ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிப்போம்!… அவதானி.

இலங்கையில் க.பொ.த ( சாதரண தர ) பரீட்சைக்கு தோற்றியோர் ஆறுலட்சம் !
உயர்தர வகுப்புக்கு தெரிவானோர் இரண்டு இலட்சம் !
அவதானி.
சமகாலம் மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு. இந்த அவதானியின் தொடர்ச்சியான பதிவுகள் பாரதியின் தீர்க்கதரிசனம் மிக்க வார்த்தைகளிலிருந்தே வெளிவருவதும் தவிர்க்க முடியாதது.
பாரதி அன்றே சொன்னார்: ![]()
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.
இலங்கையில் அண்மையில் க. பொ. த. சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகள் வெளிவந்துள்ளன.
கொரோனோ பெருந்தொற்றுக்கு மத்தியில், பொருளாதாரம் மாத்திரம் நலிவடையவில்லை. கல்வித்துறையும் பெரும் பாதிப்பினை கண்டுள்ளது.
மேலைத்தேய நாடுகளும் விதிவிலக்கல்ல. ஆனால், அந்த வளர்ச்சியடைந்து வல்லரசு நாடுகளுடன் ஒப்பிடும்போது, வளர்முக நாடாக இன்றும் விளங்கும் இலங்கையில் காலை ஆகாரம் உண்ணவும் வழியற்று பட்டினியோடு பாடசாலைக்குச்செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை வீதம் இன்றளவும் குறையவில்லை.
அரசாங்கம் இலவச பாட நூல்கள், பாடசாலைச் சீருடைகள் வழங்கினாலும், கல்வி இலவசமாக்கப்பட்டிருந்தாலும், பல பாடசாலைகள், கல்லூரிகளில் மாணவர்களின் பெற்றோரிடம் நன்கொடை என்ற பெயரில் பணம் அறவிடும் கலாசாரம் கட்டுப்படவில்லை.
வசதியுள்ள பெற்றோர், தமது பிள்ளைகளை தனியார் சர்வதேச கல்லூரிகளுக்கு அனுப்பி படிக்கவைக்கின்றனர். ஆனால், வறுமைக்கோட்டின் கீழே வாழும் ஏழைப்பெற்றோரின் பிள்ளைகள்
கல்வி சார்ந்த அடிப்படைத்தேவைகளையும் பெறமுடியாமல் தமது கல்வியை இடைநிறுத்திவிடுகின்றனர்.
பாடசாலை சென்று படிக்கவேண்டிய பருவத்திலிருக்கும் பிள்ளைகள் வெளிப்பிரதேச செல்வந்தர் வீடுகளில் வேலையாட்களாகிவிடுகின்றனர். அல்லது சிற்றூழிய பணிகளுக்குச்சென்றுவிடுகின்றனர்.
இந்தப்பின்னணி ஒரு புறம் இருக்கட்டும். இலங்கை முப்பது ஆண்டு காலப்போரைச்சந்தித்தது, 2009 ஆம் ஆண்டு மே மாதம் இறுதி யுத்தம் நடந்த காலப்பகுதியில் பிறந்த குழந்தைகள் தற்போது 12 வயதை அடைந்திருப்பார்கள். இவர்களில் பெரும்பாலான பிள்ளைகளின் தந்தைமார் போர்க்காலத்தில் கொல்லப்பட்டிருப்பார்கள். அல்லது காணாமலாக்கப்பட்டிருப்பார்கள்.
இவ்வாறு குடும்பத்தின் மூல உழைப்பாளிகளை இழந்த குடும்பங்கள் வடக்கு – கிழக்கில் ஏராளம்.
இந்தக்குடும்பங்களின் தலைமைத்துவம் பெரும்பாலும் தாய்மாரிடத்தில்தான் தங்கியிருக்கிறது. வெளிநாடுகளிலிருந்து இயங்கிவரும் பல தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள், மற்றும் பழைய மாணவர் சங்கங்கள் ஆகியனவற்றிடமிருந்து கல்விக்கான ஆதரவு ஓரளவு கிடைத்துவந்தாலும், அனைத்து ஏழை மாணவர்களுக்கும் அந்த உதவிகள் கிடைக்கிறது என்று சொல்வதற்கில்லை.
ஒரு காலகட்டத்தில் பல்கலைக்கழக பிரவேசத்திற்கு வந்த தரப்படுத்தலினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் ஈழத்தமிழ் சமூகத்தினர். அதனால் விரக்தியடைந்த மாணவர்கள் விடுதலை வேட்கை உணர்வுடன், ஆயுதம் ஏந்திய இயக்கங்களில் இணைந்து போர்க்களம் புகுந்தனர். மடிந்தனர்.
குறிப்பிட்ட போர்க்காலத்தில், பொருளாதாரத் தடைகள் வந்தமையால், மாணவர்கள் வீட்டிலிருந்து கற்றவேளையில் இரவுப்பொழுதில் மண்ணெண்ணை விளக்குகளை நம்பியிருந்தனர். பாடசாலைகளும் சீராக இயங்கவில்லை. பாதிக்கப்பட்ட அகதிகளின் சரணாலயமாகவும் பல பாடசாலைகள் மாறியிருந்தன.
போர் விமானங்களின் தாக்குதலுக்குப்பயந்து மக்கள் பங்கர்களுக்குள் பதுங்கவேண்டியிருந்தது. இவ்வளவு நெருக்கடிகளும் கண்ணுக்குத் தெரிந்த எதிரியினால் உருவானவை.
ஆனால், கடந்த இருபது மாதங்களுக்கும் மேலாக கண்ணுக்குத் தெரியாத எதிரியான பெருந்தொற்றை ஏற்படுத்தும் வைரஸுடன்
மக்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். அந்த வைரஸும் தனது அண்ணன், தம்பிகளையும் அழைத்துக்கொண்டு திரிபடைந்த வைரஸ்களாக படையெடுத்து இரண்டாவது – மூன்றாவது அலை என வந்துகொண்டிருக்கின்றன.
இலங்கையில் இந்த பெருந்தொற்றினால், இறந்தவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தையும் தாண்டிவிட்டது.
அவ்வாறு இறந்தவர்களை தகனம் செய்வதற்கு மின்மயானம் தேடி அலையவேண்டிய நிர்க்கதி மருத்துவமனைகளுக்கு வந்துள்ளது.
இத்தனை சிக்கல்களுக்குள்ளும்தான் நாம் எமது மாணவர்களின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கவேண்டியுள்ளது.
இந்த ஆண்டு நடைபெற்ற க. பொ. த. ( சாதாரணதர ) பரீட்சைக்கு ஆறு இலட்சத்து, 22 ஆயிரத்து 352 மாணவர்கள் தோற்றியிருந்தனர். எனினும், இரண்டு இலட்சத்து 36 ஆயிரத்து 53 மாணவர்களே உயர்தர வகுப்பிற்குச் செல்லும் தகுதியை பெற்றுள்ளனர்.
அவ்வாறாயின் சுமார் நான்கு இலட்சம் மாணவர்கள், அடுத்த ஆண்டு க. பொ. த. உயர்தர வகுப்பிற்குச்செல்லமாட்டார்கள். அவர்களில் பெரும்பாலானோர் மீண்டும் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் க. பொ. த. சாதாரண தரப்பரீட்சைக்கு மீண்டும் தோற்றவேண்டும்.
இந்த நிலைமைக்கு கடந்த இருபது வருடகாலத்தில், பாடசாலைகள் சீராக இயங்காதமையும் முக்கிய காரணம். மெய்நிகரில் படிக்கக்கூடிய வாய்ப்பும் வசதியும் இலங்கையில் எத்தனை சதவீதமான மாணவர்களுக்கு கிடைக்கிறது.
இத்தனை பிரச்சினைகளுக்கும் மத்தியில் ஆசிரியர்களின் தொழிற்சங்கம் தங்களுக்கு சம்பள உயர்வுகோரி வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடர்ந்தன.
உரலுக்கு ஒரு பக்கம் இடி. மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பதுபோன்று மாணவர்கள் இந்த கொவிட் நெருக்கடி காலத்தில் இரண்டு பக்கத்தாலும் பாதிக்கப்பட்டனர்.
நடந்து முடிந்த சாதாரண தரப்பரீட்சையில் இரண்டு தமிழ் மாணவர்கள் கொழும்பு மகஸின் சிறையிலிருந்து தோற்றியிருக்கும் செய்தியுடன், அவர்கள் இருவரும் உயர்தர வகுப்பிற்குச்செல்லத்தக்க சிறந்த புள்ளிகளை பெற்றிருக்கும் தகவலும் வெளியாகியிருக்கிறது.
குறிப்பிட்ட இரண்டு மாணவர்களையும் புலிகள் இயக்கத்தொடர்பு இருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்கள் எனவும் தெரியவருகிறது. புலிகள் இயக்கம் 2009 மே மாதம்
மௌனிக்கப்பட்டுவிட்டது எனச்சொல்லப்பட்டாலும், குறிப்பிட்ட இரண்டு மாணவர்களும் அக்காலப்பகுதியில் என்ன வயதிலிருந்திருப்பார்கள்…? எந்த வகுப்பில் படித்திருப்பார்கள் ..? முதலான கேள்விகளும் எழுகின்றன.
நீதி அமைச்சர் மாண்புமிகு அலி சப்ரி அவர்கள், குறிப்பிட்ட இரண்டு மாணவர்களின் எதிர்காலம் குறித்து கரிசனை காண்பிக்கவேண்டும்.
மனிதாபிமான அடிப்படையில் அம்மாணவர்களை விடுவித்து சமூகத்தில் அவர்களையும் சிறந்த பிரஜைகளாக்குவதற்கான முன்னெடுப்புகளை அரசு மேற்கொள்ளவேண்டும். இதுகுறித்து நாடாளுமன்றத்திலிருந்துகொண்டு தமிழ்த்தேசியம் பேசும் எமது தமிழ் எம். பி. மார் என்ன செய்யப்போகிறார்கள்..? என்பதையும் நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.
இவ்வேளையில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக அடங்காமல் தொடரும் பெருந்தொற்றுக்கு மத்தியில் நடக்கும் வேடிக்கைகளும் சிரிப்பையும் சிந்தனையையும் தோற்றுவிக்கின்றன.
பாரதப்பிரதமர் விளக்கேற்றச்சொன்னார். இலங்கையில் ஒரு பெண் சுகாதார அமைச்சர் மந்திரித்த தண்ணீருள்ள மண்குடத்தை நதியில் விட்டார். இறுதியில் தனது பதவியையும் இழந்தார். தமிழ்நாட்டில் ஒரு பிரதேசத்தில் கொரோனோ தேவிக்கு சிலையும் செய்து வழிபடத்தொடங்கினார்கள்.
நடிகை குஷ்புவுக்கே கோயில் கட்டிய பரம்பரை அல்லவா..?
அண்மையில் ஒரு பெரிய தமிழ் நிறுவனம் திருக்கேதீஸ்வரம் புனித தலத்தில் இந்த பெருந்தொற்றை அழித்துவிடவேண்டும் என்று பணம் செலவு செய்து யாகம் வளர்த்துள்ளது. அதற்காக மூத்த தமிழ் இலக்கண அறிஞர் தொல்காப்பியரின் உபதேசத்தையும் துணைக்கு அழைத்துள்ளது.
அதனால்தான் நாம் இங்கே மகாகவி பாரதியின் தீர்க்கதரிசனமான கூற்றை இந்தப்பதிவின் தொடக்கத்தில் குறிப்பிட்டோம்.
இரக்கமுள்ள அன்பர்களே, உங்களால் முடிந்தவரையில் ஏழை மாணவர்களுக்கு உதவுவதற்கு முன்வாருங்கள்.
அவ்வாறு செய்தால், ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.
—0—
![]()