கதைகள்
பாலை நிலா!… 06 …. ( நாவல் )…. க. ஷியா.



அவளின் வார்த்தைகள் அவனை ஏதோ செய்திருக்க வேண்டும். சுமார் இரண்டு மணி நேரங்கள் அவளைக் கார் வண்டியில் ஏற்றிக்கொண்டு தன் இச்சையைத் தீர்ப்பதற்காக வீதி, வீதியாகச் சென்றலைந்து இடம் தேடித் திரிந்தவன். மிகப்பெரும் மௌனக் கடலில் மிதந்தான். கதீஜாவின் அழுகை அவனைக் கரைத்திருக்க வேண்டும், அவளது அச்சமூட்டிய இறைபுறத்து எச்சரிக்கை வார்த்தை கண்டு அவன் மனம் மிரண்டிருக்க வேண்டும். மௌனமாகவே வண்டியை நகர்த்திக் கொண்டிருந்தான் அவன். அந்த அரபி இளைஞனது மௌனம் கண்டு கதீஜா கொஞ்சம் ஆறுதல் அடைந்தவளாக மேலும் தன் நெற்றிக்கு மேலாக இரு கைகளையும் உயர்த்திக் கண்ணீர் வடித்தாள். இதை வண்டியின் முன் கண்ணாடி வழியாக அவதானித்த அந்த இளைஞன்.
யா…. கதீஜா, என்னை மன்னித்துவிடு. நான் நிச்சயமாக உன்னைப் பாதுகாப்பாகப் பொலிஸ் நிலையத்தில் விட்டு விடுகிறேன். சொற்ப நேரத்தில் அற்ப சுகத்தின் பக்கம் என் மனதை விட்டு விட்டேன். அதை எனக்கு இப்போது நீ புரிய வைத்து விட்டாய். நிச்சயமாக நான் இறைவனுடைய கட்டளைகளுக்குப் பயப்படுகிறேன். அவனிடமான மீளுதல் என்பது உறுதியானது. நான் திருமணமாகாத ஒரு வாலிபன். எனக்கு எனது வீட்டில் திருமணம் பேசியிருக்கிறார்கள். எனக்கு ஒரு நற்குணங்கள் கொண்ட மனைவி அமைய வேண்டும் என்று நீ பிரார்த்தனை செய். உனது பிரார்த்தனை மிகவும் வலிமையானது கதீஜா. என்றவனே அவளின் பக்கம் தலையைத் திருப்பிக் கேட்டான். என்ன கதீஜா எனக்காகப் பிரார்த்தனை செய்வாயா என்று. அவளுக்கோ மிகவும் சந்தோஷமாக இருந்தது.
என்னுடைய சகோதரனே, எனக்கு நீங்கள் எவ்வளவு பெரிய உதவி செய்திருக்கிறீர்கள் நான் உங்களுக்குப் பிரார்த்தனை செய்யாதிருப்பேனா. கண்டிப்பாக உங்கள் மனம் போல் வாழ்வீர்கள். உங்கள் வாழ்வில் இறைவன் நிறையருள் வழங்குவானாக, மேலும் மறுமையில் உங்களுக்கு ஜன்னத்தினைப் பரிசளிப்பானாக. என்று பிரார்த்தனை செய்தாள் கதீஜா.
அவளுடைய பிரார்த்தனை கண்டு மகிழ்ந்து நன்றி கூறினான் அந்த அரபிய இளைஞன். மேலும் அவன் கேட்டான் நான் உனக்கு எவ்வளவு பெரிய தீங்கும் விளைவிக்க நினைத்தேன் ஆனால் நீயோ, அதைப் பற்றி எதுவும் நொந்து கொள்ளவில்லையே கதீஜா மாறாக சாதாரணமாகப் பிரார்த்தனை செய்து கொள்கிறாயே என்றான். அதற்கு கதீஜா சிறு புன்னகை வீசியவளாகச் சொன்னாள். என் சகோதரா நீங்கள் எவ்வளவு பெரிய பணக்காரர். நான் ஒரு பரம ஏழை எங்கெங்கோ பிறந்த நாம் இங்கு இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சந்தித்து இவ்வளவு விடயங்களைக் கடந்தோம். இது இறை செயலன்றி வேறென்னவாக இருக்க முடியும். நீங்கள் எனக்கு உதவியாக இறைவனால் அனுப்பப்பட்டவர். நான் உங்களுக்குச் சோதனையாக அனுப்பப்பட்ட பெண், இப்போது உங்கள் இச்சையிலிருந்து நீங்கள் தெளிவு பெற்று விட்டீர்கள் அல்லவா இனிமேல் விபச்சாரத்தின் பக்கம் உங்களால் நிச்சயமாகப் போகமுடியாது அல்லவா. என்று கேட்டாள் கதீஜா.
அவளது தெளிவான பேச்சைக் கண்டு வியந்தவனாக. அவளின் புரிதலுக்கு நன்றி கூறியவாறு பொலிஸ் நிலையத்தில் கதீஜாவைக் கொண்டு ஒப்படைத்தான் அந்த அரபிய இளைஞன். அவளும் அவனுக்கு மனமுவந்து நன்றி கூறியவளாக பொலிஸ் நிலையத்தில் சரண் புகுந்தாள்.

சரண் புகுந்தவளிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளவே அவளது விபரங்கள் முதல் அவளது எஜமானனின் விபரங்களையும் வாங்கிக் கொண்ட பொலிஸார் மேலதிகாரியிடம் கதீஜாவைக் கொண்டு ஒப்படைக்கவே ஒரு தனி அறையில் வைத்து விசாரித்தனர். பின்னர் ஓரிடத்தில் அமர்த்தப்பட்டாள் கதீஜா, சிறிது நேரத்தில் அவளது எஜமானனும், எஜமானியும் பிள்ளைகளும் பொலிஸ் நிலையம் வந்தனர். வேகமாக வந்த கதீஜாவின் எஜமானியோ வந்த வேகத்தில் கதீஜாவின் தலையைப் பிடித்துத் தரையில் அடித்துத் துன்புறுத்தவே எஜமானனும், பொலிஸாரும் கை கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றனர். வீட்டை விட்டுச் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறிவிட்டாளே என்ற கோபம் தீரும் வரை கதீஜாவை அடித்துக் கொண்டேயிருந்தாள் எஜமானி அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்ற எஜமானன் தன் மனைவியிடம் போதும் விட்டு விடு செத்துப் போய்விடுவாள் என்று கூறி அழைக்கவே அதன் பிறகு பொலிஸார் வந்து கதீஜாவை என்னென்றும் பாராமல் அரபியரிடம் விபரம் கேட்டனர்.
கதீஜா மீதிருந்த கோபத்தில் வீட்டிலிருந்து நகைகளையும், பணத்தையும் திருடிக் கொண்டு ஓடி விட்டாள் என்று சொல்லி மீண்டும் அவளிடம் எங்கேயடி எங்கள் நகையும், பணமும் என்று அவளைத் தாக்கினர். அப்போது பொலிஸாரிடம் கதீஜா கதறி அழுதாள். இறைவன் மீது ஆணையாக நான் திருடியில்லை இவர்கள் செய்த கொடுமை காரணமாகவே வீட்டை விட்டு ஓடி வந்தேன். நான் திருடியாக இருந்தால் பொலிஸான உங்களிடம் பாதுகாப்புத் தேடி வருவேனா இறைவன் மீதும், மறுமை நாள் மீதும் சத்தியமாக நான் திருடவில்லை என்னிடம் கடைக்குச் செல்லும் போது இவர்கள் தந்த சில சில்லறைக் காசுகளையே நான் எதுவும் சாப்பிடாமல் சேமித்து வைத்தேன் அதைத் தவிர என்னிடம் வேறு பணமோ நகையோ இல்லை என்று அழுதாள்.
அதற்கு கதீஜாவின் எஜமானியோ இல்லை இல்லை இவள் திருடிதான் பொய் சொல்லுகிறாள் இவளைச் சோதித்துப் பாருங்கள் என்று கூறி கதீஜாவின் ஆடைகளைப் பிய்க்க ஆரம்பித்தாள். மானத்திற்குப் பயந்த கதீஜாவோ தன்னை விடும் படி கதறித் துடித்தாள்.
மேலும் அவளது எஜமானன் சொன்னார் உண்மையாக இவள் பல்லாயிரம் றியாள்கள் மதிப்புள்ள நகைகளைத் திருடி விட்டாள் அதை மீட்டுக் கொடுங்கள் என்று. அப்போது கதீஜா தனது பயணப் பையை பொலிஸாரிடம் நீட்டிச் சொன்னாள் என்னிறைவன் மீது ஆணையாக நான் திருடவில்லை இதோ நீங்கள் சோதித்துப் பாருங்கள் என்று. பொலிஸாரும் அவளது பையைச் சோதித்தனர். அதில் அவள் கூறியது போல் சில சில்லறை றியால்களைத் தவிர எதுவும் இருக்கவில்லை. அந்தச் சில்லறைகளைக் கண்ட எஜமானனோ இதோ பார்த்தீர்களா இது திருட்டுப் பணம் தான் என்று சத்தமாகச் சொன்னார்.
இதைக் கேட்ட கதீஜாவோ இல்லை, இல்லை சத்தியமாக இதை நான் திருடவில்லை இது இவர்கள் தந்த சில்லறைகள்தான் என்று கதறவே மற்றுமொரு பொலிஸ்காரர் சக பொலிஸ்காரரிடம் பாவம் இந்தப் பெண் இவளைப் பார்த்தால் திருடி போல் தெரியவில்லை இந்தச் சில்லறைகளை அவளிடமே கொடுத்து விடு என்று கூறிவிட்டு கதீஜாவின் எஜமானனிடம் பொறுமையாக இருக்கும் படி கேட்டுக் கொள்ளவே முடியாது என்று கிளறியெழுந்து கொண்டு இவள் எங்கள் நகையைத் திருடியது உண்மை இவள் திருடிய நகைகளை விழுங்கி விட்டாள். உடனே இவளது வயிற்றை வெட்டி நகையை எடுக்கப் போகிறேன் என்று ஆரவாரிக்க இனியும் அமைதியாக இருந்தால் அவர்கள் போடும் பழிகள் எல்லாம் உண்மையென ஆகிவிடும் என்று நினைத்த கதீஜாவோ …….
என்னுடைய எஜமானனே கொஞ்சம் இருங்கள். என்று கூறிவிட்டு பொலிஸ்காரரைப் பார்த்துச் சொன்னாள். முதலில் இவர்கள் என்னை அடிப்பதிலிருந்து பாதுகாருங்கள் சகோதரரே நீங்கள் வேடிக்கை பார்ப்பதை இறைவன் பாராமல் இல்லை மறுமையில் இது குறித்து உங்களிடம் இறைவன் கேட்காமலுமிருக்க மாட்டான். என்றவளாக பேச ஆரம்பித்தாள்.
சகோதரரே எனது எஜமானன் சொல்வது போல் நான் எதையாவது திருடியிருந்தால் அவைகளை எங்கே நான் ஒழித்து வைப்பது. அல்லது அதைக் கைமாற எனது உறவுகள் யாரேனும் இங்கு இருக்கிறார்களா. அல்லது இவர்கள் சொல்வது போல் தங்க நகைகளை நான் விழுங்கி விட்டேன் என்றால் இப்போது வரைக்கும் எனக்கு ஏன் எதுவும் நிகழவில்லை. நான் ஏன் இன்னும் நலமாக இருக்கிறேன். கொஞ்சமாவது நீங்கள் இது குறித்து சிந்தித்துப்பாருங்கள் சகோதரரே,அப்படி நான் பவுண் கணக்கில் நகைகளை விழுங்கி இருப்பேன் என்று உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் இப்போதே வருங்கள் வைத்திய சாலைக்குச் சென்று என் வயிற்றை அறுத்துப் பாருங்கள் அதில் எனக்கு மரணம் ஏற்பட்டாலும் பறவாயில்லை என்று துணிச்சலோடு பேசினாள். அதற்கு அருகில் நின்ற அவளது எஜமானியோ வைத்திய சாலைக்கு எதற்கு போகவேண்டும் இப்போதே இங்கேயே உன்னை இரண்டாகப் பிழக்கிறேன் பாரடி என்று சத்தம் போடவே கருணை உள்ளம் கொண்ட அந்தப் பொலிஸ்காரர் கதீஜாவின் எஜமானியை அங்கிருந்து நகரும் படி சொல்லி விட்டு கதீஜாவைத் தனியறை ஒன்றில் வைத்துப் பூட்டி வைத்தார்…….
ஒளிரும்……..
க.ஷியா
![]()