கட்டுரைகள்

நீங்கள் அத்தனைபேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்…!?…. அவதானி.

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 21 ஆம் திகதி இறை வழிபாட்டுக்குச்சென்ற நுற்றுக்கணக்கானோரின் உயிர்களை பலியெடுத்த குண்டுத் தாக்குதல் நடந்து இருபத்தியைந்து மாதங்கள் பூர்த்தியாகிவிட்டன.

1990 ஆம் ஆண்டு, கிழக்கிலங்கை – காத்தான்குடியில் இரண்டு பள்ளிவாசல்களில் தொழுகைக்கு வந்திருந்த பலர்மீது, அவர்களை வேண்டாதவர்களினால் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு நூறுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.

1995 ஆம் ஆண்டு இலங்கையின் வடபுலத்தில் நவாலி புனித பேதுருவானவர் தேவாலயத்தில் வழிபாட்டிலிருந்த பலரில் ஐம்பதிற்கும் அதிகமான தமிழ்பொதுமக்கள் விமானப்படையின் குண்டுத்தாக்குதலில் பலியாகினர்.

மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்திற்கு 2005 ஆம் ஆண்டு யேசுபாலகன் பிறந்த தினத்தில் வழிபடச்சென்ற, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவரை வேண்டாதவர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கொழும்பு கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலுக்கு 2008 ஆம் ஆண்டு முதலாம் திகதி வழிபடச்சென்ற நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இந்து கலாசார அமைச்சருமான தியாகராஜா மகேஸ்வரனும், அவரை வேண்டாதவர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தின்போது கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய செபஸ்தியார் தேவாலயம் , மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் என்பவற்றுக்கு வேண்டுதலுக்குச்சென்றவர்கள் மீதுதான் தற்கொலைக்குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டு பலர் கொல்லப்பட்டனர்.

இவ்வாறு வேண்டுதலுக்காக சென்றவர்கள் மீது, ஏன் கொலைவெறி தாக்குதல்கள் நடந்தன…? இந்த ஈனச்செயல்களைச் செய்தவர்களுக்கு

சிறு வயதில் நல்ல புத்தி சொல்லிக்கொடுக்கத்தக்க அம்மாமார், பாட்டிமார், ஆசான்கள் கிடைக்கவில்லையா..?

அந்தத் தீய சக்திகளுக்கு எமது சமூகமும் ஊடகங்களும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெயரை சூட்டிவைத்திருக்கின்றன.

அதுதான் “ இனந்தெரியாதவர்கள் “

சம்பவங்கள் நடந்தபின்னர் விசாரணை என்ற பெயரில் ஏதோவெல்லாம் நடக்கும். நாடாளுமன்றத்திற்கு சென்றிருப்பவர்கள் விவாதிப்பார்கள். தேர்தல் காலம் வந்ததும், எதிரணியிலிருப்பவர்கள், “ நாம் பதவியிலிருந்திருந்தால், மக்களை காப்பாற்றியிருப்போம் “ என்பார்கள். அதற்கு எதிர்வினையாற்றும் வகையில், எதிரணியினர் பதவியிலிருந்த காலத்தில் நடந்த சம்பவங்களை ஆளும் தரப்பு பட்டியலிட்டுப் பேசும்.!

மக்களிடம் ஆணைகேட்பது அதிகாரத்திற்காகவே. அதனைப்பெறுவதற்கு ஏட்டிக்குப்போட்டியாக தேர்தல் பிரசார மேடைகளை முடிந்தவரையில் பயன்படுத்துவர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் நடப்பதற்கு முன்பே, புலனாய்வுப்பிரிவுக்கு தகவல் கிடைத்திருந்தும், எதனையும் செய்யாமல் கையாலாகத்தனமாக இருந்தவர்களையும் தாக்குதல்களின் சூத்திரதாரிகளையும் விசாரிப்பதற்காக நாடாளுமன்றத்தினால் ஒரு விசாரணை தெரிவுக்குழுவும் நியமிக்கப்பட்டது.

அதிலும் பெரிய இழுபறிகள் நிகழ்ந்தன.

தேசிய புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி சிசிர மெண்டிஸ் அந்த விசாரணைக்குழுவின் முன்னால் தோன்றி சாட்சியமளித்தார்.

அதனை அவதானித்தார் சம்பவங்கள் நடந்தவேளையில் நாட்டிலிருக்காத தேசத்தின் அன்றைய அதிபர் மைத்திரியார்.

உடனே என்ன செய்தார்?

“ நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தவர்கள், பாதுகாப்பு துறையிலிருந்து வெளியேறியவர்கள் “ என்று ஒரு பெரிய குண்டைப்போட்டார். அது தேவாலயங்களில் பாவிக்கப்பட்ட குண்டுகளை விட மிகவும் வலிமையானது.

அந்த பொன்னான வாக்கைக்கேட்டதும் சிசிர மெண்டிஸ் தனது ராஜினாமா கடிதத்தை பாதுகாப்பு செயலாளர் ஷாந்த

கோட்டேகொடவிடம் கையளித்துவிட்டு, தனக்கு சுகமில்லை எனச்சொல்லி ஓய்வுக்குச்சென்றார்.

“ நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் புலனாய்வு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்துவதை தான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை “ என்றும் மற்றும் ஒரு அதிரடிக்குண்டைப்போட்டார் மைத்திரியார்.

இவ்வாறெல்லாம் அவர் செய்யப்போகிறார் என்பதைத் தெரிந்துகொண்டே தெரிவுக்குழு பல வாரங்களாக விசாரணை செய்துகொண்டிருந்தது. ஊடகங்களும் அந்த விசாரணை வாக்குமூலங்களுக்காக பக்கங்களை நிரப்பிக்கொண்டிருந்தன. நாமும் படித்துத் தொலைத்( ந்) து கொண்டிருந்தோம்.

அங்கு சாட்சியமளித்த முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் பேசிய சுத்தமான சிங்கள மொழியை கேட்டு வியந்துபோன – எதிர்காலத்தின் பாதுகாப்பு அமைச்சர் பதவிக் கனவில் மிதந்த ஃபீல்ட் மார்ஷல் சரத்பொன்சேக்கா, “ தம்மால் கூட அவ்வாறு அழகாக சிங்களம் பேசமுடியவில்லையே “ என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

தேசிய பாதுகாப்பு சபையை உரிய முறையில் ( முன்னாள் ) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட்ட வில்லை என பாதுகாப்பு முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்திருந்தார்.

“ தன்னை பதவி விலகுமாறும், அவ்வாறு பதவி விலகினால் தனக்கு இராஜதந்திர பதவியொன்றை வழங்குவதாகவும் “ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு அழுத்தங்களை பிரயோகித்திருந்ததாக பொலிஸ் மாஅதிபர் பூஜித்த ஜயசுந்தர சாட்சியமளித்திருந்தார்.

இறுதியில் என்ன நடந்தது…? அந்த விசாரணைக்குழுவின் அறிக்கையை மைத்திரியார் கிடப்பில் போட்டார்.

“ போதைவஸ்த்து கடத்தல்காரர்களை எப்படியும் தூக்கிலே தொங்கவிடுவேன் “ என்று தனது பதவிக்காலத்தின் இறுதிப்பகுதியில் தொடர்ச்சியாகச் சொல்லிக்கொண்டிருந்த அவர், இறுதியில் செய்தது என்ன..?

ஒரு வெளிநாட்டுப்பெண்ணை துடிக்கத்துடிக்க கொன்றுவிட்டு மரணதண்டனைக்கைதியாக இருந்த ஒருவருக்கு பொதுமன்னிப்பு அளித்ததுதான்!

அதிபர் தேர்தல் நெருங்கியபோது, எதிரணி ( ராஜபக்ஷக்கள்) தனது அரசின் மீது பாதுகாப்பு தொடர்பாக முன்வைத்த விமர்சனங்களினால் கலவரமுற்றிருந்த பதவியிலிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவுக்கு, அல்பக்கதாதியின் உருவத்தில் ஒரு துரும்பு கிடைத்தது! ஐ.எஸ்.ஐ எஸ். அமைப்பின் தலைவர் அல் பக்தாதி கொல்லப்பட்டார்.

அதனை தனது அரசு கண்டித்ததாம்…! ஆனால், நாட்டின் தேசிய பாதுகாப்பை பொறுப்பேற்கப்போவதாக தேர்தல் பிரசார மேடைகளில் கூறிக்கொண்டிருக்கும் தரப்பினர் ( ராஜபக்ஷக்கள் ) அது தொடர்பாக கருத்துக்களை கூறுவதற்கு தயங்குவது ஏன்? என கேள்வி எழுப்பியதுடன், இவர்களுக்கும் அந்தப் பயங்கரவாத அமைப்புடன் ஏதேனும் தொடர்புகள் இருக்கிறதா? என்ற கேள்வி எழுவதாகவும் சொன்னார்.

52 . 25 சதவீத வாக்குகள் பெற்று ஏழாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட அதிபராக மாண்பு மிகு கோத்தபாய ராஜபக்ஷ அதே 2019 ஆண்டு நவம்பர் மாதம் பதவி ஏற்றார்.

மாதங்கள் உருண்டோடி விட்டன. கொரோனோவும் எங்கிருந்தோ உருண்டோடி வந்துவிட்டது. காட்சிகள் மாறுகின்றன.

உயிர்த்த ஞாயிறு சம்பவத்தில் உயிர் நீத்தவர்களின் குடும்பங்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை !

—0—

( நன்றி: யாழ் . தீம்புனல் வார இதழ் )

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button