கதைகள்

அன்பான வெள்ளையர்கள்!… ( சிறுகதை ) …. சங்கர சுப்பிரமணியன்.

நம்மவர்கள் என்னதான் “கருப்புத்தான் எனக்கு புடிச்ச கலரு, அவன் கண்ணு ரெண்டும் என்ன மயக்கும் டவுசண்ட் வாட்ஸ் பவரு”ன்னு கீழே விழுந்தலும் மீசையில் ஒட்டாத கதையாக பந்தா பண்ணினாலும் அப்பன் குதிருக்குள் இல்லை என்பதை மறக்கமுடியுமா? என்ன இது புதுக்கதையா இருக்குன்னு தலையைச் சொரியுமுன்னே நம் வரலாற்றையும் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டாமா?

இதை நம்மவர்கள்தான் வரலாற்றில் ஒரு காலத்தில் “கண்ணா கருமை நிறக் கண்ணா உன்னைக் காணாத கண்ணில்லையே” என்று திரையில் குடம் குடமாக கண்ணீர் வடித்த நடிகையோடு சேர்ந்து டூரிங் திரையரங்குகளில் படம் பார்த்த தாங்களும் கண்ணீர் விட்டு அழுது
மூக்கைச் சிந்தி யாருக்கும் தெரியாமல் லாவகமாக பக்கத்தில் இருப்பவரின் புடவையிலேயே தடவவும் செய்திருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் பக்கத்தில் இருப்பவரின் புடவையில் இவர்கள் தடவுமுன்னே அவர்கள் ஒரு நிமிடத்திற்கு முன் இவர்களுக்கு தடவியது தெரியாது.

இப்படி தடவிய செயலை அவர்கள் ஏதோ பெரிதாய் வெற்றிவாகை சூடிய மாதிரி காட்டும் மிதப்பு இருக்கிறதே அதைப் பிரதிபலிக்க ஆஸ்கார் விருதைப் பெற்ற திரைப்பட நடிகையாலும் முடியாது. நம்மவர்களுக்கு உண்மையில்
வெள்ளையில் அப்படி ஒரு ஈர்ப்பு. திருமணத்துக்கு பெண் பார்க்க சென்ற குடும்பத்தாரிடம் “என்ன ராசம்மா அக்கா பொண்ணு நல்ல நிறமா?” என்று கேட்பதும் அதற்கு ராசம்மா அக்கா “இல்லடி குருவம்மா, பொண்ணு கருப்புத்தான் ஆனால் மூக்கும் முழியுமா இருக்கா” என்று சொல்லி மனதை தேற்றிக் கொள்ளும் கதைகளும் ஏராளம்.

சரி இந்த கதையைவிட்டு சொல்ல வந்த கதைக்கு வருவோம். இப்படிப் பட்ட பின்னணியைக் கொண்ட நம்மில் ஒருவரான வெள்ளையப்பன் சில ஆண்டுகளுக்கு முன் மெல்பனில் வந்து குடியேறினார். பல இடங்களுக்கு வேலை தேடிச்சென்றும் வேலை கிடைக்கவில்லை. நல்ல திறமைசாலி நல்ல ஆங்கில அறிவுடன் கெத்து காட்டினாலும் ஆஸ்திரேலிய உச்சரிப்பு என்ற படுகுழியில் விழுந்து ஏற்பட்ட காயத்தால் குணமடைய பலமாதங்கள் ஆயிற்று.

ஒரு நாள் முக மலர்ச்சியுடன் அவரது நண்பர் தணிகாசலத்தை சந்திக்க வந்தவர்,

“தணிகா, எனக்கு வேலை கிடச்சுட்டுது” என்றார்.

“அப்படியா? ரொம்ம சந்தோசம். வேலை எல்லாம் எப்படி? பாஸ் எப்படி?” என்று கேட்டார் தணிகாசலம்.

“வேலைய விடுப்பா. பாஸ் ரொம்ப நல்லவரு. வெள்ளைக்காரன்னா வெள்ளைக்காரன்தான்”

வெள்ளயப்பன் பாஸைப்பற்றி அப்படி புகழ்ந்து தள்ளினார். நம்ம ஊருன்னா அவங்க அப்பன் வீட்டு சொத்தை கொள்ளையடித்த மாதிரி எப்பவும் பாஸ் உம்முன்னு இருப்பாங்க. வேலை நிரந்தரமாகி கொஞ்ச காலத்துக்கு அது தொடரும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டே போனார்.

“அப்படியா? அப்படி என்ன பாஸ் நல்லவரு?”

“சொல்றன். இதுக்கு முன் எங்க வேலை பார்த்தாய் என்றார். நான் வேலை கிடைக்கல வேலை ஒன்னும் பாக்கலன்னேன். உடனே அவர் “வாட் யு டு பார் லிவிங்? என்றார். நானும் “ஐயம் லவிங் இன் அபார்ட்மண்ட்” என்றேன். அதற்கு அவர் என்னைப்பார்த்து சிரித்தார் என்னமாதிரி தங்கமான மனிதர்” என்றான்.

“அப்படியெல்லாம் கேட்டாரா?”

“அது மட்டுமா? வேலை முடித்து வீட்டுக்கு புறப்படும்போது அருகில் வந்து “கௌ ஆர் யு கோயிங்?” என்றார். நானும் “ஐயம் கோயிங் பை பைசைக்கிள்” என்றேன். அப்போதும் அவர் என்னை கனிவோடு பார்த்து சிரித்தார். நல்ல சிரித்த முகம்” என்றான்.

தணிகாசலம் மனதுக்குள் சிரித்துக் கொண்டான். வேலை கிடைத்தது என்று ஆசையோடு சொல்லவந்தவரிடம் ஏன் அவர் மகிழ்ச்சியைக் கெடுக்க வேண்டும். கொஞ்சநாள் கழித்து சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்தார். இருந்தாலும் நன்றாக ஆங்கில அறிவு உள்ளவர்தானே இவர். ஏன் இப்படி? ரொம்பநாளாய் வேலை கிடைக்காமல் இருந்து இப்போது கிடைத்த மகிழ்ச்சியால் ஒன்றும் புரியாமல் போனதா? என்று எண்ணிக் கொண்டே வீட்டுக்கு நடந்து வரும்போது ஒரு வெள்ளைக்கார கிழவியின் மேல் மோத அவள் “ஸ்டுபிட்” என்று சொல்ல இவர் “தாங்க் யூ” என்று சொல்ல அக்கிழவி தணிகாசலத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டு போனாள்.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *