பகுத்தறிவும் தகர்ந்து வரும் பகுத்தறிவும்!… சங்கர சுப்பிரமணியன்.

![]()
பகுத்தறிவு ஒன்றும் இழிவானதோ பேசக்கூடாததோ அல்ல. சொல்லப்போனால் எங்கோ இருக்கும் ஒரு ஆற்றல், அதைத் தொழுதால் நன்மை பயக்கும் என்று கண்ணை மூடிக்கொண்டு நம்பும் தன்மையை தவிர்ப்பது தான் பகுத்தறிவு. இதை படிக்காத பாமர மக்கள் நம்பினால் அது அவர்களது அறியாமை என்று சொல்லலாம். ஆனால் கற்றறிந்த மக்களே இதை ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால் அந்த எண்ணம் ஆண்டாண்டு காலமாக புரையோடிப்போய் இருப்பதுதான் காரணம் ஆகும்.
இந்த பகுத்தறிவு பேசுபவர்கள் இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் அதிலும் குறிப்பாக திராவிடர் கழகத்தில்தான் இருக்கிறார்கள் என்று எண்ணினால் அது மடமை. இந்தியா உட்பட உலகம் முழுக்க இந்த பகுத்தறிவுவாதிகள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லா மதத்திலும்
இருக்கிறார்கள். இவர்களைத் தவிர மதம்சாராத பகுத்தறிவுவாதிகளும் உள்ளனர்.
பகுத்தறிவுவாதிகள் எப்படி மதத்தில் இருப்பார்கள்? இவர்களது முன்னோர் ஏதாவது ஒரு மதத்தைப் பின்பற்ற அவர்களது வழியில் இவர்கள் தோன்றியதால் இவர்கள் விரும்பாமலே மதம் இவரோடு ஒட்டிக் கொள்ளும். இவர்களது நிலைமை மிகவும் வருந்தத்தக்கது. இவர்கள் தமது குடும்பத்துக்குள் இருந்து கொண்டே மதத்தையும் மூடப் பழக்க வழக்கங்களையும் எதிர்த்துப் போராட வேண்டும்.
சான்றாக மத நம்பிக்கயுள்ள குடும்பத்தில் ஒரு பகுத்தறிவாளர் தோன்றிவிட்டால் அவரின் பாடு மிகவும் திண்டாட்டம். ஒரு
மதநம்பிக்கையுடைய குடும்பத்தில் கணவன் பகுத்தறிவுவாதியாகவும் மனைவி மக்கள் மற்றும் பெற்றோர் மத நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் அவன் பாடு திண்டாட்டம். குடும்பத்தாருக்கு
எடுத்துரைத்து அவர்களை மாற்றலாம். மாற்றமுடியாத பட்சத்தில் மனைவியைக் கட்டாயப்படுத்தினால் அவனுக்கு பெண்ணடிமைத் தனத்தை ஊக்குவிப்பவன் என்ற அவப்பெயர் மிஞ்சும்.
பிள்ளகளையும் பெற்றோரையும் கட்டாயப் படுத்தினால் மற்றவர்கள் பார்வையில் அவனை அடிமைபோல நடத்துகிறான் என்ற எண்ணமே ஏற்படும். இந்த அவப்பெயரிலிருந்து விடுபட அவன்
அவர்களது மூடநம்பிக்கைகளில்
தலையிடாமல் விட்டுவிடுகிறான். அப்படியும் அவனுக்கு அவப்பெயர்தான். குடும்பத்தையே திருத்த முடியாதவன் ஊரைத்திருத்த வந்துவிட்டான் என்றவசை பாட ஆரம்பிப்பார்கள்.
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதைப்போல பகுத்தறிவை ஏற்காதவர்களை மாற்றமுடியாது. பகுத்தறிவுக் கருத்துக்களை ஏற்காமல் மூடப்பழக்கங்களால் கொரோனா நோயைக்கூட கட்டுப்படுத்த முடியாமல் இந்தியா தத்தளித்து வருவதைக் கண்கூடாகக் கண்டுவருகிறோம். உலகுவாழ் அறிவுசார்ந்த மக்கள் கூறும் கருத்துக்களை ஏற்க வேண்டும்.
கைதட்டின்னால் கொரோனா போய்விடுமா? தீபம் ஏற்றினால் கொரோனா தெறித்து ஓடுமா? இப்போது கொரோனா கோர தாண்டவம் ஆடிவரும் நேரத்தில் ஏன் யாருமே கைதட்டவே தீபம் ஏற்றவோ சொல்லவில்லை? பலன் அளித்த அந்த நல்லவழியைப் பின்பற்ற ஏன் யாருமே முன் வரவில்லை. அல்லது அது ஒரு குருட்டு நம்பிக்கை என்ற ஞானோதயம் இப்போது ஏற்பட்டு விட்டதா?
இவ்வளவுக்குப் பின்னும் இது புண்ணியபூமி இங்கெல்லாம் கொரோனா தீவிரமடையாது என்றும் இந்தியர்கள் இயற்கையிலேயே நோய் எதிர்ப்பு ஆற்றல் படைத்தவர்கள் என்றும் அவர்களை எல்லாம் கொரோனா ஒன்றும் செய்யாது என்று ஏமாற்றி இன்று பேரழிவைச் சந்திக்க வைத்து விட்டார்களே என்று எண்ணி நெஞ்சு பதைக்கிறது.
இதில் தனிமனித இடைவெளியைக் கடைப் பிடிப்பதை கைவிட்டு கும்பமேளா என்று லட்சக்கணக்கில் மக்களை கங்கையில் நீராட வைத்த கொடுமையை யாரிடம் சொல்லி அழுவது? கீழேவிழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாக கங்கை நீர் புனிதமானது அதனால் கொரோனா பரவாது என்ற சப்பைக்கட்டு வேறு.
போதாக் குறைக்கு உத்திர பிரதேசத்தில் சிலர் பசுமாட்டு மூத்திரத்தை குடித்தால் கொரோனா போய்விடும் என்கிறார்கள். அதிலும் ஒருவர் தினமும் ஐந்து மூடி அளவு கோமியத்தை குளிர்ந்த நீரில் கலந்து
காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கொரோனா பறந்தோடிவிடும் என்று கூறிவருகிறார். அதைக் கடைப்பிடித்தும் வருகிறார். இப்படிப்பட்ட அறிவாளிகளை எல்லாம் வைத்துக்கொண்டு கொரோனாவுக்கு தடுப்பூசி பற்றாக்குறை என்று ஏன் கவலைப்பட வேண்டும்?
இது இப்படியிருக்க மாடல் மாநிலமாக கருதப்படும் குஜராத்தில் பலர் மாட்டு மூத்திரத்தையும் சாணியையும் ஊடலில் பூசிக்கொள்ளும் சிகிச்சையில் ஈடுபட்டுள்ளார்கள். அந்த பூச்சு உலர்ந்ததும் பாலினால் அந்த பூச்சை கழுவி சுத்தம் செய்கிறார்கள். இந்த சிகிச்சையால் கொரோனாவை வரவிடாமல் தடுக்கலாம் என்ற மருத்துவ சான்றும் இல்லை.
எல்லாம் சரி, இதை பகுத்தறிவின்றி மூடப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் செய்தால் பரவாயில்லை என்று விட்டுவிடலாம். ஆனால் படித்தவர்களே அதிலும் மருத்துவர்களே மக்களுக்கு அறிவுரை சொல்லி தடுக்காமல் மருத்துவம்
படித்த மருத்துவர்களே மாட்டுச் சாணத்தையும் மூத்திரத்தையும் உடலில் பூசிக் கொள்ளும் கொடுமையை என்னென்று சொல்வது?
இப்போது ஒரு புதுப்பிரச்சினையும் இவர்களால் வந்துள்ளதாம். கொரோனாவுக்கு பயந்து மாட்டுச்சாணத்தையும் மூத்திரத்தையும் பூசிக் கொண்டவர்களுக்குத்தான் அப்பிரச்சினை. இவர்களில் சிலர் இன்னும் ஒருபடி மேலே போய் பசுமாட்டைத் தழுவிக் கொள்கிறார்களாம். இவர்களுக்கு தோல்வியாதி வந்துள்ளதாம். பின் எப்படி வராமல்போகும்? இதற்குப் பின்பாவது இந்த சிகிச்சை முறையைத் தவிர்ப்பார்களா?
இதுபோன்ற கூத்துக்களெல்லாம் தென்னிந்தியாவில் ஏன் அரங்கேறுவதில்லை? அதிலும் தமிழநாட்டிலும் கேரளாவிலும் எட்டிக்கூடப் பார்ப்பதில்லை. ஏனென்றால் இங்கு பகுத்தறியும் மக்கள் இருக்கிறார்கள். பகுத்தறிவு என்றால் கடவுள் இல்லையென்று சொல்வதாக மட்டும் பெரும்பாலானோர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அது அப்படியல்ல. அறிவுக்கு ஒவ்வாத செயல்களை கண்மூடித் தனமாக பின்பற்றுவதும் பகுத்தறிவுக்கு புறம்பானதே.
இப்படிப்பட்ட பகுத்தறிவும் கொஞ்சம் கொஞ்சமாக தகர்ந்து வருகிறது. அதற்கேற்றாற்போல மூளைச்சலவை செய்யவும் ஆட்களை தயார்படுத்தி களமிறக்கி இருப்பதாக செய்திகள் வலம் வருகிறது. ஒரே நாடு ஒரே மதம் ஒரேமொழி என்று வர இருப்பதைப்போல ஒரே சாதியும் வந்து விடுமா? என்ன குழப்பமாய் இருக்கிறதா? குழப்பத்தை தவிர்த்து விடுகிறேன். ஒரே நாடு ஒரே மதம் ஒரே மொழி என்று வந்து விட்டால் அடுத்தது எல்லாம் ஒரே சாதிதானே? அதாவது எல்லோரும் உயர்ந்த சாதி அல்லது எல்லோரும் தாழ்ந்த சாதி. நல்ல ஒரு விடியலை நோக்கித்தான் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()