கட்டுரைகள்

நாங்கள் யார்?…. 6 ….. ( கட்டுரை ) ….. ஏலையா க.முருகதாசன்.

மனிதர்கள் யார் என்ற கேள்விக்கு எந்தவொரு மானிடவியல் ஆய்வாளர்களாலும் மனிதர்களின் மாறுபடும் குணங்களையோ, அவர்களின் நடவடிக்கைகளையோ இவர்கள் வாழ்நாள் முழுவதும் மாறுபடாத குணங்களையுடையவர்கள் என்றோ அல்லது ஒரு மனிதனின் குணத்தை ஆய்வு செய்து இவன் வாழ்நாள் முழுக்க ஒரு விநாடிப்பொழுதிலும் மாறுபடாத ஒரே குணமுடையவன் என்றோ சொல்லிவிட முடியாது.

இக்கட்டுரையில் சொல்லப்பட்டு வருகின்ற ‘எக்ஸ்’ என்ற உதாரண மனிதன் ஒருவனல்ல, கோடிக்கணக்கானவர்களின் குறியீடாக கருதப்படுபவன்.

நாம் சந்திக்கும் பல மனிதர்கள் எல்லாரையும் எக்ஸாக வகைப்படுத்தி பார்க்கும் போது அவர்களின் மனதிற்குள் உட்புகுந்து பார்க்கையில் அவர்களை ஆராயந்தறிவதற்குள் மூளை களைத்துவிடும்.

பல எக்ஸ் என்ற மனிதர்கள் ஒரு விழாவினைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.ஒருவனை நிழல் போலத் தொடர்ந்தேன்.கூடுவிட்டு கூடு பாய்தல் போல அவனுடைய உடலுக்குள் புகுந்து கொண்டேன்.

விழா ஏற்பாட்டாளர் அவனெதிரே வந்து கொண்டிருந்தார். எக்ஸ் எழுந்து அவரைக் கைகூப்பி வணங்கி இரண்டு கைகளையும் பிடித்து வணக்கம் என்று சொன்னான்.

அவர் கேட்காமலேயே நல்லாய் ஏற்பாடுகள் செய்திருக்கிறீர்கள்.உண்மையில் நீங்கள் ஒரு சமூகப் பிரக்ஞை உள்ளவர்தான் உங்களை யாராலுமே மிஞ்ச முடியாது என்றான் .அவரும் நான் என்ன பெரிசாகச் செய்துவிட்டேன் என்று அடக்கமாகச் சொல்லிவிட்டு நகர்ந்தார்.

எக்ஸ் இடது பக்கத்திலிருந்தவரிடம் உண்மையிலை அந்தாள் கெட்டிக்காரன்தான் வருசாவருசம் விழா செய்கிறார் என்றான்.பக்கத்திலிருந்தவரும் தலையாட்டி ஆமோதித்தார்.

எக்ஸ்சுக்கு வலது பக்கத்திலிருந்தவர், எக்ஸ் விழா ஏற்பாட்டாளரைப் பாராட்டடியதையும் பிறகு இடது பக்கத்திலிருந்தவரிடம் அவரைப் பராட்டியதையும் அவரும் ஆமோதித்ததையும் கவனித்தார்.

எக்ஸ் ஒரு கள்ளச் சிரிப்புடன் வலது பக்கத்திலிருந்தவரைப் பார்த்தார்.வலது பக்கத்திலிருந்தவர் எக்ஸைப் பரிந்து கொண்டவராக சிரித்தார்.

சில நிமிடங்களின் பின் எக்ஸ் எழுந்து போனான்.விழா மண்டபத்தின் பின்பக்கம் பலர் நின்று கொண்டிருந்தனர்.தெரிந்தவர்ளுடன் கைலாகு கொடுத்தும் புன்னகையும் செய்து கொண்ட எக்ஸ் ஓரிருவருடன் பேச்சுக் கொடுத்தான்.

அங்கே பல எக்ஸ்கள் நின்றார்கள்.எழுந்து போய் நின்ற எக்ஸ் எப்படி விழா என்றான்;.வரவுக்கு ஒரு வழி செய்திருக்கினம்.நிகழ்ச்சிகள் படு மோசம்.ஒவ்வொரு வருசமும் விழா செய்யிறதே வருமானத்திற்குத்தான் என்றனர்.

எக்ஸ்சும் அதில் பங்கு கொண்டான்.சில நிமிடங்களுக்கு முன் ஏற்பாட்டளரைப் பாராட்டி பக்கத்திலிருந்தவரை ஆமோதிக்க வைத்து இன்னொருவரை கள்ளச் சிரிப்புடன் பார்த்தவன் இப்பொழுது அவரைக் குறை சொல்கிறான்.

அதே விழா ஏற்பாட்டாளர் அவர்கள் நின்ற பக்கமாக வந்தார்.எப்படி விழா என்றார்.இதுவரை நேரமும் அவரைக்; குறை சொன்ன எக்ஸ்கள் அருமையாக ஏற்பாடு செய்திருக்கிறீர்கள் என்றார்கள்.அவரும் புளகாங்கிதம் அடைந்து தன்னை முதலில் பாராட்டிய எக்ஸைப் பற்றி; ஊக்கப்படுத்தி பெருமையாக பேசுவதற்கு இவரை மிஞ்ச யாருமே இல்லை என்றார்.

உடனே எக்ஸ் நீங்கள் உங்கடை காசைச் செலவழித்து நட்டப்பட்டு சமூகத்திற்காக நல்லது செய்ய சிலதுகள் குறை சொல்லுங்கள்தான் அதைக் காதிலை போடாதீர்கள் என்றான்.விழா ஏற்பாட்டாளர் மற்ற எக்ஸகளைப் பார்த்து அன்றலிருந்து இன்று வரை உண்மை பேசுகிற மனுசன் இவர் எனப் பாராட்டிவிடடுப் போனார்.

தான் பாராட்டியதை உண்மையென நம்பிப் போகிறாரே என எக்ஸ் நினைத்துக் கொண்டான்.

அவர் போனதும் பக்கத்தில் நின்ற எக்ஸ்களைப் பார்த்து அர்த்தத்துடன் சிரித்துக் கொண்டான்.

மீண்டும் இருக்கைக்கு போனான்.முன்பு இடது இருக்கையிலிருந்தவர் இப்பொழுது இல்லை.வொறொருவர் உட்கார்ந்திருந்தார்.அவரிடம் நிகழ்ச்சிகள் எப்படியிருக்குது என்றான் எக்ஸ்.சரியில்லை பம்மாத்து நிகழ்ச்சிகள் என்றார்.அப்படிச் சொல்லாதையுங்கோ அந்தாள் எவ்வளவு கஸ்டப்பட்டு இதைச் செய்கிறார் என்றான்.வலது பக்கத்திலிருந்தவர் கள்ளச் சிரிப்புடன் எக்ஸைப் பார்த்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button