கதைகள்

வலை!… 03 ….. ( குறுநாவல் ) …. சுபாஷினி சிகதரன்….. ( மெல்பன் )

காரினுள் வந்து யாமினி அமர்ந்து கொண்டாள். மனமெல்லாம் ஒரு இனிமை பரந்திருந்தது. இன்று முழுக்க இது போதும், அலிசிட்டோஸின் அன்பான வாழ்க்கையும், முகத்தின் பரவசமும் நினைவை நிறைத்தபடி இருக்கும். வெள்ளைக்காரர்கள் நீண்ட ஆண்டுகள் பிரியாமல் வாழ்வதை ஒரு சாதனை போன்று அதிசயமாகப் பார்க்கிறார்கள் என்ற எள்ளலான பேச்சை சில உறவு வட்டங்களில் கேட்டதுண்டு. ஆனால் அது அதிசயம்தான் என்பது சில வருடங்கள் கழித்துப் புரிந்து போனது. பலர் ஒய்யாரக் கொண்டைக்காரிகளாகத்தான் இங்கு வலம் வருகிறார்கள்.

சில வயதானவர்களின் வீடுகள் செல்லும்போது, பல வருடங்கள் தாண்டியும் அவர்களுக்கிடையே நிலைத்திருக்கும் அதிகாரமற்ற காதல் பிரமிப்பூட்டும். இது அவர்களின் வீடு இருக்கும் ஒழுங்கு, சுயாதீனத் தன்மை, பிள்ளைகளில் வைத்திருக்கும் எதிர்பார்ப்பில்லாத அன்பு, வைத்தியசாலை வழங்கும்

சேவையை மிகப்பெரிதாக மதிக்கும் மனநிலை எல்லாவற்றிலும் புலப்படும். இதற்கெல்லாம் அடிப்படை இவர்களுக்கிடையிலான ஆழமான புரிதலுடன் கூடிய காதல் என்பதைச் சிறு கவனிப்பிலேயே புரிய வைத்து விடுவார்கள். இவர்கள் ஆலமரம் போன்றவர்கள். இவர்களின் வீடுகளில் நேர்மறையான அதிர்வலையை, முடிவில்லாக் குதூகலத்தை யாமினி உணர்ந்திருக்கிறாள். சென்றுவிட்டு வரும்போது ஒரு புனிதத்தலத்திலிருந்து திரும்புவது போன்ற அனுபவம் ஏற்படும். அதன்பின்னர் அன்று ஏதாவது பிரச்சனை, சவால் ஏற்பட்டாலும் சமாளிக்கும் உற்சாகம் உருவாகிவிடும். ஏனென்று தெரியாத காரணத்தினால் மனது நிரம்பிப் பெருகும்.

கூடவே, தடித்த முகக்கவசத்தின் விளிம்பு கன்னத்தைத் தொடர்ச்சியாக அழுத்தி அசௌகரியப்படுத்துவது போல, ஒரு சிறு வலி உள்ளத்தை நிமிண்டியபடியே இருக்கும்.

———

கட்டிலில் கிடந்த கைக்குட்டையை நடுங்கும் கரங்களால் விளிம்புடன் விளிம்பு பிசகாமல் பொருத்தி நான்காய் மடித்து அலிசிட்டோஸ் இழுப்பறையினுள் மீண்டும் கவனமாக வைத்தார். சாளரப்பக்கம் நோக்கியபடி கண்கள் நிலைத்திருக்க, மனது மீண்டும் ஒவ்வொரு மடிப்பாய் பிரிக்க ஆரம்பித்தது.

பல வருடங்களாக குடும்ப நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து ஆண்டுக்கு ஓரிருமுறை ஒன்றுகூடல் நிகழ்வு நடத்தி வந்தார்கள். மெலிற்றா – அலிசிட்டோஸின் நடனம் எப்போதும் பிரசித்தம். ஒருமுறை உற்சாக மேலீட்டால் மெலிற்றாவை வேகமாகச் சுற்றித்தூக்கி ஆட முயற்சித்தபோது அலிசிட்டோஸிற்கு சமநிலை தவறிவிட்டது. வீடு வரும்வரை மெலிற்றா நக்கல் செய்தபடி இருந்தாள். பிள்ளைகள் இருவரும் பாடசாலை மூலமான சுற்றுலா சென்று விட்டிருந்தனர்.

“நான் உன்னை ஒரு கையால் தூக்கி ஆடுவது நீ அறிவாய். இன்று ஏதோ தவறி விட்டது”.

“அலிஸ், உனக்கு நாற்பத்தியிரண்டு ஆகிறது. மறந்து விட்டாயா?”.

“அதற்கென்ன? நான் இயந்திரங்களுடன் வேலை செய்தவன். இரும்பு மனிதன்”.

“அரைக்கிழவனே! தற்பெருமை பேசாதே”.

“இதோபார் இந்த அரைக்கிழவனின் திறமையை!”.

மெலிற்றாவை இரு கைகளாலும் தூக்கியெடுத்துச் சென்று கிடத்திவிட்டு மூச்சு வாங்கினார் அலிசிட்டோஸ்.

“பார் அலிஸ்! வயதுக்கு மீறி இன்று சாப்பிட்டு விட்டாய். அதுதான் மூச்சு விட சிரமப்படுகிறாய். அரைக்கிழவன் என்றால் ஒத்துக்கொள்கிறாய் இல்லையே. நான்கு பெண்களுக்கு முன்னால் நீ இளைஞன் என்று காட்ட விளைகிறாய்”.

மெலிற்றா அலிசிட்டோஸின் கழுத்தைக் கட்டியபடி கெக்கலித்துச் சிரித்தாள்.

எவ்வளவு வருடங்கள் கடந்திருந்தாலும், வழமையாக மெலிற்றாவிடம் வசந்தகாலத்து மெல்பேர்ணின் காலைப்பனியைப் போல் ஒரு மெல்லிய நாணம் திரையிடும். புகாரை ஊடுருவி எழும் சூரியக்கதிர்களாய் நிதானமாகவே முயக்கம் கொள்வாள். அவளுக்குள் நடக்கும் இந்த அழகிய இரசாயன மாற்றத்தை எந்தளவுக்கு இரசித்தாலும் சலிக்காது. இன்று அவளில் வெட்கம் இருக்கவில்லை. ஒரு சிறிய உன்மத்த நிலையில் காணப்பட்டாள். முப்பத்தியெட்டு வயதிற்கு கொஞ்சம் சதைப்பிடிப்பாக ஆகிவிட்டிருந்தாள். தோல், சுருக்கங்கள் அற்று இன்னமும் கோதுமை மாவைப்போலவே இருக்கிறது. ஓரளவுக்கு உப்பிய வயிறு. இடை கொஞ்சம் பருத்தாலும் வளைவு நீங்கவில்லை. இளமையில் இருந்ததைவிட சிறிதளவு பெருத்திருந்த முலைகள் இறுக்கம் கொண்டு கனிந்த மாதுளம் பழங்களைப்போல இருந்தன. அழகிய விழிகளில் தாய்மையின் கனிவு தேக்கி, தலையைக்கோதி கன்னங்களை வருடிவிட்டாள். நிர்வாணத்தில் ஒரு தெய்வீகமான பேரழகியாகத் தெரிந்தாள்.

“என் பெண்ணே, நீ தேவதையைப் போல இருக்கிறாய்”

“எப்போதும் மலரைப் போல என்பாய். என்ன இன்று மாற்றிவிட்டாய்”

“உன்னை முதலில் பார்த்தகணம் ரியூலிப் மலர்தான் ஞாபகம் வந்தது”

“ஓ.. அலிஸ், இதை நூறு முறையாவது பிதற்றியிருப்பாய்”

“இல்லை என் அன்பே, ரியூலிப் பூவை யோசித்துப்பார். அதில் ஒரு ஆரவாரமற்ற அழகு காணப்படும். கூட்டமாக இருந்தாலும் தானாகவே தனித்து வளர்ந்து உறுதித்தன்மை கொண்டது போன்ற தோற்றம் இருக்கும். ஆனால் தூரிகையால் பூசிச் செய்தது போன்ற வாடாத மென்மைத்தனமும் மலர்வும் இருக்கும். இன்று கொத்தாக நிறைந்து மலர்ந்த டெய்சி மலர்களைப்போல இருக்கிறாய். டெய்சிச் செடிகள் எந்தக் காலமாற்றத்தையும் தாங்கிப்பிடித்து மலர்ந்து நிற்கும். உன் உடல், மனம் இரண்டும் அப்படித்தான்”

மெலிற்றாவிற்குக் கண்களின் ஓரம் நீர் துளிர்த்தது. அப்படியே புரண்டு அலிசிட்டோஸை அணைத்துக் கொண்டாள். வெளியே போவதற்காகப் பூசிய வாசனைத்திரவியத்தின் மெல்லிய மணம் குளித்த பின்னும் உடலில்

ஒட்டியிருந்தது. குளியல் சவர்க்காரத்து மணம் அதனுடன் சேர்ந்து கிறக்கத்தை ஏற்படுத்திற்று. அவளின் கழுத்தில் முகம் பதித்து ஆழமாக மூச்சை இழுத்து அனுபவித்தார் அலிசிட்டோஸ். அவரின் தலைக்குப் பின்னால் கைகளைச் செலுத்தி அள்ளிச் சேர்த்துக்கொண்டாள் மெலிற்றா. நெற்றியில் முத்தமிட்டு காதுமடல்களை மெதுவாகக் கவ்வினாள். அவளின் நீண்ட மூக்கு காதின் பின்பக்கம் உரசி குறுகுறுப்பை தந்தது. உணர்ச்சியின் உச்சத்தில் “ஓ.. என் கடவுளே..” என முணுமுணுத்து, இறுக அவளை அலிசிட்டோஸ் அணைத்துக்கொண்டார்.

சந்தோஷம், அழுகை, கோபம், சாந்தம், வலி, சுகம் எல்லா உணர்ச்சியும் ஒருசேர வந்து முட்டின. உடலின் ஒவ்வொரு அணுவிலும் காதலும் காமமும் ததும்பி வழிந்தன. உலகமும், காலமும் மறந்து போயின. அங்கே ஒரு பிரார்த்தனையைப் போல, ஒழுங்குமுறையான கிரேக்கத்து ஷீர்டார்க்கி நடனம் போல, அதன் இசையைப் போல காமம் அரங்கேறியது. இந்த நிறைவின் உச்சம் கடவுளிடம் கூடக் காணப்படுமோ தெரியாது என நினைக்கத் தோன்றியது. இருவர் கண்களிலும் நீர் நிறைந்து வழிந்தது. ஒருவரை ஒருவர் அணைத்தபடி நெகிழ்வு தந்த உணர்வில் நீண்ட நேரம் பேச்சற்றுக் கிடந்தனர்.

மறுநாள் அலிசிட்டோஸ் வேலை முடித்து வீடு திரும்பியதும், இளஞ்சிவப்பு, நீல நிறங்களில் இரண்டு ரியூலிப் மலர்களையும், கிரேக்கத்தில் ‘நன்றி’ என்ற வாசகத்தையும் பழுப்பு நிறக் கைக்குட்டை ஒன்றில் தையல் வேலை செய்து வைத்திருந்து அலிசிட்டோஸிடம் அளித்துவிட்டு நெஞ்சில் முகம் பதித்து அணைத்துக் கொண்டாள் மெலிற்றா. அந்த நன்றியறிவிப்பிற்கான இன்னொரு பிரதிபலனாக ஒன்பதரை மாதத்தில் கஸென்ரா பிறந்தாள்.

கோவிட் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. முதியோர் இல்லங்களில் அதிகம் பரவுவதாக செய்திகளில் காட்டினார்கள். தொலைக்காட்சி பார்ப்பதற்குப் பிடிக்கவில்லை. பிள்ளைகள் தொடர்ந்து தொலைபேசியில் தவறாமல் பேசியவண்ணம் இருந்தனர். தொடக்கத்தில் பெரிதாகத் தோற்றவில்லை, இப்போது பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் உடனே பார்த்துக் குலாவ வேண்டும் போல் மனம் பரபரத்தது. உள்ளே ஒரு சிறு பயம் எட்டிப்பார்த்தது.

அலிசிட்டோஸ் வசித்த முதியோர் இல்லத்திலும் ஒரு பராமரிப்புப் பணியாளருக்குத் தொற்று என்றும், மூன்று முதியவர்களுக்கும் பரவி விட்டதால் வைத்தியசாலைக்கு அனுப்பி விட்டனர் என்றும் கூறினார்கள்.

இரண்டு முறை தொண்டைக்குள்ளும், மூக்கின் உள்ளேயும் குச்சியை விட்டுக் குடைந்து பரிசோதனைக்கான மாதிரி எடுத்துச் சென்றனர். மிகக் கடுமையான சட்டதிட்டங்களுடன் முதியோர் இல்லத்தைப் பூட்டி வைத்தனர்.

ஓகஸ்ட் இருபதாம் திகதி, காலை வேளையில் அலிசிட்டோஸிற்கு மிகுந்த அசதியாக இருந்தது. படுக்கையால் இறங்கி நடக்கும் போது மூச்சு வாங்கியது. தலை பாரமாகி எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. உடல் நோவெடுத்து, கண்கள் எரிந்தன. அப்படியே மீண்டும் சரிந்து படுத்து விட்டார். காலை உணவு கொண்டு வந்த கிறிஸ்டி, வராந்தாவில் நின்ற தலைமைத் தாதியைக் கூவி அழைத்தாள். பரபரப்புடன் பரிசோதித்து, ஒக்சிஜன் பொருத்தி, அவசரசிகிச்சை வாகனத்தை அழைத்து வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். பிள்ளைகளின் சிந்தனை ஏற்பட்டது. உடனே அறிவித்து விடுவார்கள். எதனையும் கேட்க முடியவில்லை. முயற்சித்துக் கதைக்கக்கூடிய சக்தி இருக்கவில்லை. வைத்தியசாலை விடுதியில் அனுமதித்து ஊசி பொருத்தி தொடர்ந்து திரவங்கள், மருந்துகள் ஏற்றினார்கள். மீண்டும் கோவிட் சோதனை எடுத்தார்கள். முகக்கவசம் பொருத்தி ஒக்சிஜன் தந்தார்கள். மூக்கு நுனி அரிப்பெடுத்துக் கழட்டினால், “கழட்ட வேண்டாம்” எனக் கடுமையாக எச்சரித்து, மீண்டும் பொருத்திவிட்டுச் சென்றார்கள். அவ்வப்போது தட்டி எழுப்பி மருந்துகள் போட வைத்தனர். பலமுறை கைகளில் மாற்றி மாற்றி ஊசியால் துளைத்து இரத்தம் எடுத்தனர். களைப்பு மேலீட்டினால், எதுவானாலும் செய்யட்டும் என்பதுபோல் உடலை அளித்துவிட்டுக் கிடக்கின்ற ஒரு தூக்க நிலை இருந்தது.

அனுமதித்த அடுத்த நாள் கோவிட் தொற்றுத்தான் என நிச்சயப்படுத்தினர். கஸென்ராவுடன் தொலைபேசியில் இணைத்து அலிசிட்டோஸின் ஆரோக்கியம் ஆபத்தான கட்டத்தை அடைந்தால் எடுக்க வேண்டிய முடிவு பற்றி வைத்திய ஆலோசனை நடந்தது. இது தெரிந்ததே, மெலிற்றாவை அவ்வப்போது வைத்தியசாலையில் அனுமதித்தபோதும், இவ்வாறு கேட்டு எழுதி வைத்தனர். வயதானபோது எந்த சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்தாலும் இதற்கான முடிவைக் கேட்டுப் பதிந்து வைக்கிறார்கள். ஒருவிதத்தில் மிகவும் நல்லமுறை. உடலை வருத்தி இறுதிவரை கடுமையான சிகிச்சைக்கு ஆட்படத் தேவையில்லை. கஸென்ராவுடன் விவாதித்து, நோய் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதற்கான வைத்திய சிகிச்சைக்கு மட்டும் அலிசிட்டோஸ் சம்மதித்தார். செயற்கை முறையில் உயிரைக் காப்பாற்றும்படியான சிகிச்சைக்கு சம்மதிக்கவில்லை.

ஆயினும் உடல்நிலை சிறிது முன்னேற்றமாகவே காணப்பட்டது. தூக்கத்தில் இருந்த நேரத்தைத் தவிர மற்றைய பொழுதுகளில் எண்ணங்கள் வலையாகப் பின்னிப் பெருகிக்கொண்டே சென்றன. கலைத்துச் சுருட்ட முடியவில்லை. பிள்ளைகள் சுற்றிச்சூழ்ந்திருக்க, பேரப்பிள்ளைகளை அணைத்துக்கொஞ்ச

வேண்டும் என ஏக்கம் அதிகரித்தது. ஹேர்மிஸின் கடைசி மகள் மூன்று வயது அமாரா, மெலிற்றாவின் சாயல் கொண்டவள். மடியிலே சம்மணமிட்டு உட்கார்ந்துகொண்டு அலிசிட்டோஸின் கண்ணாடியை அவரின் கண்களுக்கு அணிவித்துக் கழட்டி மீண்டும் மீண்டும் விளையாடுவாள். “பொப்பியின் கண்ணுக்குள் குத்திவிடப் போகிறது. இந்த விளையாட்டை விட்டுவிடு” என ஹேர்மிஸின் மனைவி கண்டித்தாலும் கேட்கமாட்டாள். தூக்கி இறக்கிவிட வந்தால், இறுகக் கட்டிக்கொள்வாள். அவளின் பிஞ்சுக்கைகளின் அணைப்பையும், வயிற்றில் புதையும் முகத்தின் மென்மையையும் இப்போது உடனேயே அனுபவித்துச் சிலிர்க்க வேண்டும் போல் மனம் அடம்பிடிக்கிறது. ஐந்தாறு மாதத்தில் கதை கூடிவிட்டது. தொலைபேசியில் குரலைக் கேட்கும்போதெல்லாம் ஆவலை அடக்க முடியவில்லை.

 

சாதாரண நோயாளர்களுக்கே எவரும் வருவதற்கு அனுமதியில்லை. பிள்ளை பெற்றுக்கொள்பவர்களுக்கும், மரணமடைபவர்களுக்கும் மட்டும் ஒருவர் வந்து பார்க்கலாம் என்று சட்டமுள்ளது என அலிசிட்டோஸை முதல்நாள் கவனித்துக்கொண்ட தாதி ஜான்சி கூறினாள். இறப்புக்கும், பிறப்புக்கும் இன்னொருவர் சாட்சி. கோவிட் என்றால் அதுவும் இல்லை.

இந்த வெஸ்ட் வார்ட்டில் ஜான்சி போல் நிறைய இந்தியாவைச் சேர்ந்த தாதிகள் வேலை செய்கிறார்கள். அமைதியாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கிறார்கள். வேலை தெரிந்தவர்கள். ஒழுங்காக சொல்வதைக்கேட்டுப் பதில் தருகிறார்கள். இவர்கள் செய்யும் உதவியில் உண்மைத்தன்மை தெரிகிறது. சில அவுஸ்திரேலியத் தாதிகளுடன் சரிவருவதில்லை. ஏதாவது கூறமுன்னமே அதைக் கேட்டுக் கொள்ளாமல் அதீதமாகக் கதைக்கிறார்கள். இவர்களின் ஆங்கிலமும் சரியாகப் புரிவதில்லை. அதுவும் முகக் கவசங்களினூடாகக் கதைப்பதைக் கேட்டு விளங்குவதென்பது கொடுமையாக இருக்கிறது. அடுத்தது என்ன என்ற ஒரு பதட்ட நிலைமை பயமுறுத்துகிறது. எவரை, என்ன கேட்பதெனத் தெரியவில்லை. ஏதோ பிள்ளைகள் வைத்தியருடன் தொடர்பு கொண்டு கதைத்துக் கொள்கிறார்கள் என்ற சிறு நிம்மதி. ஆனால் இப்படி எவருமற்று எப்படி இருப்பது?

அறைக்குள் இருந்த சாளரக் கண்ணாடியால் கீழே டேவிட் ஸ்ட்ரீட் தெரிகிறது. மக்கள் நடமாட்டம் குறைந்தாலும் நிறையக் கார்கள் வந்து தரிப்பதும், போவதுமாக உள்ளது. எதிரே கோப்பிக்கடை. வைத்தியசாலைப் பணியாளர்கள் உணவும், கோப்பியும் அவ்வப்போது மேலும் கீழும் நடந்து சென்று வாங்கி வருகிறார்கள். மெலிற்றாவின் சுவையான கிரேக்கக் கோப்பி ஞாபகம் வருகிறது. வைத்தியசாலை வாயிலுக்கு அப்பால் உள்ள புகைத்தலுக்கான இடத்தில் அரைகுறையாக வைத்தியசாலை உடையை அணிந்த ஓரிரு நோயாளர்கள் புகை பிடித்தபடி நிற்கிறார்கள். பலமாகச்

சிரித்துக் கதைத்தபடி ஒரு விட்டேத்தியான தன்மையில் காணப்படுகிறார்கள். இரகசியமாகக் கையோடு கையாகச் சிறு சரையில் இவர்கள் போதைப்பொருள் பரிமாறிக்கொள்வது இங்கிருந்து பார்க்கத் தெளிவாகவே தெரிகிறது. இதனையும் ஜான்சிதான் காட்டிச் சிரித்தாள். இவர்களுக்கு வைத்தியம் பார்த்துக் களைத்துவிடும் என்றாள். வெளியே வாட்டும் குளிரோ, நோய் நிலைமையோ, உறவினர் பற்றிய ஏக்கமோ இவர்களைப் பாதித்ததாகத் தெரியவில்லை. அல்லது எதுவும் கிடைக்காமலோ, எல்லாவற்றையும் தாண்டிக் குதித்தவர்களாகவோ இருக்கலாம்.

பந்தம் எனும் பாரம் இப்போது பரிதவிக்க வைக்கிறது. சிலந்திக்குக்கூட எவரும் இல்லை. பறவை, மிருகங்களைத் துணையுடன் பார்த்ததுண்டு. ஒரு சிலந்தி இன்னொரு சிலந்தியைக் காதலித்துப் பார்த்ததே இல்லை. அதுதான் நெஞ்சில் இல்லாமல், வயிற்றில் சுரப்பை வைத்திருந்து வலை நெய்கிறது போலும். கூடலின் பின் ஒன்று இன்னொன்றைக் கொன்றுவிடும் என்று கேள்விப்பட்டதுண்டு. நினைக்கவே ஏதோ செய்கிறது. ஆனால் சிலந்திக்கு ஒருவேளை எந்தக் கவலையும் இருக்காதோ? இப்போது தனித்து வாழும் கஸென்ரா வயதாகும்போது என்ன செய்வாள்? அவளையாவது சந்தித்தே ஆகவேண்டுமென மனது துடிக்கிறது. கஸென்ராவிடம் நிறையக் கூற வேண்டும் போல் உள்ளது. அவள் பிறந்ததன் சந்தோஷத்தையாவது. எங்கே கதையைத் தொடங்கி எப்படி முடிப்பது என்று தெரியவில்லை. உணர்வு பூர்வமானவற்றை நேரே கதைக்க வேண்டும். அவள் கைகள் பற்றிக் கதை சொல்ல வேண்டும். தொலைபேசியில் வைத்தியசாலை விடயங்களைக் கதைத்து முடிக்கமுதலே மூச்சு வாங்குகிறது. அந்த யமஹா கதைத்ததாக கஸென்ரா கூறியிருந்தாள். என்ன கதைத்தாள் என விபரமாக அந்த நேரத்தில் கேட்டுக்கொள்ளவில்லை.

மூன்றாவது நாள் அலிசிட்டோஸின் தாதியாக மீண்டும் ஜான்சி நியமிக்கப்பட்டிருந்தாள். இதற்கு முன்னர் வேறு வயதானவர்கள் கோவிட் தொற்றால் அனுமதிக்கப்பட்டு, சுகமடைந்து சென்றதாகக் கூறி உற்சாகப்படுத்தினாள்.

“அலிசிட்டோஸ் எல்லாம் சில மாதங்களில் சரிவந்து விடும். நீ உன் பேரக்குழந்தைகளுடன் ஓடி விளையாடும் நாள் விரைவில் வரும். கடுமையாக யோசித்து மனதை வருந்தாதே”.

“ஜான்சி, உன்னைப் பார்க்கும்போது சில மாதங்களுக்கு முன்னர், வைத்தியசாலையிலிருந்து வீடுகள் சென்று கவனித்துக் கொள்ளும் பகுதியிலிருந்து எனக்கு சிகிச்சை தரவந்த பெண் நினைவுக்கு வருகிறாள்.. இலங்கையைச் சேர்ந்தவள். எனக்குப் பெயர் சரியாக நினைவில் வைக்க முடியவில்லை. யமஹா என்றுதான் ஞாபகப்படுத்தி வைத்திருக்கிறேன்”.

ஜான்சி நகைத்தாள். “ஓ.. நீ யாமினியைக் கூறுகிறாயா? அவள் என் நண்பி. நன்றாகத் தெரியும். அவள் போன வருடம்வரை இந்த வார்ட்டில்தான் வேலை செய்தவள், என்னுடன் இப்போதும் தொடர்பில் இருப்பவள்”.

அலிசிட்டோஸின் முகம் பிரகாசம் அடைந்தது.

“தயவுசெய்து அவளை நான் கேட்டதாகத் தெரிவிப்பாயா? முடிந்தால் என்னை வந்து பார்க்கச் சொல்வாயா?”

“நான் சொல்கிறேன். ஆனால் கோவிட் பகுதிக்கு, அதற்காக அன்று நியமிக்கப்பட்ட பணியாளர்கள் மட்டுமே வரமுடியும். சட்டத்தை மீறி எதுவும் செய்ய முடியாது. பார்க்கலாம். எப்படியும் அவளிடம் தெரிவிப்பேன்”.

ஜான்சி கதைத்தவாறே அலிசிட்டோசைப் பரிசோதிக்கத் தொடங்கினாள். சாதாரண வாசிப்பை விட இரத்த அழுத்தம் அதிகம் குறைந்தும், இதயத்துடிப்பு ஏறியும் காணப்பட்டது.

“அலிசிட்டோஸ், உன் நிலை சரியில்லை, ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா?”, கேட்டவாறே அவசர அழைப்பிற்கான குமிழை அமுக்கினாள். பரபரவென ஒக்சிஜனைக் கூட்டிக் கொடுத்து, அறைக்குள் எல்லாவற்றையும் விலக்கி இடம் ஒதுக்கினாள். சில நிமிடங்களில் வைத்தியரும், தீவிர சிகிச்சைப் பிரிவின் குழுவினரும் சிறு தள்ளுவண்டி உபகரணங்களுடன் வந்து சேர்ந்தனர். எல்லோரும் சுற்றி நின்று மீண்டும் ஏதேதோ இரத்தக்குழாயில் ஏற்றினர். இரத்தம் எடுத்தனர். ஓரளவு அடிப்படை வாசிப்புகள் சரியாகும்வரை கூட இருந்து, பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றம் செய்தனர்.

யார் என்ன கேட்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்றே புரியவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, பாதுகாப்பு உடைகள், கவசத்துடன் எவரையுமே ஒழுங்காகப் பார்த்துத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களும் மிகுந்த அசௌகரியத்துடன் களைத்துப்போய் வேலை செய்வதை உணர முடிந்தது. தவிர்க்கவே முடியாதபடி பய உணர்வு இப்போது மீண்டும் சூழ்ந்துகொண்டது. இருந்தும் அதிக அசதியினால் அலிசிட்டோஸிற்குத் தூக்கம் வந்தது.

———–

கைபேசியில் ஜான்சி அழைத்திருந்தாள். வெஸ்ட் வார்ட்டில் யாமினியுடன் சேர்ந்து வேலை செய்த சில மலையாளத் தாதிகள் இன்னமும் அவ்வப்போது எடுத்து நலன் பகிர்ந்து கொள்வார்கள்.

“ஜான்சி, எப்படி இருக்கிறாய்? வெஸ்ட்டை கோவிட் வார்ட் ஆக்கிவிட்டனர் அல்லவா?”.

“அதுபற்றித்தான் கூற எடுத்தேன் யாமினி. உனக்கு வீடுகள் செல்லும்போது, சில மாதங்களுக்கு முன் முதியோர் இல்லம் சென்று பார்த்த அலிசிட்டோஸ் என்ற நோயாளியை நினைவில் உள்ளதா? ‘புளூ மவுண்டன்’ முதியோர் இல்லத்தைச் சேர்ந்தவர். இங்குதான் கோவிட் என்று அனுமதித்திருந்தனர். உன்னைப் பார்க்க அந்த மனிதர் விரும்பியதுபோல் தெரிந்தது”.

“ஐயையோ.. இப்போது நிலைமை எப்படி? எனக்கு நன்றாக ஞாபகம் உள்ளது. மிகவும் அன்பான கிழவன். மனைவியை இழந்த துக்கத்திலிருந்து மீள முடியாமல் சிரமப்படுகிறது”.

“அதே ஆள்தான் யாமினி. உன்னைப் பற்றி விசாரித்த போதே நீதான் என்று பிடித்துவிட்டேன். ஆனால் நேற்றுத் திடீரென கொஞ்சம் மோசமாகி ஐ.சி.யு அனுப்பி விட்டாயிற்று. ‘செப்டிக் ஷொக்’ போல் தெரிகிறது. நான்தான் நின்றேன். எப்படியும் ‘வென்டிலேட்டர்’ போடமாட்டார்கள். தனியே அறிகுறிக்கான சிகிச்சைக்குத்தான் பதிந்துள்ளனர்”.

யாமினிக்கு இரண்டு நாட்கள் ஓய்வு. வேலை இருந்தாலும் எப்படியும் கோவிட் நோயாளியை தீவிர சிகிச்சைப் பிரிவில் சென்று பார்க்க இயலாது. மகளோடு கதைக்க வேண்டும். முன்னர் அலிசிட்டோஸின் சிகிச்சை பற்றிக் கதைத்ததில் வேறு விடயங்கள் கதைக்க நேரம் இருக்கவில்லை. மகளோடு தொடர்பு கொண்டு இந்தக் கிழவர் சொன்னது எல்லாம் எப்படியாவது கூற வேண்டும். என்ன நிலைமை என்று தெரியவில்லை. பாவம் கிழவன். எவ்வளவு அந்தரப்படுகிறதோ தெரியாது.

“ஜான்சி அலிசிட்டோஸின் வைத்தியசாலைப் பதிவு இலக்கத்தை எனக்கு அனுப்பிவிடு. நான் நிலைமையை அறிய வேண்டும். மகளின் தொடர்பு இலக்கமும் தேவை. ஆனால் எனக்கு இரண்டு நாட்கள் கழித்துத்தான் வேலை”.

“நான் நேற்றே உன்னிடம் கூற யோசித்து, வேலைக் களைப்பில் மறந்து விட்டேன். உனக்கு விபரம் பார்த்து அனுப்பி வைக்கிறேன்”.

ஜான்சியுடன் கதைத்தபின் இரவு ஒழுங்காகத் தூங்க முடியவில்லை. கிழவரின் முகமும், வைத்தியசாலை நிகழ்வுகளும் அரைகுறை நித்திரையின் கனவில் ஏதேதோ குழப்பங்களாக வந்து போயின.

(தொடரும்)

———-

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.