கதைகள்

அடையாளம்!…. பகுதி 3 …. ( குறுநாவல் ) ….. ஏலையா க.முருகதாசன்.

இன்னும் இரண்டு மாதத்திற்குள் கல்யாணம் நடக்கப் போகுததானே, செந்திலுக்குச் சரசுவென்றும் சரசுவுக்கு செந்திலென்றும் முடிஞ்ச முடிவாகிவிட்டுது என்றோ ஒருவர் வீட்டுக்கு ஒருவர் எப்பவும் எந்த நேரத்திலும் வந்து போகலாம் என்ற எதார்த்த நிலை இருந்த போதும் வீட்டிலே யாருமே இல்லாத போது தனிமையில் செந்திலும் சரசுவும் வீட்டில் வைச்சுச் சந்திப்பதால் நேரும் சில கட்டுப்பாட்டு உடைவுகளால் என்ன நடக்கும் என்பதை இரு வீட்டாரின் பெற்றோர் தெளிவாக அறிஞ்சும் வைச்சிருந்தார்கள்.

சும்மா மெல்லுற வாய்க்கு அவல் கிடைச்சது போல,சரஸ்வதியின் வீட்டிலிருந்து பெற்றோர் வெளியே போவதையும் செந்தில் அங்கு போவதையும் கவனிச்சு அதைப்பற்றியே கதைப்பதும் அதை ஊர் முழுக்க ஊதிவிடுவதும் சிலரின் அன்றாட வேலையாகவிருந்தது..

கதையை பரப்பிவிடுவதற்குப் பின்னால் மாணிக்கராசா இருக்கிறான் என்பது செந்திலுக்கோ சரசுவிக்கோ தெரியாது.சரசு தனிமையில் இருந்த போது செந்தில் அவளின் படுக்கையறைவரை வந்து போனதற்குப் பிறகு சரசுவின் அன்றாட நடவடிக்கையில் ஒரு பதட்டமும் பயமும் இருப்பதை தாய் அறிந்து கொணடாள்.

சரசு தாயை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தத்தளித்தாள்.செந்திலும் எதையுமே முகத்தில் காட்டிக் கொள்ளாமல் சரசுவின் வீட்டுக்கு வந்து போனாலும் சரசுவின் தாயாரையே தகப்பனையோ பார்க்கத் தயங்குவதை சரசுவின் தாயும் தகப்பனும் புரிஞ்சு கொண்டார்கள்.

கடவுளே நான் நினைக்கிற மாதிரி அவர்களுக்கிடையில் ஏதும் நடக்காமல்; இருந்திருக்க வேண்டும்.அப்படி அவர்களிருவரும் நிலைதடுமாறி அது நடந்திருந்தாலும் சரசவுக்கு மாதவிடாய் வந்துவிட வேணும் என்று பதறிய சரசுவின் தாய் வேண்டாத தெய்வங்களையெல்லாம் வேண்டினாள்.

எங்களுக்குள்ளேயே இந்த விசயத்தை வைச்சிருக்க வேணும், வாய்தடுமாறித் தன்னும் யார் காதிலும் விழாமல் இருக்க வேணும் என தனக்குள் தாய் நினைச்சுக் கொண்டாள்.

இந்த விசயத்தை சம்பந்தி வீட்டாருக்கு தெரிவிப்பது நல்லது என்று நினைச்ச சரசுவின் தாய், எப்போதும் போல செந்திலின் வீட்டுக்குப் போய் கல்யாண வேலைகளை அதற்கான ஆயத்தங்கள் பற்றியும் கதைச்சுப் போட்டு தாங்கள் வெளியில் போனதற்குப் பிறகு சரசு தனிமையில் இருந்த போது செந்தில் வந்ததையும் சொல்லி அதற்கு சரசு தன்னை நிமிர்ந்து பார்க்கப் பயப்படுகிறாள் அவை இரண்டு பேருக்கும் இடையில் ஏதேன் நடந்திருக்குமோ என்று பயமாயிருக்கு என்று சரசுவின் தாய் கவலையுடன் சொல்ல’ அதற்கேன் பயப்படுறியள், இன்னும் இரண்டு மாசத்துக்குள்ளை அவைக்கு கல்யாணம் நடந்திடுந்தானே, அப்படி ஏதாவது நடந்தாலும் அதுவும் பிரச்சினையில்லை ஊர் அதைக் கதைக்கும் இதைக் கதைக்கும் என்று கவலைப்படாதீர்கள்’ என்று

செந்திலின் தாய் சொல்ல, „வயித்திலை வாங்கிட்டாள் அதுதான் இரு பகுதியினரும் அவசரம் அவசரமாக கல்யாணத்தைச் செய்து வைச்சிருக்கினம் என்று சொல்ல மாட்டினமோ’ என்று சரசுவின் தாய் சொல்ல,’அது எங்கள் இரண்டு குடும்பத்துக்கும் உள்ள விடயம்,அதில் மற்றவர்கள் தலையிட வேண்டிய அவசியம் இல்லையே „ என்று சரசுவின் தாயை ஆறுதல் படுத்தி அனுப்பினாலும்,சரசுவின் தாயால் சமாதனமடைய முடியவில்லை.

அவைக்கென்ன அவை ஆம்பிளைப் பிள்ளையை வைச்சிருக்கிறவை அவை அப்பிடித்தான் சொல்லுவினம், பொம்பிளைப் பிள்ளையை வச்சிருக்கிற நாங்கள்தான் பயப்பட வேண்டியிருக்கு,முள்ளிலை சீலை விழுந்தாலும், சீலையிலை முள் விழுந்தாலும் பாதிப்பு சீலைக்குத்தான் என்பது போல கல்யாணத்துக்கு முந்தி ஏதாவது நடந்தால் வயித்திலை வாங்கி செந்திலை மடக்கிப் போட்டாளவை என்று ஊரிலை சிலர் பல்லுக்க மேலை நாக்கைப் போட்டுக் கதைக்கப் போயினமே என்ற கலக்கத்துடன் வீட்டுக்கு வருகிறாள் சரசுவின் தாய்.

சிலர் யாருக்குமே சொல்லமாட்டம் இரகசியத்தை ஆழப்புதைத்து அதற்கு மேல் கொங்கரீட் போட்டு மூடி வைச்சிருப்போம் என்று சொன்னாலும் அவர்களையறியாமலே யாருக்காவது சாடைமாடையாகச் சொல்லிவிடுவார்கள்.

செந்தில் சரசு காதல் விவகாரம் ஊருக்கே தெரிந்து அது கல்யாணம்வரை சுமூகமாக வந்து நிற்பது ஊர் அறிஞ்ச விடயந்தான்.

கல்யாண நாள் நெருங்க நெருங்க செந்திலின் வீட்டுக்கும் சரசுவின் வீட்டுக்கும் அவ்வூரிலுள்ள சொந்தக்காரங்கள் அவ்விரு வீட்டுக்கும் புதினம் அறிவதற்கென்றே போய்வரத் தொடங்கினார்கள்.

இரு வீட்டிலும் மிளகாய் இடிச்சு தூளக்கி வைச்சிருப்பதும், கோப்பிக் கொட்டை வறுத்து இடிச்சு தூளாக்கி வைச்சிருப்பதிலிருந்து ஊருக்கு அது புதினமாக்கப்பட்டது போய் வந்தவர்களால்.

போய்வந்தவர்களில் பாக்கியலட்சுமி செந்திலின் தாயிடம் „ என்னக்கா செந்தில் இப்ப ஒவ்வொருநாளும் உனக்கு மருமோளாக வரப்போறவளைத் தேடிப் போறான் போல, மருமோளின்ரை தாய்தகப்பன் இல்லாத நேரமும் பார்த்துப் போய் வருவதாய் என்ரை காதிலை வந்து விழுந்துது எதற்கும் கவனமாய் இரு „ என்று சொந்தக்கார சொல்ல,’ அவன் என்ன இன்று நேற்றா போய் வருகிறான் யங்கி போடாத காலத்திலிருந்துதானே போய் வருகிறான், மருமோளுக்கு தாலி கட்டாத குறை மட்டுந்தான் இப்ப செந்திலும் சரசுவும் புருசன் பெண்சாதி மாதிரித்தானே’ என்று செந்திலின் தாய் சொல்ல, அதை நல்லாய் மனப்பாடம் செய்து மனசிலை பதிய வைச்ச பாக்கியலட்சுமி, செந்திலின் தாயிடம் போன கையோடை பக்கத்து வீடான சரசுவின் வீட்டுக்குப் போய், இப்பதானக்கா உங்கை பக்கத்து வீட்டுக்குப் போயிட்டு வாறன்,சரசு தனிய இருக்கேக்கை செந்தில் வந்து போறதைப் பற்றிக் கேட்க அதுக்குச் செந்திலின்ரை தாய் இப்பவும் அவை இரண்டு பேரும் புருசன் பெண்சாதி மாதிரித்தானே என்று எடுத்தெறிஞ்சு பேசுறா’… என்று பாக்கியலட்சுமி சொல்லிக் கொண்டிருக்கும் போதே சரசுவின் தாய்க்கு சுளீர் என்றது,அந்த நேரம்

பார்த்து சரசு கோலுக்கு வந்து கதிரையில் உட்கார „மெய்யே அக்கா நான் கேட்கவென்று நினைசு;சு ஒரு விசயத்தை மறந்து போனன்’ என்று இழுக்க, என்ன என்பது போல சரசுவின் தாய் பார்க்க „ இல்லை பிள்ளையின்ரை சூதக நாள் பார்த்துத்தானே நாள் குறிச்சனீங்கள்,எப்படியும் கல்யாணப் பொம்பிளைக்கு சூதகம் வந்து எட்டாவது நாள் இருக்கத்தக்கதாகத்தான் நாள் வைக்கிறவை,நீங்கள் நாள் வைச்ச நாளைப் பார்த்தால் பொம்பிளையலுக்கு வருகிற நாள் கணக்கைப் பார்த்தால் சரசுவுக்கு இன்னும் ஐஞ்சாறு நாளைக்குள்ளை வந்தால்தானக்கா வைச்ச நாளுக்குச் சரியாக இருக்கும் „ என்று சொல்ல ஏற்கனவே சரசுவை நினைச்சுப் பயந்து கொண்டிருந்த தாய்க்கு படபடப்பு ஏற்பட கதிரையிலை உட்கார்ந்து பாக்கியலட்சுமி தாயுடன் கதைச்சுக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த சரசு திடுக்கிட்டு தாயாரையும் பாக்கியலட்சமியையும் பார்த்தவள் தனது பதட்டைத் காட்டக்கூடாது என்பதற்காக முகத்தை இயல்பாக வைச்சிருப்பது போல நடிச்சாலும் அவளின் முகம் மாறிப் போனதை பாக்கியலட்சுமி கவனிக்கத் தவறவில்லை.

„சரியக்கா நான் வாறன் „ என்று சரசுவின் வீட்டிலிருந்து வெளிக்கிட்ட பாக்கியலட்சுமி பெரும் புதினத்தை தலையில் சுமந்து செல்வது போலச் சென்றவள் விளம்பரம் அடிச்சு ஒட்டாத குறையாக தன்னொத்த இரண்டொருவருக்குச் சரசுவின் வீட்டிலிருந்து அறிஞ்ச விடயங்களைச் சொல்ல கேட்டவர்கள் தங்களுடைய கற்பனைத் திறனுக்கேற்ப அதை உருமாற்றி „கல்யாணத்துக்கு முந்தியே சரசுவுக்குச் சூதகம் வரவில்லையாம் இதென்ன கூத்து,செந்திலும் சரசு தனிய இருக்கேக்கை போய்வாறவனாம், அவனும் என்ன செய்யிறது பயிர் அவன்ரைதானே மேய்ஞ்சிருப்பான் என்று கொச்சைத்தனமாகவும் ஆணியடிச்சாப் போல உண்மையென்று சொல்ல அந்தச் செய்தி மாணிக்கராசாவின் காதுக்கும் எட்டியது.

சிறு வயதிலிருந்தே செந்திலின் மீதும் சரசுவின் மீதும் வன்மத்தை வளர்த்து வந்த மாணிக்கராசா தனது பழிதீர்க்கும் படலமாக இழிவான செயலை ஆரம்பித்தான்.

எதார்த்தமாக கல்யாண வேலைகளுக்கு உதவி செய்யப் போவது போல சரசுவின் வீட்டுக்கு ஒருநாள் போனபோது அவன் தங்களுடைய வீட்டுக்கு வந்ததை விரும்பாத சரசு வேண்டா வெறுப்பாக அவனை வரவேற்று கதிரையில் உட்காரச் சொன்னாள்.

அடுப்படிக்குள் இருந்து வந்த சரசுவின் தாய் மாணிக்கராசாவைக் கண்டதும்,அவன் வீட்டுக்குள் வந்ததில் விருப்பமில்லாவிட்டாலும், „தேத்தண்ணி கொண்டு வாறன்; குடியுங்கோ’ என்று சொல்ல „ வேண்டாம் இப்பத்தான் வீட்டிலை குடிச்சிட்டு வாறன்,சரசுவின்ரை கல்யாண நாளும் நெருங்குது ஏதாவது உதவி தேவை என்றால் தயங்காமல் கேளுங்கோ, அது கேட்கத்தான் வந்தனான்’ என்று சொன்ன மாணிக்கராசா எழுந்து போய்விடுகிறான்.

அதற்குப் பிறகு சரசுவின் குடும்பத்தில் மிகுந்த அக்கறை உள்ளவனாக கிழமைக்கு ஒருமுறையாவது மாணிக்கராசா சரசுவின் வீட்டுக்க வந்து போக,அதை விரும்பாத சரசு „இவன் ஏனம்மா தேவையில்லாமல் இஞ்சை வந்து போகிறான்,எனக்கு இவன் வாறது கொஞ்சமும் பிடிக்கவேயில்லை’ என்று சொல்ல „நான் என்ன செய்யிறது

வாறவனை வரவேண்டாம் என்று என்னெண்டு முகத்திலை அடிச்சமாதிரிச் சொல்லுறது „என்று சொல்ல, அதைக் கேட்டுக் கொண்டிருந்த தகப்பனும் „விடு பிள்ளை அவனைப் பற்றித் தெரியுந்தானே, நெருப்பென்றால் சுடவா போகுது’ என்று சொல்லுகிறார்.

செந்திலிடமும் மாணிக்கராசா வீட்டுக்கு வந்து போவதை தான் விரும்பவில்லை என்று சரசு சொல்ல,’ ஒரு வேளை அவன் திருந்திவிட்டானோ தெரியாது, என்னட்டையும் கேட்டவன் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்றால் கேட்கச் சொல்லிச் சொன்னவன் என்று சரசுவைச் சமாதானப்படுத்தினான்.

சரசுவின் தாய்க்கோ மனசில் நிம்மதியில்லாமலிருந்து.கதைபிடுங்க வந்த பாக்கியலட்சுமியிடம் சரசுவுக்கு மாதவிடாய் வர இன்னும் ஐஞ்சாறு நாட்கள் இருப்பதாக சரசுவின் தாய் சொல்லியிருந்தாள்.

ஐஞ்சாறு நாட்கள் பொறுத்து மகளிடம்,’சுகமில்லாமல் வரேலையா’ என்று கேட்க,தனது பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,’ அம்மா அது வர ஒருநாள் இரண்டு நாள் பிந்தும் முந்தும் „ என்று சொல்லி தன்னையும் தாயையும் சமாதானப்படுத்தினாள்.

ஆனால் ஒரு கிழமையாகி பத்து நாளாகியும் மாதவிடாய் வரவேயில்லை.சரசுவுக்கு பயம் பிடிச்சுக் கொண்டது.சோர்வோடு அறையில் கட்டிலில் உட்கார்ந்து அழுது கொண்டவளிடம் „ ஏனடி இப்படிச் செய்து துலைச்சாய் ஆம்பிளையள் ஆவலாதிப்பட்டாலும் நீயெல்லோடி மன அடக்கமாயிருந்திருக்க வேணும், இப்ப என்ன செய்யிறது கொப்பா அறிஞ்சா உன்னைப் பற்றி என்ன நினைப்பார்’என்று சரசுவின் தாயார் மகளிடம் பொரிஞ்சு தள்ளிக் கொண்டிருக்கும் போது,செந்தில் வர, யாரோ வரும் அசிகை தெரிஞ்சு,அறைக்குள்ளிருந்து எட்டிப் பார்த்த சரசு, கோலில் செந்தில் நிற்பதைக் கண்டதும், கையைப் பிடிச்சு இழுக்காத குறையாக அறைக்குள் வரச் சொன்னவள் „ நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து என்ன காரியம் செய்து வைச்சிருக்கிறியள் இரண்டு பேரும் படிச்சனீங்கள்தானே, உங்கள் இரண்டு பேருக்கும் தெரியேலையா இப்படி அவசரப்பட்டால் என்னென்ன நடக்குமென்று, ஒரு இரண்டு மாசம் பொறுத்துக் கொள்ள முடியாமல் போச்சுதே உங்கள் இரண்டு பேராலும் அவளை விடு நீங்களாவது யோசிச்சு இருக்க வேண்டாமா„ என்று கோபமும் அழுகையுமா சரசுவின் தாய் சொல்ல, எதுவுமே சொல்ல முடியாத நிலையில் தலையைக் குனிஞ்சு கொண்டு கதவோடு சாய்ஞ்சு கொண்டிருந்த செந்தில் முகத்தில் வழிஞ்ச வியர்வையை கைகளால் துடைச்சபடி தரையைக் குனிஞ்சு பார்த்தபடியே நின்றவன்,சரசுவிடம் வாறன் என்று சொல்லியபடி போய்விடுகிறான்.

யாருக்குமே இது தெரியப் போவது இல்லை,அதுக்கிடையில் தனக்கும் சரசுவுக்கும் கல்யாணம் நடந்திடும், அதுக்குப் பிறகு பிறக்கப் போகும் குழந்தை நாள் கணக்கிலோ மாசக் கணக்கிலோ முந்திப் பிறந்தாலும் அதைப் பற்றி யாருமே

ஆராயமாட்டார்கள் என்று தனக்குத்தானே நிம்மதியைத் தேடிக் கொண்டாலும் அதை சரசுவின் தாயிடமோ, சரசுவிடமோ அவனால் சொல்ல முடியாது.

என்ன செய்வது என்று தெரியாமல் பதகலிப்பட்ட சரசுவின் தாய் கடுக்காயை வாங்கி அதை சிரட்டையில் வைச்சு உரசி „இந்தா எந்தக் கேள்வியும் கேட்காமல் கண்ணை மூடிக் கொண்டு இதைக் குடி இதுவாவது சரிப்படுத்துமா என்று பார்ப்பம்’ என்று சரசுவின் தாய் சொல்ல வாங்கிக் குடிக்கிறாள் சரசு.

ஒரு யொக் நிறையைத் தேத்தண்ணியைப் போட்டுக் குடுத்து முழுசையும் குடி என்று சொல்லிக் குடுக்கிறாள்.

அப்பொழுது பாக்கியலட்சுமி வருகிறாள்……

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *