கதைகள்
அகதியின் நாட்குறிப்பு!…. அத்தியாயம் – 09 ….. குடத்தனை உதயன்.



நடேசன் அதிகாலை வேளைக்கு கண் முழித்து விட்டான். இரவு கண்ட கனவு அவன் மனதில் அந்தரத்தில் அலைந்து திரிந்தன.
வானதி ஏதோ சொல்லிச் சொல்லி அழுகிறாள். கவிதா அவளின் கைகளைப் பற்றி என்னவோ எல்லாம் சொல்கிறாள். ஆனால் அவளின் அழுகை நின்ற பாடில்லை. நடேசன் அவர்கள் அருகில் போவதற்கு முயற்சிக்கின்றான். அவனது கால்கள் நகர மறுக்கின்றது. அத்துடன் திடுக்கிட்டு விழித்தவன் தான்.. தூக்கம் அவனை அணைத்துக் கொள்ளவில்லை.
வானதிக்கு ஏதாவது பிரச்சனையோ…? என நினைத்து ஏங்கினான். வானதிக்கு கடிதம் எழுதி வாரக் கணக்காகிறது. இன்று அவளுக்குக் கடிதம் எழுத வேண்டுமென நினைத்துக் கொண்டான்.
டக்…. டக் … டக்… கதவு தட்டும் சத்தம் கேட்கிறது. நேரத்தைப் பார்க்கிறான். சிவ.. சிவா பத்து மணியாயிற்று. கதவைத் திறந்தான்.
ஆதி தாயாகத்திலிருந்து வந்த கடிதத்துடன் நின்றான்.
“என்னடா..” ஊரிலிருந்து கடிதம் வந்திருக்குப் போல..?
ஆதி ஒரு சிரிப்புடன்..,
“எனக்கில்லை.. உங்களுக்குத்தான்” என்றான்.
கடிதத்தை வாங்கிப் பார்த்தான். வானதியின் முத்து முத்தான கையெழுத்து அந்தக் கடித உறையில் பூத்துக் குலுங்கியது.
“அண்ண…”
நீங்கள் கடிதத்தை ஆறுதலாப் படித்திட்டு மேலே வாங்கோ.. என்றவாறு சென்று விட்டான்.
அன்பின் நடா….
உங்கள் கடிதம் வந்து சரியாக ஒரு மாதமும் இரண்டு நாட்களும். நீங்கள் நலமாக உள்ளீர்களா..?
ஏன்…? இவ்வளவு நாட்களாகக் கடிதம் போடல. எனது உறவை மறக்க நினைக்கிறீர்களா..? கவிதாவும் என்னை விட்டிட்டு….. இனிமேலும் காண முடியாத தூரம் சென்று விட்டாள்.
எனக்கிருந்த ஒரே ஆறுதல் நீங்கள் தான். நீங்களும் என்னை வெறுப்பதாகத் தான் உணர்கின்றேன். பறவாயில்லை.. எனக் கடிதம் தொடர்ந்தது.
நடேசனின் மனதிலும் அவனது மனப் போராட்டம் நீட்சியற்றுத் தொடர்ந்தது.
22/04/1989

Germany
அன்பின் வானதிக்கு…
கொஞ்சம் வேலை அதிகமானதால் உமக்குக் கடிதம் எழுத முடியல மன்னித்துக் கொள்.
நான் இங்கு நலம் என்றால்.. அது பொய் சொல்வதாகும். உடலளவில் நலம். ஆனால் மனதளவில் …… கவிதாவின் நினைவுகள் மனதில் நீட்சியற்றுத் தொங்கிக் கொண்டிருக்கின்றன.
வாயால் நாங்கள் காதலை சொல்லா விட்டாலும். மனதால்.. உள் உணர்வுகளால் நாங்கள் மனதார வாழ்ந்துள்ளோம். உருவத்தால் அவள் இல்லையென்றாலும் , உள்ளத்தால் என்னுள் ஜீவிக்கிறாள் என்பதை என் மனம் வெளிப்படுத்தி நிற்கின்றது. மறக்க நினைக்கின்றேன் அவளை.! ஆனால் முடியவில்லை …… கடிதம் தொடர்ந்தது.
மீண்டும் கதவு தட்டும் சத்தம் …..டக்…டக்….டக்….
அமைதியாகக் கதவைத் திறந்தான் நடேசன். அங்கே செல்லப்பா நின்று கொண்டிருந்தார்.
“என்னடா தம்பி..”
மேலேயும் வரல…. என்ன செய்கிறாய்..?
“வானதியின் கடிதம் வந்தது…”
அது.. தான்…..
எனத் தேய்ந்த ரேப் ரிக்கார்டர் மாதிரி இழுத்தான்.
“சரி.. சரி..
நீ… எழுது..! நான் பிறகு வாறன்.
எனச் சொல்லி திரும்பிப் போக முற்பட்டார்.
“அண்ண..”
அதெல்லாம் முடிச்சாச்சு நீங்கள் வாங்கோ..
எனக் கூப்பிட்டான்.”
“சரி அப்ப வெளிக்கிடு வெளியால போட்டு வருவம்”
என்றார் செல்லப்பா.
“நடேசனுக்கு வலு சந்தோசம். “செல்லப்பாவுடன் கதைக்க வேண்டுமென்று அவன் மனது இராப் பூராவும் அந்தரித்துக் கொண்டிருந்தது.”
“அண்ண..” கொஞ்சம் இருங்க வாறன்..
என்றவாறு உடை மாற்றினான்.
சும்மா சொல்லக்கூடாது.. நடேசன் கறுப்பென்றாலும் சாந்தமான முகம், பார்ப்பவரை திரும்பிப் பார்க்க வைக்கும் கண்கள், அணிந்து கொள்ளும் உடையிலும் ஒரு நேர்த்தியிருக்கும். எனச் செல்லப்பா தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.
“சரி அண்ண.. போவமே..?”
என்றான் நடேசன்.
“அண்ண..” என்ன.. ஏதோ யோசனையில இருக்கிறியல்?
என்ன.. உங்களுக்கும் வீட்டிலிருந்து கடிதம் வந்ததோ..?
“ ம்…ம்… “
எனத் தலையாட்டினார் செல்லப்பா.
“ஓ……கோ…..”
அப்ப பழைய ஞாபங்கள் வந்திட்டுது போல …
என்னடா.. கிழிஞ்சு போன பழைய ஞாபகம்..
என அவர் சொல்லும் போதே.. அவரின் குரலிலுள்ள குழைவு, அதன் ஏக்கம், ஒரு விதத் தவிப்பு வெளிப்பட்டது.
உண்மையில் இந்த அகதி வாழ்க்கையென்பது எத்தனை துயரம்.
அதிலும் கொடுமை குடும்பஸ்தரா இருந்து பிரிந்து வாழ்வது.
என்றார் செல்லப்பா.
“உண்மைதான் அண்ணா..”
இந்த வாழ்க்கையும் ஒரு தியாக வாழ்வுதான்.
“தம்பி..”
கஸ்ரமோ , துன்பமோ, குடும்பத்துடன் வாழுமாப் போல வராது.”
வாழ்கையை … வாழ்க்கையா வாழ வேண்டும். அது பணத்திற்கான வாழ்க்கையா இருக்கப்படாது. அதுவும் மனைவி , பிள்ளைகளைப் பிரிந்து வாழ்வது துன்பத்திலும் துன்பம் மோன.”
நடேசன் அவரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒற்றை வரியில் வாழ்வின் வலியை மிகவும் அற்புதமாகச் சொல்லி விட்டார் செல்லப்பா.
“அண்ண..”
நீங்கள் குடும்பத்தைக் கூப்பிடலாம் தானே?”
செல்லப்பா பதில் சொல்லாமல் அமைதியாக நடந்தார்.
நடேசனுக்குள் அவரின் அமைதி சிறு பதட்டத்தை ஏற்படுத்தியது.
“ அண்ண.. ஏதும் தப்பாக் கேட்கலையே?”
“இதில் என்னடா தப்பு ?”
இவன் தாற அகதிக் காசையும் நான்கு , ஐந்து மணிநேரம் வேலை செய்கிற நாள் சம்பளத்தையும் வைத்து, நாக்குக் கூட வழிக்க முடியாது.
இந்த இலட்சணத்தில்….
“ம்…ம்… “
எனத் தலையாட்டிய நடேசன்…,
நூறுவீத வேலை செய்தால்..! அகதிக் காசைக் குறைத்துப் போடுவான்.. கையும், கணக்கும் சரி. என மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.”
“தம்பி..”
அவன் அகதியென்று வந்த உங்களுக்குத் தான் காசு தாறானே தவிர.., ஊருக்குக் குடுக்கவில்லை.
என்று கூறினார் செல்லப்பா.
“இப்படியே போனால் எப்படி.. “அண்ண..?”
ஏதோ.. நெளிவு சுளிவுகளைப் பார்த்துச் செய்ய வேணும். என்றார் செல்லப்பா.”
“மகனையாவது கூப்பிட வேணும்..”
நீ வந்த ஏஜன்சி எப்பிடியடா.. மோன..?
“ரூட் “ஓடும் மட்டும் எல்லாரும் நல்லவனாத்தான் தெரியும்., கதைத்துப் பார்க்கலாம் என்றான் நடேசன்.
செல்லப்பா சிறிது யோசனையின் பின்பு கேட்டார் .
வந்து இறங்கிய பின்பு காசு தரலாமென்று கதைக்க முடியுமே?
“அண்ண..”
முற்காசு குடுக்க வேண்டி வரும்.., என்னத்திற்கும் கதைத்துப் பார்ப்பம்.”
செல்லப்பாவின் ஏக்கப் பார்வை அவனை முட்டி மோதிய வேளை….
தொடரும்……
![]()