சிங்கப்பூரில் சிலகாலம்! …. 34 …. ஏலையா க.முருகதாசன்.

யோகமலரின் அண்ணிமார் இன்றிரவு யோகமலரின் கழுத்தில் தாலியைக் கட்டிவிடுங்கள் என்று கெஞ்சுவது போல் கேட்டிருந்தார்கள்.
அவர்களுக்கு வாயால் ஓம் என்றும் சொல்லவில்லை மாட்டன் என்றும் சொல்லாதிருந்தன்.எனது மௌனம் நான் தாலி கட்டிடுவன் என்ற நம்பிக்கையைக் குடுத்திருக்கலாம்.
யோகமலரும் முழுமையாக நம்பினாள்.நாங்கள் நால்வரும் கோப்பிக்கடையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கையில் யோகமலரின் அண்ணன்மார் எம்மை நோக்கி வந்து கொண்டிருக்க நாங்களெல்லோரும் சொப்பிங் சென்ரரை விட்டு வெளியே வந்து அவர்களின் கார் நின்ற இடத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தம்.
அந்த இடத்திற்கு போகும் வரை யாருமே கதைக்கவில்லை.மௌனமாக இருந்தம்.அங்கு போனதும் அங்கு வந்து கொண்டிருந்த ராக்சியை கையைக்காட்டி யோகமலரின் இரண்டாவது அண்ணன் மறிக்க,அவர்களின் மூத்த அண்ணன் அவர்களின் கார் டிக்கியிலிருந்து யோகமலரின் சூட்கேசுகள் இரண்டையும் எனது சூட்கேசையும் எடுக்க,ராக்சிச் சாரதி ராக்சியை விட்டிறங்கி டிக்கியைத் திறக்க மூத்த அண்ணனும் இரண்டாவது அண்ணனுமாக சூட்கேசுகளை உள்ளை வைத்தனர்.
ராக்சிச் சாரதி ஒரு மலேய்க்காரன்.ராக்சி சாரதி மீண்டும் தனது இருக்கையில் அமர்ந்தபடி இவர்களில் யார் தனது ராக்சியில் ஏறப் போகிறாரகள்; எனக் காத்திருக்க,சாய்ச்சியில் நானும் யோகமலரும் குடியிருக்கப் போகும் வீட்டின் முகவரியை இரண்டாவது தமையன் மலேயிலும் ஆங்கிலத்திலம் சொல்லிவிட்டு எங்களிருவரையும் இவர்கள் இரண்டு பேருந்தான் அங்கை போகிறவர்கள் என்று ஆங்கிலத்தில் சொல்ல, ராக்சிச் சாரதி „ஓகே’ என்று சிரித்த முகத்துடன் எங்களுக்காக காத்திருந்தான்.
சில விநாடிகள் அமைதியாக இருந்தம்.யோகமலரின் மூத்த அண்ணியின் கண்கள் கலங்கத் தொடங்கியது, குரல் தழுதழுக்க „ இந்த பைக்குள்ள எல்லாமிருக்கு, கொட்டல் புக் பண்ணின பேப்பேர்ஸ்சும் இருக்கு,இன்னக்கு இரவு ஆறரை மணிக்கு அவரோட கையால கழுத்தில தாலிய ஏத்திடு’ என்றவள் யோகமலரை கட்டியணைத்து முதுகை ஆதரவாக தட்டிக் குடுத்தாள்.
அவளின் சின்ணண்ணியும் கண்கலங்கத் தொடங்கினாள்.யோகமலரை கட்டி அணைத்து முதுகை ஆதரவாக தட்டிக் கொடுத்தாள்.யோகமலர் குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்கினாள்.முகமும் உடலும் சிவக்க அவள் உடல் நடுங்கத் தொடங்கியது.அவளுக்கருகில் சென்று அவளின் கழுத்தோடு சேர்த்து முதுகை தடவிக் குடுத்தன்.
யோகமலரின் மூத்த அண்ணியும் சின்ன அண்ணியும் ஆதரவாக எனது கைகளைப் பிடிக்க ,சின்ன அண்ணி „இது முறையான தாலி கட்டலன்னு எங்களால சொல்ல முடியல ஆனா வேற வழியே தோணல, அவள் உங்கள்ள ஏன் இவ்வளவு லவ் வச்சிருக்காண்ணு புரியல,எதிர்காலத்தில உங்களோட அவள் வாழ்வு எப்படியாகுமுன்னு தெரியாது, அவளும் நீங்களும் சந்தோசமாக இருந்தாலே போதும், நீங்க ஊருக்குப் போறப் போ உங்க மனைவி ஒகே சொன்னா இவளையும் கூட்டிட்டுப் போங்க’ என்று சொல்ல நான் அமைதியாக தலையை மட்டுமே ஆட்டினன்.
ஏனென்றால் ஏற்றுக் கொள்ளுதல் அல்லது சம்மதம் என்று வார்த்தைகளைச் சொல்லும் தூய்மையான நிலையில் நானில்லை.தவறு தவறு என்று மனச்சாட்சி சொன்னாலும் தவறும் சரியான பாதைதான் என என்னுடைய சூழ்நிலையும் மன நிலையும் அதற்கு ஒத்திசைவாகி நின்றது.
இளைஞர்கள் பெற்றோருக்குத் தெரியாமல் கள்ளுக் குடிப்பார்கள் சிகரட் புகைப்பார்கள்.அவர்களுக்கு பெற்றோர் மீதும் பயமும் இருக்கும் அதே நேரத்தில் களவாக கள்ளுக் குடிக்கவும் சிகரட் புகைக்கவும் செய்வார்கள்.
அவர்களின் ஆசையும் உருசித்துப் பார்க்க வேண்டும் என்ற அவாவும் பிழையா சரியா என்பதை தீர்மானிக்க விடாது.எனது தனிமை யோகமலரின் மீது காதலை மட்டும் ஏற்படுத்தி இன்று தாலி கட்டும் வரை கொண்டு வந்து நிறுத்தவில்லை.எனக்குத் தேவையான ஒன்று அவளிடம் இருந்தது.அது அவளுக்கும் தெரியும்.அதனால்தான் அவள் உங்களுக்குத் தேவையானதை நான் பூர்த்தி செய்வேன் எனப் பலமுறை சொல்லியிருந்தாள்.
அண்ணன்மார் இருவரும் எதுவுமே பேசாது கண்கலங்கி நின்றனர்.யோகமலர் அவர்களிடம் அழுது கொண்டே செல்ல மூத்த அண்ணனும் சின்ன அண்ணனும் அவளை ஆதரவாக அணைத்து’ அழாத இப்ப என்ன நீ விரும்பின வாழ்க்கையைத்தானே வாழப் போற, அவரு அவர் மiனிவியை லவ்பண்ற அளவுக்கு உன்னிலும் அன்பு வைச்சிருப்பாரு டோண்ட் வொறி’ என்று ஆறுதல் படுத்த „தாங்ஸ் பெரியண்ணா சின்னண்ணா’ என்று சொல்லிக் கொண்டே „தாங்ஸ் அண்ணீக்கள்’ என்று சொன்னவள் அவர்களுக்கு கைகளைக் காட்டியபடியே என்னருகில் வர,ஏதோ ஒரு சினிமாப் படத்தில் நடக்கிற காட்சி மாதிரி எனக்குத் தோன்றியது.
இப்படியெல்லாம் நடக்குமா என்று நான் கற்பனை பண்ண வேண்டிய தேவையில்;லாத ஒன்று எனது வாழ்க்கையில் நடந்து கொண்டிருந்தது.![]()
சிறீலங்காவில் தெல்லிப்பழை என்ற ஊரும் மனைவி பிள்ளைகளும் சிங்கப்பூரில் ஜிஇ பக்ரறியில் எனக்கும் அவளுக்கும் தொடர்பு உண்டாகி இன்று அவளின் அணணன்மார் அண்ணிமார் முன்னிலையில் நான் நிற்கிறன் என்ற நினைப்பு எனக்கு கனவு மாதிரி இருந்தது.
கல்யாணம் செய்து மனைவி பிள்ளைகள் ஊரில் இருக்கத்தக்கதாக நான் சிங்கப்பூருக்கு வந்து இன்னொரு பெண்ணுடன் வாழப் போவது நிஜமா என யோசித்தவாறு ராக்சியின் பின்புற கதவை திறந்து யோகமலரை ஏறுமாறு சொல்லி
அவளை ஏற்றிவிட்டிட்டு அடுத்த பக்கத்தில் உள்ள கதவால் ஏறுவம் என்று கதவைச் சாத்தப் போக’ வாங்க இங்கேயே ஏறுங்க „ என்று சொல்லியவாறு இருக்கையில் அரக்கி இருந்தாள்.
நான் காருக்குள் ஏறி அவள் அருகில் இருந்தன்.அவளின் முகத்தில் பூரிப்பும், கலக்கமும் ஏக்கமும் இருந்தது.
நாங்கள் காருக்குள் ஏறியதும் அவளின் அண்ணன்மாரும், அண்ணிமாரும் நாங்கள் இருந்த ராக்சியின் பின் பக்கம் வந்து வெளியே நின்றபடி கையைக் காட்டினார்கள்.
யோகமலர் தனது கையில் இருந்த லேஞ்சியால் வாயைப் பொத்தி அழுகையை அடக்கிக் கொண்டு கையைக் காட்டினாள் .
ராக்சி போகத் தொடங்க நானும் அவளும் ராக்சியின் பின் கண்ணாடி வழியாகப் பார்த்தம்.அவர்கள் எங்களை அனுப்பி வைத்த அந்த இடத்திலேயே நின்று நாங்கள் போய்க் கொண்டிருந்த ராக்சியையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவர்கள் எங்கள் கண்களிலிருந்து மறையும் வரை பின் கண்ணாடி வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தம்.
நாங்கள் இருவரும் முகத்தைத் திருப்ப ராக்சிச் சாரதி’யூ போத் ஆர் நியூலி மறீட் கப்பில், ஆம் ஐ றைட்’ என்று கேட்க, உடனேயே நான் „யா’ என்றன்.
„யா’ என்று சொன்னதற்கு காரணம் எங்கள் தொடர்பாக அவன் கதையை வளர்த்துக் கொள்ளாமல் இருக்க வேண்டுமென்பதற்காகவே.
ராக்சி ஓடிக் கொண்டிருந்து.யோகமலர் எனது தோளில் சாய்ந்தபடி இடது கையால் எனது தோளில் கைபோட்டபடியும்,வலது கை விரல்களை எனது கைவிரல்களுக்குள் பிணைத்தபடி இருந்தாள்.நான் அவளை எனது உடலோடு நெருக்கமாக இழுத்து அணைச்சு வைச்சுக் கொண்டிருந்தன்.
அவள் அடிக்கடி தலையை நிமிர்த்தி எனது முகத்ததைப் பார்ப்பதாக இருந்தாள்.அவளின் தலையை ஆதரவாக வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தன்.
அவள் தலையில் கனகாம்பரச் சரம் கட்டியிருந்தாள்.அவளின் நிறத்துக்கும் அவள் உடுத்தியிருந்த மஞ்சளும் பச்சையும் கலந்த நிறச் சீலைக்கும் ஒரு தேவதை மாதிரி இருந்தாள்.
இன்றைக்கு இரவு ஆறரை மணிக்கு அவளுக்கு தாலி கட்டுவதை நினைச்ச போது மனம் குழம்பத் தொடங்கியது.கல்யாணம் முடிச்சு மனைவி பிள்ளைகள் உள்ள என்னை ஏன் தீவிரமாக காதலிச்சு என்னையும் தன்னைக் காதலிக்க வைச்சது ஏன்.இது என்ன விதி என யோசிச்சுக் கொண்டிருக்க’ ஏங்க எதுவுமே பேசாதிருங்கீங்க ஏதாவது பேசுங்களேன் யோசனையா இருக்கா, சொல்லுங்க’ என்று கேட்க, எனது மனக்குழப்பத்தை அவளுக்குச் சொல்லக்கூடாதென்று நினைச்சு’ ஒரு யோசனையும் இல்லை, இன்றைக்கு உங்களுக்குத் தாலிகட்டி உரிமையுள்ள மனைவியாக்கி ஒன்றாக ஒரு வீட்டிலை வாழப் போறதை நினைச்சு மகிழ்ச்சியாக
இருக்கு, அதுதான் அந்த நேரத்தை நினைச்சு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறன்’ என்று சொல்ல, „அக்காவை நினைச்சு கவலைப்படுறீங்களா, அக்கா இங்க இல்லாத இடத்தை நிரப்பத்தான் மாரியம்மன் என்னைச் சந்திக்க வைச்சிருக்கிறா,அதையெல்லாம் யோசிக்காதீங்க…’ என்று கனிவாகச் சொன்னாள்.
இருபது நிமிசத்துக்குள் ராக்சி சாய்ச்சி என்எம்பி பக்ரறிக்கு பக்கத்தில் நாங்கள் இருக்கப் போகிற பல அடுக்கு மாடிக் கட்டிடத்துக்கு முன்னாள் நிறுத்தினான்.
இந்த ராக்சியிலேயே கொட்டலுக்கும் போய்விடலாம் என்பதற்காக வெயிற்றிங்கில் நில்லுங்கள் சூட்கேசுகளை வீட்டிலை வைச்சிட்டு வாறம்,எங்களைக் கொண்டு போய் கொட்டல் ஒன்றிலை விட வேண்டும் என்று சொன்ன நான் ராக்சி சாரதிக்கு நம்பிக்கை வர வேண்டுமென்பதற்காக ஐம்பது டொலர்களைக் குடுத்துவிட்டு எமது வீட்டுக்குப் போவதற்காக லிப்டடியில் நின்றபடி எமது வீடு எந்த மாடியிலிருக்கிறது என்று,என்எம்பி பக்ரறியினால் , ஜிஇ பேர்சனல் மனேஜருக்கு அனுப்பிய கடிதத்தை எம்மிடம் அவர் தந்திருந்தபடியால் அதைப் பார்த்தம், ஐந்தாவது மாடி விபரமும் வீட்டு இலக்கமும் அதில் இருந்தது.
லிப்டில் ஐந்தாவது மாடிக்குப் போய், வீட்டு இலக்கத்தை தேடி வீட்டைத் திறந்த போது திகைத்து நின்றம்.இரண்டு அறைகள் கொண்ட அந்த வீட்டுக் கூடத்தில் சிறியதும் பெரியதுமான இரண்டு சோபாக்களும் சாப்பாட்டு மேசையும் நான்கு கதிரைகளுடன் ஒரு ரிவியும் இருந்தன.
அவற்றைப் பார்த்த திகைப்புடனும் வியப்புடனும் பெரிதாக இருந்த அறைக்குள் போனம்.எங்களால் நம்பவே முடியவில்லை.அங்கை அழகான அகலாமான பெரிய கட்டிலும் கட்டிலின் இரு பக்கத்திலும் சிறிய அலுமாரிகளும்,அவற்றுக்கு மேலே பெட்லாம்பும் வைக்கப்பட்டிருந்தன.
மேலே அழகான மின்சார விளக்கும் பொருத்தப்பட்டிருந்தது. பெரிய அறைக்குள் ஒரு அலுமாரி இருந்தது அதைத் திறந்த பார்த்தம். அங்கை மெத்தைக்கு போடுகிற உறைகள் நான்கு சோடிகள்,போர்வைகள் எட்டு துவாயகள்; ஐஞ்சு இருந்தன.
அடுத்த சிறிய அறைக்குள் போன போது அங்கே தனித்தனி இரண்டு இரும்புக் கட்டில்கள் மெத்தையுடன் இருந்தன.நான் அவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது அடுப்படிக்குள் போன யோகமலர்,’என்னங்க இங்க வாங்களேன் என்று வியப்புடன் கூப்பிடுவது போல கூப்பிட்டாள்.வேமாக போய்ப் பார்த்தேன் இருவருக்குச் சமைக்கக்கூடிய பாத்திரங்கள், சாப்பாட்டுக் கோப்பைகள் நான்கு,தேநீர்க் கோப்பைகள் ஐஞ்சு,கோப்பி மிசின்,மின்சாரக் கேத்தில் என்று ஒரு குடும்பத்திற்குரிய அத்தனை பாத்திரங்களும் இருந்தன.
எங்களிருவருக்கும் வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.குளியலறைக்குள் இரண்டு பெரிய பிளாஸ்ரிக் வாளிகள் இருந்தன.உடுப்புகள் தோய்ச்சு காய விடுவதற்கு ஒரு ஸ்ராண்ட் இருந்தது.ஒரு மெல்லிய மூங்கில் தடியுமிருந்தது.ரொய்லற் தனியாக இருந்தது.
எங்கள் வீட்டில் இருந்த பொருட்களைப் பார்த்த போது எங்களால் நம்பவே முடியவில்லை.பக்ரறி எங்கள் இருவருக்கும் இரண்டு இரும்புக் கட்டில்கள் ஒரு சிறிய மேசை இரண்டு கதிரைகள்தான் தந்திருக்கும்.ஆனால் இது எப்படி என்று யோசித்த போது நான் சொன்னன் „ நிச்சயமாக இது உங்கடை அண்ணாக்களின் ஏற்பாடுதான், எங்களுக்கு சேர்ப்பிறைஸ் தரவேண்டுமென்பதற்காக எங்களுக்குச் சொல்லவில்லை போல’ அவளும் அதை ஆமோதித்தால்.
திகைப்பும் வியப்பும் கலந்தபடி கோட்டலுக்கு தேவையான உடுப்புக்களை ஒரு சூட்கேசில் வைச்சுக் கொண்டு ராக்சி எங்களுக்காக காத்துக் கொண்டிருக்கும் என்று நினைச்சபடி சூட்கேசுடன் வெளியே வந்து கதவைப் பூட்டிய போது எமது எதிர் வீட்டிலிருந்து ஒரு இளம் பெண் கதவைத் திறந்து வெளியே வந்து கதவைப் பூட்டியபடியே, எங்களைப் பார்த்து „ „கலோ’ சொன்னாள்.நாங்களும் „கலோ’ என்றம்.
அவள் சீலை உடுத்திருந்தாள்.அவள் தமிழ்ப் பெண்தான்.ஆனால்: இந்தியத் தமிழா இலங்கைத் தமிழா என்பதைக் கண்டு பிடிக்க முடியவில்லை.லிப்ட் வரையும் அவளும் எமக்குப் பின்னால் நடந்து வந்தவள் லிப்ட் வரும் வரை காத்திருக்கையில் „ நீங்க இங்க புதுசா’என்று கேட்க,யோகமலர் ஆமாங்க எனவும் நான் „ஓம்’ என்று சொன்னதும் என்னையும் யோகமலரையும் மாறி மாறிப் பார்த்தவள் யாழ்ப்பாணத்தில பேசுற மாதிரி ஓம் என்றாரே என அவள் கேட்க „ ஆமாங்க அவர் சிறீலங்காவுங்க யாழ்ப்பாணம்,நான் மலேசியா ஜோகூர்பாருங்க „ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே லிப்ட் வந்து நின்று கதவு திறக்க நாங்கள் மூவரும் உள்ளை போனம்.
(தொடரும்)
![]()