சாணக்கியத்தை இழந்து, இணங்கிய அரசியலில் டக்ளஸின் வகிபாகம் !! ( அங்கம் -03 ) …. சட்டத்தரணி செ. ரவீந்திரன் – அவுஸ்திரேலியா.


அந்தக் காலகட்டத்தில் எங்களுக்கு தொலைபேசித் தொடர்புகள்தான். ( கைத்தொலைபேசி – குறும் செய்திகள் இல்லாத காலம் ). ஊருக்குத் திரும்பியவுடன், புனர்வாழ்வுக்கழகத்தில் நித்தியின் அபிமானத்துக்குரிய முக்கியமானவர்களை கண்டு தான் ஜனநாயக அரசியலில் ஈடுபடப்போகிறேன் எனவும் , அதற்குத் தனக்கு ஆசீர்வாதங்கள் தரும்படியும் கேட்டுப் பெற்றார்.
அவர்கள் சுட்டிக்காட்டியபடி அப்பொழுது இயங்கிய யாழ்ப்பாண பிரஜைகள் குழுவின் முக்கியஸ்தர்களையும் சந்தித்து அறிவுரைகள் கேட்டார். அவர் பகிர்ந்த நிலைப்பாடு நித்தியின் வழியில் தமிழர்களுக்கு விமோசனத்தை பெற்றுத்தர, அவர்களின் தேசியத்தை முன்னெடுப்பேன். இந்திய – இலங்கை ஒப்பந்தம் இந்த வகையில் ஒரு வரப்பிரசாதம், அதன் அடிப்படையில் “ மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி “ என்பதாகவிருந்தது.
![]()
1987 இன் பின்னரான தமிழ் மக்களின் அவலங்களுக்கெல்லாம் புலிகளும் பிரபாகரனுமே காரணம். இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை புறக்கணித்து, கையில் வந்த சமாதானத்தையும், சுயாட்சியையும் இந்தியாவுக்கெதிரான போரினால் புலிகளும் பிரபாகரனும் பாழடித்தனர். தமிழ் மக்களின் விடுதலைக்கு தனிநாடு என்ற கோரிக்கையை முன்வைத்து முன்னேற முடியாது, அதனை படிப்படியாக ஒப்பந்தத்தின் பலத்தாலும் இந்தியாவின் நட்பினாலும் முன்னேற்றிச் செல்லவேண்டும் என்பது தனது கருத்தென்றார்.
அதன் ஒரு பகுதியாக ஐரோப்பிய நாடுகளிலிருந்து இயக்கங்களுக்கு உதவிசெய்வதற்கென்றும் அவர்களுடன் சேர்ந்து இயங்குவதற்கென்றும், பலரும் விருப்பம் தெரிவித்தனர்.
அவர்களில் பெரும்பாலானோருக்கு தமிழ்நாட்டில் யாரை தொடர்புகொள்வது மற்றும் இருப்பிட வசதிகள் என்பன பிரச்சினையாக இருந்தன.
அன்ரன் பாலசிங்கம் உட்பட அந்தக்கால கட்டத்தில் உமா மகேஸ்வரனும் பிரபாகரனும் ஒன்றாக இருந்தனர். லண்டனில் அவர்களது முகவராக – பொறுப்பாளராக கிருஷ்ணன் என்பவர் இருந்தார்.
ஆர்வம் காண்பித்தவர்களின் தொடர்புகளை இவரிடம் கொடுத்திருந்தேன்.
நித்தி தனது நோய்களின் உபாதைகளால் ஜூலை 1980 இல் காலமானார்.
நித்தியின் கடைசி யாத்திரையில் தமிழ் தேசியத்தை நேசித்த பலர் இந்தியாவின் ஊடாக வந்து கலந்து கொண்டனர். அவருடைய தம்பி சச்சிதானந்தா லண்டனிலிருந்தும் அதேபோல் டக்ளஸும் எங்கிருந்தோ வந்து சேர்ந்தார்.
டக்ளஸ், நித்தியின் மறைவால் மிகவும் சோகமடைந்திருந்தார் என்பதிலும் இடிந்துவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.
முதலாவது பாசம். அடுத்தது தான் அரசியல் வாழ்வில் காலடியெடுக்கும்போது தனது இலட்சிய பிதா கருகிப்போனதின் சோகம்.
நித்தியின் பிரிவின் இறுதிச் சொற்பொழிவை நான் ஆற்றினேன். அதில் டக்ளஸின் பணிகள் பற்றி நித்தியின் எதிர்பார்ப்புகளை குறிப்பிட்டேன். இறுதிச் சடங்கிற்கு பிறகு நான் நித்தியின் தம்பி சச்சி, டக்ளஸ், MIRJE கந்தசாமி மற்றும் புனர்வாழ்வுக்கழகத்தின் ஆர்வலர்கள் நித்திக்குப் பின்னர் என்ன செய்வது என்றும் அதில் டக்ளஸின் பங்கு என்னவென்றும் அளவளாவினோம்.
அதற்கு சச்சி, “ டக்ளஸ் ஒரு பாதையை தேர்ந்தெடுக்கலாம். ஆனால், அவர் முதலில் தனது படிப்பை முடிக்க வேண்டும் என்பதுதான் தனது அக்கறை “ என்றார். அதற்கான பண உதவிகள் செய்வேன் என்றும் சொன்னார். ஆனால், டக்ளஸோ அதை விரும்பவில்லை. அதையடுத்து நித்தியின் கொழும்பில் 17, பிரான்ஸிஸ் வீதி வீட்டை பொறுப்பெடுத்து நிர்வகிக்குமாறு சச்சி, டக்ளஸை கேட்டார்.![]()
ஆயினும் தான் எடுத்த இயக்கப் பொறுப்புக்களால் தன்னால் கொழும்பில் சீவிக்க முடியாது என்பதால் அதை விற்றுவிடுதல் நல்லது என்று டக்ளஸ் அபிப்பிராயப்பட்டார். நல்ல விலைக்கு அந்தவீடு வந்திருந்தாலும், நித்தியின் வீடு ஒரு நல்ல பணிமனையாக பயன்படவேண்டும் என்று நாம் வற்புறுத்தியதில் அதனை சச்சி, தென்னிந்திய திருச்சபைக்கு அதில் ஒரு ஆலயம் கட்டவேண்டும் என்ற சம்மதத்தில் விற்றார்.
அதில் வரும் பணத்தில் ஒரு பகுதியை நித்தியின் நினைவில் ஒரு அறக்கட்டளை நிறுவ விரும்பி அதனை நிர்வகிக்குமாறு டக்ளஸை கேட்டார்.
ஏனோ அது பின்னாளில் நிறைவேறவில்லை. நித்தியின் இலட்சியங்களை அவரின் தேசியக் கனவை நிறைவேற்றுவது தனது பணி என்று டக்ளஸ் இயக்க வேலைகளில் ஈடுபட்டார்.
அந்த விருப்பங்களிலும், “ நித்தியின் புனர்வாழ்வுக்கழகத்தில் ஈடுபட்டவர்களின் நம்பிக்கைக்காகவும் 1990 இல் இந்தியாவிலிருந்து வந்தபோது புனர்வாழ்வுக்கழகத்தில் நெருக்கமாக இயங்கிய பலருடனும், யாழ்ப்பாணம் பிரஜைகள் குழுவினருடனும் தான், தனது இலட்சியப் பாதையில் தொடர்ந்து போராட விரும்புகிறேன். ஆனால், புலிகள்தான் ஏகோபித்த தலைமை என்ற நிலைப்பாட்டை ஏற்கமுடியாது. ஆனபடியால் அவர்களுடன் பேசி, தானும் தன்தோழர்களும் இயங்க வழிசெய்ய வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக தங்களது உயிர்களுக்கு உத்தரவாதம், பிரபாகரனிடமிருந்து பெற்றுத் தர வேண்டும் “ என்றார். பேசிப் பார்த்தோம்.
ஆனால் புலிகளிடமிருந்து ”அவர் செய்யட்டும். மிக விரைவில் அவரை போடுவோம்’’ என்ற பதிலே வந்தது.
ஆனால், டக்ளஸ், தான் தன்னை ஒரு மாற்று சக்தியாக நிலைநிறுத்துவேன் என்று பிடிவாதமாக நின்றார்.
அவரை சென்னையிலிருந்து கூட்டி வந்தவர்களின் ஏற்பாட்டில் 1990 இல் சிறிலங்காவின் பாதுகாப்பு மந்திரி ரஞ்சன் விஜேரத்தினாவுடனான சந்திப்பு அவருக்கு ஒரு பலத்த திருப்பு முனையாக்கி, அவரை தற்சமயத்தில் அவர் இருக்கும் நிலைக்கு ஏணிப்படிகளை அமைத்தது. அவரை ஓர் எதிர் சக்தியாக உருவாக்கியது.![]()
![]()
ரஞ்சன் விஜேரத்தினாவும், பிரேமதாஸாவும் தங்களது புலிகளுக்கு எதிரான திட்டத்திற்கு டக்ளஸை ஈடுபடுத்தினர். பெருவாரியான பணமும், தேவையான ஆயுதங்களையும் கொடுத்த இலங்கை அரசு, விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தீவுப் பகுதிகளை பாதுகாக்கும் பொறுப்பை டக்ளஸிடம் கொடுத்தார்கள்.
என்னைப் பொறுத்தளவிலும், அவர் ஆசிகள் கேட்ட புனர்வாழ்வுக்கழகத்தின் ஆர்வலர்களுக்கும் இது பெருத்த ஏமாற்றமாகவும் தமிழ்த்தேசியத்துக்கான சவாலாகவும் இருந்தது.
பிரபாகரன், சாணக்கியனின் அறிவுரைக்கு மாறாக எப்படி மக்களின் ஆர்வத்தை தப்புக் கணக்கு போட்டு, இந்திய படைகளுடன் ஒரு யுத்தத்தை திணித்தாரோ, அதே தப்புக்கணக்கை டக்ளஸும் போட்டு
மக்கள் தன்னை ஏற்றுக்கொள்வார்கள் என்றும், தான்தான் புலிகளுக்கு எதிரான ஒரேயொரு மாற்று அரசியல் பாதை, அதில் பயணிக்க வரவேண்டும் என்றும் கோரினார்.
இன்றும் அதனையே தேசியமாக, பெரிதாக “ இணக்க அல்லது இணங்கிய “ அரசியலில் விடிவு உண்டு என்று பிரசாரப்படுத்துகிறார்.
டக்ளஸ் ஒரு பண்பாளி, எதிர்த்து வாதாடுவது, எகிறி குதிப்பது அவரது வழமையல்ல. மற்றவரின் கருத்தை கூர்ந்து கேட்பவர். ஆனால், ஏதோ தனது அரசியல்தான் புலிகளின் போராட்டத்துக்கு மாற்றுப்பாதை, தன்னால் மாத்திரமே அதனைத் தரமுடியும் என நம்புகிறார். ஏனெனில் சிங்கள தலைவர்கள் தன்னை நம்புகிறார்கள், தான் சொல்லுகின்ற நியாயங்களால் தன்னிலிருக்கும் நம்பிக்கையில் நாட்டை பிளவுபட விடும் எண்ணம் தனக்கில்லை என்று அவர்களுக்குத் தெரியும். இதனால் தன்னை தமிழரின் முக்கிய பங்காளி (Stake Holder) எனத் தெரிவு செய்தால் பேச்சுகளுக்குத் தெம்பு வரும், அதனால் விடிவு வரும் என்பார். இருக்கலாம்.
90 களின் ஆரம்பத்தில் பிரேமதாஸாவின் அனுசரணையில் தான் ஜனநாயக அரசியலுக்கு இறங்கி, நாடாளுமன்ற தேர்தலில் குதிக்கப் போகிறேன் என்று பழையபடி, நித்தியுடன் இணக்கமாகியிருந்த பலரிடம் ஆசீர்வாதம் வேண்டினார். ஆனாலும் அந்த ஆசீர்வாதங்கள் வேண்டப்பட்டபொழுது நடந்த பேச்சுக்களின் முழு விபரங்களையும் இங்கு தொகுக்கப்படவில்லை.
ஜனநாயக வழிக்கு திரும்புவதில் ஆட்சேபனை இல்லை, ஆனால், இந்த இணக்க அரசியல் எந்தளவில் பயன்தரும் என்ற வினாவே அவர் முன்வைக்கப்பட்டது. வடபகுதியின் சுயாட்சிக்கான வழிமுறைக்காகத்தான் இதைச் செய்கிறார் எனவும், நித்தியின் இலட்சியத்தைத் தான் கோட்டை விடப்போவதில்லை என்றும், அது என்றும் தனது இரத்தத்தில் இருக்க வேண்டுமென்பதால் தனது பெயரை கதிரவேலு நித்தியானந்தா தேவானந்தா என்று மாற்றம் செய்து, அந்தப் பெயரிலேயே ஜனநாயக அரசியலில் இறங்குவேன் என்றும் சொல்லி இன்றளவும் அதே பெயரையே சூடியுள்ளார்.
அந்தத் தேர்தலில் புலிகள் ஈடுபடவில்லை. 10,744 வாக்குகள் மட்டும் பெற்று 9 ஆசனங்களை பிடித்தார். அதில் அவரது ஆட்சியிருந்த தீவுப் பகுதிகளிலிருந்து கிடைத்த வாக்குகள் 9,944 அவருக்கு விழுந்த விருப்பு வாக்குகள் 2,091.
பிரேமதாஸாவுடன் இணைந்ததிலிருந்து சந்திரிகா, மஹிந்த ராஜபக்ஷ என்று எல்லா ஜனாதிபதிகளிடமும் நன்மதிப்பு பெற்று, நம்பிக்கையை வளர்த்து, எல்லா நேரங்களிலும் தனிப்பட்ட நட்பையும் நேசத்தையும்
பேணி டக்ளஸ் என்றால், ஒரு காரியத்தை நம்பி கொடுக்கலாம் என்று முப்படை தளபதிகளும் ஆமோதிக்கும் அளவுக்கு இணைந்து விட்டவர்.
தமிழ்த் தேசியம், தனி நாடு என்ற அரசியல் கோஷங்களிலும், மாயையிலும் இருந்து தமிழ் அரசியல்வாதிகளை விடுவிக்க வேண்டுமானாலோ அல்லது அவர்களை விரோதப் போக்கிலிருந்து மாற்றி நட்புறவுக்கு கொண்டு வரவேண்டுமானாலோ டக்ளஸ்தான் அதற்கு பாலம்.
அவரும் இல்லையென்றால், தமிழ் மக்களின் அரசியல் பாதை எப்படி போகும் என்று தெரியாது என்று சிங்கள புத்திஜீவிகளும், பத்திரிகை ஆசிரியர்களும் தலையங்கங்கள் தீட்டுமளவுக்கு ஒரு பிம்பத்தை அவர்களிடையே அந்த அளவிற்கு வளர்த்தவர்.
ஆலையில்லாத அவர்களிடையே இந்த இலுப்பைப் பூ சர்க்கரையாக இருக்கிறது.
ஆனால், தமிழ் மக்களிடையே அவர்கள் பகுதிகளில் நடந்த அநியாயங்களாலும் ஈ.பி.டி.பி. அரசாங்க படைகளுக்கு கொடுத்த ஒத்துழைப்பாலும், தமிழ்மக்களின் மனதில் நல்லெண்ணத்தை வளர்ப்பது டக்ளஸுக்கு கடினமாயிற்று.
ஏதோ ஒரு வகையில் தனக்கு ஒரு ஆசனத்தையாவது பெற்றுத் தொடர்ச்சியாக 25 வருடங்களுக்கு மேலாக நாடாளுமன்றுக்குச் சென்று, மைத்திரி ரணில் தவிர்ந்த எல்லா அரசாங்கங்களிலும் மந்திரி பதவி பெற்று, தனக்கு ஆதரவு தந்த மக்களுக்கு அவர்களது வாழ்வதாரம் குறித்து அக்கறை செலுத்தினார்.
ஆனால், தமிழ் மக்களின் விமோசனத்துக்காக நித்தியின் இலட்சியத்தில் எவ்வளவு முன்னேற்றியிருக்கிறார் என்பது எங்களிருவரதும் தனிப்பட்ட பேச்சு வார்த்தைகளில் பெருவாரியாக அடிபடும்.
அதற்கு நிதர்சனமான, யதார்த்தமான பதிலை நான் டக்ளஸிடம் கண்டதில்லை. அதனை எனது உரிமையில் நித்தியுடனான நட்பில் இறுக்கமாக சொல்லியிருக்கிறேன்.
டக்ளஸுக்கு அதிகாரப் பரவலில் நம்பிக்கை இருக்கிறது. இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் எங்களுக்கு வழி இருந்தது, இதை பிரபாகரன் சரியாக கையாளவில்லை என்ற இடித்துரைப்பு இருந்தது. சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் 13 ஆம் சரத்துக்கும் மேலே போய் மகிந்த 13++ தருவார், நான் சொல்கிறேன் என்று அவருக்காக வாக்குகள் சேகரிக்க துணிவிருந்தது. ஆனாலும் இன்று வரைக்கும் நடைமுறையில் சிங்கள பேரினவாதத்தின் ஒரு நாடு, ஒரு தேசம்,
அதிகாரப் பரவலுக்கு இடமில்லை என்ற அந்த சிந்தனையில் சிறிதும் மாற்றமேற்படுத்த முடியவில்லை.
அது மட்டுமல்ல, போர் காலங்களில் நடந்த அட்டூழியங்களுக்கு ஒரு நியாயமான சர்வதேச விசாரணைக்கு ஒத்துப்போக உந்துவித்தல், எத்தனையோ ஆண்டுகளாக, வழக்குகளே தொடுக்கப்படாமல் சிறையில் வாடும் கைதிகளை பிணையிலாவது விடுவித்தல்,

தமிழ் மக்களின் காணி அபகரிப்பு, வேலை வாய்ப்புகள் என்று தமிழ் மக்களின் மூல பிரச்சினைகளில் என்று எதிலும் எது விதமான முன்னேற்றமும் இல்லை.
அவற்றில் சிங்கள பேரினவாதத்திற்கு எந்த அக்கறையும் இருந்ததில்லை . டக்ளஸ் அவர்களுடன் இயங்கினாலென்ன, இயங்காவிட்டாலென்ன, சர்வதேச அரங்குகளுக்கு தமிழர்கள் தங்களோடு இணைந்து நடக்கிறார்கள் என்ற பரப்புரைகளுக்கு இவரையும் படம் காட்டித் தூதுக்குழுக்களில் சேர்த்து கொண்டு சென்றனர்.
ஜே.ஆரும் தன் ஆட்சிக் காலத்தில் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக தமிழர்கள் எப்படிச் சொல்ல முடியும்? வெள்ளவத்தை உட்பட கொழும்பில் எல்லா இடங்களிலுமுள்ள கோவில்களை, பிரதம நீதியரசர் சர்வானந்தா, அரசின் சட்டமாஅதிபர் சிவா பசுபதியை இவர்களெல்லாம் தமிழர்கள் என்று சொல்வது வழக்கம்.
இந்தப் படங்களுக்கும் யதார்த்தத்துக்கும் எவ்வளவு வேறுபாடு என்பது கள நிலவரத்தை நன்கு அறிந்த டக்ளஸுக்குத் தெரியும்.
ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருந்த காலப்பகுதியில், அவர் கோட்டாவுக்கு ஆதரவு தருவதற்கு எடுத்த நிலைப்பாடு பற்றி பேசினேன்.
“ வட – கிழக்கு மாகாண சபைகள் தடையின்றி இயங்க வழி செய்யப்படும், தமிழ்ப் பகுதிகளில் அபிவிருத்தி, வேலை வாய்ப்புக்கான திட்டங்கள் அமுல், தமிழ் மக்களின் நாளாந்த வாழ்வில் எதிர்கொள்ளும் நெருக்கடி நிலைகளுக்கு மிக விரைந்த தீர்வுகள் – என்ற அடிப்படையிலேயே அவருக்கு ஆதரவுதருவதற்கு ஒத்துக் கொண்டேன் “ என்றார்.
கோட்டாவை எப்படி மக்கள் அவரது பின்னணியில் ஏற்றுக் கொள்வார்கள்..? எனக் கேட்டேன். “ கஷ்டங்கள் உண்டு. ஆயினும் , மக்கள் இப்போது தேசிய அரசியல் பேசுவோரின் வேதனைகளைப் புரிந்து கொள்கிறார்கள், எங்களது பணிகளை விளங்கிக் கொள்கிறார்கள், மாகாண சபை தேர்தலில் தாங்கள் பெற்ற
வாக்குகளின் அடிப்படையில் கணிசமாக ஒரு லட்சத்துக்கும் மேலாக ஈ.பி.டி.பி. அவருக்கு பெற்றுக் கொடுக்கும் என்ற நம்பிக்கை உண்டு “ என்றார்.
வழமைபோல, நித்தியின் எதிர்பார்ப்பு, தமிழ் தேசியம் என்பவற்றுக்கு எமது பேச்சு திரும்பியது.
“ தமிழ் தேசியத்தை இன்று பேசித் திரிகிறவர்களே, உண்மையான தேசப் பற்று எதுவும் இல்லாமல், வாக்குகளுக்காக அதனை சொல்லித் திரிகிறார்கள். “ என்றார் டக்ளஸ்.
ஆனால் , உண்மையில் தமிழ்த் தேசியத்தை பாதுகாக்க போராடுபவர்கள் தாங்கள்தான் என்றும் பிடிவாதமாக இருந்தார்.
“ ஒரு தேசத்திற்கு அடிப்படையானவர்கள் மக்கள். தமது சொந்த மண்ணைவிட்டு அந்த மக்கள் புலம்பெயர்ந்து விடாமல் வாழ வேண்டுமானால் அவர்களுக்கு பொருளாதார வாழ்வை ஏற்படுத்த வேண்டும். மண்ணில் மக்கள் வாழ்ந்தால் மட்டுமே அவர்களது நிலங்களை, மொழியை, மதத்தை, கலாச்சாரத்தை பாதுகாத்து அவர்களை ஒரு தேசமாக்க முடியும். அதற்குதான் நாங்கள் போராடுகிறோம். அதுதான் நான் எடுத்து கொண்ட அரசியல் என்றும் தன்மாதிரியாக இல்லாமல் என்னைப் போல் ஆர்வமாக உழைத்தவர்கள் பலர் வெளியேறி விட்டார்கள். வெளிநாட்டில் இருந்து பேசுகிறார்கள். நான் எனது அனுபவங்களினூடாக உயிரைப்பிடித்துக்கொண்டுதான் நான் இவ்வளவையாவது செய்கிறேன் “ என்று தன் யதார்த்தத்தை விளக்கினார்.
மற்ற கட்சிகள் கூட்டமைப்பு உட்பட, எவ்வளவுதான் கோட்டா – மஹிந்த அரசுக்கு தமிழர் அபிலாஷைகளை நிறைவேற்ற உதவிகள் கொடுப்போம் என்று பேசினாலும், அதை அவர்கள் ஏற்கமாட்டார்கள். ஏனெனில் அந்த தமிழ் தேசிய சக்திகள், வெளிநாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஆடுகிறார்கள் என்று புரிந்து வைத்திருக்கிறார்கள். கூட்டமைப்பினர் வசதிக்கு வந்தபடி வாக்குகளுக்கே பேசுகிறார்கள்.
உரிமைக்கான அரசியலையும் , அபிவிருத்திக்கான அரசியலையும் சமமாக முன்னெடுப்பதானால் அது தாமே என்றும், தாம்தான் மாற்றுப் பாதை என்றும் வாதிட்டார்.
நித்தி, தொழிற் சங்கத்திலிருந்து விலகி தமிழ் எழுது வினைஞர் சங்கம் உருவாக்கியதன் பின்னணியையும், எம் போல பலர் 70 – 80 களில் புலம்பெயர்ந்தவர்கள் வாழ்வாதாரத்திற்காக புலம் பெயரவில்லை.
அரசியலின் வன்முறை, பேரினவாத நிர்ப்பந்தங்களினால் வெளியேறினோம் என்பதையும் சுட்டிக்காட்டினேன்.
நித்தி, தனது கால் உபாதைகளுடனும், நடந்து நடந்து மணலாறு, நெடுங்கேணி, ஒதியமலை, வவுனியா, செட்டிகுளம் பகுதிகளில் குடியேற்றிய மக்களின் காணிகள், வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு அவை பேரினவாதிகளின் கைகளுக்கு சென்றிருப்பதை புரிந்து கொள்ளச் சொன்னேன்.
வாக்கு பிரச்சாரத்தில் ஈடுபட்ட வேளை டக்ளஸ் உச்சத் தொனியில் , “ கூட்டமைப்பினர் எது சொன்னாலும் அந்தந்த காலங்களில் அதை நம்பி, ஏமாந்து, மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களிப்பார்கள் என்ற துணிச்சல்தான் அவர்களை மற்றவர்களை உதாசீனப்படுத்த வைக்கிறது, இப்பொழுது நிலைமை அப்படியல்ல, நாங்கள் வாழ்வாதார திட்டங்கள் பலவற்றை நன்றாகச் செய்திருக்கிறோம், மாகாணசபையை நாங்கள் நிர்வகித்திருந்தால் அதனூடாக எவ்வளவோ செய்திருப்போம் என்று மக்கள் நினைக்கிறார்கள், தமிழர் வாக்கு வங்கியின் நிலை மாறிவிட்டது “ என்றார்.
“ ராஜபக்ஷ அரசு, தமிழரசு கட்சியினூடாக எதனையும் தமிழ் மக்களுக்கு செய்யமாட்டார்கள். அவர்களின் அன்பையும் அதன் மூலம் மரியாதையையும் பெற்ற ஒருவன் நான் மட்டுமே.
தமிழர் தாயகத்தை பொறுத்தவரை நாங்கள் கேட்பவற்றை மட்டுமே அவர்கள் மறுக்காமலும் மறுக்க முடியாமலும் செய்வார்கள். தமக்கு நம்பிக்கையான என் ஊடாக மட்டுமே தமிழர்களுக்கு எதனையும் செய்ய விரும்புவார்கள் “ என்றார்.
ஆனாலும் கோட்டாவிற்கு வடக்கிலிருந்து 25,000 வாக்குகளுக்கு குறைவாகவே கிடைத்தது. அது டக்ளஸுக்கு பெரிய ஏமாற்றம். முன்னேற்றமாக ஈ.பி.டி.பியின் வாக்கு வங்கி அதிகரித்து, அவர்கள் ஒன்றிலிருந்து இரண்டு நாடாளுமன்ற ஆசனங்களுக்கு முன்னேறினார்கள். ஆனால் கூட்டமைப்பிலிருந்து விலகிய மக்கள் தீவிர தேசியத்தை ஆதரித்தனர். எனினும் எந்த நிலையிலும் எதிர்பார்க்கப்பட்ட மந்திரிப் பதவி டக்ளஸுக்கு அளிக்கப்பட்டது.
ஆனாலும் அவர் அனுபவித்த அதிகாரங்களுக்கு கட்டுமானம் வைப்பதுபோல் அவர்களது பேச்சுக்கெல்லாம் ஆடக்கூடிய அங்கஜனை பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.
பதவியேற்ற பின்னர் அரசின் போக்கு அரசியல் அறிவுள்ள டக்ளஸுக்குப் புரியும். 1958 போன்று அரசாங்கம் பௌத்த பீடங்களின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. மாகாண சபை தேர்தல் பற்றி பேசியவுடனே, கூச்சல்கள், அவை தேவைதானா என்ற வாதங்கள், இந்திய ஒப்பந்தத்தையோ, 13 ஆம் சரத்தின் அதிகாரங்கள் பற்றியோ கேட்டால் அவை நீக்கப்படவேண்டும் என்ற கூச்சல், அதிகாரப் பரவல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற கோசம்.
புத்த குருமாரினால் ஒரே நாடு, ஒரே தேசம் என்ற அட்டகாசம் – அதை மறுக்கும் தொனி கோட்டா, மஹிந்தவிடம் இல்லை. டக்ளஸை எதிர்பார்த்து ஆதரவு கொடுத்த அத்திவாரம் எல்லாமே ஆட்டம் கண்டு மூச்சு விட முடியாமல் திணறுகிறது. நிலைமையை புரிந்து டக்ளஸ் அரசிலிருந்து தூரநின்று, தமிழ் தேசிய சக்திகளினுடன் இணைந்தோ, இணையாமலோ தனது ஆளுமையாலும் அனுபவங்களினாலும் வழிநடுத்துவாரா..?
துர்ப்பாக்கியவசமாக எங்கள் அரசியல் தலைமைகளிடம் தமிழர் விடிவுக்கான மூலோபாயமான திட்டங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. தந்திரமாக தங்களை தப்பவைப்பதற்கான வழிகளையே தேடி, ஒரு வட்டத்தை கூட்டி சாணக்கியம் செய்கிறார்கள்.
தேசீய சக்திகள் அவரை அணைக்காதுவிட்டால், தமிழருக்கான இந்திய நிலைப்பாடுகளுக்கு என்றுமே ஆதரவு தந்த டக்ளஸ் , அந்த யதார்த்த அடிப்படையில் இந்தியாவோடு சேர்ந்து நின்று தமிழர் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கோரி முன்னெடுத்துச்செல்வாரா..?
டக்ளஸ்ஷுடன் பலகாலம் பழகிய, பழகுகின்ற பலரிடம் அந்த வினாவை வைத்தேன்.
டக்ளஸ் விரும்பினாலும் அவரால் அரசாங்கத்தை விட முடியாது. அவர்களும் விடமாட்டார்கள் என்பதே அபிப்பிராயமாக இருந்தது.![]()
புலியின் வாலை பிடித்தவர் நிலைதான் அவரது நிலை என்று சுட்டிக்காட்டினார்கள். புலிக்காக முதலையின் வாலை பிடிக்கப்போய் திரிசங்கு நிலையில் அவர் இருக்கிறார் என்றார்கள் , சரத்பொன்சேக்கா போன்று சிலுவையிலும் அறையப்படலாம் என்றார்கள்.
அவர் நித்தியின் இலட்சியத்தை எண்ணி, இனி ஆறாத கண்ணீர் வடித்தாலும் அந்தக் கண்ணீர் அவராகவே விதித்துக் கொண்டு பவனிவந்த வழிகளிலே ஒன்றையேனும் மாற்றிவிடாது போல் தெரிகிறது.
அயன், தன்னுடைய தலையிலே உலக்கையினால் எழுதி விட்டான். அவன் அன்று எழுதிய எழுத்தை அழித்து மீள எழுத முடியாது, அவன் ஓங்கி அடித்துவிட்டான் என்று எழுதினான் உமர் கய்யாம். ‘‘தப்புத் தாளங்கள், அது வழிதவறிய பாதங்கள், இது அப்படியே ஆகுமென்று அவன் எழுதிய வேதங்கள்” என்று கண்ணதாசன் சொன்னார்.
அருணகிரியாரோ, முருகப் பெருமானுடைய திருவடியிலே எனது தலையை கொண்டு போய் வைக்க, அவன் கால் பட்டு அயன் எழுதிய தலையெழுத்து அழிந்தது என்று பின்வரும் பாடலில் உறுதிபடக் கூறுகிறார்.
“ வேல்பட்டழிந்தது வேலையும் சூரும்
வெற்பும் அவன்
கால்பட்டழிந்த திங்கென் தலைமேல்
அயன் கையெழுத்தே. “
ஆக, நித்தியைத் தன் தந்தையாக வரித்து கொண்டு அவரின் இலட்சியங்களுக்கு பாடுபடுகிறேன் என்னும் டக்ளஸ், ஒரு கேள்வியை தன் நெஞ்சுக்கு உண்மையாக கேட்கவேண்டும். தான் தனது தந்தையாக வரித்த நித்தி தன் உடல் உபாதைகளோடும், ஒவ்வொரு ஊருக்கும் சென்று குடியேற்றிய காணிகளை இன்று ஆக்கிரமித்து, இருப்பவர்கள் யார்?
1987 இல் வட – கிழக்கு உட்பட்ட தமிழ் பிரதேசத்தில் இன்று (24 வருடங்கள் அவர் மந்திரியாக இருந்தபோதும்) ஏற்பட்ட குடியேற்றங்களால் பறிபோன பிரதேசங்கள் எவ்வளவு?
ஏதாவது செய்து இதனைத் தடுக்க முடிந்ததா? அன்றில் தனது தந்தையார் தமிழ் மக்களுக்கு கொடுத்த காணிகளையாவது மீளப் பெற்று அவர்களுக்கு கையளிக்க முடிந்ததா?
உரிமைப் போராட்டத்தை மழுப்பி, வாழ்வாதாரத்தால் மக்களை அந்த மண்ணில் நிலைநிறுத்தி, அதனால் தேசத்தை கட்டியெழுப்புவோம் என்ற உபதேசத்திற்கு முதலில் மண் இருக்க வேண்டும். அந்த சித்தாந்தம் கடல் வற்றும் என்று பூனை உடல் வற்றி செத்த கதையாகத்தான் முடியும்.
தானாக தன்மேல் எழுதிய ஊழ்வினையை அழிக்க, டக்ளஸ் அருணகிரியார் சொன்ன மாதிரி நித்தியின் பாதங்களில் தன் தலையை வைத்து, அவர் இலட்சியத்தில் ஒரு புதிய பாதையை சமைக்க வேண்டும் என்பது எனது அன்புக் கோரிக்கை.
‘மகன் தந்தைக் காற்றுமுதவி இவன் தந்தையென்னோற்றான் கொல்லெனும் சொல்’ என்ற குறள் நினைவுக்கு வருகிறது.
ஒரு கட்டாய கல்யாணத்தில் ஒரு வாழ்வுக்காக நாங்கள் இசைந்து, இணங்கி போகவேண்டும் என்பதுதான் தமிழருக்கு அயன் எழுதிய விதி என்று டக்ளஸும் அவரது சகாக்களும் நினைத்தால், இன்னொரு நாள் விடியப்போகும் பொழுதில்தான் தமிழ்மக்கள் நம்பிக்கை கொள்ளவேண்டும்.
அந்த சரித்திரம் கதிரவேலு நித்தியானந்தா தேவானந்தாவான டக்ளஸ், தனக்குத் தகுந்தமாதிரி தொப்பி அணிந்து அரசியல் செய்த சந்தர்ப்பவாதியா , அன்றில் விடுதலை என்று கிளம்பிய ஒரு அரசியல் தந்திரியா என்றுதான் எழுதுமா…?
( முற்றும் )
( நன்றி: யாழ். காலைக்கதிர் )
![]()