கவிதைகள்
புனிதவதி புகழ்பாடி பூஜிப்போம் வாரீர்!…. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.
அழகான பெண்ணுருவை அவர் விரும்பவில்லை
அழகற்ற பேயுருவை அவர் விரும்பியேற்றார்
ஆண்டவனை மட்டுமே அழகென்று நினைத்தார்
அவனடியைப் பற்றுவதில் அக்கறையாய் இருந்தார்
தேமதுரத் தமிழதனை தேர்ந்துமே எடுத்தார்
பாமாலை பலபுனைந்து பக்திமய மானார்
தமிழ்ப்பக்தி மார்க்கமதில் தான் தொடக்கமானார்
அவர்போட்ட பதையிலே அடியார்கள் நடந்தார்
நாளுமே இறையடியில் அம்மையார் இருந்தார்
நாயன்மார் வாழ்வினுக்கு முதலாக நின்றார்
பேயாடும் சுடலையிலே பெருமானைக் கண்டார்
பேயுருவை தேர்ந்தெடுத்து பெரும்பேறு பெற்றார்
இல்லறத்தில் இணைந்தாலும் இறைநலத்தை ஏற்றார்
நல்லறமாய் இறைநலத்தை நாளுமவ ரெடுத்தார்
சொல்லறத்தை வல்லமையாய் பாவாலே கொடுத்தார்
தொல்லுலகில் அம்மையார் உயர்வுநிலை பெற்றார்
காரைக்கால் அம்மையார் வணங்கும் நிலையுற்றார்
கற்சிலையாய் அவருவை எடுத்துவூர் சென்றார்
புலம்பெயர்ந்த நாடுகளில் அவருயர்ந்து நின்றார்
புலனடக்கி இறையுணர்வை பெற்றவராய் மிளிர்ந்தார்
பக்திமொழி எதுவென்று பார்க்கின்ற பொழுது
சத்தியமாய் தமிழென்றே சகலருமே சொல்வார்
அம்மொழியில் இலக்கியத்தை பக்திவழி செல்ல
ஆரம்பித்த பெருமையினை அம்மையார் பெறுவர்
காரைக்கால் புனிதவதி கன்னித்தமிழ்ச் செல்வி
கடவுளினால் அம்மையென அழைத்திட்ட மாது
புதுக்கருவை இலக்கியத்தில் புகுத்திவிட்ட அம்மை
புனிதவதி புகழ்பாடி பூஜிப்போம் வாரீர்.
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண் …. அவுஸ்திரேலியா