ஆறின கஞ்சியென்றாலும் சூடான அரசியல் கஞ்சிதான்!…. ஏலையா க.முருகதாசன்.

செய்திகள் வழியாக நமது அரசியாலர்களின் நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் உள்ளேயுமான அவர்களின் உரைகள் பற்றிய எனது பார்வையே இக்கட்டுரையாகும்.
எமது அரசியாலர்கள் என விளிப்பது யாரையெனில் தமிழ் அரசியல்வாதிகளில் அரசோடு நில்லாதவர்களாகவும் கடந்துவந்த நடந்து முடித்த தேர்தல்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை குறை சொல்வதே தேர்தல் விஞ்ஞாபனம் என்று மக்களை நம்ப வைப்பதற்காக பகீரதப் பிரயத்தனம் எடுத்து இரு ஆசனங்களை எடுத்து மகிழ்ந்து இப்பொழுது நாடாளுமன்றத்தில் தாங்களும் ஏதாவது உரையாற்ற வேண்டும் என்பதற்காக உரையாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்க் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களையும்
திரு.செல்வராஜா கஜேந்திரனையும் முதலில் எடுத்துக் கொள்வோம்.
நாடாளுமன்றத்தில் இவர்கள் தமிழர்களின் உரிமை பற்றி ஏதாவது நுட்பமான அரசியல் பற்றி புதிய அணுகுமுறை பற்றிப் பேசுகிறார்கள் என்றால் அது ஒன்றுமேயில்லை.
இவர்கள் எப்பொழுது நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்களோ அன்றிலிருந்து மீண்டும் தெரிவான இன்றுவரை சூத்திரமாடுமாதிரி ஒரே விடயத்தையே சுற்றிச்சுற்றி வருகிறார்கள்.
எனது அனுபவமாக ஒரு விடயத்தை இங்கே பதிவு செய்ய ஆசைப்படுகிறேன்.அரசியலென்றால் என்னவென்றும் அரசியல்வாதிகளென்றால் எத்தகைவர்கள் என்ற விபரத்தை (சிறுவனாக போடு புள்ளடி வீட்டுக்கு நேரே என்றுஉ மாமரக் கிளையிலிருந்து விடலையாகி அறிதல் புரிதல் என்றொன்றை எட்டிய போது) அறிந்து கொண்டதில் இருந்து இன்றுவரை அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் அரசியலாகவே எமது அரசியல் இருந்து வருகிறது.
„எங்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புங்கள் உங்களுக்கு வேண்டியதை வென்றெடுத்துத் தருகிறோம்’ என்று மீண்டும் சூளுரைத்துப் போனவர்களில் ஒருவர்தான் செல்வராஜா கஜேந்திரன் அவர்கள்.
பாலர் வகுப்பில் அரிச்சுவடி படித்தவன், படிப்படியாக படித்து கல்வியின் உயரத்தைத் தொட்டு விடுவான்.ஆனால் செல்வராஜா கஜேந்திரன் இன்றும் அரசியல் பாலர் பாடத்தை நாடாளுமன்றத்தில் ஒப்புவித்துக் கொண்டிருக்கிறார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னால் முடிந்த சாத்தியமான எல்லா வழிகளையும் பயன்படுத்தி தமிழர்களின் உரிமைக்காகப் போராடினார்கள், போரடிய போதும் அவர்களால் எதையும் சாதிக்க முடியவில்லை.
சாதிக்க முடியவில்லையென்றால், தமிழ் அரசியல்வாதிகள் தம்மைத் தாமே ஆய்வு செய்யவில்லை.செய்ய வேண்டிய பொறுப்பு உண்டு.தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தாம் போகும் பாதை சாத்தியப்படாத பாதை என்று தெரிந்த
போதும் வாக்குக் கேட்ட போது கொடுத்த வாக்குறுதியை மக்கள் நினைவில் வைத்துக் கொள்வார்கள் என்பதை உணர்ந்து தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் தாம் போகும் வழி தவறென்று தெரிந்ததும்,இலங்கை அரசோடு ஒத்துழைத்துத்தான் இனி தமிழர்களின் அரசியலை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை வெளிப்படுத்திய போதெல்லாம் அவர்களைக் கடுமையாக விமர்சித்தவர்களில் ஒரு அணியினர்தான் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் கட்சியைச் சேர்ந்த செல்வராஜா கஜேந்திரன் அவர்கள்.
அவர் ஒரு நாடாளுமன்ற கதிரைக்கு ஆசைப்பட்டார், கிடைத்துவிட்டது ஏதோ பேசுகிறார்.அவர் பேசுவதை சிங்கள அரசியல்வாதிகள் நேரம் போவதற்காகத்தானும் கேட்கிறார்களோ தெரியாது.பேசட்டும்,பேசுவது அவர் உரிமை என்று கேட்பவர்களும் சலிப்படைந்து எழுந்து போகிறவர்களும் உண்டு.
அடுத்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.அவரின் மோசமான உள்ளக் கிடக்கையையும் அவர் யார் என்பதையும் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முறையிலிருந்து அறிய முடிந்தது.
அவர் கட்சியிலிருந்து விலகிய சட்டத்தரணி மணிவண்ணன் இப்பொழுது யாழ் மாநகர முதல்வராக இருக்கிறார்.அவர் யாழ் எல்லைக்கு உட்பட்ட இடத்தில் வாகன தரிப்பிட ஒழுங்கைச் செய்வதற்காக அதற்கென்று ஒரு சீருடை கொண்ட பணியாளர்களை நியமித்த போது,மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல சீருடை புலிச் சீருடை என அரசு குற்றஞ்சாட்டி முதல்வர் விசாரணைக்குட்படுத்தப்பட்டு விடுதலையானார்.
மணிவண்ணனைப் பற்றி நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரையாற்றுகையில்’ மணிவண்ணன் எனது கட்சியில் இல்லை,அவருக்கும் எனக்கும் முரண்பாடு உண்டு „ என்று சொல்லி தமிழருக்குள் ஒருமித்த கருத்து இல்லை என்பதை வெளிப்படுத்தினார்.
இதில் சிங்கள அரசியல்வாதிகளிடமிருந்து நாம் பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும்.தமிழர்களுக்கு எதிராக செயல்படும் போது தனிமனித விரோதங்களை பொது இடங்களில் அவர்கள் காட்டிக் கொள்வதில்லை.
அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள். அவரும் நாடாளுமன்றத்தில் அரைச்ச மாவையே அரைப்பவர்தான்.நாடாளுமன்றத்தில் பேசுவதற்கென்று சில வரைமுறைகள் இருக்கின்றன.இவர் யாரையாவது குறை சொல்வது என்றால் எழும்பைக் கையில் எடுத்துவிடுவார்.
எழும்புத் துண்டுகளுக்கு ஆசைப்படுபவர் என்று எதிரிகளை நோக்கி வசைபாடுவதற்கு தயங்கவே மாட்டார்.அவரின் கையில் எழும்புத் துண்டு இல்லையெனில் அவரால் எதுவும் பேச முடியாது .அவரின் அரசியல் எழும்புத்துண்டு அரசியலே.
அதே அவர் அண்மையில் தமிழக முதல்வரான ஸ்டாலிக்கும்,சீமானுக்கும், கமலகாசனுக்கும் நாடாளுமன்றத்தில் வாழத்துச் சொல்லியிருக்கின்றார்.
நாடாளுமன்றத்தில் எதைப் பேச வேண்டும், பொதுமக்கள் மத்தியில் எதைப் பேச வேண்டும் என்பதை அவர் இன்னும் அறியவில்லை, மனோ கணேசன் அவர்களிடம் எங்கே எதைப் பேச வேண்டும் என்பதை தமிழ் அரசியல்வாதிகள் கற்றுக் கொள்ள வேண்டும்.
சிங்கள அரசியல்வாதிகளுக்கு கொம்பு சீவிவிடுவதில் சிறீதரன் போன்றோர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மே 18 நிகழ்வினை நினைவுகூர்ந்து நாடாளுமன்றத்திற்கு வெளியே மெழுகுவர்த்தியைக் கொழுத்துவதில் ஏற்பட்ட பிணக்கில், காட்டிக் கொடுத்தவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியனும் சுமந்திரனும் எனச் சொல்லியிருக்கின்றார்கள் ஒரு சிலர்.
பொருத்தமற்றவர்களும் நுட்பறிவு இல்லாதவர்களும் தமிழ்த்தலைவவர்களாக இருக்கிறார்கள்.அதுவும் நாடாளுமன்றத்தில் அவர்கள் பொழுது போக்குகிறார்கள்.
![]()