காலத்தால் மறையாத கோகிலாம்பாள்!… முருகபூபதி.

![]()
அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் வட இலங்கையில் பரபரப்பாக பேசப்பட்ட உருத்திரபுரம் கொலைச்சம்பவம் ! முருகபூபதி பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான சிவாஜிகணேசன் நடித்த தூக்குத்தூக்கி படத்தில் வரும் வசனம் :
கொண்டுவந்தால் தந்தை, கொண்டுவந்தாலும் வராவிட்டாலும் தாய், சீர்கொண்டுவந்தால் சகோதரி, கொலையும் செய்வாள் பத்தினி, உயிர்காப்பான் தோழன். “ எல்லாம் சரி… அது என்ன கொலையும் செய்வாள் பத்தினி ? “ என்று அம்மாவிடம் கேட்டேன்.
மனைவி கொலைசெய்வாளா? அம்மா அதற்கு பதில்சொல்லாமல், வீரகேசரி பத்திரிகையில் ஒரு செய்தியை காண்பித்தார். அப்பொழுது எனக்கு 12 வயதிருக்கும். நான் பத்திரிகைகளும் கல்கியும் படிக்கத்தொடங்கிய காலம். அன்று நான் படித்தசெய்தி நடந்த இடத்தைப்பார்ப்பதற்கு சுமார் ஐம்பது வருடங்கள் காத்திருந்தேன். உருத்திரபுரம் என்றவுடன் எங்கள் ஈழத்து தமிழ்சமூகத்தின் மூத்ததலைமுறையினருக்கு உடனடியாக ஞாபகத்திற்கு வருவது உருத்திரபுரம் கோகிலாம்பாள்தான். அந்தக்கொலைச் சம்பவம் நடந்து அரைநூற்றாண்டு காலமாகிவிட்டது. ஆனாலும் கோகிலாம்பாள் இன்றும் பேசப்படுகிறாள். எழுதப்படுகிறாள். அவுஸ்திரேலியாவில் மேடையேறிய நண்பர் மாவை நித்தியானந்தனின் கொழும்பு மெயில் இசை நிகழ்ச்சியிலும் கோகிலாம்பாள் ஒரு பேசுபொருள்.
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி புறப்படும் இரவுநேர தபால் ரயில் பயணம் சுவாரஸ்யமானது. அனுபவித்தவர்களுக்குப்புரியும். பயணிகள் பலதும் பத்தும் பேசி சிரித்து கும்மாளமிட்டுவருவார்கள். ஊர்வம்பு பேசுவார்கள். முதியவர்கள் கோகிலாம்பாள் சம்பந்தப்பட்ட அந்தக்கொலைச்சம்பவம் பற்றி விஸ்தாரமாக கலந்துரையாடுவார்கள். அந்தக்காட்சியும் குறிப்பிட்ட கொழும்பு மெயில் இசைநிகழ்ச்சியில் சொல்லப்படும். எல்லாம் அநுராதபுரம் வரையில்தான். உரையாடி முடிக்கும்போது கொட்டாவிவரும். ஆசனங்களில் காலை நீட்டி நிமிர்த்தி உறங்கி விடுவார்கள். அநுராதபுரத்தில் ஏறும் சிங்களப்பயணிகள் “ நெகிட்டனவா..நெகிட்டனவா” என்று தட்டி எழுப்பிவிட்டு அங்கே அமருவார்கள். தங்கள் ஆழ்ந்த உறக்கத்தை களைத்துவிட்டார்களே இந்த பெரும்பான்மை இனத்தவர் என்று தமிழர்கள் மனதுக்குள் கறுவிக்கொள்வார்கள். இந்தப் பயண அனுபவம் பெற்றிருந்த எங்கள் சிரித்திரன் இதழ் ஆசிரியர் சிவஞானசுந்தரம் ஒரு சமயம் மகுடி கேள்வி பதிலில் இவ்வாறு எழுதியிருந்தார். கேள்வி: தமிழர்களை தட்டி எழுப்பிய பெரியோர் யார்? பதில்: அநுராதபுரத்தில் ரயிலேறும் சிங்களச் சகோதரர்கள்.![]()
வீரகேசரி ஆசிரிய பீடத்தைச்சேர்ந்த திருமதி அன்னலட்சுமி இராஜதுரை 2011 இல் எழுதியுள்ள நினைவுப்பெருவெளி என்ற நூலிலும் பிரான்ஸில் வதியும் புஷ்பராணி 2012 இல் எழுதியுள்ள அகாலம் நூலிலும் அந்தக்கோகிலாம்பாள் இடம்பெறுகிறாள்.![]()
மீண்டும் எனது இந்தப்பதிவிலும் இடம்பெறுகிறாள். ஏன்…? அவள் ஒரு பெண் என்பதனாலா? அல்லது அவள் சம்பந்தப்பட்ட கொலைச்சம்பவம் பாலியல் தொடர்புடையது என்பதனாலா? இல்லை…ஒரு மர்மநாவலுக்குரிய சூட்சுமங்கள் அதில் விரவிக்கிடப்பதனாலா? அவள் ஒரு பிராமண ஆஸ்திக சமூகத்திலிருந்து வந்த பெண் என்பதனாலா? பதிலை எப்படியும் தேடிக்கொள்ளமுடியும். கோகிலாம்பாள் ஆயுள்தண்டனை பெற்று நன்னடத்தையினால் விடுதலையாகி நெடுந்தீவு திரும்பி சில வருடங்களுக்கு முன்னர்
காலமாகிவிட்டாள். அவளது கதையை திரைப்படமாக்குவதற்காகவும் சிலர் அவளைத்தொடர்புகொண்டதாக அறியக்கிடைத்தது. சில வருடங்களுக்கு முன்னர் உருத்திரபுரம் பிள்ளையார் கோயிலுக்குச் சென்றேன்.![]()
அங்கிருந்த ஐயரிடம் என்னுடன் வந்த ஒருவர் கேட்கிறார்: “ அந்த அம்மா யாரைப்போல இருப்பார்கள்? “ கேட்பவர் அந்தக்கொலை நடந்த காலத்தில் இந்த உலகத்தில் பிறக்காதவர். ஐயர் சொல்கிறார்:
“ கமல்ஹாஸன் நடித்த அவ்வைசண்முகி படம் பார்த்தீர்களா? அதில் கமல் பெண்வேடம் தரிப்பார். அந்த அழகியதோற்றம் உள்ளவர்தான் கோகிலாம்பாள். “ அந்தக்கோயிலையும் சுற்றுப்புறத்தில் பசுமையாக வளர்ந்திருக்கும் செடி, கொடி, மரங்களையும் புற்தரைகளையும் பார்க்கின்றேன். அருகே ஒரு சிறிய வீடு. அதுதான் கோகிலாம்பாளும் ஐயரும் வசித்த வீடு என்பதை ஊர்ஜிதம் செய்துகொள்ள முடியாதுதான்.![]()
மின்சார வசதி இல்லாத ஒரு காலத்தில் அந்த உருத்திரபுரம் கிராமத்தில் ஆலய வளவில் நடந்த அந்தச்சம்பவம் உலகத்திற்கு தெரியவந்தபோது பத்திரிகைகள் போட்டிபோட்டுக்கொண்டு சுடச்சுட வழக்கு சம்பந்தப்பட்ட செய்திகளை வெளியிட்டன. யாழ்ப்பாணத்தில் ஈழநாடு பத்திரிகையின் விற்பனை பெருகியது. கொழும்பில் வீரகேசரி அலுவலகம் அந்தச்செய்திகளுக்காக நேரத்தையும் பக்கத்தையும் ஒதுக்கியது. என்னதான் நடந்தது? கோயில் ஐயரின் போக்குவரத்து தேவைகளுக்காக வந்துபோன ஒரு கார்ச்சாரதி வேலுப்பிள்ளை. எப்படியோ ஐயரின் மனைவி கோகிலாம்பளின் அழகில் மயங்கிவிட்டான். காதல்வசப்பட்டான். இந்திரன் கெட்டான் பெண்ணாலே…சந்திரன் கெட்டான் பெண்ணாலே
என்று எவர் அவனுக்கு அப்போது சொல்லியிருந்தாலும் காமம் கண்களை மறைத்துவிட்டிருக்கவேண்டும். கொல்லப்பட்ட ஐயர், எருக்கும்பத்துக்குள் புதையுண்டார். தீவுப்பகுதியிலிருந்து மகனைப்பார்க்க வந்த தந்தையாரிடம் அதாவது மாமனாரிடம் கோகிலாம்பாள் “ அவர் வெளியூர் போயிருப்பதாக”
பொய்சொல்கிறாள். அவரும் மகனைக்காணாது தவிக்கிறார். இந்நிலையில் ஒருநாள் கோகிலாம்பாளின் பெண்குழந்தை குழப்படி செய்ய, தாய் அடித்துவிடுகிறாள். குழந்தை “ அப்பா..அப்பா..” என்று அழுகிறது. “ ஓமோம்… அப்பா எருக்கும்பத்துக்கை இருந்துதான் வரப்போகிறார்” என்று வாய்தடுமாறி சொல்கிறாள் கோகிலாம்பாள். சொற்கள் கொல்லும்…வெல்லும் என்பார்கள். அன்று அவள் சொன்ன சொற்களே அவளை குற்றவாளிக்கூண்டில் ஏற வைத்துவிட்டன. கொல்லப்பட்ட ஐயரின் தந்தையிடம் பேத்தி, அம்மா சொன்னதை சொல்லிவிட்டாள். அவர் உஷாரடைந்தார். கோகிலாம்பாளின் கெட்டகாலம் மழை வந்து அந்த எருக்கும்பத்தை கரைத்துவிட உடல் வெளியே வந்துவிட்டது. கோகிலாம்பாளும் அவளது காதலன் வேலுப்பிள்ளையும் சம்பவத்தை தெரிந்திருந்து மறைத்த பசுபதியும் கைதானார்கள். பசுபதி அப்ரூவர் ஆனான். வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு வந்தது. நீதியரசர் எச்.டபிள்யூ. தம்பையா. குற்றவாளிகளின் சார்பில் முதலில் ஆஜராகவிருந்தவர் ஊர்காவற்றுறை எம்.பி. சட்டத்தரணி நவரத்தினம். அப்பொழுது அவர் ஒரு சிரேஷ்ட சட்டத்தரணி. ஆனால், பொம்பிளை ஒருத்தி சம்பந்தப்பட்ட அந்த வழக்கில் அவர் ஆஜராவதை தந்தை செல்வநாயகம் விரும்பவில்லை. அச்சமயம் ஜூனியராக இருந்த அமிர்தலிங்கத்தையே குற்றவாளிகளுக்காக வாதிடுமாறு கேட்டுக்கொண்டார். அவரும் தந்தை சொல் மீறாத தனையன். ஐயர் வெட்டிக்கொல்லப்பட்டது சாணம்பூசிய வீட்டுத்தரையில். ஆனால், இரத்தம் தரையில் மாத்திரம்தான் என்று நம்பியது குற்றவாளிகளின் விதி. இரசாயண பகுப்பாய்வாளர்கள் கொழும்பிலிருந்து வந்து பார்த்தபோது தரையில் இரத்தக்கறை
இல்லை. சாணம் மறைத்துவிட்டது. ஆனால், கதவு நிலையில் கீழ்ப்புறத்தில் பதிந்து காய்ந்திருந்த இரத்தத்துளிகள் அனைத்தையும் காட்டிக்கொடுத்துவிட்டன. வேலுப்பிள்ளைக்கு மரணதண்டனை. கோகிலாம்பாளுக்கு ஆயுள் தண்டனை. பசுபதிக்கு விடுதலை. அந்தத்தண்டனைகளின் தீர்ப்புச்செய்தியை எழுதி அச்சுக்கு கொடுக்கும்பொழுது இரவு எட்டுமணிக்கும் மேலாகிவிட்டது என்று தமது நூலில் குறிப்பிடுகிறார் அன்னலட்சுமி இராஜதுரை. பிறிதொரு சந்தர்ப்பத்தில் ஆயுள்கைதியாகவிருக்கும் கோகிலாம்பாளை வெலிக்கடை சிறையில் அவர் சந்திக்கின்றார். அங்கு மேலதிகாரிகளினதும் சிறைக்கைதிகளினதும் நன்மதிப்பைப்பெற்றவளாகவும் அவள் அங்கு திகழ்ந்திருக்கிறாள். சிங்களமும் பேசுவதற்கு பழகினாள். அந்த வழக்கில் அமிர்தலிங்கம் தோற்றுப்போனதால் அவரது அரசியல் எதிரிகளான தமிழ்க்காங்கிரஸ் கட்சியினர் தமது மேடைகளில் அவரை கோகிலாம்பாள் அமிர்தலிங்கம் என்று வர்ணித்து எள்ளிநகையாடினர். கோகிலாம்பாள் குறித்து யாழ்.மாவட்டத்தில் ஒரு சிந்துப்பாடலும் அறிமுகமாகி பிரபலமானதாக தனது சிறைக்குறிப்புகள் பற்றிய அகாலம் நூலில் பதிவுசெய்கிறார் புஷ்பராணி. அந்த சிந்துப்பாடல்: உருத்திரபுரம் கேசு உறுதியான கேசு அழுத்தமாகப் பேப்பர்களைத் திருத்தமாக நானும் பார்த்துப் பொருத்தமாகப் பாடி வந்தேன் தெரியுமா..? இது உருத்திரபுரம் கேசுதானே புரியுமா..? மின்சார வசதி இல்லாதிருந்த அந்தக்கிராமத்துக்கொலைச்சம்பவம்
அந்நாளில் பெரிதும் பேசப்பட்டது. ஆனால், காலப்போக்கில் ஈழமண்ணில் எத்தனை எத்தனை கொலைகள். எத்தனை எத்தனை புதைகுழிகள். அவையெல்லாம் நூறோடு நூறாக ஆயிரத்தோடு ஆயிரமாக மறக்கப்பட்டுவிட்டன. ஆனால், கோகிலாம்பாள் இன்றும் ஏடுகளிலும் நினைவுகளிலும் வாழ்கிறாள். கோகிலாம்பாளை துரோகத்தின் சின்னம் என்பதா…? அல்லது காதலின் பரிதாபத்துக்குரிய அடையாளம் எனச்சொல்லவா? எனக்கேட்கிறார் புஷ்பராணி. இந்தக்கேள்வி அவள்பற்றிய செய்தி அறிந்த எம்மையும் தொடருகிறது.
அவுஸ்திரேலியாவில் மெல்பனில் ஒரு இந்தியப்பெண், தனது காதலனுடன் சேர்ந்து கணவனை கொலைசெய்துவிட்டு நடத்திய நாடகம், ஆறுமாதங்களின் பின்னர் அம்பலமானது !
இங்கே மரணதண்டனை இல்லை. அவளும் அவளது கள்ளக் காதலனும் ஆயுள் தண்டனையை அனுபவிக்கிறார்கள்.
—0—
![]()