கட்டுரைகள்

ஜூம் வழிபாடு!…. சங்கர சுப்பிரமணியன்.

ஜூம் வழி செயல்பாடுகள் கடந்த பத்து ஆண்டில் பயன்படுத்தப்பட்ட விதமும் நோக்கமும் தனி. பெரும்பாலும் அலுவலகங்களுக்கும்
வியாபாரத்திற்காகவுமே பெருமளவில் பயன்பட்டது. பல அலுவலகங்கள் ஒன்றிணைந்து செயல்திட்டங்களை நிறைவேற்றவும் பல வியாபார அமைப்புக்கள் தங்களது வியாபாரங்களில் அதிக கவனம் செலுத்தி ஒரு நாட்டின் பலபாகங்களில் உள்ள கிளை அமைப்புக்களுடன் தொடர்பினை மேம்படுத்த உதவியாய் இருந்தது. மேலும் பன்னாட்டு நிறுவனங்கள் பல நாடுகளில் உள்ள தமது சார்பு நிறுவனங்களோடு தொடர்பினை ஏற்படுத்தி நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் தேவைக்கேற்ப திட்டங்களை வகுக்கவும் பயனுள்ளதாயிருந்தது.

அதிலும் குறிப்பிட்ட தக்கவகையில் முன்னேற்றம் இந்த கொரோணா காலகட்டத்தில் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான கல்வி நிறுவனங்கள் ஜூம் மூலம் இணையவழியில் கல்வி திட்டத்தை கொண்டுவந்தன. இதன் மூலம் தொலைதூரக் கல்வியிலும் தடம் பதித்தது.

இதற்கு முழுமையான காரணமாக இருந்தது என்னவெனில் நேரக்கட்டுப்பாடுதான். அதற்கடுத்ததாக தேவைப்பட்ட உடனே கூட்டங்களை ஒருங்கிணைக்க முடிந்தது. அதே சமயம் போக்கு வரத்து பிரச்சனை பெருமளவில் குறைந்தது. உலகில் எந்த மூலையில் இருந்தாலும் தொடர்பென்பது சாத்தியமானது. இத்தோடு இலக்கியம் மற்றும் மதம் சார்ந்த தேவைகளுக்கும் ஜூம் பயன்படுத்துப்படுவதை எண்ணிப்பார்த்தால்
ஊரே கொண்டாடும்போது நாமும் சேர்ந்தாடலாமே என்ற காரணம் புரிகிறது.

ஆங்கிலம் தெரியாமல் இருக்கும் ஒருவன் ஆங்கில திரைப்படத்துக்கு போனால் எப்படி இருக்கும்? எல்லோரும் சிரிக்கும்போது நாமும் சிரித்துத்தானே ஆகவேண்டும். இல்லாவிடில் பக்கத்து இருக்கையில் இருப்பவர் நமக்கு ஆங்கிலம் தெரியாது என்று நினைத்து விடுவாரோ என்ற நினைப்பு நம்மையும் சிரிக்க வைக்கும்.அது போல் எல்லோரும் ஜூமில் நிகழச்சிகள் நடத்துகிறார்கள் நாம் ஏன் நடத்தக்கூடாது? என்ற எண்ணமே காரணம்? அல்லது அலுவலகங்களில் பணிபுரிவோருக்கு ஒரு இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருக்கும் அந்த இலக்கை எட்டாவிட்டால் வேலை போய்விடும் என்பது போல் ஒரு இலக்கை முடித்துவிட வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை தவிர வேறொன்றுமில்லை.

ஒன்றிற்காக ஏற்படுத்தியதை இன்னொன்று பயன்படுத்துவது சரியா அல்லது தவறா? என்றால் சொல்லத் தெரிவதில்லை. சரி என்றால் காகம் கட்டிய கூட்டில் குயில் முட்டையிடுவதும் சரி என்பதுபோல் ஆகும். குயிலால் கூடு கட்ட முடியாததால்தானே காகத்தின் கூட்டில் முட்டையிடுகிறது. அதுபோல் எல்லா அமைப்புக்களும் தாங்கள் அரங்கில் நடத்தவேண்டிய நிகழ்வுகளை இப்போதுள்ள கொரோணா தொற்றின் காரணமாக ஒரு அறையில் இருந்து கொண்டே அரங்கேற்றி விடுகிறார்கள்.

இதனால் நன்மையும் தீமையும் உள்ளன. நன்மை என்னவென்றால் அரங்கத்துக்கு வாடகை கொடுக்கவேண்டியதில்லை. உணவு உபசரிப்பு என்று பணம் செலவழிக்க வேண்டாம். ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே என்ற கதையாக அவரவர் வீட்டில் அவரவர்களுக்கு உபசரிப்பு நடந்துவிடும். சிறப்பு விருந்தினராக உள்நாட்டிலே வெளிநாட்டிலோ யாரையும் அழைத்துவர பணச்செலவு இல்லை. பொன்னாடை பூமாலை என பழக்கம் உள்ளவர்களுக்கு அச்செலவும் இல்லை.

ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள். “ஆடு மேய்த்தமாதிரியும் இருக்கவேண்டும் அண்ணனுக்கு பெண் பார்த்தமாதிரியும்
இருக்க வேண்டும்” என்பதே அப்பழமொழி.
ஒரே கல்லில் இருமாங்காய் என்பது போல ஒரே நேரத்தில் இரண்டு வேலைகள் செய்யலாம். நிகழ்ச்சியை பார்த்தபடியே வீடியோவை நிறுத்தி வைத்துவிட்டு நீலாம்பரியின் திருமண ஆல்பத்தையும் பார்க்கலாம். கொடுத்த பொருளை விட்டு கொடைரோட்டுக்கு வழிசொல்லிக் கொண்டிருப்பவர்களின் பேச்சை கேட்காமலே அதை தவிர்த்து விடலாம். இடுப்புக்கு கீழே என்னமாதிரி வேண்டுமானாலும் உடையணியலாம். முதுகில் கிழிந்த கோட்டை முகமகிழ்வோடு அணிந்து நிகழ்வில் கலந்து கொள்ளலாம்.

நன்மையை மட்டும் சொன்னால் போதுமா? தீமையைச் சொல்லவேண்டுமா? ஆண்டுக்கு நான்கு தரமான நிகழ்ச்சிகள் என்பதுபோய் நாற்பது நிகழ்ச்சிகளை நடத்த முற்படுகிறார்கள். அதனால் பல தரமற்ற நிகழச்சிகள் அரங்கேற்றப் படுகின்றன. இந்த உண்மையை யாரும் வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள். திருமணத்துக்கு வந்தவர் பந்தியில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது திருமணவீட்டார் சாப்பாடு எப்படி இருக்கிறது என்று கேட்டால் அது மோசமாக இருந்தாலும் நன்றாக உள்ளது என்றே சொல்லவேண்டும். அதுபோல்தான் இதுவும்.

ஜூமில் நிகழ்ச்சிகள் என்பதால் புற்றீசல் போல் ஏதேதோ அமைப்புகள் எல்லாம் என்னவென்னவே நிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பித்து விட்டார்கள். இந்த நிகழ்ச்சிகளை நடத்துபவர்களைப் பற்றி நாம் கேள்விப் பட்டிருக்கவே மாட்டோம். இவர்களுக்கெல்லாம் எப்படி மின்னஞ்சல் கிடைக்கிறதோ தெரியாது. முன்பொரு காலத்தில் வீட்டு விலாசம் தெரிய
வேண்டுமானல் தபால்காரரை கேட்டால் சொல்லிவிடுவார். இப்போது ஒரு நண்பர் என்னிடம் சொன்னார் யாருடைய மின்னஞ்சலாவது தெரியவேண்டுமானால் ஏதாவது ஜூமில் நிகழ்ச்சி நடத்தும் அமைப்பைக் கேளுங்கள் கிடைக்கும் என்றார்.

கோவில்களில் பார்த்திருப்போம் தினமும் வழிபாடு நடக்கும். இது அன்றாடம் நடப்பது என்பதால் அதில் சிறப்போ அல்லது கோவிலுக்கு செல்பவர்களிடம் பெரிய எதிர்பார்ப்போ இருக்காது. அதுவே திருவிழாக்கள் என்றால் எல்லோருமே ஒரு பெரிய ஈடுபாட்டுடன் இருப்பார்கள். என்னென்ன செய்தால் திருவிழா சிறப்பாக இருக்கும் என்பதிலே கண்ணும் கருத்தாக இருப்பார்கள். ஊர் தேர்கூடி இழுப்பது என்பார்களே அதுபோல. அதையே தினமும் தேர் இழுத்தால் பக்தன் கூட பக்கோட சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் அப்புறம் பார்க்கலாம் என்பான்.

எதுவுமே அளவோடு இருக்கவேண்டும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகிவிடும். நஞ்சாகா விட்டாலும் திகட்டி விடும். ஆண்டுக்கு சிலவென்று அமைப்புக்கள் நடத்தும் நிகழச்சிகளை நடத்தமுடியாத சந்தர்ப்பம் என்பதால் ஏதாவதொரு வகையில் நடத்தும் வாய்ப்பு
கிடைத்து விட்டது என்பதற்காக இலக்கை தாண்டக்கூடாது. இதில் அமைப்பைத் தாண்டி தனிநபர் ஆதரவாளர்கள் உதவியோடு நடத்தும் மதம், இலக்கியம் மற்றும் அரசியல் சம்பந்தமான நிகழ்ச்சிகள் வேறு கலைகட்டத் தொடங்கியுள்ளன.

இப்படியே சென்றால் தொலைக்காட்சி, வானொலி போன்று இணையவழி நிகழ்வுகளும் தொடர்ந்து வந்துவிடும். அதன் பின் சங்கங்கள், இலக்கிய அமைப்புக்கள் எல்லாம் எப்படி செயல்படும் என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது. இக்கருத்தினை சில நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது தெரியப் படுத்தினார்கள். மேலும் என்னதான் ஜூமில் நடத்தினாலும் அது அதற்கென்னு வருபவர்கள்தான் வருபவர்கள்.

சில தினங்களுக்குமுன் அடுத்தடுத்த சில நிகழ்வுகள் நடைபெற்றன. ஒரு இலக்கிய நிகழ்ச்சிஅதையடுத்து மத நிகழ்ச்சி நிகழ்ச்சியொன்று. இலக்கிய நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட விளம்பரம். மத நிகழ்ச்சிக்கு அவ்வளவாக விளம்பரம் இல்லை. ஆனால் இலக்கியத்துக்கு வந்தவர்கள் கொஞ்சமே
என்றாலும் மதநிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அதைவிட இருமடங்கு. இதவே திரைப்பட சம்பந்நமான நிகழ்ச்சியாய் இருந்தால் நாம் சொல்லவே வேண்டாம்.

அடுத்ததாக, இந்த இலக்கியம் மற்றும் மத அடிப்படையான ஜூம் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சி மாதிரி பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்ற தரத்திற்கு கொண்டு வந்துவிடக் கூடாது. பொழுது போக்கிற்காக தொலைக்காட்சியிலும் வானொலியிலும்
எண்ணற்ற அலைவரிசைகள் உள்ளன. இன்னும் யூடியூப்பில் ஏகப்பட்டவைகள் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவைகளோடு இந்த இணையவழி நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து செய்வோமானால் தனிப்பட்ட செல்வாக்கை சங்கங்களும் அமைப்புக்களும் நாளாவட்டத்தில் இழந்து பத்தோடு பதினென்றாகிவிடும்.

தொலைக்காட்சியையும் வானொலியையும் எத்தனைபேர் பார்த்தும் கேட்டும் மகிழ்கிறார்கள் என்பதை பொதுவாக கணக்கிட முடியாது. அவற்றில் வரும் நிகழ்ச்சிகள் பார்வையாளர்களிடம் எவ்வித ஆர்வத்தையும் ஏற்படுத்தாவிட்டால் அவற்றை நிறுத்தி விட்டுச் சென்றுவிடுவார்கள். இது தொலைக்காட்சி மற்றும் வானொலி நடத்துபவர்களுக்கும் தெரியும், எத்தனைபேர் பார்த்தார்கள் என்பது மட்டும் தெரியாது. ஆனால் இணையவழி நிகழ்ச்சிகளில் அங்கே பார்வையாளர்கள் எத்தனைபேர் கலந்து கொள்கிறார்கள் என்பது தெரிந்துவிடும்.

பார்வையாளர்களின் ஒலிபெருக்கி நிகழ்ச்சி நடத்துபவர்களால் நிறுத்தப் பட்டிருந்தாலும் காணொளியை நிறுத்தமாட்டார்கள். அப்படியிருந்தும் ஒரு நிகழ்ச்சியில் பங்குபெறுபவர்களில் எத்தனைபேர் காணொளியில் வருகிறார்கள்? நிகழ்ச்சி வழங்கும் குழுவில் இருப்பவர்களே அனைவரும் காணொளியில் தொடர்ந்து
இருப்பதில்லை. ஒரு நிகழ்ச்சியில் நூறுபேர் பங்குபெற்றால் பத்துபேர் காணொளியில் வந்தால் அதிகம். எந்த ஒரு ஜூம் நிகழ்ச்சியிலாவது நூறுபேர் பங்கேற்றால் தொன்னூறுபேர் காணொளியில் வந்துள்ளார்களா? எனது நண்பர்களுடன் கலந்து கேட்டதில் இருபத்தியைந்து பேர் வந்தாலே அபூர்வம் என்கிறார்கள்.

ஜூமில் நிகழ்ச்சிகள் தோன்ற தொடங்கிய ஆரம்பகாலத்தில் திருவிழா போன்று ஒரு நிலை இருந்தது. ஐம்பது பேர் கலந்து கொண்டால் ஐம்மதுபேரையும் காணொளியில் காணமுடிந்தது. அதிலும் சிறப்பான அலங்காரங்களுடன் படப்பிடிப்புக்கு வருபவர்கள் போல் வந்தார்கள். ஆனால் இப்போது காணொளியில் வரவே மாட்டேன் என்கிறார்கள். இதுவே ஒரு அரசு அலுவலகமோ வியாபார நிறுவனமோ
ஜூமில் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தால் காணொளியில் வராமல் இருப்பார்களா? வேலையில் சிக்கல் வந்துவிடுமோ வியாபாரத்தில் ஒதுக்கி விடுவார்களோ என்ற பதைபதைப்பில் காணொளியில் வந்து விடுவார்கள் அல்லவா?

அதனால்தான் சொல்கிறேன் திருவிழாபோல் கொண்டாட்டத்துடன் இருந்த நிகழ்ச்சி தினசரி நடைபெறும் எளிய வழிபாடாக நிறம்மாறத் தோன்றியுள்ளது. இன்னும் ஒரு கவலை என்னவென்றால் இப்போது சூழ்நிலையால் ஜூமில் நிகழ்ச்சியை நடத்துபவர்கள் வசதியையும் வாய்ப்பையும் கருதி ஜூமுடனே ஐக்கியமாகி விடுவார்களோ என்ற ஐயப்பாடு. வழிபாடாக போய்விடாமல் பார்த்துக் கொள்வோம். தொற்று போனபின் ஜூமின் பின்னால் போகாமல் ஜூமில் பற்றற்றார்
பற்றினைப் பற்றுவோம்.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *