறு உணர்வுகளும் இருக்கக்கூடாதா என்ன? எனவே எல்லாம் அறிந்த அவன் நாட்கள் செல்லச்செல்ல
“நடத்து நடத்து, நடக்கட்டும் நடக்கட்டும” என்று சொல்ல ஆரம்பித்து விட்டான். அப்படி ஒருநாள் அவன் வீட்டிற்கு சென்றபோது,
“போடா போ, யாரை நம்புவது யாரை நம்பாமல் விடுவது என்று தெரியவில்லை” என்றான் ராமு.
“என்னடா தத்துவமெல்லாம் பேசுற. நான் சுமதியை பார்ப்பதை வைத்துத்தானே சொல்கிறாய்?”
“டேய். நீ வேற கடுப்ப கிளப்பாத. நன்றாக பழகிவந்த நண்பன் ஒருவன் இப்போது என்னிடம் பேசுவதுமில்லை. என்னைப் பார்த்ததும் விலகிப் போய்விடுகிறான். அடுத்த தெருவிலுள்ள சில நண்பர்களிடம் என்னைப்பற்றி ஏதேதோ சொல்லியிருக்கிறான்” என்றான்.
“அதெல்லாம் பெரிதாக எடுத்துக்காதே. சிறிது நாள் கழித்து அவனே வருவான் “ என்று சமாதானப் படுத்தினேன்.
எவ்வளவு சொல்லியும் சமாதானமடையாத அவனிடம் என் அனுபவம் ஒன்றைச் சொன்னேன். எனது ஊரில் இருந்தபோது அக்கிராமத்தில் வாழ்ந்த அனைவருக்கும் ஏன் ஆடு மாடு கோழி நாய்களுக்கு கூட என்னைப்பற்றித் தெரியும். அங்கு ஒரு நாய் என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் வாலை ஆட்டும். இத்தனைக்கும் ஒரு ரொட்டித் துண்டைக்கூட அதற்கு நான்
போட்டதில்லை என்று சொல்லி
முடிக்கவில்லை அதற்குள்,
“டேய், நான் மனுசங்கள பற்றிப்பேசினால் நீ நாயைப்பற்றி சொல்லிக்கிட்டிருக்க”
“சொல்ல வருவதை கேளுடா முதலில்”
“சரி, சொல்லு”
“என்னைப் பாரத்ததும் எப்போதும் வாலை ஆட்டிக்கொண்டுருந்த நாய் சில நாட்களாக வாலை ஆட்டவில்லை”
“அப்படியா?”
இன்னும் சொல்கிறேன் கேள். என்னைப் பார்த்து குரைக்க ஆரம்பித்தது. அதன்பின் ஓடிச்சென்று தெருவின் கடைசியில் நின்று குரைத்தது. அடுத்த தெருவுக்குச் சென்று கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து நின்று
குரைத்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை அதன் பார்வையில் அதற்கு நான் ஏதோ ஒருவகையில் வேண்டாதவனாகத் தெரிகிறேன். ஐந்தறிவுப் பிராணியிடமே வேற்றுமையைக் காணும்போது ஆரறிவு
மனிதனிடம் வேறுபாடுகள் வருவது இயற்கையே. அதனால் நீ ஒன்றும் தவறு செய்யவில்லை என்றால் ஒன்றும் கவலைப்படாதே என்றதும் அமைதியானான்.
அதுவும் சரிதான். நாய் நன்றியுள்ள பிராணி என்கிறோம். அதை ஏற்றுக்கொள்ளும் நாம் அது நம்மைப் பார்த்து திடீரெனக் குறைத்தால் நாம் செய்யும் செயல் எதுவோ ஒன்று அதை பாதித்திருக்கிறது என்பதை புரிந்துகொண்டு அதன்மேல் இரக்கம் கொள்ளவே வேண்டும் என்றான். அப்படி அவன் சொன்னது அவனைப்பற்றி நான் உயர்வாக எண்ணவைத்தது.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()