கவிதைகள்
ஒரு தாயின் புலம்பல்….! ( கவிதை ) …

எனதருமை மகனே !
எனதருமை மகனே !
.
நான் உன்னை
மிகவும் நேசிக்கிறேன்..
முதுமையின் வாசலில் – நான்
முதலடி வைக்கையில் தள்ளாட்டம்
என்மீது வெள்ளோட்டம் பார்க்கும்…
.
கொஞ்சம் பொறுமை கொள்க !
அதிகம் புரிந்து கொள்க !
என்முதுமை பார்த்து முகம் சுளிக்காதே !
நான் சாப்பிடுகையில் கைநடுங்கி சாதம் சிந்தி விட்டேனா?
சத்தம் போடாதே…..
உனக்கு நான்
நிலாச்சோறு ஊட்டிய நாட்களை நினைவு கூர்க !
.
ஆடை மாற்றுகையில் அவதிப் படுகிறேனா?
அசுத்தம் செய்து விட்டேனா?
ஆத்திரப்படாதே…..
படுக்கை முழுதும் நீ பண்ணிய ஈரங்களின்
ஈர நினைவுகளை இதயம் கொள்க !
ஒரே பேச்சை, தேய்ந்த ஒலிநாடா போல்
ஓயாமல் சொல்கிறேனா?
சலித்துக் கொள்ளாதே….
.
ஒரே மாயாவி கதையை ஒரு நூறு முறை
எனை படிக்கச் சொல்லி
நீ உறங்கிய இரவுகளை ஞாபகம் கொள்க !
நான் குளிக்க மறுக்கிறேனா?
சோம்பேறித்தனம் என்று சுடுசொல் வீசாதே….
.
உன்னை குளிக்க வைக்க
நான் செய்த யுக்திகளை எனக்காக புதுப்பித்துத் தருக!
புதிய தொழில்நுட்பம்,
புதிய பயன்பாடுகள் – உன்
புயல் வேகப் புரிந்துகொளல்
சத்தியமாய் எனக்குச்
சாத்தியமில்லை !
கேவலப் படுத்தாதே….
கற்றுத் தருக !
கவனித்துப் பழக அவகாசம் தருக !
.
இனி,
சில நேரங்களில் – என் நினைவுப் பிரழ்ச்சியால்
ஞாபங்கள் அறுந்து போகலாம்,
உரையாடல் உடைந்து போகலாம்!
நிறைய வேலை இருக்கிறதென்று
நேரம் பார்க்காதே…..
.
என் அருகிருந்து
ஆற்றாமை தேற்றுக!
ஆசுவாசப் படுத்துக!
என் கால்கள் என்னை ஏமாற்றுகையில்
நீ முதல் நடை பழக
என் விரல் நீண்டது போல்
கைகொடுத்து எனக்கு உதவி செய்க !
ஒரு நாள் சொல்வேன் நான்,
வாழ்ந்தது போதுமென்று !
வருத்தப் படாதே…..
.
சில
வயது வரை வாழ்க்கைக்கு அர்த்தமில்லை…
சில
வயதுக்கு மேல் வாழ்வதில் அர்த்தமில்லை…
.
காலம் வரும்போது – இதை
நீயும் புரிந்து கொள்வாய் !
இனி நான் வேண்டுவதெல்லாம்
நீ எனை புரிந்து கொண்ட புன்னகை !
மீண்டும் மீண்டும் சொல்கிறேன் !
.
எனதருமை மகனே !
நான் உன்னை
மிகவும் நேசிக்கிறேன்…..
என் வாழ்வு
அமைதியோடும் – உன்
அரவணைப்போடும்
முற்று பெற
முயற்சியேனும் செய்வாயா..?
![]()