விளிம்பு நிலையில் இருக்கும் தமிழரும் தமிழ் தேசியத்தின் அவசியமும்!….. தொடர்…9 ….. சங்கர சுப்பிரமணியன்.

![]()
நாம்தாம் திராவிட மொழிகளை சகோதர மொழிகளாக நினைக்கிறோமோ ஒழிய அவர்கள் அப்படி நினைப்பதில்லையே. அப்படி இருந்தால் காவேரி, முல்லைப் பெரியாறு என்று முட்டிக்கொண்டு நிற்பார்களா? ஆந்திரக்காட்டில் செம்மரக்கடத்தல் என்று தமிழரை சுடுவார்களா? தனக்கு என்று வரும்போது அங்கே சகோதரத்துவம் சாகடிக்கப் படுகிறது.
ஏற்பார்களோ? மாட்டார்களோ? நம்மிலேயே சிலர் (கண்டிப்பாக எல்லோரும் அல்ல) தொப்புள்கொடி உறவு என்று ஒன்றிருந்தாலும் தொப்புள் கொடியாவது மண்ணாங்கட்டியாவது நாங்கள் வேறு நீங்கள் வேறு என்று சொல்லும் தமிழ் அபிமானிகளும் நம்மிடம் இல்லாமலில்லை.
தமிழ்நாடும் இலங்கைத் தீவும் ஒரே நிலப்பரப்பாக இருந்தது என்று வரலாறு நிரூபித்திருப்பதையும் இரண்டிற்கும் இடேயே உள்ள தூரம் அதிகமில்லை என்பதோடு ஆழமும் அதிகமில்லை என்பதையும் எல்லோரும் அறிவர்.
இவற்றையெல்லாம் மறுத்து அல்ல மறந்து
இன்றளவும் வேற்றின மக்களைப் போன்ற நிலைப்பாட்டினை எடுக்கும் தொப்புள்கொடி உறவுகள் இல்லை என்பதை மறுக்க இயலுமா அல்ல மறக்கத்தான் முடியுமா?அப்படியிருக்க மொழிக்கலப்பு ஏற்பட்டு வேறுமொழியாய் பிரிந்த பின்னும் நாம் ஒரே இனம் நீயும் நானும் ஒன்று என்றால் எப்படி ஏற்பார்கள்? இதனால் திராவிட மொழியினர் தமிழை ஏற்றுக் கொள்வார்களா என்ன?
பின் திராவிடம் திராவிட மொழி என்பனவெல்லாம் எதற்காக? வேறு எதற்காக தமிழ்நாட்டிலே இருந்து கொண்டு தமிழ்நாட்டை திராவிடர்கள் ஆள்வதற்குண்டான இரட்டைக் குடியுரிமை போன்றதன்றி வேறென்ன? இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் மட்டும்தான் இந்த இரட்டைக் குடியுரிமை திராவிடர்களுக்கு எழுதாத சட்டமாக உள்ளது என்றால் எவராலும் மறுக்க இயலாது. ஏனெனில் தமிழ்நாட்டைத் தவிர வேறெந்த மாநிலத்திலும் அம்மாநிலத்தவர் தவிர வேறெந்த மாநிலத்தவரும் அம்மாநிலத்தை ஆண்டுவிட முடியாது.
தமிழ்நாட்டில் தான் தமிழனைத்தவிர வேற்றுமொழி பேசுபவனை வருங்கால முதல்வர் என்று வாய்கூசாமல் கூறும் ஒரு கூட்டம் உலா வருகிறது. அந்த அளவுக்கு திரைப்பட மோகத்தைக் காட்டி சாராயக் கடையையும் திறந்து விட்டு மக்களின் மூளை மழுங்கடிக்கப் பட்டுள்ளது. தமிழ்மொழி மட்டும் காப்பாற்றப் பட்டுள்ளது. அப்புறம்தான் தெரிந்தது. தமிழ் காப்பாற்றப் படவில்லை அதிலொரு ரகசியம் உள்ளதென்று. அது என்ன ரகசியம்? அதை புரிந்து கொண்டால் தமிழன் எவ்வளவு ஏமாளியாக இருந்திருக்கிறான் என்பது புரியவரும்.
இதில்வேறு தமிழர் அறிவார்ந்த சமுதாயம் என்ற பெருமை. இந்த ஏமாளித்தனத்தையே அறிவார்ந்த செயல் என்று நினைக்கிறானோ என்னவோ? இனி அந்த ரகசியத்தைப் பற்றிப் பார்ப்போம். இந்தி கற்றுத்தரும் தனியார் பள்ளிகளை தொடங்கி அதன்மூலம் வருவாய் ஈட்டுவது. இந்த பள்ளிகளெல்லாம் யாருக்கு? தமிழருக்கா? இல்லவே இல்லை. தமிழர் நாம்தாம் இந்தி எதிர்ப்பில் இருக்க இப்பள்ளிகளெல்லாம் யாருக்கு? இது தமிழரல்லாத தமிழருக்கும் தமிழரென்று சொல்லிக் கொண்டே தமிழுக்கு விரோதமாக இருப்பவர்களுக்கும்தான்.
இந்தி எதிர்ப்பு என்ற ஒன்றை தீ போல் அணையாமல் பார்த்துக் கொள்ளவும் வேண்டும். அதே சமயம் இந்தி கற்றுக்கொடுக்க தனியார் பள்ளிகளையும் அதிகம் திறக்க வேண்டும். உண்மையிலேயே இந்தி எதிர்ப்பு என்றால் இந்தி கற்றுத்தரும் தனியார் பள்ளியையும் அல்லவா எதிர்த்திருக்க வேண்டும். இதைத்தான் பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்பது. இதனால் வரும் பின்விளைவு?
தமிழரல்லாத தமிழருக்கு மறைமுகமாக அங்கே இந்தி பயிற்றுவிக்கப்படுகிறது. அதனால் தமிழ்நாட்டுத் தமிழரல்லாத
தமிழருக்கு மத்திய அரசிலும் வேலைவாய்ப்பு மாநில அரசிலும் வேலைவாய்ப்பு. தமிழனுக்கு தமிழ்நாட்டில் மட்டுமே வேலைவாய்ப்பு. நன்றாக படித்த தமிழருக்கும் அவ்வளவாக தமிழ்நாட்டில் வேலை கிடைப்பதில்லை. வேலையை நாடி வெளி நாட்டுக்கு படையெடுக்கிறான். படிக்காத தமிழனுக்கும் உள்நாட்டில் வேலை இல்லை.
தொழிலும் வியாபாரமும் வேற்றுமொழி பேசுவோரிடமே பெருமளவுள்ளது. இவர்கள் அவர்கள் மொழி பேசுவோருக்கே முன்னுரிமை கொடுக்கிறார்கள். அல்லது குறைந்த சம்பளம் கொடுக்கிறார்கள். இவ்வாறு வெளிநாடுகளுக்கு பெரும்பாலான தமிழர்கள் எல்லாம் சென்றுவிடுவதால் அந்த வெற்றிடத்தை நிரப்ப வேற்று மாநிலத்தைச் சேரந்தவர்களை தமிழ்நாட்டுக்குள் அதிக அளவில் அழைத்து வரப்படுகிறார்கள். இதுபோல் சென்றால் எதிர்காலத்தில்
தமிழ்நாட்டில் தமிழர் குறைந்த அளவிலேயே இருப்பார்கள்.
அடுத்ததாக தமிழரின் பெருமையை இருட்டடிப்பு செய்யும் வேலைகளைப்பற்றி பார்ப்போம். இந்தியாவில் கிடைக்கப் பட்ட கல்வெட்டுக்களில் அறுபது சதவிகிதத்துக்கும் மேல் தமிழ் கல்வெட்டுக்களே. உலகின் மூத்தமொழியும் தமிழே. இந்திய மண்ணில் தோன்றிய மொழியும் தமிழே. இந்த தகுதி உலகிலுள்ள வேறெந்த நாட்டிலாவது அங்குள்ள ஒரு மொழிக்கு கிட்டியிருந்தால் அந்நாட்டவர் அம்மொழியை எப்படியெல்லாமோ கொண்டாடியிருப்பர். இந்தியாவில் அந்த மொழியை தொந்தரவு செய்யாதிருந்தாலே போதும்.
செம்மொழி தகுதியையே போராடி பெறவேண்டியிருந்தது. அதுவும் கேலிக்கூத்தானது. பிள்ளையார் கோவிலில் சுண்டல் கொடுப்பதுபோல், ஒருசாரார் குரல் எழுப்பியதும் சுண்டல்போல் எல்லோருக்கும் வழங்கப்பட்டது. எல்லாமே வாக்குச்சீட்டின் அடிப்படையில் முடிவெடுக்க படுவதுதானே. மூத்தமொழி என்பதன் அடையாளம் விமானம் முதல் வின்கலங்கள் வரை அவ்வெழுத்துக்களை சுமந்து சென்றிருக்கவேண்டும். இந்தியா முழுக்க பாடமாக்கப்பட்டிருக்க வேண்டும்.
அப்படியெல்லாம் எந்த அங்கீகாரமோ மதிப்போ கிடைத்ததில்லை. மாறாக இந்தி திணிப்பை கையாண்டார்கள். ஒவ்வொரு முறையும் அதை அவர்கள் தீவிரப் படுத்தும்போது அதைத் தடுக்க பல தமிழரை பலிகொடுத்து மொழியை பாதுகாக்க வேண்டியிருந்ததை உலகம் மறந்திருக்காது.
கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களின் படிகள் ஊட்டியில் பாதுகாக்கப்பட்டு வந்தன. அதை எக்காரணத்திற்காக பெங்களூருக்கு மாற்றினார்கள்? தெரியவில்லை.
கீழடி ஆய்வுக்குப்பின் பல உண்மைகள் வெளிவந்துள்ளன. சிந்து சமவெளி மற்றும்
ஹரப்பாவின் நாகரிகத்தை கீழடி நாகரிகம் பெருமளவில் ஒத்திருப்பதால் சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் தமிழர்களே என்பதற்கு வலுசேர்ப்பதால் கீழடி ஆய்வு முடக்கப் பட்டிருப்பதாகவும் முடக்கப்படுவாதாகவும் சில ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுவரை தமிழை திராவிடர் காத்தே வருகின்றனர் என்று நினைத்து வந்தோம். ஆனால் அது அப்படியில்லை என்பதை இப்போது சிறிது சிறிதாக வெட்டவெளிச்சமாகிறது.
தம்மை வளப்படுத்திக் கொள்ள தமிழர் முதுகில் ஏறி சவாரி செய்தனரோ என்ற ஐயப்பாடுகள் பெரிய அளவில் எழத்தொடங்கின. இதை மெய்ப்பிக்கும் வகையில் திராவிடர்களும் தமிழை இருட்டடிப்பு செய்யும் நிலைப்பாடுகள் அம்பலப்படுகின்றன. இந்தியத் தொல்துறைப் பிரிவில் அங்கமாக இயங்கும் தமிழ்நாடு சம்பந்தபட்டவற்றை தமிழை முன்னிருத்தாமல் திராவிடர் தொல்பொருள் ஆய்வு என்ற முறையில் மாற்றமுயன்று அதற்கு எதிர்ப்பும் தொடங்கியுள்ளது.
அடுத்ததாக சங்ககாலம் என்பது தமிழர் சம்பந்தபட்டது. அதற்கும் திராவிடத்துக்கும் எள்ளளவும் சம்பந்தம் கிடையாது. திராவிடம் திராவிட மொழிகள் என்பதெல்லாம் கிறிஸ்து பிறந்து பல நூற்றாண்டுகளுக்குப்பின் நிகழ்ந்தவை. தமிழர் வரலாற கிறிஸ்துவின் பிறப்புக்கு முன் பல ஆயிரம் ஆண்டுகள் முந்தியவை என்பதை உலகே நன்கறியும். இப்படியுருக்கும் போது தமிழர் வரலாற்றை நீர்த்தும்போகுப் வகையில் பல முன்னெடுப்புக்கள் நடைபெற அடித்தளமிட எத்தனிக்கிறார்கள்.
தமிழரின் பாரம்பரியமான சங்ககால இலக்கியங்களை எளிமைப் படுத்தி மலிவு விளையில் வெளியிட முயற்சிகள் நடைபெற உள்ளதாக செய்திகள் வந்தன. நல்ல முயற்சி வரவேற்கத் தக்கதே. ஒட்டுமொத்த தமிழரும் தமிழர் வரலாற்றினயும் பண்பாட்டு உயர்வுகளையும் அறியமுடியும். தமிழரிடையே நம் இனம் சார்ந்த விழிப்புணர்வும் ஏற்படும். இதையும் தமிழ்நாட்டு அரசின் மேற்பார்வையில் நடைபெறும் என்றதால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும் அதன் அரசின் மீதும் தமிழருக்கு எந்த அளவுக்கு நம்மிக்கையை கொடுக்கும் என்று சொல்லத் தேவையில்லை.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()