முருகபூபதியின் பாட்டி சொன்ன கதைகள்!…. ஹரிஜன் பசுபதிதாசன்…. மெல்பன்.

நூல் அறிமுகம் – நயப்புரை
முருகபூபதியின் பாட்டி சொன்ன கதைகள்
![]()
ஹரிஜன் பசுபதிதாசன் – மெல்பன்.
பாட்டி என்ற சொல்லைக் கேட்டாலே, சிறு வயதில் எம்மை ஆசை ஆசையாய் மடியில் அமர வைத்து, செல்லமாக நமக்கு பாட்டி சொன்ன கதைகள்தான் எம் கண்கள் முன் தோன்றும்.
அவ்வெழில் வாய்ந்த நினைவுகளை மீண்டும் பெரியவர்களுக்குள் தூண்டுவதுடன், இவ்வாறான கதைகள் மூலம், எம் பாட்டி நமக்கு புகட்டிய பல முக்கியமான வாழ்க்கைப் பாடங்கள், அடுத்த தலைமுறை பாலகர்களுக்கும் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் எழுதிய சிறுவர் இலக்கியப் புத்தகம் தான் “பாட்டி சொன்ன கதைகள்.”
இதனை இலங்கையில் இலக்கியன் வெளியீட்டகம் வெளியிட்டுள்ளது. அத்துடன் இச்சிறுவர் இலக்கியத்திற்கு இலங்கை கல்வி அமைச்சின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது.
ஏற்கனவே 1997 ஆம் ஆண்டளவில் இலங்கையில் மல்லிகைப்பந்தல் வெளியீடாக வந்திருக்கும் முருகபூபதியின் பாட்டி சொன்ன கதைகள் புத்தகத்தில் 12 கதைகள் இடம்பெற்றிருந்தன.
குறிப்பிட்ட புத்தகம் தமிழ்நாட்டில் குமரன் பதிப்பகத்தினால் அச்சிடப்பட்டபோது, தமிழக ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு சிறுவர் இலக்கிய வரிசையில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
குறிப்பிட்ட அந்த புத்தகத்திலிருந்து சில கதைகளை எடுத்து, அவற்றுக்கு பொருத்தமான ஓவியங்களுடன் சிறுவர்களின் கருத்தையும் கண்ணையும் கவரும் விதமாக இலக்கியன் வெளியீட்டகம் இந்தப்புத்தகத்தை வரவாக்கியுள்ளது.
பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான முருகபூபதி அவர்களினால் எழுதப்பட்ட இக்கதைகளுக்கு ஓவியர் ஆர்.கௌசிகன் படங்கள் வரைந்துள்ளார். இப்புத்தகம், வளரும் பிள்ளைகளின் நிகழ் காலத்திற்கும், எதிர் காலத்திற்கும் உபயோகமான கருத்துக்களை கதையின் ஊடாக சித்தரிக்கின்றது.
”தனித்துவம்” என்ற கதையில், ஒர் பசுவும் நாயும் எதிரும் புதிருமாய் தங்களிடையே, யார் சிறந்தவன் என்று வாக்குவாதம் செய்கின்றன. பசு “ நான் மிகவும் புனிதமான பிராணி, என்னை கோமாதா என்று அழைப்பார்கள் ” எனக் கூறவும், நாய் அதற்கு விட்டுக்கொடுக்காமல் தான் “ நன்றியுள்ள மிருகம் எனப் பெயர் பெற்றவன்” என்று சொல்லி சுய தம்பட்டம் அடிப்பதையும் காண
நகைச்சுவையாக இருந்தது. ஆனால், இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஓர் கோழியின் வசனம் மூலம், முருகபூபதி வாசகரை குறிப்பாக சிறுவர்களை சிந்திக்கவைக்கிறார்.
” யாரும் யாராகவும் மாறிவிடமுடியாது. அவரவர் தத்தம் தனித்துவம் பேணுவதுதான் பெருமை. நீயா நானா உயர்வு என்ற வாதத்தில் எந்த நன்மையும் விளையாது. பகைமை தான் வளரும்.”
ஒற்றை வசனத்தில் பிள்ளைகளுக்கான ஓர் வாழ்வின் தத்துவத்தையே ஆசிரியர் இதில் உள்ளடக்கியுள்ளார் என்பது என்னை லயிக்க வைத்தது!
அடுத்து, பூனையால் வரப்போகும் ஆபத்தில் இருந்து தப்பிப்பதற்காக, சுரண்டிக்கொழுக்கும் ஓர் பெருச்சாலியிடம் மாட்டிக்கொண்ட எலிகளின் கதைதான் என் மனதை கவர்ந்தது.
எலிகளுக்கு வந்திருக்கும் இன்னலை கடப்பதற்காக, ஓர் சிறிய சுண்டெலி தன் திட்டத்தை முன்வைக்கின்றது. ஆனால், அந்த வளர்ந்த எலிகள், அதனது குறைந்த வயதையும் சிறிய உருவத்தையும் காரணமாக காண்பித்து, எவ்வளவுதான் அதை இகழ்ச்சியாக புறக்கணித்தாலும் , “ சிறு துரும்பும் பல் குத்த உதவும்” என்று கூறி, அனைவரையும் தனது ஆலோசனையை கேட்க வைத்து வெற்றி பெறுகிறது. அந்தச் சுண்டெலியின் கருத்தை சிறு பிள்ளைகள் மட்டுமல்ல, முழுச்சமுதாயமே உணர வேண்டியவொன்று…
” நாம் ஒற்றுமையாகச் செயற்பட்டால் பூனையை அழிக்கமுடியும். முதலில் எம்மை நாம் உணர்வோம். எமது பலத்தை அறிவோம். நமது எதிரியை நாம் தான் அழிக்க வேண்டும்.”
ஒற்றுமையின் பலத்தை கூறுவதுடன், பாரதியார் எவ்வாறு “ தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ” எனக் கூறியதைப் போலவே, முருகபூபதி அவர்களும் சிறுபிள்ளைகள் தத்தம் வயதை எண்ணி தயங்காமல், தங்கள் கருத்தை துணிச்சலுடன் முன்வைக்கவேண்டும் என்ற உத்வேகத்தை அளிப்பது நிச்சயமாக சிலாகிக்கக்கூடயது!
எனவே, அனைத்து கதைகளையும் ஆராய முடியாமல் போனாலும், தொடக்கம் முதல் அந்தம் வரை என் ஆர்வத்தை சுவாரசியத்துடன் ஈர்த்தது இப்புத்தகம்.
தனித்துவம், துவேஷமின்மை, பலம், தகுதி அறிதல், கடின உழைப்பின் நிரந்தரப் பரிசு போன்ற பூர்வாங்கமான தத்துவங்களை, பிள்ளைகள் கவரும்வகையிலும் அக்கதைகளுக்கு உயிர் கொடுக்கும் யதார்த்தமான ஓவியங்களுடனும் இணைந்த இப்புத்தகம் சிறுவர்களின் வாசிப்பு அனுபவத்திற்கு சாலச்சிறந்த படைப்பு!
—-0—
![]()