சிங்கப்பூரில் சிலகாலம்!…. 35 ….. ஏலையா க.முருகதாசன்.

லிப்டுக்குள் நாங்கள் மூவரும் ஏறியதும்,எமது வீட்டுக்கு எதிர் வீட்டிலிருந்து வந்த பெண்’ நீங்களும் ஏர்த் புளோருக்குத்தானே போகிறீர்கள்’ என்று எம்மிருவரையும் பார்த்துக் கேட்க,நான் „ம்’ என்று தலையாட்ட யோகமலர் „ஆமாங்க’ என்றாள்.அந்தப் பெண் தரைத்தளத்துக்குரிய பொத்தானை அமத்த கதவு மூடிக் கொள்ள லிப்ட் கீழே இறங்கியது.
எங்களைப் பார்த்து நட்புடன் சிரித்தவள்’ நானும் யாழ்ப்பாண வம்சாவழிதான் என்னோட தாத்தா பாட்டியும் சிறீலங்காவிலேருந்து மலேசியா கோலாலம்பூருக்கு வந்தாங்க, என்னோட அப்பா கோலாலம்பூரிலேதான் பிறந்தாரு.யாழ்ப்பாணத்திலேருந்து அம்மா வந்து அப்பா மறி பண்ணினாரு……’அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே லிப்ட் தரைத்தளத்தில் வந்து நின்றது.சிறீலங்காவிலை எந்த இடம் என்று கேட்க நான் நினைச்ச போதும் எதிர் வீட்டிலைதானே இருக்கிறவர் பிறகு கேட்கலாம் என்று பேசாமலிருந்தன்.
நாம் மூவரும் லிப்டைவிட்டு வெளியே வந்ததும், நாங்கள் ராக்சியை நோக்கிப் போக, அந்தப் பெண் „நான் கோவிலுக்குப் போறேங்க,அப்புறமா டீரைலா பேசுவோமங்க’ என்று சொல்லிக் கொண்டே பஸ் நிலையத்தை நோக்கி நடந்தாள்.
எனது கையில் சூட்கேஸகள்; இருந்த போதும் எங்கை போகிறீர்கள் என்று அவள் கேட்கவில்லை.
சிறீலங்காவைச் சேர்ந்த ஒருத்தரைச் சந்தித்ததில் அந்தப் பெண்ணுக்கு மகிழ்ச்சியிருந்ததை’எனது தாத்தாவும் பாட்டியும் யாழ்ப்பாணந்தான்’ என்று முகமலரச் சொன்னதிலிருந்து புரிந்து கொள்ள முடிஞ்சது.
அந்தப் பெண் எங்களைக் கடந்து நேராகப் போய்க் கொண்டிருக்க, நாங்களிருவரும் எமக்கு வலப்பக்கமாக நிறுத்தப்பட்டிருந்த ராக்சியின் கதவைத் திறந்து பின்னிருக்கையில் போய் உட்கார்ந்து கொண்டே’ சொறி போர் த டிலேய்’ என்றன்.
சிங்கப்பூரில் நன்றி சொன்னாலோ மன்னிப்புக் கேட்டாலோ அதற்கு அவர்கள் நோ புறப்பளம் லா „ என்றோ „நோ மென்சன் லா’ என்று சொல்லும் ஒரு பண்பு உண்டு.
நாங்கள் வரப்பிந்தியதற்கு அவரிடம் மன்னிப்புக் கேட்க,அவரும் அதை இலகுவாக ஏற்றுக் கொண்டு „நோ புறப்பளம் லா „ என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.
ராக்சி நாங்கள் தங்க வேண்டிய கொட்டலை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது.எனது மனசில் பல எண்ணங்கள் வந்து போய்க் கொண்டிருந்தன.
எனது மனச்சாட்சி என்னைப் பிசைந்து கொண்டிருந்தது.தவறுகள்கூட அந்தந்த நேரத்தின் தேவைக்கு ஏற்ற விதத்தில் நியாயப்படுத்தப்பட்டு தவறான முடிவுகள் சரியானதாக மனச்சாட்சியைப் பற்றி அக்கறை கொள்ளாது ஒப்புக் கொள்ள வைச்சு விடும்.
அதற்கு விதியை பக்க ஆதரவாக வைச்சுக் கொள்வோம்.அதுதான் நடந்து கொண்டிருந்தது.
எனது கைகளை தனது கைகளுக்குள் கோர்த்துக் கொண்டவள்; என் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.
எனது முகம், நான் சஞ்சலத்தில் இருக்கிறன் என்பதைக் காட்டிக் கொடுத்துவிடவே’ ஏங்க முகம் ஒரு மாதிரி இருக்கு,என் கழுத்தில தாலி கட்டத் தயக்கமா இருக்கா,தாலி கட்ட மாட்டீங்களா,கட்டாட்டி பரவாயில்லீங்க….’என்றவள் குனிந்து கண்களைத் துடைச்சுக் கொண்டே என் தோளில் தலையை வைக்க அவளின் தலையைத் தோளோடு சாத்தி வருடிக் குடுத்தன்.
அவள் அணுங்கிய குரலில் „பரவாயில்லீங்க நீங்க சிங்கப்பூரில இருக்கிற வரைக்கும் உங்களுக்கு உண்மையான மனைவியாக வாழ்ந்த செத்துப் போயிடுவேணுங்க….’ என்று சொல்லி அவள் அழத் தொடங்க, „அழ வேண்டாம் எதுக்கு அழுறீர்கள்’ என்று ஆறுதல் படுத்திய நான் தற்செயலாக சாரதிக்கு முன்னாலிருந்த கண்ணாடியைப் பார்த்தன் அவர் எங்களை அடிக்கடி பார்ப்பது போல தோன்றவே,அவளுக்கு மட்டுமே கேட்கத் தக்கதாக „அவர் பார்க்கிறார் போல அழாதீங்க’ என்றன்.
கார் ஓடுபவர்கள் அடிக்கடி பின்னுக்கு வரும் வாகனங்களை கவனித்து விலத்துவதற்காக கண்ணாடி வழியாகப் பார்ப்பதுண்டு.அதைப் போலத்தான் ராக்சிச் சாரதியும் பார்த்திருக்கலாம்.ஆனால் அவர் எங்களைப் பார்ப்பது போலக்கூடத் தோன்றியிருக்கலாம்.
„அவரு பார்த்தால் பார்க்கட்டும், நான் என் புருசனோடு எப்படியும் இருப்பேங்க’ என்று அவள் தன் கைகளை எனது கைக்குள் செருகி இறுக்கிப் பிடிச்சுக் கொண்டாள், அவள் கனிவாக என்னைப் பார்த்தாள்.
என்னை அவள் முழுமையாகப் நம்பினாள்.என் மனைவி இல்லாத இடத்தில் உங்களுக்கு நானிருக்கிறேன் என அடிக்கடி சொல்வாள். அவளின் விருப்பத்தை நிராகரிக்க எனது மனம் இடம் கொடுக்கவில்லை.
அவள் ஆசைப்படியே அவளின் கழுத்தில் தாலிகட்டிவிடுவது என்று முடிவெடுத்தன்.
நினைப்புகளில் முழ்கிப் போயிருந்த நான் தற்செயலாக ராக்சியின் கதவின் கண்ணாடி யன்னலுக்கூடாகப் பார்த்த போது ராக்சி மெதுவாக ஒடி ஒரு உயர்ந்த மாடிகள் கொண்ட அழகிய கட்டிடத்தின் முன்னால் நின்றது.
அதுதான் கொட்டல் என்று தெரிந்து கொண்ட நானும் அவளும் இறங்குவதற்கு ஆயத்தமாகும் போது நான் ‘ இன்னும் எவ்வளவு காசு „ என்று கேட்க, அதற்கு ராக்சிச் சாரதி’ நீங்கள் இனித்தரத் தேவையில்லை, உங்களுக்கு நான்தான் ஐஞ்சு டொலர் தரவேணும்’ என்று சொல்லி ஐஞ்சு டொலரை எடுத்து நீட்ட’வேண்டாம் நீங்களே வைச்சிருங்கள் „ என்று சொன்னதுடன், இன்னும் பத்து டொலரை அவரிடம் கொடுத்தன்.
அவர் „ தாங்யூ’ என்று அவர் சொல்ல,எமது சூட்கேசுகளை எடுப்பதற்காக காரின் டிக்கிப் பக்கத்தை நோக்கிப் போக வேகமாக வந்த ராக்சிச் சாரதி டிக்கியைத் திறந்து சூட்கேசுகளை எடுத்து தந்ததுடன் கொட்டலின் வாசல்வரையும் கொண்டுவந்து தருவதற்காக சூட்கேசுகளை எடுத்த போது „நன்றி … சூட்கேசுகள் பாரமில்லை நாங்களே கொண்டு போகிறம்’ என்று சொல்ல, கார்ச் சாரதி எங்கள் இருவருக்கும் கைலாகு தந்ததுடன் „வாழ்த்துக்கள்’ என்று சொன்னார்.
இரண்டு சூட்கேசுகளை இரண்டு கைகளிலும் எடுத்த நான் யோகமலருடன் கொட்டலுக்குள் சென்று நாங்கள் வரவேற்புக் கூடத்தைப் பார்த்தவுடனேயே பிரமிப்படைந்தோம்.
இந்திரலோகத்தின் வாசல் இப்படித்தான் இருக்குமோ என நினைத்தன்.அவளும்; பூரிப்படைஞ்சாள்.
நான் எனது பூரிப்பை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.அவள்; அண்ணிமார் கொடுத்த கைப்பை போன்ற ஒன்றிலிருந்து தாள்கள் இரண்டை எடுத்துத் தந்தாள்.
தானாகவே அதை அவள் செய்திருக்கலாம்.ஆனால் விரும்பவில்லை.தாள்கள் இரண்டையும் வரவேற்பறைப் பெண்ணிடம் கொடுத்தன்.
புன்னகையுடன் வெல்கம் என்று சொன்னவள்,முதலிரவு விசேட படுக்கையறை உங்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டிருக்கின்றது „ என்று சொல்லிக் கொண்டே யோகமலரின் முகத்தைப் பார்த்தாள்.
அவளின் முகம் சிவந்து கொண்டிருப்பதைக் கவனித்த அவள் ஒரு குறும்புததனமான சிரிப்புடன்,எங்களுடைய அறையின் இலக்கத்தைச் சொன்னவள் இரண்டு பிளாஸ்ரிக் அட்டைகளைத் தந்தாள்.
அதனை கதவு நிலையடியில் பிடித்தால் ஒரு சத்தம் கேட்கும் நீங்கள் கதவைத் தள்ளித் திறக்கலாம் என்றவள், நீங்கள் முதலில் போங்கள் எங்களில் ஒருத்தி அங்கு வந்து உங்களுக்கென்று செய்து வைச்சிருக்கும் விசேட வசதிகளைச் சொல்வாள் என்றவள் வாழ்த்துக்கள் என்று சொல்லி அனுப்பி வைச்சாள்.
என் வாழ்வில் இப்பொழுது நடந்து கொண்டிருப்பது எல்லாமே கனவு உலகத்தில் நடப்பது போல இருந்தது.இது நிஜமா என நினைச்சன்.
வரவேற்பறைப் பெண்ணிடமிருந்து நாங்கள் விடைபெற்ற போதுதான் கூறு குறிப்பாகப் பார்த்தன், அவள் இந்தியத் தமிழ்ப் பெண்ணாக அல்லது இலங்கை வம்சாவழிப் பெண்ணாக இருக்கலாம் என்று என் மனம் சொல்லியது.
இரண்டாவது மாடியில் எங்களுடைய அறை இருந்தது.போவதற்கு ஆயத்தமாக சூட்கேசுகளை எடுத்துக் கொண்டஎங்களுக்கு லிப்ட் இருந்த இடத்தை அந்தப் பெண் காட்ட நாங்களிருவரும் லிப்டை நோக்கி நடந்து போக, லிப்டும் வந்து நிற்க அதிலிருந்து வெள்ளைக்காரர்களான அவர்கள் கணவன் மனைவியாக இருக்க வேணும் ஒரு அணும் பெண்ணும் லிப்டிலிருந்து வெளியே வந்தனர்.
லிப்ட்டுக்குள் போனதும் அதன் சுத்தமோ என்னவோ தெரியாது,லிப்டின்
உள்பகுதியிலிருந்து நறுமணம் வீசியது.
மனநிலை அமைதியாக இனிமையான எதிர்பார்ப்புடன் இருக்கும் போது சூழ்நிலை ரம்மியமாக இருந்தால் எப்படி மனம் குதூகலிக்குமோ அப்படி என் மனம் இருந்தாலும் அதை என்னால் முழுமையாக உள்வாங்க முடியவில்லை.
ஆனால் அவளுக்கு அது பிடிச்சிருந்ததை அவள் முகமே காட்டிக் கொடுத்தது.அடிக்கடி எனது முகத்தைப் பார்ப்பதும் தலையைக் குனிவதுமாக இருந்தாள்.
இரண்டாவது மாடியில் லிப்ட் நின்றதும், லிப்டிலிருந்து வெளியே வந்த நாங்கள் எமது அறையைத் தேடி நடந்து கொண்டிருந்த போது அந்தக் கொட்டலின் கட்டிட அழகையும் சுத்தத்தையும் பார்த்து இரசித்தன்.
கொட்டலில் தங்குவது எனக்குப் புது அனுபவம்,இதுதான் முதல் அனுபவம்.அவளைப் பார்த்தன், கொட்டலின் வரவேற்பறையில் பணிபுரிந்த பெண் முதலிரவு விசேட அறை முன்பதிவு செய்யப்பட்டிருக்கின்றது என்று சொன்ன அந்த நேரத்திலிருந்து அவள் முகத்தில் வெட்கத்தால் ஏற்பட்ட சிவந்த நிறம் மாறாமலே இருந்தது.
எமது அறையைத் தேடி இருவரும் நடந்து எமது அறையின் இலக்கத்தைக் கண்டதும் எனது கையிலிருந்த பிளாஸ்ரிக் காட்டை கதவின் கைபிடிப்பூட்டும் கதவு நிலையும் சந்திக்கும் இடத்தில்; பிடித்ததும் அந்த இடத்தில் மெதுவாக ஒரு சத்தம் வர கதவைத் தள்ள கதவு திறந்து கொண்டது.
நாங்களிருவரும் கதைவைத் தள்ளித் திறந்து உள்ளை போனதும், கதவு தானாகச் சாத்திக் கொண்டது.கதவு சாத்திக் கொண்டதும் இனிய வயலின் இசை ஒலிக்கத் தொடங்கி சில விநாடிகளில் கரைந்து நிற்பது போல இசை நின்றது.
எனக்கும் அவளுக்கும் அது பெரும் அதிசயமாக இருந்தது.இந்தக் கொட்டலில் உள்ள எல்லா அறைகளிலும் இப்படி விசேட வசதிகள் இருக்குமா அல்லது முதலிரவு அறைகளுக்கு மட்டுந்தான் இந்த வசதியா என யோசிச்சன்.
அவளிடம்’எனது வாழ்க்கையில் கொட்டலில் தங்குவது இதுதான் முதல் அனுபவம், அதுவும் இப்படியான விசேட வசதிகள் கொண்ட கொட்டலில் தங்குவது முதல்முறை„ என்றன்.
அதற்கு அவளும் „ எனக்கும் இதுதாங்க முதல் அனுபவம்.இப்படியான கொட்டலில்தான் நாங்க தங்க வைக்கப்படுவம்னு கனவுலகூட நினைச்சுப் பார்க்கலைங்க,வாங்க அறையைச் சுற்றிப் பார்ப்பம் „ என்றவள் எனது கைக்குள் தனது கையைச் செருகிக் கொண்டு நடந்தாள்.
அந்த அறை ஒரு வீடு போல இருந்தது.ஒரு கூடம் இருந்தது. ஆதில் „டா’ன வடிவில் வெளிர் நீலநிற வண்ணத்தில் சோபா போடப் பட்டிருந்தது.ஒரு மேசையும் மூன்று கதிரைகளும் இருந்தன.
மேசையில் மூன்று கிளாஸ்கள் ஒரு தட்டில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன.வெளிர்நீல நிறத்தில் அவை இருந்தன.ஒரு கண்ணாடி யொக்கில் தண்ணி வைக்கப்பட்டிருந்தது.அந்த யொக்கும் வெளிர் நீல நிறந்தான்.
மேசையில் சாப்பாட்டுக்கு கோப்பைக்கு கீழ் வைப்பதற்காக மூங்கில் நூலால் செய்யப்பட்ட நீள்சதுர சிறிய பாய் போன்ற தட்டுகளும், கிளாஸ்களை வைப்பதற்கும் சிறிய சற்சதுர கிளாஸ் தட்டுகளும் வைக்கப்பட்டிருந்தன.
ஒரு குளிர்சாதனப் பெட்டி இருந்தது.அதைத் திறந்து பார்த்தம்.அதற்குள்ளை கோலா,பன்ரா, சோயா பால்,ஒரு சிறிய விஸ்கி போத்தல்,பியர் போத்தல்கள் மூன்று,ஒரு சிறிய குவளை போன்ற பாத்திரத்தில் சின்னச் சின்ன பைக்கற்றுகளாக ஜாம், பட்டர் எல்லாம் இருந்தன.
குடிவகைகளைப் பார்த்த அவள்,’என்ன புருசனாரே நினைப்பு சங்கிரிலா கொட்டலில் நடந்த கிறிஸ்மஸ் பங்சனுக்குப் போகிறதா’ எனக் கேட்டாள்.
நான் பதில் எதுவும் சொல்லாமல் மெதுவாகச் சிரித்தன்.அந்தக் கூடத்தின்; ஒரு பக்கத்தில் சமையலறை போன்ற ஒரு இடம் இருந்தது.
ஒரு நீளமான தட்டில் கோப்பி மிசின்,மைக்கிறோவெல, கோப்பி, தேயிலை, பச்சைத் தேயிலை, சிறிய சிறிய பால் பெட்டிகள் எல்லாம் இருந்தன.கோப்பிக் கப்புக்கள் ஐந்தும் சிறியபிளேட்கள் ஐந்தும் பெரிய
சாப்பாட்டுக் கோப்பைள் ஐந்தும் இருந்தன.அவையும் வெளிர் நீல
நிறத்திலேயே இருந்தன
குளியலறையும் ரொய்லொற்றும் ஒன்றாக இருந்தன.இருந்து குளிப்பதற்குரிய தொட்டி வெளிர்நீல நிறத்திலிருந்தது.
நின்று குளிப்பதற்குரிய சிறிய அறையும் வெளிர் நீலநிறக் கண்ணாடிகளால் சுவர் போல ஆக்கப்பட்டிருந்தன.அதற்கு தள்ளித் திறக்கக்கூடிய கதவும் இருந்தது.
குளியலறைக்குள் மூன்று பெரிய துவாய்களும் மூன்று சிறிய துவாய்களும் இருந்தன. துவாய்களும் வெளிர் நீல நிறத்திலேயே இருந்தன.குளிக்கும் போது போடுவதற்கு சம்பூ,தலைமயிர் உலர்த்தும் மிசினும் இருந்தது.
குளியறையில் நின்று கொண்டு „இங்கை இரண்டு பேர் ஒரே நேரத்திலை குளிக்கிற வசதியிருக்கு,நீங்கள் பேசினிலை குளிக்கலாம், நான் இதற்குள்ளை நின்று கொண்டு குளிக்கலாம் „ என்று சொன்னதும்’ஆங்…ம்…ம்..அது முடியாதுங்க..அது வேணாம்ங்க..நான் உங்க பெண்டாட்டிதான்…ஆனா ….’ அவள் இழுக்க’ நான் யோக்கிற்குச் சொன்னன் „ என்றன்.
அடுத்து படுக்கையறைக்குள் போனம்.அகலமான படுக்கையறை அங்கையும் வெளிர்நீல நிற படுக்கையும் போர்வைகளும் இருந்தன. போர்வைகளில் ஆகாய நீலநிறத்தில் பூக்களஇ இருந்தன.
படுக்கையின் இரண்டு பக்கத்திலும் சிறிய மேசைகளும் அதற்கு மேல் சிறிய விளக்குகளும் இருந்தன.
மேசையும் வெளிர்நீலநிறத்தில் இருந்தன மேசையில் இரண்டு துவாய்கள் இருந்தன.இங்கையும் ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு கிளாசும் சிறிய யொக்கில் தண்ணியும் வைக்கப்பட்டிருந்தன.அவையும் வெளிர் நீல நிறத்திலேயே இருந்தன.
நான் ஒவ்வொன்றையும் பொதுவாகப் பார்க்க, அவள் ஒவ்வொன்றையும் ஆர்வமுடன் பார்த்தாள்.வெட்கத்தால் ஏற்பட்ட அவளின் சிவந்த முகம் மாறாமலே இருந்தது.
படுக்கை மெத்தையில் இருவரும் உட்கார்ந்தம்.அவள் மெத்தையில் விரல்களால் எனது பெயரையும் தனது பெயரையும் எழுதியவள் எனது நெஞ்சோடு சாய்ந்தாள்…….
„நன்றிங்க’ என்றவளின் கண்கள் கசியத் தொடங்கியது.கதவடியில் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது.யாராவது இருக்கும் என்று யோசித்தவாறு எழுந்து போய் கதவைத் திறந்தம்…
அங்கு இரண்டு கொட்டல் பணிப் பெண்கள் நின்று கொண்டிருந்தார்கள்.இருவரும் சீனப் பெண்கள்.ஒருவர் கைகள் இரண்டையும் பின்னுக்கு மறைத்து வைச்சிருந்தார்.
மற்றவரின் கையில் தட்டொன்றில் கேக்கும் கோப்பி பிளாஸ்சுக்கும் தேத்தண்ணி பிளாஸ்கும் நான்கு கோப்பிக் கப்புகளும் இருந்தன.
உள்ளே வரலாமா என்று அனுமதி கேட்டு வந்தவர்களில் கைகளை பின்னுக்கு மறைத்து வைச்சு வந்தவள் வலது கையை எடுத்து „விஸ் யூ ஏ கப்பி கனிமூன் போத் ஒப் யூ’ கைலாகு தந்தவள், இடது கையில் மறைச்ச வைச்சிருந்த பூங்கொத்தை முன்னுக்கெடுத்து இரண்டு கைகளாலும் முகமலர்ந்தபடி தந்தாள்.
நாங்கள் இருவரும் அதை வாங்கிக் கொண்டே „தாங்யூ ..தாங்யூ வெரிமச் „என்றம்.
கேக்கும் தேத்தண்ணி,கோப்பி கொண்டு வந்த தட்டை மேசையில் வைச்ச பணிப் பெண் இது லஞ்சுக்கு முந்திய சிறிய சாப்பாடு சாப்பிடுங்க லஞ்சுக்கு என்ன வேண்டுமென்று இந்த மெனுக்காட்டைப் பார்த்து ரெலிபோனிலை சொல்லுங்க, இங்கை ஒரு ரெலிபோன் இருக்குது பெட்ரூமிலையும் இருக்குது என்ற போதுதான் சோபாவுக்கு பக்கத்திலையிருந்த ரெலிபோனைக் கவனிச்சம்.
„நீங்கள் விரும்பினால் கன்ரீனிலை வந்தும் சாப்பிடலாம் இல்லாட்டில் இங்கை கொண்டு வந்து தருவம் „என்று சொல்லியவர்கள் „நீங்கள் விரும்பின நேரமேல்லாம் ரீயொ கோப்பியோ கப்புச்சினவோ போட்டுக் குடிக்கலாம்.கோலா பன்ரா லிகர் பியர் எல்லாம் பிறிட்ஜில இருக்கு,நீங்க யூஸ் பணணலாம்..ஓகே.. குட்பை „என்று சொல்லி அவர்கள் போய்விட நானும் அவளும் சோபாவில் போய் உட்கார்ந்தம்.
(தொடரும்)
![]()