கதைகள்

அகதியின் நாட்குறிப்பு!…. அத்தியாயம்…. 10 ….. குடத்தனை உதயன்.

செல்லப்பாவைப் பார்க்க அவனுக்கு பாவமாக இருந்தது.! இன்றுவரை அவரின் முகம் வாடியிருந்ததை அவன் கண்டதில்லை. “எங்கு வாழ்ந்தாலும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கதை புரண்டு ஓடிக்கொண்டே இருக்குமில்லையா..?”
“என்னவாம் பிள்ளை…?”
எனக் கேட்டார் செல்லப்பா.
நீண்டதொரு தாயகத்தின் சுமை பெருமூச்சாக நடேசனுக்குள்ளிருந்து வெளிப்பட்டு, ஜேர்மன் காற்றுடன் முட்டி மோதி திசை தெரியாமல் மறைந்து போனது.
அண்ண…“
அவள் என்னில் உயிரை வைத்திருக்கிறாளென்பது தெளிவு. அதற்கு மேல் “என்னால் …..! அவன் வசனத்தை முடிக்காமல் நிறுத்தினான்.”
***************************************************
நடேசன் சிறு அமைதிக்குப் பின்பு தன் கதையைத் தொடர்ந்தான்…
அன்று மதியம் சாப்பிட்ட பின்பு அவனும், வானதியும் மாமர நிழலில் இருந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள்.
“அண்ணா….”
நானும் கொழும்பிற்கு வாறன்… உங்களைத் தனியாக அனுப்ப முடியாது.
அங்கு என்னுடைய அண்ணா இருக்கிறார். நானும் அவருடன் கொஞ்ச நாள் இருக்கலாமென்று நினைக்கிறன். அப்பா , அம்மாவும் அதைத்தான் விரும்பிபுகிறார்கள்.
என்றாள் வானதி.
நடேசனுக்கு ஒன்றுமே சொல்லத் தோணல. அவள் சொல்வதையே கேட்டுக்கொண்டிருந்தான்.
“இஞ்சயப்பா….”
ஒரு குமர்ப்பிள்ளைய எப்படி வேற்று மனிதனுடன் அனுப்புவது..?
நீங்கள்.. கூட்டிக்கொண்டு போய் விட்டிட்டு வாறதுதான் எனக்கு நல்லாப் படுகிது…
வானதியின் தாய் சொல்லிக் கொண்டிருந்தாள்.
“ஏனப்பா” அவள் சின்னப் பிள்ளையே…. ?
அவளுக்குத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியும்.”
வானதி , கவிதா , இருவரும் பல்கலைக்கழகம் ஆரம்பத்தில் சென்ற போது.., மனிசன் குதித்த குதிப்பு. எப்படி.. பெண் பிள்ளையத் தனியா விடுவது..? ஆ…. ஊ… அநியாயம் என்று ஒரு கிழமையாய் பிள்ளையுடன் போய் நின்ற மனிசனே இப்படிக் கதைக்கிறார்.!
நாடியிலே வைத்த விரல் அகற்றாமல் கேட்டுக் கொண்டிருந்தாள்.
நீர் என்ன யோசிக்கிறீர் என்பது எனக்குத் தெரியும்.
அதெல்லாம் ஒரு காலம்.. காலத்திற்கேற்ற மாதிரி யோசிக்க வேணும் கண்டியோ…”
அவர்களின் சம்பாசனை வெளியிலிருந்த வானதி , நடேசனுக்கும் கேட்காமலில்லை. நடேசன் வானதியைப் பார்த்தான். அவள் இருந்த இடத்திலையே நெளிந்து கொண்டிருந்தாள்.
நடேசன் அவளின் நிலமையைப் புரிந்து கொண்டு….,
“அப்பா உம்மில் நல்ல நம்பிக்கை வைத்துள்ளார்.”
அவளும் தலையாட்டினாள். அப்போது வெளியிலே வந்த வானதியின் தந்தை…
“தம்பி..”
நாங்கள் கதைத்தது.. நீங்களும் கேட்டிருப்பியள்.
நான் கொழும்பு வர.. இங்க பாதை பூட்டினால் ஒன்றுமே செய்ய முடியாது. நீங்கள் பொறுப்பான பிள்ளை என்பது வானதி , கவிதா சொன்னதிலிருந்து ஊகித்திருந்தேன். அதைவிட சிவபாதத்தாரும் சொல்லியிருந்தார். நீங்கள் அவர்களுக்கு ஒரு சகோதரன் போல ….”
அதற்கு மேல் கதையைத் தொடராமல் வெளியில் சென்றார்.
நடேசன் செல்லப்பாவைப் பார்த்து “அண்ண “ கிராமத்து மனிதர்களை வெள்ளந்தி என நினைத்தேன். ஆனால் அவர்களின் அனுபவத்தில் தேர்ந்த வாழ்க்கை.., மிகப்பெரிய படிப்பினை தான்.”
செல்லப்பா அவனைப் பார்த்து…
“அந்தக் காலத்து மனிதர்கள் ஒவ்வெரு செயலுக்கும் காரணம் சொல்வார்கள் கண்டியோ.”
அதை நீ.. நன்றாக யோசித்துப் பார்த்தால் அதன் தார்ப்பரியம் விளங்கும்.
“உண்மை தான் அண்ண…”
நான் அங்க நின்ற சில நாட்களில் அவர்களின் வாழ்க்கை முறைகளைப் பார்த்தன். உதாரணத்துக்கு ஒருவருக்கு சுகயீனம் ஏற்பட்டால் அங்கவுள்ள பெரிசுகள் வைத்தியர்களாகவே மாறிவிடுவார்கள்.. “அந்தக் கிராமங்களில் கற்றுக்கொள்ளவும் , பெற்றுக்கொள்ளவும் நிறைய இருக்கு.”
அன்று அதிகாலை நிலம் விடிய முன்பு “நாங்கள் இருவரும் ரவுன் பஸ் நிலையத்தில் நின்றிருந்தோம்.”. ஒரு மெருதுவான பனிக்குளிர் உடலில் நீவிச் சென்றது.
“ஏதேச்சையாக வானதியின் முகத்தைப் பார்க்கையில் நெற்றி உச்சியில் குங்குமம் , கழுத்திலே தாலி போன்று மொத்தச் சங்கிலி….. என்னால் நம்ப முடியலை..! மீண்டும் ஒரு முறை பார்த்து என்னுள் உறுதிப்படுத்திக் கொண்டேன். “அடக் கடவுளே..!” அவள் போட்டிருந்தது தாலி தான்..!
எனக்கு.. உள்ளூர நடுக்கம் பிடித்து விட்டது. என்னைச் சுற்றி என்ன நடக்கிறது?
வானதி முன்பு யாழ்ப்பாணத்திலிருக்கும்போது எதையாவது எங்களிடம் மறைத்தாளா..?
என் மனதில் பல ஆயிரம் கேள்வியுடன் அவளைப் பார்த்தேன்..!
“அப்படி என்ன புதிசா பார்க்கிற மாதிரி பாக்கிறீங்க..?”
வவுனியா கடந்து போகும் மட்டும்.. நான் உங்கள் மனைவி..!
“உங்களைக் காப்பாற்ற எனக்கு வேறு வழி தெரியல.”
அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போது…., அந்தக் காலைப் பொழுதை வாகனத்தின் உறுமல் சத்தம் உருக்குலைத்தது.
சத்தம் வந்த திசையை நோக்கி இருவர் விழிகளும் திரும்பின. கரிய இராட்சத மிருகங்கள் உருண்டு , பிரண்டு வருவது போன்று இந்திய இராணுவ அணி வந்து கொண்டிருந்தது.
இருவருக்குள்ளும் வார்த்தைகளால் சொல்ல முடியாத பயப்பீதி வயித்தைக் குடையத் துவங்கின. நடேசன் ஏக்கம் கலந்த பார்வையை வானதி மீது எறிந்தான்.
“என்னடா இந்த பஸ்சைக் கூட இன்னும் காணேல..?”
பயத்தின் கலக்கம், அவனுள் கோபமாக வெளிப்பட்டது .
அவனது மனது பயத்தில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக் ககையில் , வானதி அவனருகில் நெருங்கி வந்து ஆதரவாக அவனது கைகளுக்குள் தனது கையை சிறைப்படுத்திக் கொண்டாள். அவனுள் சொல்ல முடியாத உணர்வலைகள் பட்டுத் தெறித்தன. நடேசனின் விழிகள் நீரை சொரிந்து அவளுக்கு நன்றி தெரிவித்தன.
அவர்களது நல்ல காலம் பஸ்ஸும் வந்து நின்றது. இருவருக்கும் “பஸ்” எப்போ புறப்படும்..? என்றிருந்தது. சற்று நேரத்தால் பெரிய உறுமலுடன் கரும் புகையை வாந்தி எடுத்தவாறு “பஸ்” புறப்பட்டது. ஜன்னலுக்கால் ஓடி வந்த காற்று அவர்கள் முகத்தைத் தடவி விடை கொடுத்தது.
பஸ்ஸில் அருகருகா அமரும் போது அவன் மனதில் பல ஆயிரம் கேள்விகள் துளிர்த்தன.
இவள் யார்.. என்னில் அன்பு வைப்பதற்கு..?
இவளுக்கும் எனக்கும் என்ன உறவு..?
நடேசனிடமிருந்து பல கேள்விகள் அன்று அவனுக்குள் துடித்து விழுந்தன.
அவன் கதை சொல்லும் போது, செல்லப்பா இடையிடையே அவனை நிமிர்ந்து பார்த்துக் கொண்டார்.
“அண்ண..”
நான் முதலே சொன்னேனல்லவா..
என்ர வாழ்க்கை ஒரு விசித்திரமென்று.
அப்படிக் கூறியவாறு நடேசன் க்கி…..க்கி…. எனத் சிரித்தான்.
செல்லப்பா அவன் தோளில் தட்டினார்.
**********************************************************
ஒரு மாலைப்பொழுது அவனும், வானதியும், அவளது அண்ணன் வீட்டிற்கு அருகிலுள்ள பூங்காவிற்குப் போயிருந்தார்கள். அந்தப் பூங்காவில் ஆங்காங்கே பலர் குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள். அவர்களில் சிலர் வலைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

வெள்ளலைகாளால் அள்ளிக் குளிப்பாட்டியது போன்று இரண்டு பொக்கற் நாய்க் குட்டிகளுடன் இரு சிறுவர்கள் பந்து எறிந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்

எங்கள் தாயகத்திற்கு வெளியில் இப்படியாக ஒரு கவலையற்ற, மகிழ்ச்சியான வாழ்க்கையிருக்கு என்று அவன் நினைக்கவில்லை. ஒரு இனம் நாளாந்தம் சாவையே வாழ்வாக உயிரைக் கையிலேந்தி வாழ்வதற்கு ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இங்கே….? என்பதை நினைக்கையில் மனசெல்லாம் , வாள் பிளேட்டால்.. தசை நார்களை அறுக்கும் போது கிர்….கிர் …கர… கர… என உயிர் வலி எடுக்கும் போது மனிதக் குரல் ஓலமிடுமே….! அதே போன்று நடேசனின் மனம் ஓலமிட்டது.
அந்த நினைவுகளுக்கிடையில் வானதி சொன்னாள்..
“நீங்கள் தப்பா நினைக்கவில்லையென்றால் உங்களை ஒன்று கேட்கவா…?”
என்ன..? கேட்கப் போறாளென்ற ஒரு வித பட.. படப்புடன் அவளைப் பார்த்தான்.
நான் உங்களைப் பெயர் சொல்லி அழைக்கலாமா?
“இதில என்ன இருக்கு..” தாராளமாக என்றான்.
“என்னை நீங்கள் எவ்வளவு தூரம் நம்புறீங்க”?
அவனுக்கு ஒன்றுமே புரியல..! ஒரு புன்னகையைப் பதிலாகக் கொடுத்தான்.
தொடரும்……….

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *