கட்டுரைகள்

உளவு நிறுவனங்கள்!…. (பகுதி13) ….. மௌனஅவதானி.

உளவு நிறுவனங்கள் ஒரு தொழிற்சாலையின் பொருளாதார ரீதியான வீழ்ச்சிக்கு ஒரு நாட்டுக்குள் புகுந்து எவ்வாறு ஒற்றர் வேலைகளைப் பார்க்கின்றது என்பதையும் அதற்கு ஆண்பெண் ஒற்றர்களை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதையும் பார்த்தோம்.

ஒரு நாட்டினுடைய வளர்ச்சிக் கட்டமைப்புகளைச் சிதைப்பதற்காக பல்வேறு வடிவங்களில் உளவு நிறுவனங்கள் நுழைந்துவிடுகின்றன.

மக்களோடு மக்களாக ஒற்றர்கள் சுற்றுலாப் பயணிகளாக இலக்கு வைக்கப்படும் நாட்டுக்குள் புகுந்துவிடுவார்கள்.இவர்கள் உளவு நிறுவனங்களின் ஒற்றர்கள் என்பதை எவராலுமே கண்டுபிடிக்கவே முடியாது.

தாம் சுற்றுலா செய்வதில் விருப்பமுள்ளவர்கள் என்பதை மிகவும் அவதானமாக இருந்து தமது உணர்வுகளை வெளியிடுவார்கள்.

சுற்றுலாப்பயணிகளாக வரும் உளவு நிறுவன ஒற்றர்கள் தங்கும் விடுதிகள் சுற்றுலா செல்லும் இடங்களையெல்லாம் வௌ;வேறு கோணங்களில் விதம் விதமாக படமெடுத்துக் கொள்வார்கள்.படமெடுத்து அவற்றை சேமித்து வைப்பது தமது பொழுது போக்கு எனவும் சொல்வார்கள்.

ஆங்காங்கே எடுக்கப்படும் படங்களை விநாடிக்கு விநாடி தமது தலைமையகத்துக்கு அனுப்பி வைத்துக் கொண்டே இருப்பார்கள்.

பொதுவாக பார்க்கும் போது இது வெறும் படந்தானே இதனால் என்ன ஆகப் போகின்றது எனச் சாதாரண மனிதன் சிந்திக்கலாம்.

ஆனால் ஒரு நாட்டினுடைய அனைத்துக் கட்டமைப்பினையும் ஆட்டம் காண வைப்பதும் சிதிலமடைய வைப்பதுமே உளவு நிறுவனத்தின் முக்கிய நோக்கமாக இருப்பதால் ஒவ்வொரு சின்னச் சின்ன விடயங்களிலும் அவர்களுக்கு தேவையான விடயமாகவே இருக்கும்.

ஒரு நாட்டின் கட்டமைப்பு சிதைவதற்கு முக்கிய தளங்களாக இருப்பவை இராணுவம், பொருளாதாரம், சமூக இறுக்கம்.

சமூக இறுக்கம் தேசிய உணர்விலிருந்தும் விசுவாசத்திலிருந்தும்; எழுவதுதான்.இந்தச் சமூக இறுக்கத்தை கொடுப்பதற்கு ஒவ்வொரு தனிமனிதனினதும் வளமான வாழ்க்கை முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.மகிழ்ச்சியான வாழ்க்கையை ஒவ்வொரு மனிதனும் நாடியே நிற்கின்றான். அந்த வாழ்க்கையை ஒரு நாடு கொடுக்க வேண்டும் என்றால் பொருளாதாரக் கட்டமைப்பு சிறப்பாக இருக்க வேண்டும்.தனக்குரிய பாதுகாப்பை இராணுவத்திடமிருந்தும் தனக்குரிய மகிழ்ச்சியை பொருளாதாரக் கட்டமைப்பிலிருந்தும் எதிர்பார்த்து நிற்கும் ஒருவனின் மனதை சிதையுறச் செய்வதே உளவு நிறுவனங்களின் முக்கிய வேலையாகும்.

சுற்றுலாப்பயணிகளாக வருபவர்கள் உளவு நிறுவனங்கள் எங்கெல்லாம் தமது ஒற்றர்களை அனுப்ப வேணடுமென்பதை தெரியப்படுத்தும் ஒற்றர்களாக பணிபுரிவார்கள்.சுற்றுலாப்பயணத்தின் போது பலரைச் சந்திப்பார்கள்.சந்திப்பின் போது எதேச்சையாக பேச்சுக் கொடுப்பது போல பேச்சுக் கொடுத்து தம்மொடு உரையாடுபவர் தமது உளவு வேலைக்கு முக்கியமானவரா எனக் கண்டறிவார்கள்.

அந்தக் கண்டறிதல் மூலமாகவே தாம் அறிந்து கொள்ள வேண்டிய பல இரகசியங்களுக்கு உரியவர் என அவர்கள் தீர்மானிக்கின்றனர்.

அந்தந்த அமைச்சுக்களுக்கு பொறுப்பாகவிருக்கின்ற அமைச்சர்கள் தொடங்கி அதிகாரிகள்,பல்வேறு திணைக்களங்களில் பணிபுரிகின்ற அதிகாரிகள் வரை விலையுயர்ந்த ஐந்துநட்சத்திர விடுதிகளில் தங்கி ஓய்வெடுத்தல் அல்லது வெளிநாட்டு பிரமுகர்களைச் சந்தித்தல் போன்றவை பரவலாகவே நடைபெறுகின்ற விடயமாகும்.

சுற்றுலாப்பயணி என்ற போர்வையுடன் விடுதிகளில் தங்கியிருக்கின்ற ஒற்றர்கள் அவ்விடுதியில் தங்கியிருப்போர் யார் யாரென்பதை அறிவதில் கவனம் செலுத்துவார்கள்.

விடுதிகளுக்கு பொறுப்பானவர்களை தமது கைக்குள் போடுவதற்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்வார்கள்.பல இலட்சக்கணக்கான பணத்தை அதற்காக செலவழிப்பார்கள்.

ஒரு திட்டத்தைச் செய்வதற்காக அனுப்பப்படும் ஒற்றர்கள் பணத்தைச் செலவழிக்க வேணும் என்பதற்கமைய அவர்களை பெரும் கோடீசுவரர்களாக காட்டுவதற்காக அவர்கள் பெரும் தொழில் அதிபர் என்ற முகவரியுடனும் அதற்கமைவான கடவுட் சீட்டுடனும் விடுதிக்குள் நுழைவார்கள்.

கோடிசுவரரான தொழிலபதிர் சுற்றுலூப்பயணியாக வந்திருக்கிறார் என்பதுதான் பொதுவான பார்வையாக இருக்கும்.ஒற்றர்கள் குடும்பமாகக்கூட வருவார்கள்.கணவன் மனைவி என்ற கடவுட் சீட்டுடன் வரும் ஒரு ஆண் பெண் ,ஆண் ஒற்றராகவும் பெண் ஒற்றராகவும் இருக்க வாய்ப்புண்டு.

தாராளமான தன்மை,எவருமே சந்தேகம் கொள்ளாத வகையில் யதார்த்தமான பேச்சு இவற்றின் மூலம் விடுதிகளில் தங்கியிருப்பவர்கள் பற்றி அவர்கள் அறிந்து கொள்வார்கள்.

விடுதிகளில் தங்கியிருப்பவர்கள் மிகவும் மக்கியமானவர்கள் என்பதை விடுதிப் பொறுப்பாளர் மூலம் அறிந்து கொண்ட போதும் தனது இரகசிய அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கருவிகள் மூலம் அவற்றைப் பதிவு செய்து கொண்ட போதும்கூட விடுதிப் பொறுப்பாளர் சொல்வதை ஏனோதானோ கேட்பது போல அவர்கள் நடிப்பார்கள்.

அவர்கள் மதுபானம் குடித்துக் கொண்டோ அல்லது உணவு உண்டு கொண்டோ கேட்கும் போது விடுதிப் பொறுப்பாளர் சொல்லும் தகவலைவிட மதுபானச் சுவையைப் பற்றியும் உணவு சுவைபற்றியுமே இரசித்துச் சொல்வது போல நடிப்பார்கள்.

விடுதிப் பொறுப்பாளர் சொல்லுகின்ற தகவல் எதுவுமே தனக்கு தேவைப்படாதது போலவும,; ஏதோ நேரம் போவதற்காக கதைத்துக் கொண்டிருத்தல் என்பதை விடுதிப் பொறுப்பாளர் உணருமாறு ஒற்றர் நடிப்பார்.

மீன் சிக்குமா என தூண்டில் போட்டுக் கொண்டிருப்பவன் மிதப்புக் கட்டையில் கண்ணாயிருப்பது போல எதேச்சையாக சந்திப்பது போல தனக்குத் தேவையான இரகசியங்களைக் கொண்டவரா என தூண்டிலில் சிக்க வைப்பதில் ஒற்றர்கள் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

 

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *